https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 25 ஏப்ரல், 2018

சாட்சி மட்டுமே -1

ஶ்ரீ:



பதிவு : 487 / தேதி :- 25 ஏப்ரல்  2018



சாட்சி மட்டுமே -1





கடந்த சில ஆண்டுகள்  தொடர் நிலையழிதலின் காரணமாக  தூக்கம், மாத்திரைகளால் தூண்டப்படுவதால் காலை விழிப்பு சற்று நேரம் கழித்தே எனக்கு நிகழ்கிறது . அன்று காலை கனவுக்கும் நனவுக்கும் இடையிலான ஒன்று , என்னிடம் தன் காரியத்தை சாதிக்க நினைத்தால் அம்மா அந்த நேரத்தைத்தான் பயன்படுத்துவார்  . நான் கண் விழிக்கும் நேரத்தில் தனது உடல் பாரத்தை “மொத்தென” என் கட்டிலில்  உட்கார்ந்து கடத்தும்போது ஏற்படும் வழமையான ஒரு அதிர்வு உணர்வை பெற்றேன் . பாதி தூக்கத்தில் திரும்பாமலே அவருடன் பேச துவங்கினேன் . “என்ன கிளம்பியாச்சா? உனக்கு இதுவரை வார்த்தைகளில் சொன்னது   புரியாதது அனைத்தும்  , இப்போது புரியும். புறப்படு நானும் வெகு விரைவில் உனக்கு பின்னல் வருகிறேன்” என்றேன். அது கனவில்லை என்று எங்கோ உணர்ந்த கணத்தில் , மனைவி பதட்டத்துடன் விம்மியபடி “மாமி எழுப்பினால் எழுந்திருக்க மாட்டேன் என்கிறார்கள்” என்றதும் . அனைத்தும் களைந்து சட்டென கிழே இறங்கி ஓடினேன் . 

அம்மா முதல்நாள் இரவு 1:30 மணிக்கு பார்த்த அதே ஈஸி சேரில் படுத்தபடி , கைகள் இறுகி விடைத்திருக்க மெல்ல   மரணித்துக் கொண்டிருந்தார் . உடலின் சூடு முதலில் அவர் மயக்கமடைந்து விட்டதாக பிழை புரிதலை எனக்கு கொடுத்தது . மருத்துவர் வந்து அவர் மண்மறைந்ததை சொன்னார். அதன் பின்னர் நடந்த அனைத்திற்கும் ஒரு மௌன சாட்சியாக நின்று கொண்டிருந்தேன் . காலத்தால் அவற்றை கடந்து சென்று கொண்டே இருக்கிறேன் . அவரது இந்த நாளை நான் எங்கோ ஆழத்தில் உணர்ந்திருந்தேன். 

முதல்நாள் முழுவதுமாக அதை எப்படியோ அறிந்திருந்தேன் . கடந்த சில மாதங்களாக அதேபோல ஒன்றை எனது கட்டுப்பாடில்லாத ஒரு சிந்தனையின் இழை எப்போதும் இருந்து கொண்டிருந்தது . ஆனால் இன்று அப்படியல்ல என்றது அது. மாறுதல்கள் எப்போதும் உற்சாகத்தை தருவதில்லை, சில சமயம் வருத்தமளிப்பதாக கூட நிகழ்ந்துவிடுகிறது , அது வயதையும் அனுபவத்தையையும் அடிப்படையாக கொண்டவை போலும் , அம்மா மண்மறைந்த பிறகு என்னை சுற்றி தொடர்ந்து நிகழ்ந்து வரும் மாறுதல்களை அவதானித்தபடி இருக்கிறேன் . இது நான் இதுவரை வாழாத காலம்போல இருக்கிறது .  அது நாள்வரை அனைத்தும் அவரை மையப்படுத்தியே இருந்திருக்கிறது . 

அவருடன் எனக்கு முரண்பாடுகள் தோன்றிய பிறகு, அனைத்திலிருந்தும் உரையாடலுக்கு வழியில்லாது விலகி முற்றும் மூடிய சுவர்களுக்குள் தன்னை அடைத்துக்கொண்டார் . பின் எப்போதும் அவருடன் விவாதிக்க முடியமலானது. தாய் மகன் உறவை இந்த எல்லைக்கு கொண்டு வரப்பட்டதின் அழுத்தம் எனக்கு பெரும் நிலையழிதலை கொடுத்திருந்தது.

2010 களில் நான் அம்மாவுடன் முற்றாக முரண்பட்டு போனேன். காரணங்கள் என இரு தரப்பிலும் எதாவது ஒன்று இருந்துதான் ஆக வேண்டும் , அது இப்போது அவசியமில்லாத்து  . அது எனக்கு விதிக்கப்பட்டது . நடந்தேறியது . அதை எனக்கு செய்ய காலம் அம்மாவை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாம் . அவரை இங்கு கொண்டுவந்த நிறுத்திய நிகழ்வுகள் ஒவ்வொன்றாக எனது நினைவிலிருந்து அழிந்து கொண்டே இருக்கிறது . அதற்கு காரணமானவர்களும் காணாமலாகி வருகிறார்கள்

“ஒவ்வொன்றும் எங்கோ நிகர் செய்யப்படுகின்றன. இன்பம் துன்பத்தை, துன்பம் இன்பத்தை, நன்மை தீமையை, தீமை நன்மையை நிகர்செய்கிறது. துயர்வரின் இன்பம் ஒருங்கிக்கொண்டிருக்கிறது என மகிழ்க. இரவு சூரியனை கரந்திருப்பதுபோல பகலில் இரவு நிழலென குடியிருப்பதுபோல. இன்பதுன்பங்களினூடாகச் சென்று நிறைவடையும் வாழ்க்கையின் ஒட்டுமொத்தமே அதன் பயன். துலாநிலைகொள்ளும் கணமே எடைகாட்டுவது.”

“இப்பெரும் களத்தில் ஒவ்வொரு வாழ்க்கையும் ஒரு துளி. அது பிறிதொரு வாழ்க்கையால் நிகர்செய்யப்பட்டிருக்கும். அவ்வண்ணம் முடிவிலா கோடி நிகர்களால் ஆனது இவ்வாழிச் சுழல். அதன் இலக்கை, விசையின் நெறியை, மையத்தை நாம் முழுதறியவியலாது. ஆனால் அறியும் ஒவ்வொன்றிலும் அதை உணரமுடியும். அந்நெறியை ஏற்று அவ்விசைக்கு தன்னை அளித்துக்கொள்க. அவ்வாறு முழுதளிக்கையில் அவ்விசையின் இலக்கும் பொருளுமே நம்முடையதுமென தெளிவோம். நாமென்று நாம் யாத்துள்ள எண்வகை பூண்களைக் களைந்து அவ்விசையே நாமென்று அறிந்து அமைவதே இறுதி. அதுவே முழுமை.” என்கிறது வெண்முரசின் இமைக்கணம் .


காலம் தன்னை  ஒவ்வொரு கணத்திலும் புதுப்பித்துக்கொள்வது போல வீடு .  ஒரு மனைதனைப்போல அது நான் பார்த்துக்கொண்டிருக்க தன்னை புதுப்பித்துக்கொண்டே வருவதை ஒரு சாட்சியாக  பார்த்தபடி இருக்கிறேன் .அன்று காலை பூஜையில் நம்மாழ்வாரின் பாசுரம் ஒலித்த அந்த கணம் மனம் நெகிழ்ந்து விழிநீர் பெருக்கினேன் . இனி ஆற்றுவதற்கு ஒன்றியலை என தோன்றியபோது , எனது சரணாகதியை வைத்தேன் , அது அங்கீகரிக்கப் பட்டதாக சூசனம் கிடைத்ததும் , நிறைவடைந்தேன் . இனி வாழவேண்டிய வாழ்வை நோக்கிய பார்வையுடன் வெளிவந்தேன் . இரண்டு வருடத்திற்கு மேல் இல்லை என நிவாஸிடம் சொன்னபோது எப்படி தெரியும் என என்னிடம் கோபித்துக் கொண்டான் . இப்போது அவனிடம் சொல்ல என்னிடம்  ஒன்றில்லை , எனது மனக்கணக்குகள் பொய்ப்பதில்லை , ஆகவே காரணங்களை நான் யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்