ஶ்ரீ:
ராமனின் அம்பு
பதிவு : 421 / தேதி :- 19 பிப்ரவரி 2018
“மனம் ஒன்றில் மூழ்கி இருக்கையில் பக்கத்தில் நிகழும் விஷயம் கூட பதிவாவதில்லை , என்பது நல்ல தியானத்திற்கென ஏற்பட்டது போலும் இயல்பில் வருவது . அதை நமது எளிய சிக்கலில் நம்மையும் அறியாமல் செலவிடுகிறோம் . அது நாம் நினைக்கும் போது பிடிபடுவதில்லை” - சற்று விடுதலை உணர்வை அடைந்தபோதுதான் வண்டிக்குள் எல்லோரும் சிரிப்பதை கேட்டேன் என்னவென்று அறிய செவிகூர்ந்த போது, அம்மா “ நான் ராமரிடம் வேண்டிக்கொண்டேன் அவர் விட்ட அம்பால்தான் முன்னே சென்று கொண்டிருந்து யாத்திரை பேரூந்தை பஞ்சராக்கியது ” என்று சொல்ல, அனைவரும் சிரிக்க நானும் அவர்களின் அதில் இணைந்து கொண்டேன்.
இந்த யாத்திரையையே தாயை கங்கைக்கும் அயோத்திக்கும் அழைச்செல்லும் ஒரு இந்து மகனின் கடமையை நிறைவேற்ற எனக்கான வாய்ப்பாக பார்த்தேன் . அவர் சொன்னபடி அவருக்காகவே கூட அந்த தாமதம் நிகழ்ந்திருக்கலாம் என நினைத்துக் கொண்டேன். நமக்கு நன்மையாக கிடைப்பவைகள் பலரின் நிலையழிதலிலிருந்து எழுபவை என நினைக்கும் போது அது குற்றவுணர்வாக எழுந்தது. யாத்திரை குழுவை நாங்கள் அடைந்த போது அது பேருரு கொண்டிருந்தது ஆச்சர்யமளிப்பதாக இருந்தது. அதன் பிறிதொரு பரிமாணம் நான் எண்ணியிராத கோணத்தில் இருந்தது அதன் செய்தி.
அழகானந்தம் என்னை தொடர்புகொண்டு இருந்தார் , நாங்கள் இருக்குமிடம் பற்றி கேட்டபோது அவரைப்போலவே என்னாலும் எங்கு இருக்கிறேன் என்பதை சொல்ல முடியவில்லை . சற்று நேரத்திற்கு பிறகு அவர் எங்களை தொடர்பு கொண்டு “மவ்” என்கிற கிராமப்புறப்பகுதில் இருப்பதாகவும் அதைத்தாண்டி வேறெந்த தகவலும் சொல்ல முடியவில்லை என்பதுடன் டயர் பஞ்சர் ஓட்ட சென்றவர்கள் இன்னும் வரவில்லை என்பதால் டயரை மாட்டி வண்டியை கிளப்ப 1:00 மணிநேரத்திற்கு மேலாகும் நீங்கள் நிதானமாக வரலாம் என்றார் . என்னால் பின்தொடர முடியாமைக்கு காரணம் கேட்க நான் அவரிடம் விரிவாக சொல்லத்துவங்கியதும் திடீரென வண்டியில் யாரோ “மவ்” 2 கி.மீ என மைல்கல்லைப்பார்த்ததாக கூச்சலிட்டார்கள் .
ஆம் அது “மவ்” என்றுதான் போட்டிருந்தது . ஒரே பெயரில் பல ஊர்கள் வரலாம் என என் தர்க்க புத்தி விவாதிக்கத் துவங்க மறுபடி வண்டியிலுள்ளவர்கள் உற்சாகமிகுதில் கத்தினார்கள் . “அது நமது பேரூந்து” என்று . ஆம் எங்கள் பேரூந்து அங்கு பின் இடதுபக்க வீல் கழற்றப்பட்டு பொக்கையாய் நின்று கொண்டிருந்தது . அதில் பயணித்தவர்கள் எல்லோரும் பல இடங்களில் சிதறி நின்றுகொண்டிருப்பதை பார்க்க முடிந்தது . எனக்கு நம்ப முடியாத வியப்பு அவர்கள் நின்று கொண்டிருக்கும் இடம் நங்கள் நொந்து காத்துக் கிடந்த காவல் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரம்கூட கிடையாது. இதை எப்படி புரிந்துகொள்வது என தெறியாது திகைத்தேன் . இதை ராமனின் கருணை என்கிற வட்டத்தை தண்டி வேறெங்கும் வைக்க முடியாது . இனி இவர்களை விட்டு ஒரு நொடி விலகக் கூடாது என முடிவுசெய்தேன் . பட்ட அனுபவங்கள் அப்படிப்பட்டவைகள் .
அவர்கள் நின்றிருப்பது புறவழிச்சாலை பிறிவதற்கு 25 கி.மீ முன்னதாக . சற்று நேரத்திற்கெல்லாம் டயருடன் சென்றவர்கள் பஞ்சர் ஓட்டி திரும்பினர். அதை வண்டியில் பொருத்த வெகுநேரமாகிவிட்டது . அதன் பின் அனைத்து வண்டியும் அங்கிருந்து கிளம்ப இரவு 9:00 மணிக்கு மேலானது . அந்த நேரத்திற்கு அயோத்திக்கு பயணப்படுவது அறிவுடைமையல்ல . ராமஜென்ம பூமி விஷயமான தீர்ப்பு வர இருந்த நேரம் ,என்பதால் அதனுடைய தாக்கத்தை எங்களால் அலகாபாத்திலேயே உணரமுடிந்தது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக