விஷ்ணுபுரம் விருது 2025 ரமேஷ் பிரேதனுக்கு…புதுவை விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பினர் வாழ்த்துக்களுடன் விருது செய்தியினை அறிவித்தனர்
தமிழில் முதன்மை இலக்கியப் பங்களிப்பாற்றிய மூத்த படைப்பாளிகள் விருதுகளால் புறக்கணிக்கப்படுவதை கண்டு அவர்களை கௌரவிக்கும் பொருட்டு 2010 ல் நிறுவப்பட்டது விஷ்ணுபுரம் விருது. குறிப்பிடத்தக்க விருதுகளைப் பெறாத படைப்பாளிகளுக்குரிய விருதாக இது அளிக்கப்பட்டு வருகிறது. தமிழின் முதன்மைப் படைப்பாளிகள் பலர் ஏற்றுக்கொண்ட பெருமைக்குரியது இவ்விருது.
2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர், புனைவெழுத்தாளர், மற்றும் இலக்கியச் சிந்தனையாளர் என்னும் நிலைகளில் தமிழுக்கு பங்களிப்பாற்றிய ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்படுகிறது.
ரமேஷ் பிரேதன் புதுச்சேரியில் வசித்து வருகிறார். 8 செப்டெம்பர் 2025 அன்று புதுச்சேரி மற்றும் மயிலாடுதுறை நண்பர்கள் அரிகிருஷ்ணன், சிவாத்மா, யோகேஸ்வரன், கடலூர் சீனு , மணிமாறன், முத்துக்குமரன், சிவராமன், சரவணன் ஆகியோர் ரமேஷ் பிரேதனை நேரில் சந்தித்து மலர்ச்செண்டு அளித்து வாழ்த்துக்களுடன் செய்தியை அறிவித்தனர்.
டிசம்பர் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் இந்த விழா வழக்கம்போல கோவையில் நிகழும். முதல்நாள் படைப்பாளிகள் அரங்கு. இளம்படைப்பாளிகள், மூத்த படைப்பாளிகள் ஆகியோருடன் வாசகர்கள் உரையாடலாம். இரண்டாம் நாள் விருதுவிழா. தமிழின் முதன்மையான இலக்கிய விழாவாக இன்று மாறிவிட்டிருக்கும் இந்த இலக்கிய ஒருங்கிணைவுக்கு நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
ரமேஷ் நீண்டநாட்களாக உடல்நலம் குன்றியிருப்பதை அறிந்திருப்பீர்கள். அவரை புதுச்சேரியில் இருந்து கோவை கொண்டுவர முயல்கிறோம். அவரும் ஆர்வமாகவே உள்ளார். இதற்கு முன் அவர் வீட்டை விட்டு வெளியே வந்து கலந்துகொண்ட நிகழ்வு பத்தாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விஷ்ணுபுரம் விழாதான்.
உடல்நலம் குன்றிய நிலையிலும் ரமேஷ் படைப்பாளிக்குரிய அக ஊக்கத்துடன் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். ரமேஷுக்கு இவ்விருதை அளிப்பதன் வழியாக விஷ்ணுபுரம் நண்பர்குழு மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறது.
ரமேஷ் பிரேதன் rameshpredan@gmail.com. எண் 8903682251




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக