https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

அடையாளமாதல் * கடந்தவைகளின் தேங்குதல் *

 




ஶ்ரீ:



பதிவு : 662  / 852 / தேதி 29 ஜனவரி  2023



* கடந்தவைகளின் தேங்குதல் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 57.






அறமீறல்கள் வஞ்சங்கள் வழியாக மட்டுமின்றி அசட்டுத்தனமாக கூட ஒரு சில அரசியல் தலைமை உருவாகி பதவியில் சில காலம் நீடித்து நிற்பதை எந்த கணக்கிலும் கொண்டு வைக்க முடியாது. அதைப் புரிந்து கொள்ள குறைந்தது ஒரு தசாப்தம் பின்னோக்கு பயணிக்க வேண்டியிருக்கும். அதில் இன்றைக்கான காரண விதையை கண்டடையலாம் என்றார் சண்முகம் . அரசியலின் அனைத்து விளைவும் ஏதோ ஒன்றின் தொடர்ச்சியாகத்தான் இருக்க முடியும் . எதனுடனும் சம்பந்தப்படாது முற்றிலும் புதியதாக ஒன்று உருவாகி வந்துவிடாது என்று சொல்லுவார் . அது புரிந்து கொள்ளக் கூடியதுஒவ்வொரு பத்து வருட அடுக்கும் ஒரு தசாப்தம். தசாப்தக் கணக்கை எந்த வருடத்தில் இருந்தும் தொடங்கலாம்முதல் அடுக்கு மற்றும் அதன் அடுத்தடுத்த அடுக்குகளுக்கு பயணிக்கும் போது அதன் மாபெரும் வலைப்பிண்ணலை பார்க்க முடியும் என்றார். சண்முகம் கை பிடித்து காட்டியதால் புரிந்து கொள்ள அந்தக் கோட்பாடு மிக எளிதாக இருப்பதாக தோன்றியது.நான் அது மாதிரி ஒன்றை உருவாக்க முயன்று ஒரு கட்டத்தில் அதில் தொலைந்து போயிருக்கிறேன். பல வருடம் கழித்து ஒரு நிகழ்வு என்னை பின்னோக்கி சிந்திக்க வைத்த போது சட்டென அந்த கோட்பாட்டிற்குள் பின்னர் நீண்ட அரசியல் காலத்தை முன்னும் பின்னுமாக நகர்த்தி வந்தது திகைக்க வைக்கும் அனுபவம்.


எல்லா அரசியல்வாதியும் கொஞ்சம் முயன்று அதன் உட்கூறுகளை அறிந்து கொள்ள முடியுமானால் அரசியலின் போக்கையே அது மாற்றிவிடுமேஎன்று நான் அவரிடம் சொன்ன போது  “இந்த கணக்கில் எப்போதும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பிடி கிடைப்பதில்லை காரணம் அவர்கள் அரசியல் அதிகாரத்தில் திளைத்திருக்கிறார்கள். அதிகாரம் தளைப்பதால்தான் அந்த தேக்க நிலையே உருவாகிறதுஎன்றார். “அதிகாரத்தில் இருப்பவருக்கு அதில் உள்ள சுமையால் உள்ளம் குவியாது என்பதால் இவற்றை பார்க்க முடிவதில்லை. மேலும் இயற்கை ஒரு விழியின்மையை கொடுத்து விடுகிறது. அந்த பதவிகாலம் முடியும்வரை பிறவற்றை அந்தக் கண்களால் பார்க்க இயலாதுஎன்றார்


அரசியலில் அனுபவமுள்ளவர்கள அந்த அகக்குருட்டில் இருந்து மனதளவில் மீட்சி கொள்ள நிகழ் அரசியலைப் பற்றிய புரிதலுக்கு அதை அவதானிக்க, கடந்த காலத்தை பிரித்து பிரித்து பார்த்து அதன் விதையை பின் அது உருவாக்கும் போக்கை அறிந்து கொள்வதுடன் , அந்த செய்திகளுக்கு முன்னும் பின்னுமாக நகர்ந்து அதன் ஒழுக்கு வேறு இடங்களில் எப்படி வெளிபடும் என புரிந்து கொள்ள முயல்வது அரசியலின் போக்கை ஒழுக்கை உணரச் செய்கிறது . பின் அங்கிருந்து தங்கள் எதிர்காலம் என்னவாக இருக்கக் கூடும் என்பது பற்றி அதனால் அரசியலின் விளைவு என்னவாக இருக்கும் என ஊகிக்க முயல்கிறர்கள் . நிகழ் அரசியலை உற்று நோக்குவதற்கு அவற்றின் வகைகளை அறிந்து கொள்ள மிக நுட்பமான வழிகளாக இவை சொல்லப்படுகின்றன . இது சண்முகத்திடம் இருந்து எனக்கு வந்த பழக்கம். ஒரு முறை தொட்டுவிட்டால் பின் அதிலிருந்து விலகுவது கடினமானது. அது ஒரு வகை மனப்பழக்கம் நம்மை மீறி மனதை அதில் ஒன்றச் செய்துவிடும். தன்னியல்பாக மிக தீவிரமாக பொருத்து பார்ப்பதை அது ஒருபோதும் நிறுத்தாது . உற்சாகத்தால் சம புரிதல் இல்லாதவர்களிடம் இது பற்றி உரையாடினால்கழன்ற கேஸ்பட்டம் நிச்சயம்.


அரசியல் அரசு சூழ்தலால் நிகழ்கிறது என்பது அதை ஆதரிப்பவர்கள் சொல்லுவது. அரசியலும் கூட அறத்தால் நிற்பது என்பதற்கு இங்கு மிக நீண்ட மரபு நமக்கிருக்கிறது. அரசியலின் பொருட்டு எதையும் இயற்றலாம் என்பது பரப்பிய அரசியல் எழுந்த பிறகு உருவானது. பின் அங்கிருந்து அது அடைந்த வீழ்ச்சியே இன்றைய அரசியல் பாணியாக இந்தியா முழுவதும் உருவாகி நிற்கிறது . அதை பொதுப் போக்காக கொள்ள முடியாது . அதை ஏற்காமல் அரசியலில் இருப்பவர்கள் மிகச் சிலர் என்றாலும் அவர்களை கொண்டே மொத்த அரசியலும் தன்னை வகுத்துக் கொண்டதை வரலாறு முழுக்க பார்க்க முடிகிறது


யாரையும் பொருட்படுத்தாத தலைமை ஒன்று நிகழும் போது அனைவரும் அதிர்ந்ததைப் போல பாவனை செய்தாலும் அதை பெயராளவில் கூட எதிர்ப்பதில்லை என்பது மொத்த அமைப்பை நீர்த்துப் போகச் செய்கிறது . அதன் வழியாக அவர்களும் அந்த வீழ்ச்சியில் பங்கு கொள்கிறார்கள் . குழு குழுவாக அதைப் பற்றிய அலர் பேச்சு எங்கும் இருந்தாலும் யாரும் அதற்கு எதிராக சிறு புல்லைக் கூட அசைக்க மாட்டார்கள். பேச்சும் அங்கலாய்ப்புமாக காலம் ஓடிக் கொண்டேயிருப்பதை பார்த்திருக்கிறேன் . அந்த தலைமையை நேரில் சந்திக்கும் போது பணிவும் அவர்களின் உடல்கள் வழியாக வெளிப்படும்  குறுகலும் குமட்டலை உருவாக்கிவிடும். அந்த தலைமை நீடித்தி நிற்கப்போகிறது என கூச்சமில்லாமல் பேசுவார்கள் அதற்கான் தர்க்கங்களை முன்வைத்து அரசியலை பேசி அவர்களும் அதன் அங்காமாகிறார்கள். இவர்களைப் போன்றவர்களால் அத்தகைய அரசியல் நீடிக்கிறது. அத்தகைய தலைமை வந்து அமரும் போது அவர்களின் செயல்பாடுகள் எந்த தர்க்க நியாயத்திற்கும் பொருந்தாமல் அடிப்படைகளை நோக்கிய கேள்வியை அது எழுப்பிவிடுகிறது . அது ஒரு அராஜகம் அதை எதிர்ககாமல் போவது அரசியல் இழிவு. ஜனநாயக பன்பு கொண்ட தலைவர்கள் அதே பதவிகளில் இருக்கும் போது அவர்களின் எல்லா அரசியல் செயல்பாடுகளை பற்றி விமர்சிக்கும் , எதிர்க்கும் இதே கும்பல் அறத்தின் காவலர்களாக மீறப்பட்டு விட்டதாக கொப்பளித்து ஆர்பரித்து நிற்கிறார்கள் . ஆனால் எதிர்மறைத் தலைமைக்கு முன் அவர்கள் கானாமலாகி விடுகிறார்கள். அரசியலில் ஜனநாயகப் பண்பிற்காக இடம் அவ்வளவுதான் போல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்