https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 1 மார்ச், 2017

மக்களின் ஆன்மீக தேடல் ஒரு கடிதம்

ஸ்ரீ :  அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம் , உங்களுடைய சமீபத்திய "ஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் " பதிவை வாசித்தேன்.பல பதிவுகள் மற்றும்  ஆக்கங்கங்கள் வாயிலாக நீங்கள் சொன்ன அதே விஷயம் மிக அற்புதமான அவதானிப்பில் முழுமையான மிக செறிவான பதிவாக வெளிவந்துள்ளது.

நான் மரபான ஆன்மீக தளங்களில் செயல்பட்டு வருபவன். நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அந்த தளத்தில் செயல்படத் தொடங்கியதும் அங்கு புரிந்து கொள்ள இயலாத ஒரு சூழல் நிலவுவதை உணர முடிந்தது . அதற்கான தீர்வை நோக்கிய தேடலின் வழியாகவே உங்களின் இணையதளத்தை கண்டடைந்தேன். அது எனக்கு கொடுத்த புரிதல் அளப்பறியது, அதற்கு என் நன்றிகள்

உங்களின் இந்தப் பதிவு இன்றைய புதிய தலைமுறையினரிடம் காணப்படுகிற ஆன்மீக தேவையும்,தேடலையும் பொதுவான மையத்தில் வைத்து விவாதிக்கிறது . அதேசமயம் நீங்கள் இதுகாறும் சொல்லிவந்த "இந்து ஞான மரபினை " நோக்கி , கடந்த அரை நூற்றாண்டு காலமாக பலதரப்பட்டவர்களின் முரணியக்கம் வழியாக இங்கு வந்து அமைந்திருக்கிறது.நிச்சயம் இது மரபார்ந்த ஆன்மீக நிலைகளை நோக்கிய நேரடியான அறைகூவலே .

இதை ஒரு ஆரோக்கியமான பொதுப்போக்காகவே பார்க்கிறேன். இது யாருக்கும் எதிரானதல்ல.ஆனால் ஆச்சார அனுஷ்டானங்களால் மரபார்ந்த ஆன்மீக நிலைகள் ,தங்களின் பல நூறு வருடம் பேனிய  ஞான மரபினை இன்றைய எதிர்பார்பிற்கேற்ப மாற்றி ஆமைக்க இயலாது  திகைத்துள்ளனர் என்பதே யதார்த்தமானது. ஆகையால் இது எதிர்மறையாக பார்க்கப்பட்டு கொந்தளிப்பாக வெளிப்படுகிறது.

இந்து ஞான மரபில் இது போன்ற ஒன்று நடப்பது முதல்முறையன்று. ஆதிசங்கரர் தொடங்கி ராமாநுஜர் போன்ற பல மதப் பெரியவர்கள் வழியாக இந்து ஞானமரபு தனக்கு ஏற்பட்ட சவால்களை மாற்றங்கள் மூலமாகவே நிறுவி இங்கு வந்து சேர்ந்திருக்கிறது.

ஒவ்வொரு முறையும் அது மக்கள் தொகையின் புரிதலுக்கும் தேவைக்கும் ஏற்ப மாற்றத்தை கோருகிறது. அந்த சூழலில் ஒரு சிந்தனையாளர் அதை முன்னெடுக்கிறார். அது சொல்லப்படுகிற யுக்தியாலே காலத்தில் நிற்கிறது . ஆனால் எந்த விஷயமுமே காலத்திற்கு அதீனப்பட்டதே. காலம் ,தேசம் ,சூழல் ஒட்டி மாற்றங்கள் தவிற்க இயலாது. ஒவ்வொரு முறையும் அது தன்னை புதுப்பித்துக் கொள்ளும் போதும் எழும் வெற்று கூப்பாடுகளை அது லட்சியம் செய்வதில்லை.

பதிவு சொல்லிய விஷய காம்பீர்யத்தை எடுத்துக் கொள்ளாது சொன்வர்மேல் பாய்வது, சூழ்நிலையை அனுமானிக்கத் தெரியாத சிந்தனை வரட்டுப்பள்ளம் உள்ளவர் செய்வது.

ஜக்கி போன்றவர்கள் யுக புருஷர்கள் என்றோ.அவர் முன்னெடுப்பது தான் காலம் கோரும் மாற்றம் என்றோ சொல்ல வரவில்லை.அதே சமயம் எதிர் வினையாற்றுபவர்களின் வீட்டு வாசலிலும் அது அவர்களுக்காக காத்திருக்கவும் இல்லை. ஆனால் இது ஒரு தொடக்கமாக இருக்கலாம் என்று இந்த பதிவு அனுமானிக்கிறது .முரணியக்கம் வழியே அது அடுத்த எல்லைக்கு போவதற்கு சில பல வருடம் ஆகலாம் அதை பார்க்க நாம் இருக்கப்போவதில்லை ,

நான் மரபான ஆன்மீக செயல்பாட்டாளன், ஈஷா யோக மையமோ அதன் சிந்தனைப் போக்கோ எனக்கு ஒருகாலமும் ஏற்புடையதல்ல.
ஆனால் மக்கள் தொகையின் புரிதலில், தேடலில் ஏற்பட்டுள்ள ஆதீத மாற்றத்தை களத்திலே சுமார் பத்து வருடங்களாக அவதானித்து வருபவன் என்கிற ரீதியில் உங்களின் இந்தப் பதிவு எனக்கு பல அடுக்கு திறப்புகளை கொடுக்கவல்லது.அதற்காக மீண்டுமொரு நன்றி.

(திரு.ஜெயமோகன் அவர்களின் கூறுமுறையில் உள்ள ஒழுக்கின் மேல் ஏற்பட்ட ஆச்சர்யத்தினால் அவர் சொன்னதை அப்படியே பல இடங்களில் கொடுத்திருக்கிறேன்)

உங்கள் பதிவு முதலிலேயே இது எவர்கெல்லாம் பொருந்தாது , என தர்க்க ரீதியில் ஒதுக்கப்பட்ட பிறகு யாருக்கு பொருந்துமா அவர்களை நோக்கியே அது மிக தெளிவாக உரையாடுகிறது .

கார்பரேட் சாமியார்கள் யார் ?எதற்கு ?யாருக்காக ? என்று கேட்டுக்கொண்டு, இன்றைய இருத்தலியல் சமூகத்தை நோக்காகக் கொண்டு எழுகின்ற மிக அவசியமான பதிவாகவே அதை பார்க்கிறேன்.
சமூகத்தில் இன்று நிலவும் ஒரு அசாதாரன சூழ்நிலையில்  மரபான ஆச்சாரத்தை ,ஆன்மீகத்தை பின்பற்றும், போதிக்கும் பொறுப்பு மிக்க அமைப்புகள், இன்றைய இந்து சமூக ஆன்மீக முரணியக்கத்தின் விளைவுகளை கண்டறிய கால் நூற்றாண்டுக்கு மேல் அவகாசம் எடுத்துக் கொண்டது. அதன் பிறகே இன்று "சனாதன தர்மம் " பற்றிய பிரச்சாரங்களில் அது ஈடுபட்டு வருகிறது. ஆனால் மாறிவரும் உலக தத்துவப் போக்கினால் "இந்து ஞான மரபு "பற்றிய குறீடுகளையும் அது சமூக போக்கில் ஏற்படுத்தி உள்ள புதிய சிந்தனை அலைகளையும் இன்னும் முழுமையாக உள்வாங்கவில்லை எனவே அவற்றின் செயல்கூடவில்லை. அதனால் சமூகத்தில் பல்வேறு நிலைகளில் ஏற்பட்டிருக்கும் பாய்ச்சலை புரிந்து கொள்ளாது தேவையற்று எதிர்மறையாக வினையாற்றுகின்றது.இந்த பதிவு அவர்களுக்குத்தான் முக்கியமே தவிற மற்றவர்களுக்கு இல்லை. அவர்களை இப்படி தொகுக் கொள்ளலாம்.

மரபான ஆன்மீக நிலைகள்.
பாரம்பரிய அர்ப்பணிப்புள்ள சபைகள்
பொருளியல்,பதவி மற்றும் ஜாதி ரீதியான உயர்நிலை பக்தர்கள்
1980 பிறகு உருவாகி வந்த உயர் மற்றும் நடுத்தர சமூகத்தினர்
பாமரர்கள்.

இவர்களைக் நோக்கியே உங்கள் பதிவு பேசுகிறது . இவர்களை தவிற அந்த பதிவை பற்றி கொந்தளிப்வர்கள் வேறு உள்நோக்கமுள்ள காழ்பை கக்கிற நோயாளிகள் மாத்திரமே.

உங்கள் பதிவை இப்படி தொகுத்துக் கொள்கிறேன் .

//ஒரு வலுவான தேவை உருவாகியது. வரலாற்று ரீதியான ஒரு பதில் அதற்கு இருந்தது. இரண்டும் சந்தித்தன, அவ்வளவுதான்.//

இதுவே இந்த பதிவின் கரிசனமிக்க அவதானிப்பு . அதன் முழு பதிவுமுறை , இதை தெளிவாக விளக்க வந்ததே. உங்கள் பதிவை நான் இங்கிருந்து தொடங்குகிறேன் . உங்கள் அவதானிப்பு அற்புதமானவை . இந்த பதிவு மிக முக்கியமான திறப்புகளக் கொண்டது

//இந்தத் தாக்குதல்களுக்குப் பதில் சொல்ல மரபான மடாதிபதிகளால், மதப்பிரச்சாரகர்களால் இயலவில்லை. ஏனென்றால் அவர்களும் சடங்குகள், புராணங்களுக்குள் மட்டும் செயல்பட்டவர்கள்தான். நவீனச் சிந்தனைகளுடன் அறிமுகம் அற்றவர்கள்//

என்கிற பதில் மிகச்சரியானது . தாங்கள் கூறியது போல

// ஆன்மிகமும் தத்துவமும் அறிந்த சிலர் இருந்தனர், அவர்களை மிகச்சிறிய வட்டத்திற்குள் மட்டுமே அறிந்திருந்தனர். பெரும்பான்மையை நோக்கிச்செல்ல அவர்களிடம் ஊடகம் இல்லை, அமைப்பு இல்லை. இந்துமதம் சார்ந்து அமைப்புக்களை உருவாக்குவது எளிதும் அல்ல //

ஆம் அப்படிபட்ட ஊடகங்களை ஏற்படுத்த அந்த அமைப்புகளுக்கு தேவையான பெரும் பொருளை அவர்களால் எக்காலத்தும் திரட்ட முடியாது என்பதே நிதர்சணம் .காரணம் சமூகத்தில் நான்காக பகுக்க பட்ட அவர்கள் மூன்று நிலைகளில் நின்று வெவ்வேறு காரணத்தில் ஒரே நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்கள்.

பொரும் வியாபார நிறுவனங்கள்
உயர் பதவியில் உள்ளவர்கள்
1980 பிறகு வந்த பொருளியில் வெற்றி பெற்ற நவீன உயர் மற்றும் நடுத்தர சமூகத்தினர்
பாமரர்கள்.

ஒன்று.உயர் பதவிகளில் உள்ளவர்கள் மற்றும் பெரும் வியாபார நிறுவனங்களின் பெரும் நன்கொடைகள் வணிக நோக்கத்திற்காக, அல்லது விளம்பரத்திற்காக அல்லது தனிப்பட்ட காரணிகளால் நேரடியாக பிரசித்தி பெற்றக் கோவில்களைச் சென்றடைகிறது . வருடா வருடம் பல நூறு கோடிக்கணக்கில் உண்டியல் மற்றும் தங்கம் வைர ஆபரணங்களை காணிக்கையாக்கப் படுவதை தினசரிகளில் செய்தியாக பார்க்கிறோம் .

இரண்டு. 1980 பிறகு வந்த நவீன உயர் மற்றும் நடுத்தர சமுகத்தினர் . இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஞானத்தையும் பக்தியையும் பிரித்துக் கொள்ள முடியாதவரகள் அல்லது விரும்பாது உலகியல் நாட்டங்களில் மூழ்கித் திளைப்பவர்கள் . வீட்டு பெரியவர்கள் அல்லது பிறர் சொல்வதை பின்பற்றி நடக்கூடியவர்கள். இவர்களுக்கு தங்கள் இல்லத்திற்கு அருகில் அமைந்த சிறிய மற்றும் நடுத்தர கோவில்கள் பிரதானம் . அங்கு உற்சவங்கள் ஆபரணங்கள் நன்கொடைகளால் கோவில் நிர்வாகத்தினரிடம் செல்வாக்கு பெறுவதின் மூலமாக தங்கள் வீங்கின அகங்காரத்திற்கு வடிகால் தேடுபவர்கள்.

இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தேடல் மிக்கவர்கள். ஞானத்திற்கும் பக்திக்குமான வேறுபாடுகளை அறிய விருப்பமுடையவர்கள் மராபான ஆன்மீக விஷயங்களில் மற்றும் அதைசார்ந்த நிறுவனங்களில் உள்ள முரண் அல்லது ஊழல் அல்லது அவற்றின் நிர்வாக முறை அதை சார்ந்த  தொடர்புறுத்தல் முறையில் உள்ள குறைபாடுகளினால் அதில் இருந்து விலகியவர்கள் .

//இச்சூழலில்தான் கார்ப்பரேட் சாமியார்கள் வருகிறார்கள், குறிப்பாக ஜக்கி வாசுதேவ், வேதாத்ரி மகரிஷி, மற்றும் ரவிசங்கர். “இந்துமதத்திற்கு நூல்கள் ஏதேனும் உண்டா?” என டிஜிஎஸ் தினகரன் நாகர்கோயிலில் பல்லாயிரம் பேர் கூடிய மாபெரும் கூட்டத்தில் அறைகூவியதை நான் நினைவுகூர்கிறேன். இன்று அதே மைதானத்தில் தான் ஜக்கி பல்லாயிரம் பேரைக் கூட்டி பதஞ்சலி யோகசூத்திரம் பற்றியும் உபநிடதங்கள் பற்றியும் பேசுகிறார். இப்படி ஒரு காலம் வந்துள்ளது // என கூறியது அற்புதமான வரிகள்

மூன்றாவதாக. பாமரர்கள் . இவர்களே பெருந்தொகையினர். அவர்கள் பாவ புண்ணிய காரணிகளில் வாழ்கையைத் தேடுபவர்கள் பக்தியையும் ஞானத்தையும் தேவையற்று குழப்பிக் கொள்ளாதவர்கள். சிறுதெய்வ பெருதெய்வ  பாகுபாடு தெரியாதவர்கள். அனைத்திலும் புகுந்து புறப்படுபவர்கள் , மத மாறுபாடுகள் தெரியாது இந்துக் கோவில் தொடங்கி வேளாங்கண்ணியையும் நாகூர் தர்காவையும் விட்டுவைகாதவர்கள்.

//ஜக்கி போன்றவர்கள் நான் முன்னரே குறிப்பிட்டதுபோல நவீனக் கல்வி கற்று, நவீன வாழ்க்கைச் சூழலில் எழும் சிக்கல்களினால் நிலையழிந்து, அதேசமயம் மரபான மதநம்பிக்கைகளில் அமையமுடியாது போனவர்களுக்கான ஆசிரியர்கள் மட்டுமே. ஏழை எளிய பாமர மக்களுக்கு அப்பிரச்சினை இல்லை. அவர்கள் இன்றும் பக்தியின் வழியில்தான் சென்றுகொண்டிருக்கிறார்கள்//

எளிய பாமர மக்களுக்கு இது தேவையில்லை என்பதும் அவர்களுக்கு இது புரியப்போவதுமில்லை என்பது மட்டுமல்ல அவர்களாலேயே இன்று ஆலையங்களில் மக்கள் கூட்டம் கட்டுபடுத்த இயலாததாக உள்ளது அவர்களுக்காக வக்காலத்து என்பது வெறும் பம்மாத்து மட்டுமே.

//1980-களில் நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் பாதிப்பேர் இந்துக்கள் அடங்கிய எங்கள் கல்லூரியில் உச்சகட்ட மதமாற்றப் பிரச்சாரம் நிகழும். கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் இருசாராருமே இந்துக்களை நோக்கி ‘உங்களுக்கு வெறும் சடங்குகளும் ஆசாரங்களும் மட்டுமே உள்ளன. உங்கள் மதத்தில் ஞானநூல்கள் இல்லை. எங்களுக்கு மெய்நூல்கள் உள்ளன’ என வாதிடுவார்கள். நான் உட்பட எந்த இந்து மாணவனுக்கும் இந்து மதநூல்களைப்பற்றி பெரிதாக ஏதும் தெரியாது. இந்து தத்துவமோ ஆன்மீகமோ தெரியாது. உண்மையிலேயே அப்படி ஏதுமில்லை என்பதே எங்கள் நம்பிக்கையும்.////புராணக் கதைகளை எடுத்துக்கொண்டு அதை மிக எளிய அன்றாடத் தளத்தில் வைத்து ‘கட்டுடைப்பார்கள்’. சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்றால் அவர்கள் ஓரினச்சேர்க்கையா செய்தார்கள் என்பது போன்ற பகுத்தறிவுக் கேள்விகள்.//

மேலதிகமாக நாக்கில் குடியிருக்கும் சரஸ்வதி மலஜலம் எங்கு கழிப்பாள் ? பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா? 786 என்பது அல்லாவின் தொலைபேசி நம்பரா? என்பன பெரியாரிகளின் கட்டுடைப்புகள்.

// இன்று மேலே சொன்ன இந்து எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஓர் இந்து இளைஞனிடம் சொல்லமுடியுமா? உன்னதமான யோகநூல்களும் தத்துவநூல்களும் காவியங்களும் இந்துமதத்தில் உள்ளன என்று ஒருவனாவது எழுந்து பதில் சொல்வான். பதஞ்சலியோக சூத்திரம் என்றும் யோகவாசிஷ்டம் என்றும் உபநிடதங்கள் என்றும் எடுத்துச் சொல்வான். இந்த இடத்துக்கு வந்துசேர இருபதாண்டுக் காலமும் அமைப்பு சார்ந்த மாபெரும் பிரச்சாரமும் தேவைப்பட்டுள்ளது

// கறுப்புச்சட்டை பரிதாபமாக “தம்பி நீ இங்கர்சால், கார்ல்மார்க்ஸ், பெரியார்லாம் படிக்கணும்’ என்றார்.”அதெல்லாம் பழைய சிந்தனைகள். நீங்க முதல்ல ஜோசஃப் கேம்பல் படியுங்க. சிமியாலஜின்னு ஒண்ணு இருக்கு, போய்ப் படியுங்க. குறியீட்டை குறியீடா பாக்கிறது எப்டின்னு தெரிஞ்சுட்டு பேசுங்க. உளறாதீங்க’ என்றான் //

// ‘அட!’ என வியந்தேன். அவனை அழைத்துப் பேசினேன். அவன் பேசியது அப்படியே நாகர்கோயிலில் ஜக்கி வாசுதேவ் அக்கேள்விக்குச் சொன்ன பதில் என அறிந்தேன். கார்ப்பரேட் குருமார்களைப் பற்றிய என் எண்ணம் அப்போதுதான் பெரிய அளவில் மாறியது //

இதைப் போன்ற ஒன்றை முன்னெடுக்க முயன்ற பல பாரம்பரிய ஆன்மீக தொண்டு நிறுவனங்கள் தாங்கள் செய்யக்கூடுவது ஒன்றுமில்லை என்பதையும் ,மறுசிந்தனைக்கு வெளிநோக்கி பேசுவற்கு இருக்கும் விஷயங்களை விட உள்திரும்பி பேச நிறைய உள்ளதாக கண்டறிந்தனர் . யார் யாரிடம் பேசுவது என்பது புரிபடாமல் ஒன்று ;அவை அனைத்தும் செயல்படாமல் மரணித்தன அல்லது வெற்றுச் சடங்காக ஏதையாவது செய்து கொண்டிருந்தன .

நீங்கள் மிகச்சரியாக கூறியது போல  //. இந்துமதம் ஒரு தொகைமதம். பழங்குடி வாழ்க்கையில் இருந்து உருவானது. பழங்குடி வாழ்க்கையில் இருந்த பலநூறு ஆன்மிக தரிசனங்களும் வழிபாட்டுப் போக்குகளும் வரலாற்றின் பெருக்கில் ஒன்றுடன் ஒன்று இணைந்து, உரையாடி, தத்துவத்தைக் கட்டமைத்து உருவாகி வந்த ஒரு மரபு இது. ஆகவே அதற்கு மைய அமைப்பு இல்லை. ஆனால் வெவ்வேறு ஆன்மிகத் தரப்புகள், கருத்தியல்கள் தங்களுக்குரிய அமைப்புக்களை வரலாற்றில் உருவாக்கிக் கொண்டுதான் இருந்தன.

//. இன்றுள்ள சைவ, வைணவ மடங்கள் கிபி ஏழாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டுக்குள் பக்தி இயக்கத்தின் எழுச்சிக் காலத்தில் உருவானவை. சைவ, வைணவ மதங்களுக்கான கல்விமுறையை நிலைநிறுத்துவதும் ஆலயங்களைப் பராமரிப்பதும் அவற்றின் பணி. அவற்றுக்கு அரசர்களால் பெரும் செல்வம் அளிக்கப்பட்டது //

ஆனால் எட்டு நூறு வருடங்களுக்குப்பிறகும் இவற்றிலும் இவை சம்பந்தபட்ட அனைவரிடத்திலும் எந்த காலத்திற்குமான ஒவ்வாமையும்  நவீன உலகியல் புரியாமை என எழுந்து மூடி கடந்த காலத்திலேயே அவை உறைந்துள்ளது .

இன்று உள்ள ஆன்மீக சூழலில் தங்களின் செயல் முடக்கத்திற்கு உள்ள சிக்கல் பொருளியல் வரட்சி மட்டுமே . அது சரியாக கிடைக்கும் பட்சத்தில் மரபான ஆன்மீக இயக்கங்கள் சரியான பாதையில் நகரத்தொடங்கும் என சிலர் பேசுவதை பார்க்கிறேன் . ஆனால் அது தவறு . அவர்கள் வசமுள்ள பல நூற்றாண்டு பழமையான போதிக்கும் முறை வழக்கொழிந்து விட்டது என்றே நினைக்கிறேன்.

நீங்கள் சொன்னது போல

இந்து மதம் மூன்று வழிகளை முன்வைக்கிறது. பக்தி முறையே பெருவாரியான மக்களுக்குரியது. எளிய அர்ப்பணிப்பு போதும் அதற்கு. ஆழமான நம்பிக்கையும் சீரான சடங்குகளும் இருந்தால் ஒருமனிதர் தன்னளவில் நிறைய முடியும். ஆலயவழிபாடு, பஜனை, தீர்த்தயாத்திரை என அதற்கான வழிகள் பல.

பக்தியில் நிறைவடையாத அறிவுக்கூர் கொண்டவர்களுக்கு உரியதே ஞானமுறை. அது அறிதலின் பொருட்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களுக்கு உரியது. கற்கவும் சிந்திக்கவும் நேரமும் வாழ்க்கையமைப்பும் இருக்கவேண்டும். ஆசிரியர்களைத் தேடிச் செல்லவேண்டும். அறிதலில் சமரசமற்று இருக்கவேண்டும்.

மூன்றாவது முறையே யோகம் எனப்பட்டது. அது அதன் பொருட்டு பிற அனைத்தையும் விடுவதற்கும் துணிபவர்களுக்கு உரியவை. மிகக்கடினமான சுய உளவியல் பயிற்சிகளின் வழி அது. உலகியலில் இருந்து விலகவேண்டும். உரிய ஆசிரியர்கள் அமையவும் வேண்டும்.

இன்று புழக்கத்தில் உள்ள ஆச்சார அனுஷ்டானங்களும் , பக்தி மார்க்க நிலைகளும், தத்துவ விசாரங்களும் பழைய தொகுப்பின் மிச்சங்கள்  மட்டுமே . ஆனால் தர்மம்  எனப்படுவது அவை அனைத்தின் தொகுப்பே.

மன ஆயாசத்தை அளிப்பதும் மிக நிதரசனமான உன்மை

//. இங்குள்ள மதமாற்ற அமைப்புகள் அனைத்துமே மிகப்பிரம்மாண்டமானவை. செல்வமும், அதிகாரமும், சர்வதேசத் தொடர்புகளும், அறிவுலகில் ஐந்தாம்படை வலையும் கொண்டவை. அந்த அமைப்புக்கள் உருவாக்கிய கருத்துப் பிரச்சாரத்தை, அதிலுள்ள அப்பட்டமான திரிபுகளையும் காழ்ப்புகளையும் கொஞ்சமேனும் எதிர்ப்பதற்கு இன்னொரு அமைப்பால் மட்டுமே முடியும். இன்றிருப்பவை ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர் போன்றவர்களின் ஓரிரு சின்ன அமைப்புக்கள்தான். இன்னமும் உருவாகவேண்டும் //

என நீங்கள் கூறுவதை மறுத்து சந்தியில் நின்று கூச்சலிடுபவர்களின் சிந்தனை உதிக்கும் தோற்றுவாயில் புற்றுநோய் என்பதை தவிர கூறுவதற்கு ஒன்றுமில்லை.

ஆனால் பல்லாண்டு காலமாக அர்பணிப்புடன் சேவை செய்த சில பெரியவர்களிடத்தில் பேசும்போது அவர்கள் கார்பரேட் சாமியார்களின் எழுச்சி மற்றும் வளர்ச்சி பொதுவாகவே மரபான ஆன்மீக தளத்தில் செயல்படும் அனைவரும் ஒருவித எரிச்சலுடனே பார்கப்படுவதாகவும் . அதற்கு பலவித காரணிகள் உண்டு அரவிந்தர் ஆசிரமம் தொடங்கி புட்டபர்த்தி ஆசிரமம் வரை லட்சகணக்கான மக்களின் மனசாந்திக்கு இடமளித்தன . ஆனால் அதன் ஸ்தாபகர்கள் மரணத்த பிறகு இங்கு குவிந்துள்ள சொத்துக்களுக்கு அவர்களின்  வாரிசுகள் என்று சொல்லபட்டவரகளிடையே சண்டைகளே இன்று பிரதானம் ,அன்றி ஸ்தாபகர்  சொன்ன அற்புதமான தத்துவ கோட்பாடுகள் அனாதைகளாக நிற்கின்றன. அதன் மற்றைய சீடர்கள் வேறு நிருவனத்திற்கு செல்ல இல்லாமலும் மரபான ஆன்மீகத்திற்கு தரும்ப இல்லாமலும் தனித்து விடப்படுகிறார்கள்.

இந்த போக்கினால் மரபான இயக்கங்களுக்கு அந்த ஆசிரமத்தை சார்நத மக்கள் தனித்து நிற்பதாகவும் அவர்கள் கொடுத்த பெரும் பொருளுயல் செல்வங்களும் வீணாகும் நிலை ஒருபுறம் மற்றும் அடுத்த தலைமுறையினரை இதில் கொண்டுவருவதில் உள்ள நடைமுறை சிக்கல் , என அனைத்தையுமே முதலில் இருந்து தொடங்க வேண்டி வரலாம் என்றும் சில பெரியவர்களிடத்தில் பேசும் போது வருத்தத்துடன் சொன்னார்கள்.


சாஸ்திர விஷயம் தொடங்கி ஆயுர்வேதம் வாஸ்து என எதை எடுத்தாலும் ஒருவர் சொன்னதற்கு மறுப்பாக சொல்வதே வழமை என உள்ள நிலையில் தத்துவ நிலைபாடுகளில் கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று விரோதிக்கையில் அனைத்தும் திருசங்கு நிலை போல ஆகி விடுவதற்கே வாய்புகள் அதிகம். என்பதையும் அந்தப் பெரியவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள் .

ஆனால் ஞானத்தில்  அனுபவத்தில் வயதில் பெரியவர்களான அவர்களிடத்தில் ஒரு பத்து வருடத்திற்கு முன் சொல்வதற்கு யதார்த்த நிலை எனக்கு புரிந்திருந்தும் அன்று கருத்தாக , மொழியாக அது திரளாமையால் மிகுந்த மனவழுத்தத்துடன் திரும்பினேன். ஆனால் உங்களின் இந்த பதிவை வாசித்த பிறகு இதுவேயாகும் மிகச்சிறந்த புரிதலுக்கு வழி என்பதால் நீங்கள் சொன்னதையே இப்படி தொகுத்து அவர்களுக்கு அனுப்பியுள்ளேன் .


இந்திய மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் மதச்சீர்திருத்த அலை உருவானது. அதில் தோன்றிய அத்தனை ஞானிகளுக்கும் அமைப்புக்கள் உள்ளன. விவேகானந்தரின் ராமகிருஷ்ண மடம், நாராயணகுருவின் நாராயணமடம், வள்ளலாரின் சத்யஞானசபை போல நூற்றுக்கணக்கில் உருவாயின. இவை அனைத்துமே மைய அமைப்பும் கிளைகளும் கொண்டவை. நிதியாதாரங்களை பக்தர்களின் கொடைகள் வழியாக திரட்டிக்கொண்டவை.

இன்று வேதாத்ரி மகரிஷி, ஜக்கி, ரவிசங்கர் போன்றவர்கள் உருவாக்கியிருக்கும் அமைப்புக்களை மூன்றாவது அலை என்று சொல்லலாம். இந்த ஒவ்வொரு அலைக்கும் அதற்கான பங்களிப்பு உள்ளது.

ஆனால் அடுத்த காலகட்டத்தின் தேவைகளை அவை நிறைவேற்ற முடியவில்லை. ஐரோப்பிய கல்விமுறையுடனும் நவீன ஜனநாயகச் சிந்தனைகளுடனும் அவற்றால் உரையாட இயலவில்லை. ஆசாரங்களில் இருந்து அவை வெளியேறவும் முடியாது, ஏனென்றால் அவற்றின் கட்டமைப்பே ஆசாரங்களைக் காப்பதற்காக அமைந்தது. ஆகவே தங்கள் பங்களிப்பை வரலாற்றில் ஆற்றிவிட்டு அவை பணியை வரையறை செய்துகொண்டன. ஆகவே அடுத்த தலைமுறைக்கு ஏதும் சொல்ல முடியவில்லை. அதனால்தான் விவேகானந்தரின் அமைப்பும் நாராயணகுருவின் அமைப்பும் உருவாகி வரநேர்ந்தது.

இன்று மூன்றாவது காலகட்டத்தில் இன்றைய தேவைக்குரிய அமைப்புக்கள் உருவாகி வரவேண்டியிருக்கிறது. சென்ற காலகட்டத்தின் அமைப்புகளை விட மேம்பட்ட செயல்பாட்டு முறை இவற்றுக்கு உள்ளது. இன்றைய யுகம் கார்ப்பரேட் யுகம். எதுவும் அறிவியல் முறைகளை கருவிகளாகக் கொண்டு, நவீன நிர்வாக முறைகளை பயன்படுத்திக் கொண்டுதான் சிறப்பாகச் செயல்பட முடியும். ஆகவே கார்ப்பரேட் அமைப்புக்கள் உருவாகின்றன.

திருவாவடுதுறை மடத்தின் நிர்வாக முறையும் தொடர்புறுத்தல் முறையும் அல்ல ராமகிருஷ்ண மடத்தின் வழிமுறை. அது இன்னும் நவீனமானது. ஜக்கி வாசுதேவ் அமைப்பின் நிர்வாக முறையும் தொடர்புறுத்தல் முறையும் ராமகிருஷ்ண மடத்தின் அமைப்பை விட மேலும் நவீனமானவை, கார்ப்பரேட் தன்மைகொண்டவை. இது காலத்தின் தேவையால் எழுந்தவை.

பீட்டில்ஸ் அமைப்பு 1968 ல் இந்தியாவில் ரிஷிகேஷ் நகருக்கு வந்தது. அவர்களுக்கு முன்னரே சுவாமி சிவானந்தருடன் தொடர்பு இருந்தது. ஆன்மிகமான தேடலுடன் வந்த அவர்கள் மகரிஷி மகேஷ் யோகியைச் சந்தித்தனர். மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலைத் தியானம் அவ்வாறாக அமெரிக்காவில் பிரபலம் அடைந்தது.


ரஜினீஷ் போன்ற அன்றைய பிரபல கார்பரேட் சாமியார்களின் காலத்தில் அவரின் பேச்சும் நடவடிக்கைகளையும் செய்திகளாக அறிந்த அன்றைய ஆன்மீக உலகம் திகிலடைந்தது . அதையும் இப்பொழுது நிகழ்பவைகளையும் ஒரே கோணத்தில் பார்கிறார்கள். அது தவறு இன்றைய சூழலே வேறு . இன்று அவர்கள் வெற்றிக்கு மிக அருகில் இருப்பதாக உணர்கிறேன்

// சென்ற இருபதாண்டுகளில் உலக அளவில் இலட்சியவாதம் சார்ந்த அரசியல் வீழ்ச்சியடைந்ததும், உலகை மாற்றியமைக்கும் அரசியல் கனவுகள் தகர்ந்ததும் இந்தக் கண்ணோட்டங்கள் வலுப்பெற அடித்தளம் அமைத்தன.//

இது ஒரு முக்கிய காரணி என நினைக்கிறேன்.இதை புரிந்துகொள்ளாதவரை மக்கள் போக்கை ஒட்டி எதையும் செய்யமுடியாது போகலாம் . சுமார் 80 சதவிகித இந்துக்கள் ஏதாவது ஒரு வகையில் கோவில் சார்ந்து இருக்கிறார்கள் . கோவிலை நிர்வகித்து வரும் மரபான ஆன்மீக நிலைகளின் கைகளைவிட்டு கோவில நிர்வாகம் கழன்டு பல ஆண்டுகள் ஆகின்றன. மக்களுக்கு மரபான ஆன்மீகம் பற்றிய தேடல் கால ஓட்டத்தில் பெருகிய வண்ணம் இருக்கப் போகிறது இதை முறைப்படுத்தி முன்னெடுப்புகள் இதுவரை துவங்கப்படவில்லை.ஆனால் இந்நு ஞானமரபு என்னும் கருதுகோளை நோக்கிய மக்கள் பயணம் உற்சாகமளிப்பதாகவே இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...