https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 19 டிசம்பர், 2019

அடையாளமாதல் - 502 * பிம்பமும் உருவகமும் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 502

பதிவு : 502 / 688 / தேதி 19 டிசம்பர்  2019

* பிம்பமும் உருவகமும்


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 16


புதுவை அரசியலில் பல கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு மத்தியில் சண்முகம் நோக்கிய அவர்களது  அனுகுமுறை,அவர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர், காங்கிரஸ் கூட்டணியின் பிரதான மையம் மேலும் அவர்களின் தேர்தல்  வெற்றிக்கு கூட்டணி இன்றியமையாத ஒன்று என்பதாலும் அவரை அனுசரித்து செல்லவேண்டும் என்கிற சூழல்  நிர்பந்தம் போல இருப்பதில்  உண்மை  ஒரு சிறு கூறு மட்டுமே . ஆனால் அவரை பற்றி உருவாகி இருந்த பிம்பம் அவரது பல அடுக்குகளின் செயல்பாடுகள் வழியாக எழுந்தவை. அவை ஒரு  தலைமை மீது கொண்ட நல் எண்ணமோ , அச்சமோ மட்டுமே அதை உருவாக்கி இருக்க முடியாது . பல்வேறு செய்திகளில் இருந்தும் தகவல்களில் இருந்தும்  பெறப்பட்ட புரிதல் முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும் 

அவர் புதுவை அரசியலை கடந்து தமிழக அரசியலில் பங்கு கொண்டதற்கு  காரணம் அவரது விரிவான தமிழகத் தொடர்புகள் .அந்த செல்வாக்கைக் கொண்டு புதுவையில் அவர் செய்த அரசியல் நகர்வுகள்  பிற கட்சி அமைப்பினரை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது  . அவை ஒருபோதும் பொதுவில்   வெளிப்பட்டதில்லை  . சில அபூர்வமாக செய்திகளில் இடம்பெற்றதுண்டு   .

சண்முகம் என்கிற பிம்பம் அரசியலாளர்கள் தவிற  பொது மக்களிடம் சென்று சேர்ந்ததில்லை .அவரது தலைமுறையை சேர்ந்த சிலரைத் தவிற பிறர் அவரை அறிந்ததில்லை . அதனால் எவரின்  கவனம் அவர் மீது குவியவில்லை என்பதே அவர் சுதந்திரமாக தான் நினைத்ததை செய்து முடிக்க காரணம்  என நினைக்கிறேன். அவர் விளம்பர அரசியலில் நாட்டம் கொண்டவராக பார்த்ததில்லை .

புதுவை அரசியலாளர்கள் அனைவரும் சென்னையை தங்கள் தலைமையிடமாகக் கொண்டவர்கள்  . முடிவுகள் எப்போதும் அங்கு எடுக்கப்படுபவை என்பதால் அவர்களால் தங்கள் சொந்த அரசியல் நகர்வுகளையும் அதை சார்ந்த தங்கள் தேவைகளையும் முழுமையாக சண்முகத்திடம் வைக்க முடியதபடி அவர்களின் கட்சித் தமிழக தலைமையின்  மத்தியில் பெரும் செல்வாக்குள்ளவராக இருந்தார் . எனவே புதுவை எதிர் கட்சி என்கிற ஒன்று எப்போதும் முனை மழுங்கியதாகவே இருந்தது .

அவருக்கு புதுவையை கடந்து  பிற தலைவர்களிடம் இருந்த செல்வாக்கு குறித்த அச்சமே அவரது சொல்லிற்கு உரிய இடத்தை அவருக்குப் பெற்றுத்தந்தது . அவரது அரசியல் பலத்தின் பின்னால் இந்திராகாந்தி என்கிற ஆளுமையின் இருப்பையும் அதனிடம் அவரின் அசையாத அபிமானத்தையும் அனைவரும் உணர்ந்திருந்தனர் என்பது பிறிதொரு கோணம் .இந்த இரண்டிற்கும் மத்தியில் அவரது அரசியல் வலுவாக நிலை கொண்டிருந்தது . அல்லது அதன் மத்தியில் கவனமாய் ஆடினார் 

திமுக மற்றும் அதிமுக மத்தியத் தலைமைகளுடன் சண்முகம் கொண்டிருந்த தொடர்பு கட்சி அரசியலுக்கும் , அதன் சூழ்தலுக்கும் அப்பாற்பட்டு பிறிதொரு நம்பகத்தன்மை கொண்ட ஆழமான ஒன்று என நினைக்கிறேன் . பிற தமிழக தலைவர்களிடம் இருந்து அது வேறுபட்டதாக இருந்திருக்க வேண்டும் . தமிழகம் மற்றும் புதுவையில் நிகழ்ந்த பல்வேறு உணர்வு பூர்வமான ஏற்ற இறக்க மிக்க அரசியல் நிகழ்வுகளுக்கு மத்தியில் அதன் பாதிப்புகளைக் கடந்து தமிழக இரு  பெரும் கட்சி  தலைமைகளும் தங்களின் அரசியல் குறித்த தனிப்பட்ட விழைவுகளை ஒளிவுமறைவின்றி மனம்விட்டு விவாதிக்கும் இடத்தில் சண்முகம் தன்னை வைத்திருந்தார் என்பது ஆச்சர்யமளிப்பது.

தமிழக தலைவர்களில் மூப்பனாருக்கு திமுக தலைமையிடம் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு நல்ல உறவிருந்தாலும் அடிப்படையில் தனது அனுகுமுறையால் சண்முகம் வேறுபட்டிருக்க வேண்டும்  . மூப்பனார் , கருணாநிதிக்குமான உறவில் மாநில நோக்கில் அவர்களுக்குள் அரசியல் தங்கள் இருப்பு , மற்றும் அதனால் விளையும் பலன் பற்றி மாறுபட்ட கருத்து இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் . அவர்களுக்கு அது ஒரு அடிப்படைத் தடை. அது சண்முகத்திற்கு இல்லை என்பதால் உருவனதல்ல அந்த உறவு .

சரியாக சொல்லுவதென்றால் அரசியல் ரீதியாக சார்ந்திருத்தல் , அது இன்னும் நுணுக்கமானது மற்றும் வேறுபட்டது என நினைக்கிறேன் . தமிழக கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரத்திற்கும் அன்றைய தமிழக முதல்வர் MG ராமச்சந்திரனுக்கு உண்டான தொடர்பு போன்றது . அதிமுக கட்சி துவங்கிய போது அவருக்கு பக்கபலமாக இருந்து அவரை முன்னகர்த்தி கொண்டு சென்றது அவர்தான் என்றார் சண்முகம் . அதை ஒட்டி பத்திரிக்கைகளில் வெளிப்படாத பல நுண் தகவலை அவர் சொன்னதை இப்போது நினைவுறுகிறேன்

MG.ராமசந்திரன் திமுக வில் இருந்து வெளியேறியதற்கு பின்னால் காங்கிரஸ் இருந்தது என ஒரு வலுவான கூற்று உள்ளது . சண்முகம் அவர்களது அரசியல் விழைவுகள் நிறைவேற அவர்களின் பின்னால் வந்த போது உருவான நட்பு அது  என்பது வெளி உலகிற்கு தெரியாத அரசியல் மந்தனம் .அது புதுவை அரசியலில் மிக அழுத்தமாக வெளிப்பட்டது . அதனாலேயே புதுவையின் பிற கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் அவரது கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதை சார்ந்து தங்களை அரசியலை வடிவமைத்துக் கொண்டார்கள். அதுவே பின்னாளில் எந்த அரசு ஆட்சி அமைப்பது என்பது  குறித்தும் , அது எவ்வளவு காலம் நீடிக்க வேண்டும் என்கிற முடிவெடுக்கக் கூடியவராக அவரை புரிந்திருந்தனர் . இது ஒருவகை மிகை கருத்தாக இருக்கலாம் ஆனால் அதன் அத்தனை அலகுகளில்  சிறு துளியாவது உண்மை என்கிற அம்சமிருப்பதை யாரும் மறுக்க முடியாது என நினைக்கிறேன்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக