ஶ்ரீ:
பதிவு : 637 / 827 / தேதி 21 ஆகஸ்ட் 2022
* ஓய்வறியா தனிமை *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 33 .
அன்று முன் மதியம் அலைபேசியில் தலைவர் அழைத்து “உடனே” கிளம்பி வீட்டிற்கு வரச்சொன்னார். அவருக்கு எப்போதும் எல்லாமே “உடனே” தான் . மற்றவர்கள் தங்களுக்கானதை நோக்கி கொண்டு காலம் கணிய கணிய காத்திருக்க வேண்டும். நான் வேண்டுமென்றே தாமதமாக அன்று மாலை அவரை சந்தித்த போது “ஏன் உடனே வரவில்லை” என கோபிக்கவில்லை கேட்கவில்லை கேட்கவும் மாட்டார். அந்த சந்தர்பங்களில் அங்கில்லாததைப் போல வெளியே நின்றுவிடுவார் அதற்கென தனித்த மனநிலை பயிற்சி வேண்டும் என நினைக்கிறேன். அரசியலில் பொறுப்பில் இருப்பவர் ஏவல் பணியாளர் அல்ல. தனியாளுமையாக நிற்பவர் என்பது ஒரு கூற்று என்றாலும் குற்றவாளி என அவர் யாரையும் சொன்னதில்லை. பெரும் குற்றம் செய்துவிட்டு அவரை வந்து பார்க்கும் யாரையும் அந்த மனநிலையில் வைத்து பேசமாட்டார். அசாதாரண சூழலை உருவாக்காது வேறு கதைகளை பேசி சிரித்துக் கொண்டிருப்பார். தன்னை நோக்கி எழும் என அவர்கள் நினைத்து வந்த எதுவும் அங்கு பேசப்படாது. எல்லாத் செயல்களும் அதை செய்பவர் கோணத்தில் ஒரு நியாயம் சொல்லப்படும் என சண்முகம் அறிந்திருந்தார். அது பேசப்படுவதால் அங்கு எதுவும் நிகழப் போவதில்லை என உறுதியாக இருந்தார். எனவே அறிவுறைகள் அவர்களுக்கு சொல்லப்படாது . இவற்றை புறந்தள்ளி சம்மந்தப்பட்டவரே நேரடியாக அந்த நெருப்பை கொண்டுவந்து வைத்து விடுவதும் உண்டு. தலைவரே அந்த சந்தர்ப்களில் அவர் பக்க நியாயத்தை எடுத்து வைத்து அதை ஒன்றுமில்லாமலாக்கி்விடுவார். வந்தவர் குழம்பி வணங்கி சென்ற பிறகு அங்கு கூடி இருக்கும் கூட்டம் அவர் சொல்லாட இருக்கும் வசை ஏளனம் என ஒன்று வெளிவருவதை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருக்கும். அது ஒரு போதும் நிகழ்வதில்லை. அதற்கு அடுத்த கதவை திறந்து கொண்டு வேறு தளங்களுக்குச் சென்று கூடி நின்றவர்களுக்கு உளச் சோர்வை கொடுத்து விடுவார்.
இரவு தனிமையில் உரையாடிக் கொண்டிருக்கும் போது ஒரு மாணவனுக்குறிய இடத்தில் நின்று கொண்டு மிக எச்சரிக்கையாக அவரிடம் அந்த கேள்விகளை வைத்ததுண்டு. மெல்ல தனது கோட்பாடுகளை சொல்லத் துவங்குவார். “குற்றவாளிகள் ஒரு போதும் தன்னிடமே அந்த குற்றத்தை ஒப்புக்கொளவதில்லை. அதை ஒப்பிட்டு தனக்குள் செய்து கொள்ள ஒரு பயிற்சி தேவையாகிறது. அது நிகழ்ந்தால் மட்டுமே அவற்றில் இருந்து புதியதாக ஏதாவது ஒன்றை அடைகிறார்கள். அது பிறர் பார்க்க ஒரு போதும் நிகழ்வதில்லை. அரசியல் வேகம் மிகுந்தது நின்று நிதாணக்க அது அவகாசம் வழங்குவதில்லை. ஆகவே கற்றல் நிகழ்வதில்லை. அரசியலில் முதன்மை பாடம் நமது எண்ணங்களை சொற்களை தேவையற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் ஏதும் நிகழப் போவதில்லை . அந்த கூட்டத்தில் இருக்கும் வீணன் ஒருவன் நன் சொன்னவற்றை அப்படியே வெளியே பரப்புவதில் அலாதி சுகம் காண்பவன். யாரை குறித்து நான் என்ன நினைக்கிறேனோ அதை அவனிடமே சொல்லும் துணிவு எனக்குண்டு அதற்கான சந்தர்ப்பம் வருப்போது அதை நான் அவனிடம் நேரில் சொல்லுவேன். அப்போது அது என் வார்த்தைகளாக மட்டும் இருக்கும். ஐந்தாவது காதிற்கு நான் சொல்ல ஒன்றுமில்லை. அப்படி சொல்வது நாகரீமில்லை என்றார்.
அன்று இரவு சென்னை கிளம்பி செல்ல வேண்டுமென்றார். மறுநாள் மதியம் தில்லி விமானத்தில் சென்னை வரும் பாரளுமன்ற உறுப்பினரை ஒருவரை புதுவைக்கு அழைத்து வர வேண்டும். சென்னை கிளம்பும் முன்பாக தன்னை வந்து பார்க்க சொன்னார். வர வர அது ஒரு சடங்கு போலாகியிருந்தது. எதை செய்வதற்கும் அந்த தருணம் முன்பாக இறுதி வார்த்தை சிலவற்றை சொல்லுவார். அது அதற்கு முன்பே ஆயிரம் முறை எனக்கு சொல்லப்பட்டிருக்கும் . சலிப்பில்லாமல் அவரால் அதை மீள மீள சொல்ல முடிகிறது . ஏன் அது நிகழ்கிறது என விளங்கிக் கொள்ள முடிந்ததில்லை . சொன்னவைகள் சொல்லபட்டவைகளாக அவரது நினைவில் சென்று அமராமல் இருக்கலாம். அல்லது என் மீது கொண்ட பதட்டம் அவரை மீள மீள அப்படி சொல்ல வைக்கிறதா? நான் பொறுமை இழந்திருந்தேன். சொல்லுவதை அமைதியாக கேட்டு உள்வாங்கிய பிறகு செயல்படுத்த வேண்டியதற்கு உகந்தததை ஏற்று அதை என் பாணியில் மாற்றி செயலாற்றுபவன் என்கிற எண்ணமும் அதற்கு காரணமாக இருக்கலாம். ஒருவகையில் நான் அவருக்கு பதட்டம் கொடுப்பவனாக இருந்தாலும் அதன் பொருட்டே அவர் மீள மீள சில பணிகளுக்கு என்னை தேர்ந்தெடுக்கிறார். அனைத்தையும் சொல்லி முடிந்த பிறகு தில்லியில் இருந்து வருபவருக்கு அணிவிக்க வேண்டிய பட்டு சால்வையை கொடுத்தார். அது பல தோள்களை தழுவியது. ஆனால் புதியதைப் போல இருந்தது . இன்னும் சில நூறு பேரையாவது அது அரவணக்கப் போகிறது. ஒழுங்காக மடித்து வைக்கப்பட்டிருந்தாலும் அதில் வியர்வை நாற்றம் எழுவதாக மனம் கற்பனை செய்து கொண்டே இருந்தது ஒவ்வாமையை கொடுத்தது . வெளியே வந்ததும் எனது ஓட்டுனரை அழைத்து அவரிடம் கொடுத்துவிட்டேன். இம்முறை வருபவர் 1999 ல் நடக்க இருக்கும் புதுவை பாராளுமனத் தேர்தலுக்கு வேட்பாளர் தெரிவின் மேலிடப் பார்வையாளராக வருகிறார். நடைபெற இருக்கும் மத்திய பிரதேச பாராளுமன்றத்திற்கு தேர்தலில் போட்டியிட சீட்டு கிடைக்காத வருத்தில் இருந்தவரை தேடி கண்டுபிடித்து அவரை சமாதனாப்படுத்த இங்கு தேர்வு செய்யும் பொறுப்பை அளித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள் . காங்கிரஸில் தான் இந்த மாதிரி வேடிக்கைகளும் முரண்நகைகளும் நிகழமுடியும்.
சென்னைக்கு காங்கிரஸ் மூத்த துணைத்தலைவர் அரியாங்குப்பம் விநாயகமூர்த்தியை அழைத்துக் கொண்டு கிளம்பிச் சொன்னார். விநாயகமூர்த்தி ஒரு வேடிக்கை மனிதர். 60 வயதை நெருங்கக் கொண்டிருந்தாலும் அந்த வயதிற்குறிய அனுபவத்தையும் தொகுத்துக் கொள்ளாதவர். அதே சமயம் தனது சீனியாரிட்டக்குள்ள அனைத்தும் முறையாக தனக்கு கிடைக்க வேண்டும் என நினைப்பவர். ஒரு வகையில் சண்முகத்தின் முகமாக தன்னை நிறுவிக் கொள்ள முயல்பவர் . வெளியில் இருந்து பார்பவர்கள் அனைவருக்கும் அந்த மிரட்சி இருக்கும். ஆனால் அது நடிப்பு மட்டுமே. நான் முதன் முதலில் சண்முகத்தை சந்திக்க வந்த போது அவர் செய்த அலப்பறையை நினைத்து சிரித்துக் கொண்டேன். அவை தன்னைப் பற்றிய மிகை மதிப்பு மரியாதை ஐயம் உருவாக்க அவர் முயற்சித்தவைகள். ஒரு வித “ரேகிங்” போல அதை அன்று என்னிடம் செய்தார் ஆனால் அசலில் மிக எளிய மனிதர். தான் வலிந்து உருவாக்கும் பிம்பத்தை மிக விரைவில் அவரை சிதைத்துக் கொள்வதை பார்த்திருக்கிறேன். நான் தலைவரிடம் “இவரை ஏன் அழைத்துக் கொண்டு போக சொல்கிறீர்கள் தலைவரே ஏதாவது உலறத்தொலைவார் எனக்கு ஏதாவது வில்லங்கத்தை உருவாக்கப் பார்கிறீர்களா ?” என்றேன். தலைவர் முகம் விஷமத்தால் மலர “கூட்டிக்கிட்டு போயா சும்மா இருப்பார்” என சொல்லி சிரித்தார். என்னிடம் கெஞ்சிகிற பாவனையில் விநாயகமூர்த்தி வந்து சேர்ந்ததும் மேற் கொண்டு சிக்கலாக்க விரும்பவில்லை. சில உள்குத்து வேலைகளில் அவர் சமர்த்தர் தேவையில்லாமல் அவரை விரோதித்துக் கொள்ள விரும்பவில்லை .