https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 14 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 310 * நெகிழின்மை *

ஶ்ரீ:




பதிவு : 310 / 476 / தேதி :- 14 ஏப்ரல்  2018



* நெகிழின்மை *




நெருக்கத்தின் விழைவு ” - 07
விபரீதக் கூட்டு -04









தனித்து தெரிவதும்,பிறரால் அடையாளம் காணப்படுவதும் , இயற்கையின் நியதிக்கு எதிர் செல்வது  போலும் . அது இயற்கை  நோக்கிய அறைகூவல் . அது நம்மில் எதையும் இயல்பாக இருக்க வைக்காத ஒரு புனைவை எப்போதும் பிறரால் மட்டுமல்ல நாமே எதிர்பார்ப்பது , கிடைக்கையில் கூச்சமும் , மறுக்கப்படுகையில் எதிர்நோக்குக்  கொள்ள வைப்பது. இருந்தும் அனைத்திலும் சோர்வடைய வைக்கும், சலிப்பை தரும் முறைமைகளை பேணச் சொல்வது . ஆரம்ப நிலைகளில் நான் நினைத்த உடன் கிளம்பிச் சென்று , தோன்றிய எண்ணங்களை அந்த சிறு சிறு கூடுகையின் போது பகிர்ந்து பேசும் வாய்ப்பு குறைந்து போனது . ஒரு கட்டத்தில் அது நின்று போனதும் எனது திட்டத்தில் உள்ள ஒரு இடைவெளியை உணர்ந்தேன்

அந்த இடைவெளியில் இயக்கம் மெல்ல பெரும்பான்மையான உறுப்பினர்களை கொண்டதாக மாறியிருந்தது , புதிதாக இணைந்தவர்களை ஓரிரு முறை மட்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தும்உரையாடும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை , அப்போதுதான் அந்து இடைவெளியை உணரத் துவங்கினேன். அதை சரி செய்துவிட அனைவருடனும் நேரடியான தொடர்பை விழைந்தேன் . உருவாகி வந்து இடைவெளி பிறிதெல்லா அரசியலிலும் இருப்பது . அது தகர்க்க பட வேண்டியது . அவர்களுடனான நல்லுறவு மேம்பட ஒரு சந்தர்பத்திற்காக காத்திருந்தேன். அந்த சூழலில்தான் வருடாந்திர அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மாநாடு தில்லி தாள்கட்டூரா அரங்கில் ஒருங்க இருப்பதாக தகவல் வந்தது .அந்த பயணத்தை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன் .

அது எப்படியும் ஒரு வார காலத்திற்கும் மேலான பயணம். ரயில் பயணம் எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருவது. இயல்பில் நேர்மறை சிந்தனைகள் அத்தகைய பயணங்களில் பெருகி எழுவதை ஒவ்வொரு முறையும் உணர்ந்திருக்கிறேன். எந்த அவசரமும் இன்றி , நிதானமான மிக நீண்ட உரையாடல்களுக்கு ரயில் பயணம் போல உதவுவது பிறிதொன்றில்லை , மனதில் தளும்பலற்ற அமைதி , ஆழமான  உணர்வுகளை தூண்ட வல்லது . நான் ஒவ்வொருவருடனும் எனது தனிப்பட்ட உரையாடலை எண்ணி எண்ணி நிகழ்த்தும் அற்புதமான வாய்ப்பு அங்கு கிடைக்கலாம்

அவர்களை அணுக்கமாக அறிந்து கொள்வதனூடாக அவர்கள் வாழ்விடங்களில் நிகழும் நுண்மையான அரசியல் வெளிப்பாடுகளை முற்றாக அணுகி அறிந்து கொள்ள இயலும் . தில்லி சென்று சென்னை திரும்ப பயண நேரம் எப்படியும் ஐந்து நாள் . அந்த ஐந்து நாளும் இடையூறு இல்லாத , முறைமைகள் இல்லாத நெருக்கம் கொடுக்கக் கூடிய இனிய நாட்களாக அவை இருக்கும் . அதற்கான ஏற்பாடுகளை செய்யத்துவங்கினோம்

முதல் முறையாக எனது நண்பர்கள் சிலரும் என்னுடன்   வருவதாக சொன்னதும்நான் அதற்கு உற்சாகமாக சம்மதித்தேன் . முப்பது பேருக்கு மேலாக தில்லி வருவதற்கு விருப்பம் சொல்லி பதிவு செய்திருந்தார்கள் . சென்னையிலிருந்து தில்லிக்கு டிக்கெட் எடுத்தாகிவிட்டது . அன்று இரவு 10:00 மணிக்கு GT எக்ஸ்பிரஸில் தில்லிக்கு செல்ல தயாராக இருந்தோம் . மேற்கொண்டு அங்கு ஆகும் செலவிற்கு நான் கேட்காமலேயே பொறுப்பேற்றார், தலைவர் சண்முகத்தின் அணுக்கர் வைத்தியநாதன். சென்னை ரயில் நிலையத்தில் நாங்கள்  புறப்படவியிருந்த சமயத்தில் எங்களை வழியனுப்பி வைக்க தலைவரால் அனுப்பப்பட்டார்

நான் தருகிறேன் என்று சொன்ன அவரிடம் செலவுக்கான பணத்தை எப்படிக் கேட்பது என தயங்கினேன் . தலைவர் கொடுத்தனுப்பி இருப்பார் , அவராக கொடுக்கும் முன் கேட்க வேண்டாம் என இருந்தேன் . ரயில் கிளம்பும் சமையத்தில் வேறு வழியற்று  தில்லியில் செலவிக்கான பணத்தை பற்றி நான்பேசியபோது  . நான் சரியாக அவரிடம் அதைப்பற்றி சொல்லவில்லை என மனசாட்சியற்று சொன்னதும், அதிர்ந்து போனேன் . எல்லோரிடமும் விளையாடும் அதே விளையாட்டு என்னிடமும் .அதை நான் எதிர்நோக்கி இருக்க வேண்டும் . அவர் வார்த்தையை நம்பி எனக்கும் எனது நண்பர்களின் செலவிற்குமான பணம் மட்டுமே என்னிடம் இருந்தது . முப்பது பேருக்கான செலவுகள் என்னால் சமாளிக்க முடியாத அளவிற்கு பெரியது . வைத்தியநாதன் தான் வெறுங்கையோடு வந்திருப்பதாக சொன்னதும், முதலில் அதை விளையாட்டு என்றுதான் நினைத்தேன் . அவர் சொல்ல வேண்டியதை சொல்லி , எங்களை வழியனுப்பி விட்டு சென்ற பிறகுதான், எனக்கு உறைத்தது . அதன் தீவிரத்தை உள்வாங்க சிறிது நேரமாவதற்குள்ளாக, ரயில் நகரத்துவங்கி இருந்தது. அடுத்து செய்யவேண்டியது என்ன என்பதை சிந்தனை எடுத்துக் கொடுக்கவில்லை . சட்டென ஓடும் வண்டியிலிருந்து கீழே குதித்து விட்டேன் . என்ன ஒரு முட்டாள்தனம் என்பதை அதன் பிறகே உணர்ந்தேன்.

வைத்தியநாதன்அவரை அனைவரும்வில்லங்கம்என்ற அடைமொழியின் வழியாகவே அறியப்படுபவர் . பலருக்கு அவரது இயற்பெயரை சொன்னால் தெரியாது என்பது இன்னும் வேடிக்கை . பலர் தங்கள் இறுதிக்காலம் வரையிலும் மறக்க இயலாத, நினைத்த உடன் உடல் பதறக்கூடிய  வாழ்வியல் சந்தர்ப்பங்களைபலருக்கு உருவாக்கும் திறன் வாய்ந்தவர் , எதிர்மறை ஆளுமைகள் எக்காலத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்,வெண்முரசின் கணிகரைப் போலே . அரசுசூழதல் நேரடியாக சொல்லப்படுவதும் , நிகழ்த்தப்படுவதும் . அது முக்கியமான சிலருக்கு ஒவ்வாமையோ திடுக்கிடலோ ஏற்படாது , தவிற்கும் ஒரு அடிப்படை யுக்தி மட்டுமே. அறுவை சிகிழ்ச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருந்து போலே . வலியை உணராது செய்வதற்கானது. பின்னர் அரசியல் சூழ்தலென்பது வெறும் பொய்யும்  மற்றும் மோசடியும் என்கிற அளவில் தரம் தாழ்ந்து அர்த்தம் கொள்ளப்பட்டது

வைத்தியநாதன் , பத்திரிக்கையாளராக தனது வாழக்கையை தொடங்கி பின்னர் தாசில்தாராகி தலைவர் சண்முகத்திற்கு மிக நெருக்கமான பிறகு அரசியலில் அனைவராலும் அஞ்சப்படும் மனிதராக உருவாகி வந்தார் . அரசு நிர்வாக சட்டம் குறித்த அவரது நுண்ணறிவு . அரசியல் களத்தில் தலைவருக்கு பல சாகசங்களை நிகழ்ந்த உதவியது . அதை செய்து கொடுக்கும் இடத்தில் வந்த வைத்தியநாதன் , தலைவருக்கு மிஞ்சிய அதிகாரம் உள்ளவராக , அனைவராலும் உணரப்பட்டார் . அரசு சார்ந்த பல சிக்கல்களுக்கு அவரின் உதவியை பலரும் நாடியபோது , அவரது அதிகாரம் அசைக்க முடியாததாக மாறியது . 1980 களில் அரசியல் களத்தில் அவர் தவிற்க இயலாத சக்தியாக உருவெடுத்தார். மனிதர்களில் சிலர் இயற்கையை மீறி உடலையும் , மனத்தையும, தன்முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் . அவர்கள் யோகிகளாக இருக்க வேண்டிய தேவையில்லை . சிந்தனை நெகிழ்தன்மை இல்லாதவர்களாகவும் அவர்கள் இருக்கலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்