ஶ்ரீ:
மாய நதி
பதிவு : 430 / தேதி :- 28 பிப்ரவரி 2018
இளம் சூடும் , குளிருமாக கலந்து ஓடிக்கொண்டிருக்கும் நதியிலிருந்து வெளிவர மனசாகாமல் . நதியின் பெருக்கிற்கு உடலை ஒப்புக்கொடுத்து விட்டு நிஷ்ச்சிந்தையாக இருந்தபோது , என்னுடன் எங்கள் குழுவை சேர்ந்த சிலர் மட்டிலும் என்னைப்போலவே நதி நீரில் அலைந்தபடி இருந்தனர் . தூரத்தில் , கரையில் பெரிய மூங்கில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஜீயரின் ஆராதணைப் பெருமாளை அவரது மூத்த புத்திரன் எடை தாளாமல் சுமந்து வருவதை பார்க்க முடிந்தது. ஜீயர் ஸ்வாமிகள் தனது குளியலை முடித்துக்கொண்டு கரைக்குத் திரும்பிவிட்டார் . அங்கு அவருக்கு நித்ய அனுஷ்டானத்திற்கு அவரது ஆராதனை பெருமாள் காத்திருந்தார். எப்படியும் அவர் தனது பூஜையை முடிக்க அரை மணியாகும் . அப்போது எனக்கு பக்கத்தில் குளித்துக்கொண்டிருந்த பெரியவர் ஒருவரை பார்த்தேன் .நம்மூர் பக்கம் போல இருந்தாலும் அவரது தோற்றம் வெகு நாட்களுக்கு முன்பாக வடநாட்டிற்கு குடிபெயர்ந்தவர்போல இருந்தார் , அவரிடம் பேசினால் திரிவேணி சங்கமம் பற்றிய தகவல் கிடைக்கலாம் என தோன்றியதும் அவரை அணுகினேன்.
அவரை பார்த்து நட்புடன் சிரித்ததும் , என்னிடம் “தமிழா” என்றார் . உச்சரிப்பு மாறுபட்டது. நான் “ஆம்” என்றபடி அவரிடம் “இங்கு மூன்று நதிகள் சங்கமிப்பதாக சொல்லப்படுவது வெறும் நம்பிக்கை மட்டும்தானா ? ,அல்லது கங்கை ,யமுனை சரஸ்வதி கலப்பதாக சொல்லப்படுவது உண்மையா?” என்றேன் . அதற்கு அவர் சிரித்தபடி “ உங்கள் குல தெய்வத்தை பிராத்தனை செய்துகொள்ளுங்கள், நான் பிறகு சொல்கிறேன்” என்றார் . முதலில் ஒரு மாதிரி இருந்தாலும் எனக்கு அவர் சொல்லுகிறபடி செய்து பார்த்தால் என்ன என்று தோன்றி , கண்மூடி எனது குலதெய்வத்தை பிராத்தனை செய்து விட்டு, பின் அவரை பார்த்தேன். அவர் என்னிடம் “திரிவேணி சங்கமம் பற்றி சொல்லப்படுவது வெறும் நம்பிக்கையல்ல, உண்மை அதை பார்க்கவும் உணரவும் முடியும். நம்பிக்கையோடு அனுகினால் அன்னை தன்னை மறைப்பதில்லை ” என்றார். எனக்கு அவர் சொன்னது சிலிர்ப்பை கொடுத்தது . ஆம் அன்னை அவள் தன் குழந்தையிடம் ஏன் தன்னை மறைக்கப் போகிறாள்? , என உள்ளே ஒன்று உணர்வுடன் எழுந்து . நான் அவரை பின்தொடர்ந்தேன் . என்னை அழைத்துக்கொண்டு , நீர் ஒழுக்கின் எதிர் திசை நோக்கி அனாயாசமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
பழக்கமின்மையால் நீரின் ஓட்டத்திற்கு எதிர் நடப்பது எனக்கு சிரமாக இருந்தது . நீரில் தவறி விழுவதை தடுக்க சில அடிகளுக்கு ஒரு முறை என்னை நிகர்நிலையில் பேணிக்கொண்ட பின், அவரை தொடர்ந்து கொண்டிருந்தேன். சற்று தூரம் என்னை அழைத்து சென்று ஒரு குறிப்பிட்ட திசையை பார்க்கச்சொல்லி , ஒன்றன் பின் ஒன்றாக விளக்கி சொல்ல துவங்கினார் . குறிப்பட்ட ஒரு இடத்தை சுட்டிக்காட்டிய போது . அந்த இடத்தில் நீரின் அடர்த்தியால் இரண்டுவகையான வண்ணங்கள் போன்ற ஒன்றை பார்க்க முடிந்தது . பிரவாகமாக நீர் ஓடி வருவதையும், அவை ஒன்று கலப்பது போல ஒன்று அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது . நீரில் இளம் செம்மையான ஒரு தாரையில், கரிய நிறத்தில் ஒரு கறையைப்போல ஒரு பகுதியையும் அது நதி நீரில் நீண்டு படர்ந்து பின் தன் நிறத்தை இழந்து கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது . செழுமையான நிறத்தில் வருவதை “கங்கை” என்றும் கரிய நிறத்தில் வருவதை “யமுனை” என்று அவர் பிரித்துக்காட்டினார். ஆம் , அவர் சொன்ன பிறகு , அவை இருவேறு பகுதிகளில் இருந்து ஓடிவந்து கலப்பதையும் , அவை நேராக நான் நிற்கும் இடத்திற்கு ஓடி வருவதையும் பார்க்க முடிந்தது.