ஶ்ரீ:
பதிவு : 548 / 741/ தேதி 27 நவம்பர் 2020
* இயற்கையின் நகைச்சுவை *
“ ஆழுள்ளம் ” - 03
மெய்மை- 26.
1940 களில் இந்திய விடுதலை மிக சமீபத்தில் உள்ளதை உணர்ந்து கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சி அடுத்த கட்டம் நோக்கி நகர ஆரம்பித்திருந்தது . இந்தியா முழுவதும் காங்கிரஸ் கொள்கைகளை முன்வைத்து ஒருங்கிணைக்கவும் தனது அரசியல் சித்தாந்தத்தை செயல்படுத்தவும் அது நினைத்தது. வட இந்திய பகுதிகள் எதிர் கொண்ட சுதந்திர போராட்டத்தின் தாக்கம் போல தென்னக பகுதிகளில் அதன் பாதிப்புகள் குறைவு. காரணம் அவை தனிமனித பாதிப்பாக அல்லது குறுங்குழுவிற்கு நடந்த ஒன்றாக மக்களால் புரிந்து கொள்ளப்பட்டருந்தது . சுதந்திர போராட்டம் எப்போதும் இந்திய மக்கள் திரண்டெழந்து கலந்து கொண்ட ஒன்றல்ல. பசியும் பிணியுமாக வறுமையில் உழன்றவர்களுக்கு நாட்டின் சுதந்திரம் என்கிற ஒன்று தெரிந்திருக்க நய மல்லை . அன்று சுதந்திரமின்மையை வெளிப்படையாக அறிந்து கொள்ளும் இடமாக நீதிமன்றங்கள் இருந்தன . பிரிட்டீஷாரின் பிறிதொரு முகத்தை அங்கு கண்டுகொண்டவர்கள் வழக்குரைங்கர்கள் மட்டுமே. அதன் விளைவாகவே இந்திய போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களில் மிகப் பெரும்பாண்மையோர் வழக்குரைஞராக தொழில் புரிந்தவர்கள் . இந்தியாவின் விடுதலை போராட்டத்தை தென்னகத்தை சேர்ந்த உள்ளூர் காங்கிரஸ் பெருந்தலைவர்கள் அதை மக்கள் மத்தியில் நிகர் போராட்ட வடிவில் கொண்டு சேர்த்திருந்தனர் . “மெட்ராஸ்” மாகானம் என்கிற பெயரில் பெரும் நிலப்பரப்பு இன்றைய பல மாநிலங்களை உள்ளடக்கிய ஒன்றாக அப்போது இருந்தது . தென்னகப் பகுதிகளில் கவனம் செலுத்துவது குறித்து திட்டம் உருப்பெற்றிருந்த நேரம் . அன்று புதுவையை தமிழக பகுதிகளைச் சேர்ந்த ஒரு மாவட்ட கட்சியாக தில்லி அகில இந்திய காங்கிரஸ் கட்சி நிர்வகித்து வந்தது . ஏறக்குறைய 1990 களின் இறுதி வரையிலும் கூட அந்த நிலையே நீடித்தது. அகில இந்திய அளவில் கட்சி நிர்வாகம் குறித்த சீரமைப்பு 1945 களில் முழு விசை கொள்ளத் துவங்கி இருந்தது. அதன் விளைவாக நிகழ்ந்தே 1955 களில் ஆவடி காங்கிரஸ் மாநாடு. சிறுக சிறுக தனது சோஷலிஸ கொள்கையை நேரு முழுவதுமாக வடிவமைத்தும் அதை முன்வைத்துப் பேசி அது சம்பந்தமாக தீர்மாணங்கள் இயற்றப்படுவது குறித்து அந்த மாநாட்டில் விவாதிகப்பட்டது . ஆவடி மாநாட்டிற்கு யூகோஸ்லாவியாவின் ஜனாதிபதி மார்ஷல் ஜோசிப் ப்ரோஸ் டிட்டோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் . நேரு தனது கொள்கை முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நேரம் . பின்னர் அதே ஆண்டு சோவியத் யூனியனுக்குச் சென்று, சோவியத் பிரதமர் ஜார்ஜ் மலென்கோவும் அவருக்குப் பின் வரவிருக்கும் நிகிதா குருசேவையும் இந்தியாவிற்கு வரவழைத்து, பொதுத்துறையில் கனரகத் தொழிற்சாலைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆகஸ்ட் 1955 இல், குருசேவ் இந்தியாவுக்கு வருகை தந்தார் . அதன் விளைவாக ஆவடி தொழிற்சாலைகள் உருவாகி வந்தன. அதற்கு ஒரு வருடம் முன்பு 1954 களில் சுப்பையா நேருவை சந்தித்தார் . கம்யூனிஸ்டுகளின் இந்திய விடுதலை போராட்டமும் அதை பிரெஞ்ச் இந்திய நிர்வாகம் கையாண்ட அடக்குமுறைகள் மட்டுமே அன்று வெளிப்படையான சான்றாக இருந்த சூழலில் அவர்களின் சந்திப்பு புதுவை மட்டுமின்றி இந்திய அரசியலில் மாறுதலைக் கொடுத்திருக்க வேண்டும் .புதுவை அரசியல் நிலைமை குறித்து சுப்பையாவிற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகள் அன்று பிரெஞ்ச் இந்திய நிர்வாகத்தின் புதுவை விடுதலைக்கு எதிரான மனநிலைக்கு ஒரே தெளிவான ஆதாரம். நேருவின் உளநிலைக்கு அன்று கம்யூனிஸ்டுகள் இணக்கமாக கருதப்பட்டனர் .1959 களில் கேரள சட்டமன்ற கலைப்பிற்கு பிறகு அவர் இந்திய கம்யூனிஸ்டுகளைக் குறித்த தனது நிலைபாட்டை மாற்றிக் கொண்டார்.
இந்த பின்னனி தகவல்களுடன் புதுவையில் புறநகர் பகுதிகளில் பலம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 1946 களில் தனது முதல் நடவடிக்கையை துவங்கியது . அது பிரெஞ்சு இந்திய இணைப்பு மற்றும் அதன் உடைமைகளை இந்தியாவுடன் ஒருங்கிணைக்கும் தீர்மானத்தை முன்வைத்தது தனது பிரசாரத்தை துவக்கியிருந்தது . 1948 களின் பிற்பகுதியில், அவர்களுடன் பிரெஞ்ச் இந்திய மாணவர் காங்கிரஸ் அமைப்பும் இந்திய இணைப்பு என்பது பிரெஞ்சு இந்திய உடைமைகளை இந்தியாவுடன் இணைப்பதை உள்ளடக்கியது என்கிற தீர்மானத்தை பிரகடனப்படுத்தியது. அதற்கு மாறுபட்டு கம்யூனிஸ்ட் கட்சி இணைப்பை மட்டும் ஏற்குமாறு மக்களை கேட்டுக் கொண்டது . புதுவை விடுதலைப் போரில் கம்யூனிஸ்டுகளின் பங்கு மகத்தானது என்பது மறுக்க முடியாதது . அதன் செயல்பாட்டை இரண்டு அடுக்குகளாக பிரித்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன் . ஒன்று பிரெஞ்ச் இந்திய நிர்வாகம் உள்ளூர் பிரபுக்களுக்கு கொடுத்த பரிசீலனைக்கு உட்படுத்தப்படாத ஆதரவு திரும்பப் பெறப்படுவதை குறித்து. இரண்டு தன்னை அரசு அதிகாரம் நோக்கிய நகர்தலின் பொருட்டு . இவை இரண்டையும் அடிப்படையாக கொண்டே தங்கள் நிலைப்பாடுகளை வடிவமைத்துக் கொண்டார்கள் . அது எதிர்ப்பும் ஆதரவு , நடுநிலை என எல்லா சமயங்களிலும் மாறுபாடுகளை அடைந்து கொண்டே இருந்தது . அதன் மைய சரடை தொகுத்துக் கொண்டால் புதுவை விடுதலை போராட்டம் முதல் அதன் ஆட்சி அதிகார அரசியல் உருவாகி வந்ததை அறிந்து கொள்ள முடிகிறது . அனைத்தின் மத்தியில் சண்முகமும் அவர் எழுப்பிய கேள்விகளும் இருந்து கொண்டிருந்தன .
இந்த பதிவுகள் சண்முகம் எழுப்பிய கேள்விகளில் இருந்து எழுந்தவை . அவரை எதிர் தரப்பிலிருந்து பார்த்தது முதல் மிக அணுக்கமாக அருகமர்ந்து அவரிடம் உரையாடும் போதும் , குடும்பம் என ஒன்றில்லாமல் , உணர்வு வடிகால் என ஏதும் இல்லாமல் , இருபத்து நான்கு மணி நேரமும் அரசியல் குறித்து மட்டுமே பேசி , சிந்தித்து செயல்படுத்தி என மூளையை சிடுக்காக்கும் ஒரு துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக முதன்மைநிலை செயல்பாட்டில் இருக்கும் அளவிற்கு அவரை செலுத்திய விசை என்னவாக இருந்துவிட முடியும் என திகைத்த காலம் உண்டு . ஆனால் இந்த பதிவுகளை எழுதும் பொழுது மாட்டுமே உணர முடிகிற அந்த விசை அதற்கான பின்னணி கண் முன் எழுந்து வரும் உலகென்ன பார்க்க முடிகிறது . சுதந்திர போராட்டக் களத்தில் பங்கு பெற்ற ஆயிரக்கணக்கானவர்கள் முகமிலிகளின் பெயர் கூட வஞெங்கும் பதிவு செய்யப்படவில்லை. வரலாறில் தங்களின் இடம் பற்ற சிறு குறிப்பாவது இடம் பெற வேண்டும் என அவர்கள் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களுக்கு அரசியலின் நுண்ணிய மாற்றங்கள் அதை வழிநடத்துபவரின் மனத்தின் விழைவு வெறுப்புகளில் இருந்து கிளைப்பது . தெளிவான புரிதலும் , நிகழ்பவைகளை குறித்த திகைப்பும் , கையறு நிலையிலும் ஒரு மனிதனை அது என்ன பாடு படுத்தும் என புரிந்து கொள்ள முடிந்தால் சண்முகத்தை புரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன் . ஊழின் வசத்தால் கையாளும் வாய்ப்புகள் கிடைக்காமலாகும் பித்தாக்கும் அதை வடிவமைக்கும் வாய்ப்பை பெற்றவனுக்கு அதை போன்ற நல்லூழ் பிறிதில்லை . ஐம்பது ஆண்டுகளாக வரலாற்றை இழுத்துச் சென்றவருக்குள் இருந்த விசை கணக்கிட இயலாதது ஆனால் அதை இறுதிவரை கையில் வைத்திருப்பது யாருக்கும் நிகழ்வதில்லை போலும் . தனது இலக்கை அடைந்த விட்ட திருப்தி என்கிற இடத்திற்கு வந்து சேரும் மனிதனை அது வீழ்ச்சிக்கு இட்டு செல்கிறது என்பது தலைவர் சண்முகத்தின் அரசியல் வாழ்வில் இருந்து எனக்கு கையளிக்கப்பட்டிருக்கும் பாடம் . இயற்கையை காட்டிலும் கொடும் நகைச்சுவை உணர்வு கொண்ட பிறிதொன்று இல்லை என்றே நினைக்கிறேன்.