https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 13 டிசம்பர், 2019

அடையாளமாதல் - 499 * இயல்பில்லா அறம் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 499

பதிவு : 499 / 685 / தேதி 13 டிசம்பர்  2019

* இயல்பில்லா  அறம் * 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 13



சண்முகம் தனது நிலைப்பாட்டின் மூலமாக பிறரால் தன்னை எளிதில் கணிக்க முடிந்த இடத்தில் எப்போதும் வைத்துக் கொண்டார் . அது அவர் எண்ணி எண்ணி உருவாக்கிய அனுகுமுறையாக இருக்கலாம் . அல்லது அவரது இயல்பாக இருந்திருக்க வேண்டும் . தன்னிலைப்பாட்டால் பின்னாளில் மாநில அரசியலில் பெரும் வெற்றி பெற்று அமர்ந்தவர் . அந்த வெற்றிகளும் அதனால் விளைந்த அரசுகளும் நிஜம் .ஆனால் அவரை நேரில் சந்திக்கும் போது இவை எதுவுமே அவரிடம் ஒட்டாது வெறும் ஏற்றப்பட்ட புகழுரை போல தனித்து நிற்பதை கண்டு யாரும் திகைப்பதை கண்டிருக்கிறேன்

தனக்கு போர்த்திய கதர் துண்டு துணியால் தைத்த கைவைத்த பழைய கிராமத்து பாணி பனியனுடன் நாற்காலியில் ஒரு காலை குத்திட்டு அமர்ந்தபடி உரையாடிக் கொண்டு இருப்பதைக் காணும் எவருக்கும் அவரது பிரம்மாண்டங்கள் மறைந்து போய் அவரிடம் சாமான்யனிடம் உரையாடும் இயல்பை அடைந்து விடுகிறார்கள் .அவருக்கு தெரியாத விஷயங்களை தாங்கள்தான் முதலில் சொல்லுகிறோம் என நம்பும் இடத்திற்கு வந்து சேருகிறார்கள்அதுதான் அவரது வெற்றியா? என பலமுறை கேட்டுக் கொண்டதுண்டு   இருக்காலம் என நினைக்கிறேன்.

காந்தியின் பாணி அவரை கவர்ந்திருக்க வேண்டும் . வாழ்நாளின் இறுதிவரை அதை கடைபிடிக்க முயன்றார் . காந்தியனான  காமராஜருக்கு , சண்முகத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு . காந்தி அழகியலும் அப்பால் இருந்தார் ஆனால் காமராஜரும் சண்முகமும் அழகியலுக்கும் ரசனைக்கும் அப்பால் இருந்ததாக கருத முடியாது என நினைக்கிறேன் .சண்முகம் வைத்திருக்கும் அதி நவீன நிர்வாக  காகித கோப்புகள் அதன் தன்மையும் மிக வரிவானதும் நவீனமானதும் கூட .கோப்பு மேலட்டைகள் அதை தனித்தனியாக பிரிக்கும் கவர்கள் , விதவிதமான இரும்பு கிளிப்புகள் என பலவற்றை நான் முதல் முதலாக பார்த்தது அங்குதான் .

தில்லியில் அவருடன் மாலை நடை போகும் போது அவர் வாங்க நினைக்கும் பல பொருட்களை பல மணிநேரம் கையில் எடுத்து வைத்தபடி இருந்து , பின் மனமில்லாமல் வைத்துவிட்டு வருவதை போல பார்த்திருக்கிறேன் .அது எனது எண்ணம் தானா  என நினைத்ததுண்டுஅந்த சந்தர்பங்களில் அவர் எளிமையை வலிந்து தன்மீது தினித்துக் கொண்டவராக தெரிவார் .காந்தியை ஏற்ற ஒருவரின் எளிமை அவரின் இயல்பு என நினைப்பது ஒருவகையில் தவறோ என நினைத்ததுண்டு அறம் சார்ந்து தன்னை வடிவமைத்துக் கொள்பவர்கள் அனைவரும் ஒரு மனிதன் தன் இயல்பிற்கு மாறான ஒன்றை தன்மீது ஏறிட்டுக் கொண்டே  அதை அகமும் புறமும் தான் என நிறுவ முயற்சிக்கிறார்கள் போலும் என எனக்குள் எண்ணிலடங்கா முறை சொல்லிக் கொண்டதுண்டு.

காமம் , கோபம் , வருத்தம் , வன்மம் போல அறம் மனிதனின் இயல்பல்ல . அதனால் தான் அறம் பற்றிய பல்லாயிரக்கணக்கான நூல்கள் எழுதி குவிக்கப்பட்டன என்றார் ஜெயமோகன் ஒருமுறை . அதை முதலில் என்னிடம் அவர் சொன்னபோது திகைப்புற்றேன் , ஆனால் ஆழ்ந்து பார்த்தால் அது உண்மைதான் என நினைக்கிறேன்

எனக்கு காந்தியை நேரில் தெரியாது .ஆனால் வாழ்கையில் கொள்கைகளை கொண்டவர்களுக்கு அக்கொள்கைகள் அவர்களது இயல்பில் இருப்தில்லை போலும் என்கிற புரிதல் காந்தியை கற்பனைக்கு எட்டாத இடத்தில் வைத்துவிடுகிறது  . வாழ்நாள் முழுவதும்காந்திய கொள்கையை ஏற்கும் ,விரும்பும் பின் மறுக்கும்  மனத்துடன் தொடர்ந்து போராடி அதை அடக்கி வெற்றி கொள்கிறார்கள் என நினைக்கிறேன். சண்முகத்தை அவரது எளிமைக்காக , வெளிப்படை தன்மைக்காக  புதுவை காமராஜர்” என்கிற அடைமொழியுடன் அவர் சுட்டப்படுவது அவரது இருப்பை உணர்த்துவது .அதை அவரும் விரும்புவதாக நான் நினைத்ததுண்டு

ஆனால் காலம் அபார நகைச்சுவை உணர்வு கொண்டது போலும் . பின்னாளில் அவரின் புதுவை காமராஜர்” பட்டம் முதல்வரான பிறகு ரங்கசாமிக்கு சென்று சேர்ந்தது .அவரும் அதை ஏற்பதை போல தனது நடை உடைகளை காமராஜரை போல மாற்றிக் கொண்டார் . பின்  அது வெறும் புகழுரையாக வெளிறி நின்றது . அதன் பிறகு அவருக்கு நெருக்கமானவர் ஒருமுறை சண்முகத்தை புதுவை காமராஜர்” என அழைத்த போது யாரை பார்த்து புதுவை காமராஜர்னு சொல்லீரீங்க , நா என்ன அவர் மாதிரி பாஸிங்ஷோ சிகரட் பிடிக்கிறேனா? , சென்னை புகாரி மீன் குழம்பு சாப்பிடுகிறேனா ? வேண்டுமானல் அவரை சென்னை சண்முகம்னு’ சொல்லுங்கையா” என அவரை கடிந்து கொண்டது முதலில் எனக்கு அது  நகைப்பை கொடுத்தாலும்  ,  ஒருவகையில் அது அவரது  கோபமாக இருக்கலாம். அல்லது தன்னையும் காமராஜரையும் இணைத்த மெல்லிய மதிப்பீடாகவும் இருக்கலாம்.
காமராஜரை பற்றிய பல நுண்தகவலை சண்முகம் சொன்னதுண்டு அவற்றில் காந்தியை ஆதர்சமாக கொண்டவர்கள் அவரை முழுமையாக தங்கள் வாழ்கையில் பொறுத்திக் கொள்ள இயலாது போலும் .அவர்களும் தங்களின் சிற்சிறு அன்றாடங்களுடன் ஏதோ ஒரு வகையில் தங்களை சமரசம் செய்து கொண்டார்கள் என நினைக்கிறேன் . ஜெயமோகன் சொன்னது போல காந்தியை புரிந்து கொள்ளலாம் , ஆனால் ஏற்று அதன் படி வாழ முடியாது” என்று . “ இன்றைய  நவீன காந்தியர்கள்”காந்தியின் கொள்கைளை ஏற்க முயற்சித்து தங்கள் ஆழ்மனத்துடன் போராடினாலும் அவர்கள் ஆகச் சிறந்தவர்களே.   



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்