ஶ்ரீ:
31.01.2023
* ஆழ்மன மரபணு *
![]() |
காலம் ஒருவரை அவர் விரும்பும் துறையில் ஈடுபட விடுவதும் அதில் வெற்றியடைய வைப்பதும் அவற்றை இனிய நினைவுகளினால் ஆனதாக நிறைக்கச் செய்தலும் மூன்றும் வெவ்வேறு திசைகளில் இருப்பது ஒருசேர அருகணைவது ஒரு நல்லூழ். ஒருவருக்கு மூன்றும் இணைந்து நிகழ்வதில்லை. இருந்தாலும் அவற்றில் தொட்டெடுக்கும் அளவிற்கான இனிமைக்கு எப்போதும் குறைவில்லை என்பதை உணர்ந்து கொண்டால் அதை பார்க்கும் பார்வை மட்டுமே தேவையாய் இருப்பது. அழகியல் நோக்கில் எல்லாம் எல்லாவற்றிலும் அதை நிறைத்து வைத்திருப்பதை பார்க்க ஒரு சிறுவனின் மனம் தேவையாகிறது. ஒரு பத்து வயது சிறுவனை என்னுள் சாகாமல் வைத்திருக்கும் கலையை எனது தந்தையிடம் இருந்து பெற்றேன். அங்கிருந்து வாழ்நாள் முழுவதும் காலம் எனக்கான பல்வேறு உலகங்களை தொடர்ந்து அறிமுகம் செய்தும் அதில் திளைக்கும் உள்ளத்தை அது கொடுத்திருந்தது. அது ஒரு வாழ்நாள் நீண்ட அகவழிப் பயணம். ஒன்றிலிருந்து பிறிதொன்று என திறந்து கொண்டே இருந்தது. ஒரு துறையில் முழு அளவு ஆற்ற வேண்டியவை ஆற்றி முடிக்கப்பட்டவையாக உணரும் தருணம் அல்லது இனி அங்கு தங்கி செய்ய ஒன்றில்லை என்கிற நிறைவின்மை ஒன்று வந்து அருகே ஓங்கி நிற்கின்ற போது அங்கிருந்து கைப்பற்றி அழைத்துச் செல்ல பிறிதொன்று வந்து காத்திருப்பதை பார்த்திருக்கிறேன். அது நான் முடிவெடுக்கும் காலம் வரை காத்திருப்பதும் இல்லை . கைபற்றிய இழுத்துச் சென்று கொண்டே இருக்கிறது. வாழ்நாள் அவகாசம் இல்லை என்பது போன்ற பாரிப்பை அப்போது உணர்ந்திருக்கிறேன். ஒரே சமயத்தில் அத்தனையையும் புத்தியலும் மனத்திலும் திணிக்க அது தயங்குவதில்லை. நன்றாக சென்று கொண்டிருக்கிறதே நேரமும் இருப்பது போன்று உள்ளதே சற்று நிதானிக்கலாம் என நினைக்க அது விட்டதில்லை. வாழ்கை முடிந்துவிடவும் இல்லை இதோ மணிவிழா பற்றிய நினவுகளை தொகுத்துக் கொண்டுமிருக்கிறேன். பின் ஏன் அது என்னை உந்தியது என புரியவில்லை
ஒவ்வொரு துறையில் இருந்து விலகி வெற்றிடத்தில் நிற்கும் கணம் ஒரு வாய்ப்பாக உருவாகி பிறிதொன்றை நிறைக்க வந்தவை. ஒன்றிலிருந்து விலக அவற்றில் பல வகையில் நிகழ்ந்து விடுகின்றன. நானாக விலகியும் பிறருடன் தொடர்ந்து பயணிக்க விரும்பாமலும் எனது அடையாளத்தை உறுதிபடுத்த நான் தொடர்ந்து விலகியும் புதியன துவங்கியும் அந்த ஆடல் என்னை நிறுத்துவதில்லை. அதன் முரணியக்க விளைவுகள் எதிர்பார்த்தபடி இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஒரு முயற்சி துவங்கும் போது பிறரின் இளிவரளுக்கு அல்லது நகைப்பிற்கு இடம்கொடுப்பதாக தோன்றுவதுண்டு. அது வெற்றி பெரும் போது அதற்குள் அவர்களே மிக இயல்பாக வந்திணைகிறார்கள். பின் அந்த களம் அவர்களுக்கானதாக மெல்ல மாறி வருவதை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் தங்களின் இடத்தை உறுதிபடுத்திக் கொள்ள விழையும் போது அதன் அத்தனை அடிப்படை விழுமியங்களும் கைவிடப் படுகின்றன. அது சிறகிழந்த பறவை போல நிலத்தில் காலூன்றி நிற்பதை பார்ப்பது உளக் கொந்தளிப்பை தருவது.
இது போன்ற வன்று அனைத்து துறைகளிலும் பார்த்திருக்கிறேன். அது தான் முதலில் எனது வெளியேற்றத்தை எனக்கு அறிவிக்கிறது. நான் அதை உணர்ந்ததும் வெளியேறியிருக்கிறேன். ஒவ்வொரு துறையிலும் அவை வெவ்வேறு விதமான பாணிகளை கொண்டிருந்தாலும் விளைவுகள் ஒன்றே. அந்த விலகல்கள் அத்துறையின் உச்சத்தில் இருந்த போது நிகழ்ந்தவைகள் என்பதால் ஒருவகை மனநிறைவை அமைதியை அவை எப்போதும் அளித்திருக்கின்றன. பிறரின் பார்வைக்கு அவை என்ன பொருள் கொடுக்கின்றன என பார்த்த காலமுண்டு.அவை சில காலம் தொந்தரவு செய்தன. இப்போதுதெல்லாம் அதிலிருந்து முழுவதுமாக விலகி இருக்கிறேன். இந்த மனநிலையை எனது மணிவிழாவிற்கு பிறகு மிக வலுவாக எனக்குள் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். நான் ஏமாந்த நேரங்களில் அவை எனது ஆழத்தில் இருந்து வெளிப்படுவதுண்டு “ இனி யாருக்கும் என்னை நிரூபிக்க வேண்டிதில்லை” என சொல்லி அவற்றை மிக எளிதில் கடந்து விடுகிறேன்.
அடையும் புரிதலும் அந்த புரிதலின் மேலதிக பயணத்தில் அதில் எதையாவது செய்ய வேண்டும் என்கிற உந்துதலை அடைய வைத்தது. அங்கு நான் செய்ய வேண்டிய ஏதோ ஒன்று தென்படுகிற போது அதன் ஈர்ப்பால் அதை நோக்கி நகர்வது தவிர்க்க இயலாது போகிறது. அங்கிருக்கும் அந்த உலகங்களை எனக்கு அறிமுகம் செய்யும் போது அதில் திளைத்தலை மட்டும் அது அறிவுறுத்தவில்லை. எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை. ஒரு அரிய நாவலைப் போல வாழ்கை முழுவதும் பல்வேறு துறைகளில் தலைமை பொறுப்பும் அதன் வழியாக அடைந்த புரிதலும் வாழ்கையை அடர்த்தி மிகுந்ததாக்கி இருந்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த சூழலுக்கு ஏற்று ஒரு துறைகளில் தலைமை பொறுப்பேற்கும் வாய்ப்பு கிடைத்தது. தொழில், அரசியல், ஆன்மீகம்,இலக்கியம் என நான்கு துறைகளில் வெவ்வேறு காலகட்டங்களில் அதன் திசையை முடிவு செய்ய வாழ்கை முழுமையாக இனிய நினைவுகளை கொண்டதாகியது.
தொழில் - நான் பிறந்த வணிக குடும்பம் எனக்கு அதை இயற்கையில் கொடுத்திருந்தது. என்றாலும் நான் தனித்து எனக்கென சவால்களை உருவாக்கிக் கொண்ட புதிய தொழில்நுட்பம் சார்ந்த வியாபாரம் எனது அனுபவத்திற்கும் கற்பனைக்கும் அழகியலுக்கும் புதிய பரிமாணத்தை கொடுத்தது. இன்று மனம் அமைதியில் இருந்து கொண்டு அவற்றை நினைவுகளால் மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறேன். கிடைத்த அனுபவங்கள் முழுமையாக வாழ்ந்து முடித்த நிறைவை கொடுக்கிறது. வெற்றி தோல்வி என்கிற இருமைகளை கடந்து அனுபவம் அனுபவம் என மனம் அசைபோடுகிறது. அரசியல் மேல் கொண்ட ஈர்ப்பு மிக இளைய வயதில் உருவனது. ஒரு விடலை பருவத்தில் அது துவங்கினாலும் அங்கு நிலவிய வெற்றிடம் என்னை உள்ளிழுத்துக் கொண்டது. அங்கு புதிய இடங்களை கண்டடைந்து இளைஞர் காங்கிரஸில் தவிர்க்க முடியாத உயரத்தை கொடுத்தது. பின்னர் புதுவை அரசியல் உலகின் பிதாமகர் என போற்றப்படுகிற தலைவர் சண்முகத்துடன் இணைந்த அரசியல் பயணம் குறித்து “அடையாளமாதல்” என தனியிக எழுதிக் கொண்டிருக்கிறேன். எதையும் மேம்போக்காக செய்வது எனது வழமையல்ல. அதில் தீவிரமாக பங்காற்றுவதன் மூலம் எனக்கான இலக்கை இடத்தை அடைந்திருகிறேன்.