https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 21 செப்டம்பர், 2026

மணிவிழா -95. கிளையில் வேர்




ஶ்ரீ:



மணிவிழா - 95


21-09-2026


* கிளையில் வேர் *






வேளுக்குடி கிருஷ்ணின் உபன்யாசங்களை கடந்து அவர் என்னை கவர்ந்ததற்கு பின்னால் வேறு சில முக்கிய விஷயங்களும் இருந்தன . முதன்மை என நான் நினைத்தது அவர் ஒரு வகையில் எனது உலகில் பல உயரங்களுக்கு சென்று பின் அதில் இருந்து சட்டென ஒரு புள்ளியில் விலகி பிறிதொரு உலகான மரபிற்கு சென்றவராக தெரிந்தார். ஒருவகையில் அது பின்னோக்கிய பயணம் போல ஆச்சர்யத்தை அளிப்பது. அதற்கு பெரும் அகபலம் தேவை படும். தந்தையிடம் அல்லது சமூகத்திடம் இருந்து பெறும் மரபான நம்பிக்கை என்பது ஒருவரின் வாழ்வியலின் நடுப்பகுதிகளில் காணமலாவதை உலகம் முழுவதும் அவரை தத்துவங்களில் இருந்து விடுபடுபவராக புரிந்து கொள்ளப்படுகிறார் . அந்த சூழலில் பெரியவர்களும் சமூகமும் கையளிக்கும் எந்த உத்திரவாதத்தையும் மனம் ஏற்க மறுக்கும் வயதாக புரிந்து கொள்ளப்படுகிறது. அந்த சூழலில்  இருந்து மாறுபட்டு  வெளியேறுதலை தவிர்த்து மிக தீவிரமாக அதனுள் செல்லத் துணிந்த ஒரு மனிதாராக வேளுக்குடி எனக்கு தெரிந்தார். நான் ஏறக்குறைய அவரது வயதை ஒத்தவன். எனக்கு ஏற்பட்ட மனப்புரிதல்களின் தொந்தரவினால் உருவாகும் பாதிப்பை உணர்ந்தவன் . நிச்சயம் அது போன்ற ஒன்றை தன் வாழ்வில் நிச்சயம் சந்தித்திருக்க வேண்டும். அதிலிருந்து விலக தெரிந்த மனிதராக வேளுக்குடி இருந்தார். அவரிடமிருந்து எனக்கான பதில்கள் புரிதல்கள் ஒருநாள் கிடைக்கலாம் என்கிற நம்பிக்கை என்னை அவரை நோக்கி செலுத்தியது. 


எனக்கு என் தந்தை கையளித்த வைணவ இறை நம்பிக்கை சரியா, என்கிற கேள்வியை நான் ஒரு போதும் எனக்குள் எழுப்பிக் கொண்டதில்லை. அது ஒரு நல்லூழ் என உணர்கிறேன். அப்படி ஒன்றை உருவாக்கிக் கொண்டால் அது முடிவுறாத மெய்மையை தேடும் பயணம். அலைவது மட்டுமே அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது அமர்வது என்பது அவர்களுக்கு இல்லை. அவர்கள் உள்ளமும் உடலும் தொடர் பயணித்தில் இருக்க பணிக்கப்பட்டவர்கள். அது எனக்கான வழியில்லை . எனக்களிக்கப்பட்ட நம்பிக்கை மரபால் என் குல மூத்தோர்களால் வழி வழியாக வந்து எனக்கு கையளிக்கப்பட்டது என்பதால் அதன் அடிப்படை உண்மை தன்மையை ஆராயும் தகுதி  கொண்டவனாக என்னை உணர்ந்ததில்லை. தாய்தந்தையரை நாம் தெரிவு செய்வதில்லை என்பது போல ஒருவர் தனது இறையை தெரிவு செய்ய முடியாது. இப்பிறவியில் அந்த இரண்டும் போல எண்ணற்ற விஷயங்கள் நமக்கு அருளப்பட்டிருக்கிறது. அவை ஆராய்சிக்கு உட்பட்டதல்ல என நினைக்கிறேன். தங்கள் அறத்தில் இருந்து விலகி உகந்த ஒன்றை தேடிச செல்வது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. எனக்கான வழி அதுவல்ல என்பதில் உறுதியாக இருந்தேன் என்பது்என்டை நோக்கி நான் வைத்த முதல் அடி.


நான் நம்பும் மரபு கலாத்தால் மிக மிக தொன்மையான ஒரு இருப்பு . அது இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் இங்கு நீடித்து இருக்கும் என்கிற நம்பிக்கையும்  கோவில்களில் கூடும் மக்கள் திரள்களின் வழியாக சொல்கிறது.நான் அந்த திரளில் ஒருவனல்ல என்றாலும் கூட்டு ஆழ்மனநிலை அவர்கள் தங்களுக்கு உகந்த ஒன்றை நம்பிக்கையுடன் செய்கிறார்கள். அந்த நம்பிக்கை அவர்களுக்கு அருளப்பட்டுள்ளது. நான் அவர்களிடம் இருந்து எந்த கூறில் மாறுபடுகிறேன். ஆன்மீக பொதுத் தன்மையில் இருந்து விலகி ஒரு குறிப்பிட்ட இறையை பிறிதொன்றில்லாத படி ஆழமாக பற்றிக் கொள்ளுதல் எனக்கு சொல்லப்பட்டிருந்தது. அது அறம் கடமை என வலியுறுத்தும் ஒன்றை நோக்கி கேள்விகளை எழுப்பிக் கொண்டால் எஞ்சுவது என்ன. 

வாழ்வின் நடுபகுதி பிறருக்கு என்ன குழுப்பங்களும் நிலையழிதலும் கொண்டு வருமோ அவை அனைத்தும் மிச்சமில்லாமல் வந்து நின்றன. அவற்றில் இருந்து கற்ற தத்துவங்கள் மட்டுமே மீட்க வல்லது. அதை நோக்கிய பணமாக என்னை வகுத்துக் கொண்டேன். 


அதே சமயம் நவீன சிந்தனையில் அறிவியக்கத்தில் தத்துவங்களின் பெறுமதி என்ன என்பது குறித்து மிக ஆழமாக கேள்விகளை எழுப்பிக் கொண்டால் அது வாழ்வியலில் அனைத்து பக்கத்தில் இருந்தும் வந்த நெருக்கடி அந்த நம்பிக்கை நொறுக்குவதாக இருந்தது. என்றாலும் தனிப்பட்ட அனுபவங்களின் வழியாக அதை கடந்து அதை தக்க வைத்துக் கொள்பவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். “அறம்” குறித்த நம்பிக்கையை ஆன்மீகத்துடன் இணைந்தால் மட்டுமே அது முழு அர்த்தத்தை கொடுக்கக் கூடியது. அறம் குறித்த நம்பிக்கை குலையும் போது ஆன்மீகத்தில் முதல் சிதைவு நிகழ்ந்து விடுகிறது. இன்று ஆன்மீகத்தை வலுப்படுத்த பேசப்படும் அனைத்தும் எளிய பகத்தியில் மட்டுமே சென்று முடிய இயலும் . அந்த பக்தியும் கூட ஆச்சாரத்தால் அனுஷ்டானதால் நிலைநிறுத்தப் படுவதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பக்தி இறுதிநிலைக்கு செல்வதாக நினைத்து மக்கள் ஆச்சாரத்திலும் அனுஷ்டானத்திலும் சிக்கிக் கொள்வதை பார்க்க முடிகிறது. ஆச்சாரம் மற்றும் அனுஷ்டானங்கள் சமையலுக்கு முன்னான பாத்திரத்தை சுத்தம் செய்வது போல . சுத்தம் செய்வது முடிந்து சமையலுக்குள் நுழைவதைப் போல ஆச்சாரம் என்பது ஒரு வகை அகப் புரிதல் மட்டுமே.நிஜத்துடன் அது ஒவ்வொரு புள்ளியிலும் சமரசம் செய்து கொண்டு  பின் அதிலிருந்து  விடுபட்டு பக்திக்குள் நுழையும் ஒன்று. ஆனால் எங்கும் அது நிகழ்வதாக தெரியவில்லை.


ஆன்மீகத்தின் வழியாக பக்தியென புரிந்து கொள்ளப்படுவது தத்துவத்தின் கனி. அது யதார்த்தத்தில் அது ஒருபோதும் ஆச்சாரத்தை வலியுறுத்துவதில்லை. ஆச்சாரம் என்பது உடல் சுத்தம் பற்றிய நம்மிக்கையின் குறியீடு. அனுஷ்டனம் செய்முறை தொகுப்பு என்பதால் பூஜையின் அறுபடலை தவிர்கிறது. அதில் மனம் ஒன்றைச் செய்கிறது. அதுவே ஒரு ஆழ்நிலை தியானத்திற்கு ஈடானது. அனுஷ்டான என உருவகிக்கும் செயல்முறையின் போது அந்த தியானத்தின் வசம் மனம் செல்லாமல் செய்வதில் உள்ள நேர்த்தியை ஆழ்மனம் கவனித்திக் கொண்டே இருக்கிறது. இயல்பாக நிகழ வேண்டிய ஆழ்நிலை தியானத்திற்கு இது ஒரு பெரியத் தடை. உருவம் மற்றும் விக்ரஹ வழிபாட்டில் பூஜையில் நிகழும் தன்னை மறத்தல் என்கிற அழகியல் ஒரு எளிய தியானம். ஆழ் மனதில் அது உருவாக்கும் தத்துவ புரிதல்கள் மிக ஆழமானவை. 


பக்தியிலும் , தத்துவத்திலும் சாமான்யம் விசேஷம் என்பதெல்லாம் புரிதலின் பொருட்டு விரித்தெடுக்கப்படுபவை. பக்தி செய்வதில் ஆர்வமிருக்கும் ஒருவருக்கு இவை எந்த அர்த்தத்தையும் கற்பிக்கப் போவதில்லை . விரித்தெடுக்கையில் இந்த வேறுபாடு மிக  சிக்கலானது. காரணம் தத்துவம் என்கிற ஒன்றை பக்தி கடந்த ஞானத்தின் வழியாக புரிந்து கொள்ளப்படுகிறது. பக்தி ஞானத்தின் விதையல்ல. இரண்டும் இரண்டு வேறுபட்ட நிலைகளும் அல்ல. விதை அழிந்து மரம் முளைப்பது போல பக்தி அழிந்து ஞானத்திற்கு வளர்வதல்ல . அப்படி பக்தி பிறகு அடையப்படுவது என்பதால் அந்த ஞானம் இறுதியானதும் அல்ல . அது ஒரு தேடலைப் போல தொடர்ந்து தன் மையத்தை நோக்கி நகர்கிறது. மையம் இவை ஒன்றோடு ஒன்று முயங்கி நிற்பது அதன் இரண்டறு நிலை. முதல் நிலை புரிதலை ஞானம் என வகுத்துக் கொண்ட பிறகு மனம் அதை பக்தியில் வைத்து தொகுத்துக் கொண்டு வாழ்வியலில் போட்டுப் பார்த்து பின் அது உணர்த்தும் போதாமையால் மீண்டும் ஞானத்தை தேடி நகர்கிறது. இது ஒரு போதும் முடிவுறாத சுழற்சி. மீள மீள இது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இந்த இடத்தில் பக்தி ஞானம் பக்தி என்பது அதனுடைய உயர்ந்து செல்லும் படிநிலைகளை சொல்ல வந்தது. அதில் ஈடுபடுபவர் மட்டுமே அதை பிரித்தறிய முடியும். மறுஜென்ம கோட்பாட்டை ஏற்றால் மட்டுமே அந்த சுயற்சியின் உண்மை தன்மையை எப்படி யுகம் யுகமாக காலம் காலமாக நீடிப்பது என உணர இயலும். அதன் அறுபடாத்தன்மையில் உள்ள விசை மட்டுமேயான வாழ்கையை புரிந்து கொள்ள அதை பின் தொடர வேண்டி இருக்கும்.


மரபான வைதிக உபன்யாசகர்கள் பலர் தங்கள் துறையில் சிறந்தவர்களாக இருந்தாலும் உலகியலுக்கு தேவையுறும் பொருளியலில் வெற்றி பெற்றவர்களாக பெரும்பாலும் இருப்பதில்லை . அதன் பாதிப்பால் அவர்களின் உபன்யாசங்களில் ஒரு அதீத இயந்திரத்தன்மையை பார்த்திருக்கிறேன. அவர்களின் பேச்சுக்களால் கவரப்படும் ஒருவர் தனது ஆர்வத்தை அதிகரித்துக் கொள்ள அவரை தனிப்பட்ட சந்திக்கும் போதும் உரையாடும் போதும் அவர்களில் இருந்து மிக சாமான்யன் ஒருவன் எழுந்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைவதை பார்த்திருக்கிறேன். இந்த மாறுபாடு மிக இயல்பானது. அவரை பற்றிய நமது கணிப்புகளுக்குள் அவர் வந்து நிற்க வேண்டும் என நாம் எதிர்பார்பது நிஜத்தில் நிகழ்வதில்லை. கற்றலும் அதை போதிப்பதிலும் உள்ள ஒருவருக்கு ஆன்மீக அனுபவம் என ஒன்று உருவாகி நிலைபெற்றிருக்க வேண்டும் என்கிற கருத்து யதார்த்தத்தில் இருப்பதாக நினைக்கவில்லை. அர்ச்சா விக்கரஹத்தின் பெருமையை வர்ணித்து இரண்டு மணிநேரம் உபன்யாசகம் செய்யும் ஒருவர். அதை கோவிலில் வைத்து விக்ரஹத்தை வணங்கும் போது மனமொன்றி ஈடுபாடுவதில்லை. வெறுமே வணங்கி விலகிவிடுகிறார்கள். 


கிருஷ்ணப்பிரேமி அதற்கு விதிவிலக்கு என நினைக்கிறேன் . அவரது உபன்யாசங்கள் அனைத்தும் அனுபவத்திற்கு அழைத்து செல்லும் முயற்சி. அல்லது அது அவரது பாணியாக இருக்கலாம். அவரின் விமர்சனங்கள் அனைத்து எல்லைகளையும் கடக்கும் தன்மை கொண்டதாக இருந்திருக்கிறது. தன்னைப் பற்றிய விமர்சனமும் அதற்கு விலககல்ல. அவர் தன்னை பற்றி சொல்லுகையில் இளமையில் சநாதன தர்மத்தை அதீதமாக வலியுறுத்தும் தனது பாணியை ஒரு புள்ளியில் வெளிவந்ததை பற்றியும் இருக்கும். ஒரு கட்டத்திற்கு மேல் அதற்கு நவீன உலகில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை முழுமையாக ஏற்றவராக இருந்தார். அதை வெளிப்படுத்தவும் தயங்கவில்லை. சம்பிரதாயத்தை பற்றி உபனயசிக்கத் துவங்கும் அனைவரும் இதே பாதை வழியாக வந்தாலும் இறுதியில் அவை இன்றைய உலகியலில் பொருந்தும்படி இல்லை என்பதை மிக மிக தாமதமாக ஏற்கிறார்கள். ஆனால் இந்த சுழற்சி மீள மீள புதிது போல முடிவுறாது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. வருபவர் அனைவரும் புதிதென கற்ற சம்பிரதாய கல்வி அளிக்கும் ஊற்றம் யாரையும் எதையும் மாற்ற வல்லது என மயங்குகிறார்கள் துரதிஷ்டவசமாக பழையவற்றில் இருந்து எதுவும் கற்காதவர்களாக இருக்கிறார்கள் எனபது சோகம்.கிருஷ்ணப்பிரேமியை சார்ந்திருந்தவர்களின் எண்ணிக்கையால் பிற தேவைகளில் தன்னிறைவை அடைந்திருந்தார்கள் என நினைக்கிறேன். அவரது பக்தி ஒருவித கூட்டு அனுபவ முறையை சேர்ந்தது. அவரின் அணுக்கத்தை பெற விரும்புவர்கள் அவரை சுற்றி பல வித இயக்கங்கள்ளாக எப்போதும் இயங்கிக் கொண்டிருந்தனர். 


மிகுந்த நிலையழிதலில் இருந்த கால கட்டத்தில் அதிலிருந்து வெளிவர அவரின் உபன்யாசங்கள் பெரிதும் உதவின . வானப்பிரஸ்தம் போல அனைத்திலிருந்தும் துண்டித்துக் கொண்டு நீண்ட காலத் தனிமையில் இருந்திருக்கிறேன். அந்த சூழலில் எனக்கு நானே சொல்லிக் கொண்டது “யாரையும் வெறுக்காதே இந்த சூழல் சொல்லவருவது என்ன என்பதை அவதானித்துக் கொள்” என அதை பயன் படுத்த்திக் கொண்டேன். வீட்டிலும் கூட மனதளவில் தனித்திருந்தேன். கிருஷ்ணப்பிரேமியின் உபன்யாசங்கள் எளியவை சாரமிக்கவை உணர்ச்சிகளால் ஆனவை. வேளுக்குடியின் பாணியில் இருந்து பெரிதும் மாறுபட்டவை. வேளுக்குடியின் உபன்யாசங்கள் மூளையை சொடுக்குபவை அவரை பின் தொடர அறுபாடாத சிந்தனை நிகழ்த வேண்டிய பொறுப்பு அதை கேட்பவருக்கு இருக்கிறது. மனம் அதன் அலைகழிப்பில் இருக்கும் போது உளக்குவிப்பு முயற்சி என்பது  பெரிய வதை. 


இது ஒரு புறம் நிகழ்ந்து கொண்டிருந்த போதுதான் ஆயிரமாவது ஆண்டு விழா பற்றிய திட்டமிடலும் அதன் முன்னெடுப்புகளும் அதன் துவங்கமும் கொண்டிருந்தது். நல்லூழ் காரணமாக புதிய முயற்சிகளை ஆர்வமுடன் துவங்கும் மனநிலை எப்படி அமைந்தது என இப்போதும் புரியவில்லை. நிலையழிதலுக்கு படைப்பூக்க மனநிலை ஒரு மிகப் பெரிய மாற்று என பின்னாளில் அறிந்து கொள்ள முடிந்தது. அது எத்தனை நிஜம் என இன்று நினைக்கிறேன். அதை பேரிருப்பு எனக்களித்த கொடை. மானுட வாழ்வியலில் சிக்கலை உருவாக்கி அளிக்கும் அது நமக்கு இன்னதென புரியாத போதும் அதிலிருந்து வெளி வரும் வழியை ஒன்றை சிந்தனை வழியாக அளிக்கிறது. அதை செய்ய இயலாத சூழலில் அது தானே முன்னின்று தன் பெரும் கருணையினால் உருவாக்கி அதை நிகழ்த்தியும் கொடுக்கிறது. 


தனிமையில் திளைத்துக் கொண்டிருந்த என்னை ஒரு நாள் “வெளியே செல்” என்கிற ஆழ்மன உத்தரவு போல. அது சொல்லிக் கொண்டே இருந்தது. அதை எனது விழைவு என புறந்தள்ளிக் கொண்டே இருந்தேன். ஒரு கூட்டுப் புழு காலம் போல அதற்கான காலம் முடிந்த போது காற்று அதை வெளியே தள்ளிவிடுகிறது.அதன் சொந்த முயற்சி என்பது ஒரு குறியீடு போல. அதன் வெளியேற்றத்திற்கான விசையை அதுதான் உருவாக்க வேண்டி இருக்கிறது.


ஒரு நல்லிரவில்  ஐபேடில் சில குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்த போது புதியதாக பதிவிறக்கம் செய்ய வேண்டிய app பா்ரத்துக் கொண்டிருந்தேன் அப்போது இசை சம்பந்தப்பட்ட ஒரு app ஒன்றை பார்த்து விளையாட்டிற்கு அதை தரவிறக்கம் செய்தேன். அதன் பாடல் வரிசையில் மணிரத்தணத்தின் “கடல்” படத்தின் “மூங்கில் தோட்டம்” பாடல் சட்டென ஒலிக்க அதன் இசை கோர்வை அடுத்த சில மணி தேரத்தை விழுங்கியது. அதை ஒரு விடுதலை போல உணர்ந்தேன். பின் மெல்ல பிற திரைப்பட மற்றும் இசை கோர்வையை கேட்கத் துவங்கினேன். எனக்குள் நான் அதுவரை அறியாத பிறிதொரு உள்ளம் எழுந்து வருவதை மிக மிக தாமதமாக உணர்நதேன். முதலில் நான் உணர்ந்த அந்த வேறுபாடு மிகவும் ரசித்த பழைய பாடல்கள் கேட்கும் பொறுமையற்று இருந்தேன். பழைய இசை பாணி முற்றும் ஒவ்வாததாக இருந்தது. காது நிறையும் முழு ஒலி கோர்ஙை கொண்ட நவீன ரகப் பாடல்களின் அழகியலில் மனம் முழுமையாக இருந்தது. அது ஏன் எனக்குள் நிகழ்ந்தது என அப்போது நான் அவதானித்திருக்கவில்லை


சனி, 19 செப்டம்பர், 2026

மணிவிழா -94 * சிறு குருவியின் இடம்*

 



ஶ்ரீ:



மணிவிழா - 94


19-09-2026


* சிறு குருவியின் இடம் *





புதுவை ஆயிரமாவது ஆண்டு விழா குழுவின் மைய நோக்கம் ஆன்மீகத்தின் பல தளமும் அதன் இருப்பை மையப்படுத்தும் மற்றும் தொடர்புறுத்தும் எண்ணத்துடன் துவக்கப்பட்டது. அதில் பக்தி என்பது ஒரு படிநிலை மட்டுமே அதை தொடர்ந்து தத்துவத்தின் வழியாக பக்தியை இன்னும் அணுக்கமாக புரிந்து கொள்ள முயலும் நோக்கமும், உலகளாவிய தத்துவத்தின் பார்வை வழியாக அது அடைந்திருக்கும் மாற்றமும் அதன் முரணியக்கமும் பற்றியும், அதிலிருந்து இந்திய ஆன்மீக எதிர்கால பற்றிய அவதானிப்பும் கொண்டதாக இருக்க வேண்டும் என்கிற குறிகோள் கொண்டதாக இருந்தது

என்பதால் அதை ஒரு சராசரி ஆன்மீக அமைப்பாக உருவாக்க விரும்பவில்லை. அதை செய்ய இங்கே பல நூறு இயகங்கள் உண்டு. அவை எப்போதும் ஒரு குறிப்பட்ட சம்பிரதாயத்தை விதந்தோத வந்தவை. மிகச் சிறிய நன்கொடையாளர்களை நம்பி இயங்குவது என்பதால் அவற்றின் எல்லைகள் மிக குறுகியவை வரையறைக்கு உட்பட்டவை . 


ஆயிரமாவது ஆண்டு விழா குழு அமைப்பு ஒரு இயக்கம். பல துறைகளில் தளங்களில் விரிந்து செயல்பட வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனூடாக ஒரு கருத்தை ஆழமாக சொல்ல வந்தது. ராமாநுஜரின் சொல் இந்த ஆயிரம் ஆண்டு கடந்த நிலையில் எ‌ன்ன பொருள் கொண்டிருக்கிறது நவீன உலக அமைப்பில் அதன் மீதான மதிப்பீடு எப்படி மறு வரையறை செய்யப்பட வேண்டும். அது எப்படி வழிகாட்ட இயலும் என்பதுடன் இளைய தலைமுறையை சேர்ந்தவர்களை உட் கொண்டு வரும் திட்டம். அதில் அவர்களுக்கான பங்கு என்ன என்பதை போன்ற பல கேள்விகளை எழுப்பிக் கொண்டு ஒரு மிகப் பெரிய விவாதத்தில் நுழைவது பற்றியும். அதை நிகழ்த்த கூடும் என உருவகித்திருந்த மாபெரும் அறிவியக்கமும் மற்றும் மரபான குரு நிலைகளையும் என இரண்டையும் முதல் முறையாக ஒருங்கிணைப்பது அதன் கனவாக சவாலாக இருந்தது. 


இயக்கத்தின் பிரம்மாண்டம் சட்டென சென்று சேரும் வழியில் முதல் முறையாக புதுவையில் திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து முப்பது ஏக்கர் நிலப்பரப்பில் அமைய இருக்கும் “திருப்பதி பாணி கோவில்”. அதை சுற்றி மூத்த குடிமக்களின் வாழ்விடங்கள் அவர்களை பராமரிக்கும் மேலான்மை இளம் வைதிகர்களிக்கான வேத பாடசாலை, விழாக்குழு தலைமைநிலையமும் அதன் அரங்குகள் போன்ற நிரந்தர அமைப்புகளை கொண்டதாக ஒரு காலனி வடிவமைக்கப் படவேண்டும் என்கிற திட்டத்தின் அடிப்படை பேச்சு வார்த்தைகள் நிகழ்ந்து கொண்டிருந்தது. திருமலா திருப்பது தேவஸதானத்துடன் இரண்டு கட்ட கூட்டம் நிறைவடைந்திருந்த நிலையில் அதற்கான பொருளியல் ஆதராங்களை திரட்டும் அமைப்பு ஒருங்கிணைந்த செயல்பாட்டில் இருந்தது. 


ஒரு விஷயத்தை உரக்க சொல்ல அது ஈர்க்க வேண்டிய மக்கள் திரள் முக்கியம் அதை செயலாக்க தேவையாகும் பெரும் பொருளியல் தேவையை உருவாக்கி அளிக்கும் பெரிய அமைப்பும் அதன் மேலான்மையுப் தேவையாகிறது. பொதுவாக ஆன்மீக நிகழ்விற்கு கிடைக்கும் ஆதரவு என்பதை அது கொண்டு வரும் பொருளை சார்ந்தது.அதை பல நிலைகளில் இருந்து பெரும் திட்டமிருந்தது. மக்களை ஈர்க்கும் விஷயமாக

வேளுக்குடி கிருஷ்ணன். அதன் முழு கட்டுமானத்தின் அடித்தளமும் அவர் தான் . 2010-11 களில் முதல் முறை விழாக் குழு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதும் மையப்புள்ளி அவரே. அவரை தவிர பிற எவரையும் அங்கு வைத்து எதையும் கட்டி எழுப்ப இயலாது. விழா குழு துவங்கும் முதல் முயற்சியில் அவரை சந்திக்க முயன்று இயலாமலாக கைவிடப்பட்டது். அப்போது ஏற்பட்ட மனப்பதிவு அங்கு நிலவிய அரசியல் பின்னணியில் அதை ஒரு போதும் என்னால் செய்து முடிக்க முடியாது என உறுதியாக தோன்றிய பிறகே அந்த முயற்சி கைவிடப்பட்டது. பின்னர் அது அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர் புதுவையில் உபன்யாசம் நிகழ்த்த தேதி கொடுத்த போது அதை ஆயிரமாவது ஆண்டு விழா குழுவின் துவக்கமாக மாற்றிக் கொண்டேன். 


கனவுகள் விழைவை உந்தித் தள்ளுபவை என்தால்  நிறைவடையாதவை. இம்முறை விழாக் குழுவில் நிர்வாக பொறுப்பிற்குள் அவர் நேரடியாக வர வேண்டும் என விரும்பினேன். அதை நேர் கொண்டு கேட்க தயங்கி மெல்ல அவரது ஒப்புதலுடன் அது நிகழ்ந்தது. பின்னர் நான் அமைத்த கமிட்டியில் திருக்கோவிலூர் ஜீயர் மற்றும் வேளுக்குடி கிருஷ்ணன் இருவரும் அமைப்பின் போஷகரானார்கள். வியூக அளவில் அது மிகப் பெரிய வெற்றி. இன்று வரை அதை போல ஒன்றை யாராலும் செய்ய இயலவில்லை. இதில் நான் பெருமைபட்டுக் கொள்ள ஒன்று உண்டென்றால் அவரது “கிஞ்சித்காரத்தை” தவிர வேளுக்குடி கிருஷ்ணன் நிர்வாக பொறுப்பேற்றக் கொண்ட ஒரே இயக்கம் புதுவையின் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழு.


பிறரால் எளிதில் அணுக முடியாதவராக தன்னை இன்றும் வைத்திருக்கிறார் . அதற்கு பின்னால் உள்ளது அவரது முன் ஜாக்கிரதை அரசியல். “கிஞ்சித்காரம்” என தன்னை ஒரு சிறிய பாதுகாப்பு வட்டத்திற்குள் கொண்டு வந்திருந்தாலும் தென் மற்றும் வட கலை சம்பிரதாய முரணை மிக மிக நுட்பமாக உணர்ந்தவர். தான் சார்ந்த தென்கலை சம்பிரதாயத்தில் தன்னை நிறுவிக் கொள்ள ஆரம்பித்த போது தன்னை நோக்கி அனைத்து வைஷ்ணவர்களை ஈர்க்கும் முயற்சியில் இருந்தார். அனைவரையும் ஒரு குடைக்கீழ் கொண்டுவர இயலும் என நம்பினார். வித விதமான பல்வேறு காரணங்களை சொல்லப்பட்டாலும் இன்றுவரை அது நிகழவில்லை.  பிறர் தன்னை தீவிர தென்கலை பற்றாளர் என உருவகித்துக் கொள்வது பற்றி கவலை கொள்ளவில்லை. துவக்கத்தில் அவர் புகழ் பெற துவங்கியபோது சம்பிரதாயத்தில் தனக்குள்ள ஊற்றத்தின் மூலம் தன்னை முற்றாக வெளிப்படுத்திக் கொள்ள அவர் தனது பிரச்சார உத்தியை கையாண்டார் என நினைக்கிறேன். அவரது புகழ்மிக்க பிள்ளை லோகாச்சாரியர் அருளிய “அஷ்டாதச ரகஸ்யம்” என்கிற நூல் குறித்த அவரது நீண்ட உரையை சொல்லாலம். அதில் அதன் ஆசிரியர் “பிள்ளை லோகாசாரியாரை” “லோகதேசிகர்” என்றே அழைத்தார். இரண்டு சம்பிரதாயத்தையும் அவர் பிரித்து பார்க்கவில்லை என நினைக்கிறேன்.அவர் எனக்கு 1997 களில் செவி வழியாக அறிமுகமானார். அதற்கு அவரின் உரை சிடி உதவியது. அன்று அது மிக உயர்ந்த தொழில்நுடப்பம். மொத்தம் 26 மணி நேரத்திற்கு மேல் அவர் ஆற்றிய உரை அது. 


வேளுக்குடி கிருஷணன் வேளுக்குடி வரதாச்சாரியார் என்கிற புகழ்மிக்க வைணவ உபன்யாசகரின் ஒரே புதல்வர். கல்வியின் வழியாக மிக உயர்ந்த பதவிக்கு சென்றமர்ந்தார். பட்டைய கணக்காளர் பயிற்சி பெற்று மிக அதிக வருமானம் பெரும் அதிகாரியாக இருந்தார். 

தந்தை மண்மறையும் வரை அவர் உபன்யாசகராக வருவது பற்றி சிந்தித்திருக்க மாட்டார் என நினைகிறேன். ஊழ் ஒரு கணத்தில் அனைத்தையும் புரட்டிப் போட்டது. சட்டை பேன்டை கழற்றி வேட்டி அங்கஸ்வரத்திற்கு மாறினார். ஐய்யங்கார் மரபில் சட்டை அணியாதிருப்பது ஒன்றும் பெரிய புரட்சியில்லை. ஆனால் மனநிலையில் அவர்கள் உலகியலை ஆழப்பிடித்திருப்பவர்கள். அதிலிருந்து வெளிவந்தவர்களாக நான் யாரையும் அறிந்ததில்லை. அவர்கள் கற்ற நெறி அதற்கும் இடம் வைத்திருக்க வேண்டும். உலகியலில் மற்றும் மரபு என இரண்டிலும் ஒரே சயமயத்தில் பயணிக்வல்லவர்கள். 


ஆனால் அவர்களுக்கு மத்தியில் வேளுக்குடி கிருஷ்ணன் அதிலிருந்து முற்றாக வெளிவந்தவராக தெரிந்தார். அதி என்னை அவரை நோக்கி ஈர்த்த பிறிதொரு விஷயம். அந்த காலகட்டத்தில் பலர் மரபான வைணவ உபன்யாசத்தில் புகழ் பெற்றிருந்தாலும் அவர்களின் அடிப்படை குடும்ப பின்னணியில் அதற்கான பாதை இருந்தது என்பதால் அதை ஒரு தொழில்முறை நிகழ்த்துக் கலையாக உருவாக்கி இருந்தார்கள். என்ன காரணத்தினாலோ எனக்கு அவர்களது அந்த மரபான உபன்யாசத்தில் ஒரு மன விலக்கம் இருந்தது. அடிப்படையில் சாமன்ய உலகியலில் உழலும் ஒருவருக்கு உயரத்தில் இருந்து கொண்டு இயந்தரத்தனமாக வைணவ கருத்து சொல்பவர்களாக இருந்தார்கள் என்பது ஒரு முக்கிய காரணம். மேடைக்கு வெளியே மிக எளிய அன்றாட உலகில் இருப்பவர்களாக தெரிந்தார்கள். அன்று எனக்கிருந்த சிக்கல் வேறு உலகத்தில் இருந்து ஆம்மீகம் நோக்கி வருபவர்களுக்கு இந்த உபன்யாசகர்கள் சொல்ல ஒன்றுமில்லை என தோன்றியது.


வேளுக்குடி கிருஷ்ணன் பற்றிய அறிமுகத்தை எனக்கு திருக்கோவிலூர் ஜீயர் தான் முதலில் செய்தார். நான் அதுவரை DA.ஜோசப்புடைய உபன்யாசங்களை முழுமையாக கேட்டுக் கொண்டிருந்தேன். வேளுக்குடி கிருஷ்ணன் பற்றி அவர் சொன்னது அப்போதுதான். இருந்தாலும் அது என் கவனத்தை கவரவில்லை.ஆனால் அவரது தந்தை வேளுக்குடி வரதாச்சாரியார் என் கவனத்தை மிக சிறிய வயதில் கவர்ந்தவர். என்னுடைய 8 வது வயதில் எனக்கு பரண்யாசம் முடிந்து பிறகு தந்தை என்னை ஊர் ஊராக கதற கதற வைணவ மாநாட்டிற்கு அழைத்து சென்ற காலம். பொதுவாக வைணவ மாநாடுகள் ஞாயிற்றுக்கிழமைகளில் நிகழும் எனக்கான ஒரே விடுமுறை தினம் அது என்பதால் அதை ஒவ்வொரு முறை இழக்கும் போது அப்பா மீது கசப்பும் வன்மமும் கொண்டிருந்தேன். 


அப்படி ஒரு முறை பண்ருட்டி வைணவ மாநாட்டிற்கு சென்ற போது வேளுக்குடி வரதாச்சாரியார் என்பவரின் உபன்யாசம். தலைப்பு “கண்ணிநுன் சிறுதாம்பு” இவ்வளவு காலம் இந்த இரண்டும் நினைவில் இருந்ததற்கு காரணம் அன்று நான் கேட்ட உபன்யாசத்தில் எந்த தங்கு தடையும் இல்லாமல் ஒரு அருவி போல ஒலித்துக் கொண்டிருந்தது . அதன் எந்த அர்த்தத்தையும் உள்வாங்கும் வயதில்லாமல் அங்கு நிகழ்ந்து கொண்டிருந்த உரையை என்னை மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். எனது பிறவி பேச்சுக் குறைபாட்டினால் பேசுவதே இல்லாமலாகி இருந்த எனக்கு அந்த சூழலில் எந்த தடையும் இல்லாமல் ஒருவர் பேசிக்கொண்டே சென்றது அன்று மறக்கமுடியாத காட்சி. அதன் பிறகு அவரை மீண்டும் சில முறை சந்திக்கும் வாயப்பு ஆனால் அவரது பேச்சை கேட்டது அதுவே முதலும் கடைசியும். அதன் பின்னர் அவரின் பிள்ளையின் பெயரை கேட்டது திருக்கோவிலூர் ஜீயர் சொல்லி. 


DA.ஜோசப் என் தந்தைக்கு மிக அணுக்கமானவர். முப்பது வருடத்திற்கு முன்பு அவர் புதுவைக்கு வந்த போது என் தந்தையை சந்திக்க வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அவர் கொண்டு வந்திருந்த நூல் “என் தாத்தா ஒரு குரங்கா?” என்பதாக இருந்தது. டார்வின் கோட்பாட்டை மறுத்த எழுதிய ஒரு ஆன்மீக நூல். அந்த நூலின் பெயரால் இன்றுவரை அது என் நினைவில் நின்றிருக்கிறது. சில காலம் பின்னர் அவர் புதுவையில் நன்றாக வளர்ந்திருந்த சூழல் மிஷன் வீதி செட்டிக் கோவிலில் அவரது உபன்யாசம் அனேகமாக எல்லா நாளும் இருந்தது. உபன்யாசத்திற்கு பிறகு தட்டேந்தி அந்த வசூல் அவரது அடிப்படை பொருளியல் வரவாக இருந்தது. ஒரு சிறு கூட்டம் தினமும் அங்கு அவரது பேச்சை கேட்க கூடும். பின்னர் மெல்ல தட்டு வசூல் நின்று தினம் ஒருவர் அன்றைய செலவை ஏற்றுக் கொள்ள துவங்கினர். 


என் தமக்கை மூலம் அவரது சில உபன்யாசங்களை கேசெட் வழியாக கேட்டேன். மரபான சம்பிரதாய உரை ஆனால் நவீனத்திற்கு மிக அருகில் வரக்கூடியது ஏதோ ஒரு கூறு அதில் இருப்பதாக தோன்றிய பிறகு அவரின் அனைத்து உபன்யாசங்களையும் முழுமையாக கேட்கத் துவங்கினேன். அவரை மரபான வைணவர்கள் ஏற்பதில்லை அதற்கான காரணம் மிக எளியவை அடிப்படையானவை,. பெயர் முதல் காரணம். அவர் இன்றளவும் அதை மாற்றிக் கொள்ளவில்லை இரண்டு வைணவ சின்னங்களை அணிவதில்லை. அவர் வழியாக அனைத்து உபநிஷத்துகளும் கீதையும் கேட்ட பிறகு வைணவ முக்கிய நூல்களான “ஶ்ரீவசனபூஷணம்” “ஆச்சார்யஹிருதயம்” போன்றவற்றை கேட்கத் துவங்கினேன். இன்றளவும் அவரின் ஶ்ரீவசனபூஷணம் ஒரு கிளாசிக். ஆனால் என்ன காரணத்தினாலோ நான் மிக விரும்பிய “ஆச்சார்யஹிருதயம்” எனக்கு போதாமலாகி சற்று விலக துவங்கிய நேரத்தில் தான் திருகோவிலூர் ஜீயர் எகனக்கு வேளுக்குடி கிருஷ்ணன் பற்றிய அறிமுகம் செய்தார். வேளுக்குடி எனக்கு முன்பே அறிமுகமானது என்றாலும் அவருடைய உபன்யாசங்களை கேட்க துவங்க சிறிய மனத்தடை இருந்தது. 


மரபான உபன்யாசங்களில் உள்ள ஒருவித தொடர்பற்ற தன்மை என்னை எப்போதும் தொந்தரவு செய்பவை. அவரின் பிள்ளைலோகாசாரியரின் “அஷ்டாதச ரஹஸ்ய” நூலின் உரை கேட்க துவங்கியது ஒரு கீதா முகூர்த்தம். எந்த இடக்கரடக்லும் இல்லாத மிக தெளிவான உரையாடல் போல சென்ற உபன்யாசம் ஏறக்குறைய முழுமையும் கேட்டு முடித்த பிறகு அவரை சந்திக்க நினைத்தேன் அது எப்படி நிகழும் என்றெல்லாம் எந்த எண்ணமும் அப்போது இல்லை. சந்திக்க வேண்டும் அவ்வளவு தான். சில நாட்களில் அது நிகழ்ந்தது அதை சந்திப்பு என்றெல்லாம் சொல்ல முடியாது . புதுவை விஷ்ணு சஹஸ்ரநாம மண்டலி என்கிற அமைப்பு புதுவை ஜெயராம் கல்யாண மண்டபத்தில் அவருடைய உபன்யாசத்தற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது அவரை முதல் முதலாக நேரில் பார்த்தேன். மிக வசீகமான ஆளுமை அவரது வருகை அமர்வு பின் பேச்சு அதன் நிமிர்வு என அத்தனையிலும் ஒரு ஒழுங்கு இருந்ததாக பட்டது. 2008 களில் நிகழ்ந்த போது எனக்கு ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு பற்றிய எந்த சிந்தனையும் இல்லை. ஆனால் 2010 களில் திருக்கோவிலூர் ஜீயருடன் அயோத்தி யாத்திரை சென்று திரும்பும் போது அவருடனான ரையாடலின் போது அந்த எண்ணம் மிக தீவிரமாக எழுந்தது. அப்போதே ஆயிரமாவது ஆண்டு குழு பற்றிய திட்டமும் அதில் வேளுக்குடியின் இடமும் பற்றி திருக்கோவிலூர் ஜீயரிடம் பேசி ஒப்புதல் பெற்றிருந்தேன். அந்த முதல் முயற்சி நிறைவேறவில்லை.


புதிய பதிவுகள்

மணிவிழா -95. கிளையில் வேர்

ஶ்ரீ : மணிவிழா - 95 21-09-2026 * கிளையில்   வேர் * வேளுக்குடி கிருஷ்ணின் உபன்யாசங்களை கடந்து அவர் என்னை கவர்ந்ததற்கு ...