ஶ்ரீ:
அடையாளமாதல் - 48
வெண்மை மனிதர்கள் .
திரு.ப.சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 21
அரசியல் களம் - 16
அசாதாரனமான குரல் கேட்டு திடுக்கி திரும்பி பார்த்தபொழுது, "அவன்" ஒற்றைநாடி மனிதன் அந்தக் குரல் கிளம்பு விசைக்கு தோதாக கால் முட்டி லேசாக மடங்கி சிறு உடல் கூன்போட்டு ,ஒரு முஷ்டி மடக்கி வாயருகில் வைத்து மற்றொரு கை விரல் விரிந்து வான் நோக்கி அடி வயிறு எக்கி வாழ்க கோஷத்தை தொடங்க , எங்கும் அது எதிரொலித்தது . அவனுக்கும் அந்த குரலுக்கும் எந்த சம்பந்தமும் இன்றி கனீரென கேட்டது , பார்க்க ஒருமாதிரி இருந்தான் .ஒரு மனிதனால் அந்தளவு விசையுடன் உரத்து கூவமுடியும் ? முதல் முறையாக பார்த்ததில், திகைத்து அச்சமடைந்த அவனிடமிருந்த சற்று விலகி சென்று, அவனையே பார்த்துக் கொண்டிருக்க . கூட்டம் அவனைப் பிரதிபலித்தது. இரைச்சல் கூடிக்கொண்டிருந்தது .
எனக்கு அப்போது திடீரென ஏன் அப்படித் தோன்றியது? என்னால் ஏன் அப்படி கூவ முடியவில்லை ?. எது என்னை தடுக்கிறது?. ஏன் அவர்களின் கொண்டாட்டத்திற்குள் என்னால் நுழையமுடியவில்லை ?. எது என்னைத் தடுக்கிறது ?. ஏதுவோ என்னை எதைவைத்து நீ வேறு மாதிரியானவன் என்கிறது ?.ஏன் அந்த சூழலுக்கு நான் பழக்கப்படாமல் அன்னியமாய் உணர்கிறேன்?. ஏன் அவனைப் போலல்ல நான் என தோன்றுகிறது?
அது கோஷம் . பாட்டல்ல லயத்தை, சொற்களை ரசிப்பதற்கு .ஆனால் அந்தக்குரல் . அந்தக்குரல் அது வேறு மாதிரியானது . நொடியில் நெருப்பென பரவுவது . கும்பலை குவிமுனையில் நிறுத்துவது . ஒற்றை திரளாக்குவது. பலரை வெறிகூடச் செய்வது . அனைவரையும் ஒன்றை நோக்கிய ஒருங்கியக்கம் சூடியது .ஆனால் அவன் கண்களில் நான் பார்த்தது . அது என்ன ?அவன் வாழ்வியலுக்கு இயற்கை அளித்தது அந்த குரல் மட்டுமேவா? ஆம் அவன் ஒரு குரல் மட்டுமே . அப்படியெனில் நீ எதாலானவன்? அதுதான் அவன் வாழ்வாதாரமா? அதன் வழியாக அவன் தலைவனை வசீகரிக்கிறானா? . அவனை இறைஞ்சுகிறானா? .தனக்கான நாளைய வாழ்விற்கு ஏதாவது எனக்கு செய் என்கிற மான்றாடல் அதில் இருந்ததை மிக மிக பிற்பாடு உணர்ந்தேன் . நான் அரசியலில் எழுந்து வர அந்தக் குரலும் அன்றைய நிகழ்வும் முக்கிய காரணமாக இருந்ததை பின்னாளில் புரிந்து கொள்ள முடிந்தது . அந்தக்குரல் உணர்சிபூர்வமாமானது . அதை ஒட்டி பிறக்குரல்கள் எழ எழ கூட்டம் பித்தேறியது போல வெறிகொள்ளத் தொடங்கியாது .
யாரும் யாருடனும் பேச இயலாத ஒலியாக அது ஒலித்தக் கொண்டிருக்கத் தொடங்கியது . இடையே "பேன்டு வாத்தியத்தியம் " அபஸ்வர தாளகதியில் டரம்பெட்டை ஊதினாலும் பேளம், பறை போன்றவற்றில் இருகிற சூடு குழுமியவரின் வெறியில் எண்ணை ஊற்றிக்கொண்டிருந்தது . தகவல் பரிமாறிக்கொள்வதற்கும் . சாதாரணமாக பேசுவதற்கு கூட சிலர் வயிறெக்கி அடுத்தவர் செவில் வாய்வைத்து கைமூடி கத்தக்கொண்டிருந்தார்கள் , பார்பதற்கு வேடிக்கையாக இருந்தது .
என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது . நீ யார் இங்கே , எதற்காக இங்கு வந்து இவர்களுடன் நீ நின்று கொண்டிருக்கிறாய் . யாராவது உன்னை பார்த்தார்களா , யராருடனாவது உன்னை அறிமுகம் செய்து கொள்ள இயலுமா , என்னவென்று அறிமுகம் செய்து கொள்வாய் , நிற்க கூட உன்னால் இனிமேல் முடியுமா என தெரியவில்லை .
என் முயற்சி இன்றி கூட்டம் என்னை ஓரிடத்திலிருந்து ஓரிடத்திற்கு முன்னும் பின்னும் நகர்த்திய படியே இருந்தது . அனைவரின் உடலில் வியர்வை வழிச்சலுடன் எண்ணைமாதிரி பிசுக்கெடுத்து ஒருவர் மேல் ஒருவர் ஏறி, மோதி வழுக்கிக் கொண்டிருந்தனர்.
நான் என் பலத்தில் நிற்கும் சக்தியை இழந்துவிட்ட நிலையில் இருந்தேன் . இனி முடியாது என்கிற கட்டத்தை அடைந்து அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க ஆரம்பிப்பதற்கு முன் . தேர் கிளம்பும் போது போடும் ஒரு ஒற்றை வெடி சப்தம் . எனக்கு பின்னால் மிக அருகாமையில் கேட்டது. என் காதுகளில் அந்த தொடர் ரீங்காரம் கேட்டுக்கொண்டே இருக்க . கண்களில் ஏதோ பூச்சி பறப்பது போல ஒரு உணர்வு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக