ஶ்ரீ:
திருவேணி சங்கமம்
பதிவு : 428 / தேதி :- 26 பிப்ரவரி 2018
நாங்கள் ஏற வேண்டிய படகு வந்ததும் ஒருவர்பின் ஒருவராக அதில் அமைந்தும் , மெல்ல அது நதியின் மத்தியில் தெரிந்த ஆற்றிடைக்கரை நோக்கி நகர்ந்தது . சற்றுதூரம் படகு நகர்ந்ததுமே வானில் கடற்காகங்கள் போல வெள்ளை பறவைகள் நூற்றுக்கணக்கில் எந்தவித அச்சமும் இல்லாமல் படகில் வந்து அமர்ந்து கொண்டன . நடமாடும் கடைகளில் திடீரென தோன்றி அவற்றிற்கான உணவான பொறி விற்கப்பட்டது . அங்கு வருவோர் அனைவரும் அதை ஒரு களியாட்டம் போல வாங்கி , வாங்கி போடப்போட அந்த பறவைகளின் கூட்டம் வந்துகொண்டே இருந்தன . எங்களுடன் இருந்தவர்கள் ஆர்வமாக அதைப்போல செய்ய முயலுகையில்.படகோட்டி எங்களை எச்சரித்தார் . சிறுவர்களையும் குழந்தைகளையும் ஜாக்கிரதை படுத்த சொன்னார்கள் . சில பறவைகள் கைபையையை அல்லது சிறுமியரின் அலங்கார வளையில்களை கொத்த ஆரம்பித்துவிடவதாகவும் , பயணிகள் அஞ்சியோ, ஆர்வமிகுதியாலோ பயணிகள் படகில் இங்குமங்கும் நகர முயற்சிக்கும் போது நிகழும் விபத்துக்களையும் உயிரிழப்புகளை பற்றி சொன்னார்.
நான் என்னை சுற்றி நிகழ்ந்து கொண்டிருப்பதில் மனதை பதியவிட முயற்ச்சித்துக் கொண்டிருந்தேன் . கரையோரங்களில் ,வெயிலின் வெம்மை சூழலில் எழுந்த மனம் அனைத்தும் படகு புறப்பட்ட சில நொடிகளில் காணாமலாகியது. ஆற்றின் உள்ளே செல்லச் செல்ல குளிரும், காற்றில் நீரின் பாசி மனமும் எழுந்தது .எங்கும் நல்ல குளுமை சூழ்ந்து மனதிற்கு ரம்யமானதாக மாறத்துவங்கியிருந்தது. சிறிய படகு என்பதால் ஒருவர் எழுந்து நின்றாலே படகு நிலைகொள்ளாமல் ஆடி இரு பக்கமும் தண்ணீர் முகர்ந்து கொள்ளும் அளவிற்கு தாழும் போது , வயிற்றில் கிலி படர்வதை தவிர்க்க இயலாது .
மனிதனுக்குத்தான் உயிர்மேல் தான் எவ்வளவு ஆசை . யாத்திரைகள் ஒருகாலத்தில் மனிதன் மனதாலோ, வாழ்வின் முறையாலோ, மூப்பின் பொருட்டோ முக்தி வேண்டி நடைபெரும் சடங்காகவே இருந்திருக்கின்றன. அதற்கு அன்றைய யாத்திரைகளில் இருந்த இடர்கள் முக்கியமானவைகள் . தூரம் , போக்கு வரத்து வசதிகள் போன்றவை . ஆனால் நவீன உலகம் எழுந்த பிறகு யாத்திரையும் ஒரு சுற்றுலா அளவிற்கே பொருள் கொண்டதாக மாறிப்போனது. என் தந்தையின் அண்ணன் காசி சென்று வந்தபோது . குடும்பத்தை சார்ந்த அனைவரும் அவர் வந்திருந்த ரயிலடிக்கே சென்று விழுந்து கும்பிட்டதை நினைத்துப்பார்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக