ஶ்ரீ:
27.01.2023
* கனவுகள் எளிதல்ல *
எனது திட்டங்கள் எப்போதும் வலுவான அடித்தளத்தோடு துவங்கப்படுவதில்லை காரணம் அவை எப்போதும் கனவுமயமானவை. சூழலில் இருந்து பெறப்படும் நுண்ணுர்வும் அதற்கு அடிப்படையான ஆழ்மனமும் அந்த கனவை மிக தெளிவாக எனக்கு அளித்துவிடுகின்றன போல. பின் அங்கிருந்து பெறும் உந்துதல் என் சந்தேகத்திற்கிமின்றி முன்னகர வைக்கிறது. அந்த திட்டங்களை செயல்படுத்த பிறருக்கு எளிதில் வாய்க்காத நல்லூழ் எனக்கு. நினைத்தது அனைத்தையும் நடைமுறை படுத்தி பார்த்திருக்கிறேன் என்பதே இன்று திரும்பிப் பார்க்கையில் அது வாழ்வை நிறைவுற்றதாக ஆக்கியிருக்கிறது. இருப்பினும் என் போன்ற எளிய ஒருங்கிணைப்பாளருக்கு அன்று அதை பிறருக்கு சொல்லி புரிய வைத்து உடன் அழைத்துச் செல்லும் நடைமுறை சாத்தியமாகவில்லை . ஒவ்வொரு முறையும் தனியொருவனாக துவங்கி அதன் பயணத்தில் சிலரை கண்டடைந்து அந்த திட்டங்களை செயல்படுத்தி வென்றிருக்கிறேன் . அதற்கு உதவும் ஒத்த சிந்தனையுள்ள நண்பர்களை அரிதாக சில தருணங்களில் மட்டுமே அடைந்திருக்கிறேன். அவர்கள் பங்கு கொண்ட அந்த திட்டங்கள் யாவையும் பெரும் வெற்றியை பெற்றிருக்கின்றன. அதுவும் நல்லூழ். ஆனால் அதில் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பயணித்ததில்லை. அது குறித்த வருத்தமுண்டு. என்றாலும் அது கோரும் எதையும் கொடுக்க நான் தயங்கியதில்லை. என் வெளியேற்றம் உட்பட.
ஒரு முயற்சி பெரும் வெற்றி அதில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் போதுமானதாக ஆகிவிடுகிறது போலும். அதிலிருந்து மேலெழுந்து முன்நகரும் எண்ணம் இழந்தவர்களாக எது ஆக்குகிறது என புரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன். அதற்கு பல காரணம். முதன்மையாக நான். அவர்கள் என்னை நகர்த்தாமல் தாங்கள் முன்னுரிமை பெற இயலாது என கருதுகிறார்கள். அல்லது எனது முன்னகரும் அடுத்த கட்ட நகர்வு அவர்களுக்கு சோர்வளிக்கலாம் அல்லது பெற்ற வெற்றியே போதுமானது என தோன்றிவிடலாம். பின் ஒரு முயற்சியின் வெற்றிக்கு பிறகு அதில் இருந்து கொண்டிருத்தல் மட்டுமே நிகழ்கிறது. பிறருக்கு போதுமானதாக தோன்றுவதை நான் எங்கோ அதை ஏற்பதில்லை. ஏனெனில் அதில் மேலும் புதிய படைப்பூக்கம் நிகழ வாய்ப்பிருப்பதில்லை. தேடலை பின் தொடரும் போது அந்த இருத்தலில் மனம் ஒன்றுவதில்லை.
அடுத்த கட்ட நகர்விற்கு அவர்களது ஆதரவை பெறவேண்டிய நிர்பந்தம் எனக்கு. அதன் பின் அங்கு நிகழத் துவங்குவது வெறும் அரசியல். நிழல் அரதியல் எனக்கு உகப்பதில்லை. அவை அரசியலை போலி செய்பவை. எனது கனவு திட்டத்தின் செயல்கள் உயர உயர அதை எழுப்பிக் கொண்டிருக்கும் அதே வேளையில் அதற்குறிய அடித்தளத்தை ஆழமாக ஊடுறுவி இறுக்கி அமைத்து அதற்கு வலு சேர்த்தபடி இருப்பேன். அது எனது பாணி. நான் ஈடுபட்ட அனைத்து துறைகளிலும் இதை பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறேன். அவை ஒருவகையில் அரசியல் சூழ்தல் போல. மிக கவனமாக திட்டமிட்ட நகர்விற்கு காத்திருந்த போதுதான் எதிர் நோக்காத தருணத்தில் தேசிகர் சபை உள்நுழைவு நிகழ்ந்தது.
அன்றிரவு அவர்களுக்கு இடமளித்து விலகும் முன்பு வேளுக்குடி ஸ்வாமியிடம் “நாளை காலை வருகிறேன்” என சொல்லிவிட்டேன் இனி அதை தவிற்க இயலாது. நிகழ்ந்த நேற்றைய தகவல்களை சேகரிக்க நேரமில்லை. அங்கு செல்வதற்கு முன்பாக மனதில் என்னையும் எனக்கான வாய்ப்புகளையும் பற்றிய வரையறை செய்து கொள்வதன் வழியாக எனது நிலையழிதலை கடக்க முயற்சித்தேன் . துவக்கத்தில் சிறிய வயதில் அப்படி வரையறைகளை கொண்டு வருவது எளிதாக இல்லை. பின்னர் அனைத்து விஷயங்களிலும் எனக்கான விழுமியங்களை உருவாக்கிக் கொள்வேன். அதன் பொருட்டு பயிற்சியினால் மனம் அடங்கும் வரையறைகளை பின்னர் கண்டடைய துவங்கினேன். பின்னர் அது என்னை ஒருபோதும் கைவிட்டதில்லை. அது எனது பிறவி பேச்சு குறைபாடு கரணமாக எனக்கு அருளப்பட்டதாக இருக்க வேண்டும். பேச்சு குறைபாட்டு காரணமாக எனக்குள் நான் எப்போதும் உரையாடிக் கொண்டே இருப்பவன். அதில் ஒவ்வொரு நிலையழிதலையும் மீள மீள எடுத்து விவாதித்துக் கொண்டே இருப்பேன். அது அந்த சூழலுக்கு தேவையான விழுமியங்களை எடுத்து அல்லது உருவாக்கி கொடுத்துவிடுவதை அறிந்திருக்கிறேன்.
வேளுக்குடி தங்கி இருந்த வீட்டை அடைந்த போது தெரு திண்ணையில் அமர்ந்திருந்த ரமேஷ் என்னைக் கண்டதும் உற்சாகமானார். நேற்றிரவு என்ன நடந்தது என நான் கேட்பதற்கு முன்பாக அவரே சொல்லத் துவங்கினார். “பெரும் கூட்டமாக ஹயகிரீவர் கோவில் பிரசாதத்துடன் வேத கோஷம் முழங்க வேளுக்குடிக்கு சால்வை, மாலை அணிவிக்கப்பட்டு பல தட்டுகளில் கோவில் மரியாதை என தடபுடல் பட்டது” என்றார். இதைத் தான் உற்சாகமாக சொல்லி என்னை வெறுப்பேற்ற போகிறாரா ? அது எங்கோ எனது கட்டுமானத்தை சிதைத்துவிடக் கூடும். மையமாக சிரித்தபடி அவரை கடந்து செல்ல முயன்றேன். அவர் என்னை விடுவதாக இல்லை மேலதிக தகவலாக சொன்னது ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீண்ட அந்த சந்திப்பில் அவர்கள் தனியாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகளில் “வேளுக்குடியை” பங்கெடுக்க சொன்னபோது. “இது நான் அரிகிருஷ்ணன் தலைமையிலான அமைப்பு ஏற்பாடு செய்து புதுவை வந்திருக்கிறேன். இந்த மூன்று நாட்களும் அவர்களுக்குறியது. அவர் வந்து என்னை எங்கு அழைத்து சென்றாலும் வருவேன். நானாக தனிப்பட்டு எதையும் செய்ய இயலாது இது என் நெறி ” என வேளுக்குடி தனது இயலமையை மிக மென்மையாக சொல்லி மறுத்துவிட்டார் என்கிற செய்தி எனக்கு மனநிறைவை கொடுத்தது. அவர் மறுத்ததது என்னை காப்பாற்றியது அதே சமயம் அதில் இருந்த அவரது தலைமைப் பண்பு என்னை ஆற்றுப்படுத்தியது. இனி நிகழ்த்த வேண்டியதில் தடையில்லை என எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக