https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 30 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 322 * பாராமுகம் *

ஶ்ரீ:பதிவு : 322 / 492 / தேதி :- 30 ஏப்ரல்  2018

* பாராமுகம் *


நெருக்கத்தின் விழைவு ” - 17
விபரீதக் கூட்டு -04

சமூக அங்கீகரமுள்ளவர்களும்  ,தங்கெளுக்கென தனித்த அடையாளம் உள்ளவர்களும் தங்களின்  துறைகளில் தங்களை   மேம்படுத்திக் கொண்டாலும் அதில் நிறைவுறுவதில்லை . இது எல்லா துறையிலும் பெரும் புகழை ஈட்டிய அனைவரின் பொதுவான கோட்பாடு . உதாரணத்திற்கு திரைப்பட துறையை சார்ந்தவர்களைச் சொல்லலாம். அனைவரும் கண்டு ஏங்கும் மக்கள் அறிமுகம், செல்வாக்கு ,பொருளியல் வெற்றி போன்றவைகளை அடைந்த பின்னரும் திரைபடத் துறையிலிருக்கும் ஒவ்வொருவரையும் , அரசியல் நோக்கி நகரும் விழைவு இத்தகைய நிறையுறாமையில் இருந்து எழுவதே

பிரபலமான ஒருவர் கட்சியின் பல மூத்த தலைவர்களை பின்னகர்த்தி தங்களது  விழைவை அடைவதை யாரும் குற்றமாக சொல்வதில்லை . முதல்நிலையான தேர்தல் களத்தில் எளிதான வெற்றியை தங்களின் பிரபல இருப்பாலும், பொருளியல் பலத்தாலும் வென்றெடுக்க முடியும் என்கிற நம்பிக்கையுள்ளவர்கள் , சட்டமன்ற உறுப்பினர் பதவியை கடந்து அமைச்சர் என்கிற உச்சகட்டமான இலக்கை நோக்கி நகர்கிறார்கள். அதற்கு ஒரு கட்சியின் அங்கீகாரம் தேவைப்படுறது. அதை நாடியே ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியமைக்கும் வாய்ப்புள்ள கட்சிகளை தேடி வருகிறார்கள். இவர்களை தாண்டிய செல்வாக்கு தங்களுக்கு இருப்பதாக நினைப்பவர்கள் , “தனிக் கட்சிஎன்கிற ஒன்றை தொடங்கி விளக்கின் சுடரில் விட்டிலென சென்று விழுகிறார்கள்.

தமிழகம் போலில்லாமல் புதுவையில் காங்கிரஸ் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கங்களுடன் கூட்டணி எனப் பொருந்தியும் , அல்லது பொருதியும் மாறி மாறி ஆட்சியமைக்கிறது . அதனால் இயல்பில் அதற்கு  வெற்றி பெறும் கட்சி என்கிற தோற்றம் எப்போதும் இருக்கிறது . பிரபலமானவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என்கிற அவதனிப்பிற்கு வரும்போது , அவர்களில் பெரும்பாலானவர்கள்  சண்முகத்தை விலக்கி மறைக்கயரையே தங்களது தலைமையாக தேர்ந்தெடுப்பது வழமை. அவர் சட்டமன்ற கட்சியின் தலைவராக இருப்பது முதன்மைக் காரணம் என்றாலும் , தங்களின் கௌரவத்திற்கு ஏற்ற தலைவராக அவரையே நினைப்பார்கள்

சண்முகம் தலைமையேற்றிருக்கும் கட்சியை வளர்த்து அதிலிருந்து கிளைத்து வருவதை விரும்பாதவர்கள் அல்லது அதற்கான பொறுமையற்றவர்கள். அது தலையை சுற்றி மூக்கை தொடும் வேண்டாதவேலை என்கிற எண்ணமுள்ளவர்கள் . ஆட்சி அதிகாரத்திற்கு எப்போதும் அருகில் இருக்கும் மரைக்காயரே அவர்கள் அனைவருக்கும் அனுக்கமாக உணரப்பட்டார் . கட்சித் தலைமை என்பது தன்னை நிறுவிக்கொள்ளும் பொருட்டு சாமான்ய தொண்டனுக்கு அனுக்கமாக இருப்பதை தவிர்த்து அது செய்யக்கூடியது பிறிதொன்றிமில்லை என்பதால் தலைமை பதவி பஞ்சப் பராரிகளுக்கு தலைமை ஏற்பது என்கிற ஒவ்வாமை தோன்றிவிடுவது பிறிதொரு காரணம் .

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 321 * துணிதலின் பாதை... *

ஶ்ரீ:பதிவு : 321 / 491 / தேதி :- 29 ஏப்ரல்  2018


* துணிதலின் பாதை... *நெருக்கத்தின் விழைவு ” - 16
விபரீதக் கூட்டு -04
கட்சியின் ஆட்சி அதிகார அரசியல் , சட்டமன்ற பெரும்பான்மை உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தினால் ஆனது . அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்கள் பொருளியல் , மற்றும் அமைப்பின் தொண்டர்பலம் என்கிற இரு தளத்தில் இயங்கக்கடிய களத்திலிருந்து, தேர்தலை சந்தித்து வெற்றிபெற்று சட்டமன்றத்தினுள் நுழைகிறார்கள் . வெற்றிவாய்ப்பை சட்டமன்ற கட்சியின் ஆட்சி அமைப்பு நம்பியிருப்பதால், அதை நோக்கி செல்லும் சாத்தியமுள்ள கட்சி உறுப்பினர்களை அது தேர்தல் களத்திற்கு தெறிவு செய்கிறது.

தேர்தல் மற்றும் தொகுதிக்களம் பலவித காரணிகளை கொண்டதாக இருப்பதால் , அவை அனைத்தையும் கட்சியிலிருந்து தெறிவு செய்யப்படுபவர்களால் எதிர்கொள்ள இயல்வதில்லை. அதன் பொருட்டு ஒரு தொகுதிக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்களை கட்சி மனதில் வைத்திருக்கும் . அவர்கள் அனைவரும் கட்சி அமைப்பின் தொண்டர்பலத்தை பிரதானமாக நம்பியிருப்பவர்கள் . அவர்கள் உற்சாகமாக களபணியாற்ற வேண்டிய நம்பிக்கைகளை கட்சி தலைமை கொடுக்கும் . அவர்களுக்குள் எழும் போட்டியை ,கட்சி வளர்ச்சிக்கு தலைமை பயன்படுத்திக் கொள்ளும். இது எல்லா கட்சிகளிலும் உள்ள கோட்பாடு

தேர்தல் நேரத்தில கட்சி தலைமையின் வியூக பிறழ்வு அல்லது உட்கட்சி சிக்கலின்  நிர்பந்தத்தால் தான் நினைத்த நபரை முன்னிறிருத்த இயலாமல் ஆகும் போகும்போது , அவர்கள் அதிருப்தியாளராக தம்மை மட்டும் நம்பி துணிந்து பிற கட்சிகளுக்கு இடம்  பெயர்கிறார்கள் . இவர்களே களத்தின் போக்கை நிர்ணயம் செய்யும் சக்திகள் . அது நிகழும் போது அதைத் தொடர்ந்து எழும் விளைவுகளை எல்லா கட்சியிலும் ஏற்படுத்தி விடுகிறது . அதனால்  கட்சிகளின் கடைசீ நேர களவியூகங்கள் முற்றாக மாற்றிவிடுவதும் , அதன் பின்னர் வெற்றி என்பது ஊழின் கையிலும் , தோல்விகள் அனைத்தும் பலவித குற்றச்சாட்டுகளாக கட்சி தலைமையும் சுமக்க வேண்டிவரும்.

மக்கள் செல்வாக்குள்ள  கட்சி என்பது தொண்டர் பலத்தினால் எழுவது . அவர்கள் அனைவரும் எளியவர்கள் , அவர்களின் செயல்பாடுகளின்  பலனை  கட்சித் தலைமையால் ஒரு இடத்தில் குவிக்க முடிந்தால் . அதற்கு  வெற்றிபெறும் வாய்ப்புள்ள கட்சியாக ஒரு தோற்றம் எழுந்து விடுகிறது . அது  கட்சித் தலைமை அவர்களிடம் கொள்ளும் அணுக்கத்தினால் மட்டுமே நிகழ்வது .தினம் எழும் அவர்களின் பலவேறு சுக துக்க நிகழ்வுகளில்  கலந்து கொள்வதிலிருந்து அது துவங்குகிறது . அமைப்பையும் தலைமையையும் தொடர்புறுத்தலில் திறம்பட நிர்வகிக்கும் குழுவை வைத்திருப்பதிலிருந்து , கட்சி நிர்வாகமுறை துவங்குகிறது. பலவிதமான சந்திப்புகளை ஒருங்குவது ஒன்றே அனைவரையும் அணுக்கத்தில் வைத்திருப்பது .

சனி, 28 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 320 * கனவின் புறவெளி *


ஶ்ரீ:பதிவு : 320 / 490 / தேதி :- 28 ஏப்ரல்  2018


* கனவின் புறவெளி *

நெருக்கத்தின் விழைவு ” - 15
விபரீதக் கூட்டு -04


சென்னையிலிருந்து புதுவைக்கு திரும்பியவுடன் , அதிகாலை முன்னாள் அமைச்சர் ஆனந்த பாஸ்கரை தொடர்பு கொண்டு அவரது உதவியை கேட்டேன். நான் புதுவையில் இருப்பதை அறிந்ததும் திகைப்படைந்தார் . என்ன நிகழ்ந்தது என கேட்டவரிடம் ,முழுவதையும் சொன்னேன் .தன்னை வில்லியனூரில் சந்திக்க சொன்னார் . வில்லியனூர் சென்றடையும்போது காலை 6:30 மணியாகி இருந்தது . ஆனந்த பாஸ்கரன் அதிகாலை கருக்கிருட்டில் எழுந்திருக்கும் பழக்கமுள்ளவர் . நான் சென்றடைவதற்குள்ளாக காலை உணவை முடித்துக் கொண்டு , தனது வழமையான வரவேற்பறையில் காத்திருந்தார். என்னை நேரில் சென்று சந்தித்தபோது தனது பாணி வெடி சிரிப்புடன் என்னை வரவேற்றார் . “வில்லங்கத்தை நம்பி எவன் உருப்பட முடியும் , என்றார். காலை உணவு எனக்கு அங்கு ஒருங்கி இருந்தது.

ஆனந்த பாஸ்கரன் ஒரு சிக்கலான ஆளுமை . தனது வெளிப்படையான பேச்சால் பல எதிரிகளை உருவாக்கி வைத்திருந்தார் . அவருடனான எனது நட்பை பலரும் விசித்திரமாக பாரத்ததுண்டு . எங்களுக்குள் வயது ஒரு பெரிய இடைவெளியாக பிறிதொருவரால் பார்க்கப்பட்ட போது , நாங்கள் அதை கடந்த எல்லையில் இருந்தோம். எனது அரசியல் எதிர்காலம் குறித்த மிகுந்த நம்பிக்கையுள்ளவராக அவர் வெளிப்பட்டது , ஒரு உஷ்ணமான சண்டைக்குப்பின் பிறகு . அதன் பின் ஆர்வமுடன் என்னுடன் உரையாடுபவராக மாறினார். அங்கிருந்து நாங்கள் அடைந்த அரசியல் எல்லைகள் மிக விவானவை . ஆனால் அது இயல்பாக நிகழ்ந்துவிடவில்லை

பெரிய பின்புலத்திலிருந்து வந்ததினாலும் , நிலவுடைமை சமூகத்தின் அதிகார பாதிப்புமாக , ஒரு மேட்டிமை தன்மையுடன் அவரது எல்லா செயல்பாடுகளும் இருந்தன . பலர் அவருக்கு எதிர் சொல்லெடுக்க தயங்கி தெறித்ததற்கு இதுவும் ஒரு காரணம் . அனைவரிடமும் இயல்பாக பழகும் குணம் , எந்தப்புள்ளியிலிருந்து தனது தொன்மையான மரபை அடைந்து அந்த பேருரு எழும், என யாரும் கணிக்க இயலாது ,அதனால் மிக சிறிய நட்பு வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார் .அதில் அவரிடமிருந்து பொருளியல் உதவிகளை பெறுவர்களே பெரும்பான்மையானவர்கள். அதில் அரசியல் சாரந்தவர் வைத்தியநாதன் மட்டுமே

அவருடைய இயல்பு தெரிந்ததனால் , விவாதத்தில் கொண்டு விடும் விஷயங்களை நான் தவிர்த்து விடுவேன் . துவக்கத்தில் ஒவ்வொரு அரசியல் விஷயங்களை குறித்த முரண்பட்ட கருத்துக்களுக்காக நாங்கள் பலமுறை விவாதித்திருக்கிறோம் . ஆரம்பத்தில் நான் எதை கொண்டு பேசினாலும் , அதற்கு அவரிடம் ஒரு சிறுவனுக்கு கற்றுக்கொடுப்பவரின் தோரணையை பார்த்தேன் . அது எதிர்சொல்லை சந்திக்காதவர்களிடம் இயல்பாக எழுவது . அது பலரின் விலகல் போக்கினால் உருவாகி வருவது

அவரது கருத்துக்களுடன் நான் முரண்படும்போதெல்லாம் , அவரை நான் சீண்டுவதாக கோபப்படுவதுண்டு .வயதும் ஸ்தானமும் அனைத்தையும் அறிந்துகொள்ளும் ஒரு காரணி என்கிற மனப்பாங்கை அவரிடம் எப்போதும் பார்த்திருக்கிறேன் . என் தரப்பாக எதை வைத்தாலும் அதை தனக்கு எதிர் தரப்பாக , அல்லது அவற்றை தன்னிடம் சொல்லக்கூடிய வயதோ அனுபவமோ எனக்கில்லை என்பது அவரது எண்ணமாக எப்போதும் இருந்தது

சில கருத்துக்களை விவாதம் என்கிற எல்லைக்கு கொண்டுசெல்லாமல் ,அதை ஒரு உரையாடல் என்கிற தளத்திறகு நான் நகர்த்த முயன்றபோது , அவர் தன்னுடனான சிக்கலில் இருந்து வெளிவந்தார் . ஆனால் அது எளிதில் நிகழ்ந்துவிடவில்லை . அது ஒரு உடைவு போல தோன்றி பிறகு மெல்ல விட்டுக் கொடுக்கும் மனோபாவத்தினால் மாறி வந்தது . என்னைகனவு காண்பவன்என்கிற அடைமொழிக்குரியனாக பிறிதெப்போதும் சொல்ல துவங்கினார்.