ஶ்ரீ:
28.01.2023
* காலாகாலங்களுக்கு இடையே *
எனது அரசியல் குரு தலைவர் சண்முகத்திடம் கண்ட தலைமை பண்பு என்னை வடிவமைத்தது கொள்ள உதவியது. செயல்பாடுகளை கூர் தீட்டியது , அரசியலில் எனக்கென முகத்தை உருவாக்கிக் கொடுத்தது. காரணம் அறத்தை நெறிகளை விழுமியங்களை சார்ந்த அரசியலை அறிமுகம் செய்து வைத்து அன்றாட அரசியல் சரிநிலைகளை நிராகரித்து அதை நிராகரிப்பவர் அரசியலில் வெல்லவும் முடியும் என்கிற நம்பிக்கை அவரின் அசாத்திய வெற்றி ஏற்படுத்தியது. நான் அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டவை அந்த நம்பிக்கைகளை . அரசியலில் அனைத்திற்கும் இடமுண்டு என்றும் அதற்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம் என சொல்லுபவர்களுக்கு சராசரி அரசியலாளர்களுக்கு மத்தியில் அவர்களை மறுத்து சண்முகத்தின் வெற்றி பல பத்தாண்டுகள் நின்றிருந்தது. அதே சமயம் நம்பிக்கை செயல்படாத காலம் என ஒன்றுண்டு. விதைப் பருவம் போல அரசியலிலும் உண்டு. அந்த பருவங்கள் நம்பிக்கையால் மட்டுமே கடக்க இயல்வது. ஆன்மீகமான இருப்பு அதை துணைக்க வேண்டும். காலத்திற்கு காத்திருப்பது அரசியலின் பால பாடம். அப்படி ஒரு காலம் வாராமல் போகுமானால் அது ஊழ் என ஒதுங்கவும் தெரிய வேண்டும் என்பதையும் அவர் தான் கையளித்தார். அரசியல் இடம் விட்டு விலகாதவர்களின் களம். தோல்விகளை ஏற்காதவர்கள் தொழில். அவர்களை கைவிடாத முயற்சிகளினால் வெற்றிகளை ஈட்டுபவர்கள் என ஒரு பக்கம் சொன்னாலும் அதன் மறுபக்க எடைக்கு நிகர் வைப்படுவது ஊழ். அதை ஆழ் மனத்தால் உணராதவர் யாருமில்லை. உணர இயலாதவர்களுக்கு அரசியல் தேவையற்ற வீண் சுமை. அரசியல் என்னை முதன்மையாக கொள்ளும் ஒரு சூழல் எழுந்ததும் அனைத்திற்கும் அவரை முன்மாதிரியாக மனம் கொண்டது.
அதுபோன்ற தலைமையின் கீழ் அனைத்தையும் உரையாடி விவாதித்து விவாதித்து அல்லது முரண்பட்டு செய்ய வேண்டிய தேவைகள் ஏற்படுவதில்லை. விழுமியங்களில் நம்பிக்கையும் அதனால் உருவாகும் எளிய சமரசங்களை மறுத்து மாற்றமில்லாது நிற்கும் நிலைபாடுகள் போன்றவைகள் அவர்களுடன் நம் ஆழ்மனம் எப்போதும் பிணைந்திருக்க வைக்கிறது . அவர்கள் அடுத்து செய்யக்கூடியது என நம்மால் மிக எளிதாக ஊகிக்க முடிபவராக அவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்றது ஏற்காதது என நம்மால் அனைத்தையும் அவதானிக்க முடியும். அவர்கள் நினைப்பதை கடந்து பிறிதொரு இடத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமையும் தருணங்களின் வெற்றி பல வாய்த்துள்ளன. அவையே என்னை களத்தில் தனியாளுமையாக நிற்க உதவியது .
வேளுக்குடி ஸ்வாமியுடன் அதற்கு நிகரான ஆழ்மன தொடர்பு பத்து வருடங்கள் மேல் நீடித்திருந்து. அந்த காலகட்டத்தில் நிகழ்த்திய ஆயிரமாவது ஆண்டு நிகழ்வுகள் , பிற ஏற்பாடுகள் மற்றும் பக்தி இலக்கியம் பற்றி புரிதலை உருவாக்கும் வாய்ப்புகள் திறந்து கொண்டு எழுந்து வந்தன. எனது தேவையென்ன என்பது குறித்த வடிவை மெல்ல உருவாக்கிக் கொண்டிருந்தேன். வேளுக்குடி ஸ்வமியுடன் வருடத்தில் சில முறையே நேரில் சந்தித்தாலும் அறுபடாத மனத் தொடர்ச்சியை உணர்ந்திருக்கிறேன்.
ஆன்மீக உலகில் அவரது எழுச்சி அவரே எதிர் நோக்காத ஒரு தருணத்தில் நடந்தது . தொலைகாட்சி ஊடகங்கள் அந்த மாயத்தை நிகழ்த்தின. அதில் அவரது திட்டமிடல் என ஏதுமில்லை. திட்டமிடாமல் வந்து குவிபவை ஊழின் பகுதிகள் என்பதால் ஆபத்தானவை . எதிர் நோக்காத தருணத்தில் அதை எதிர் கொள்பவர்கள் பின் வாழ்கை முழுவதும் அதை தக்க வைக்க முயன்று கொண்டே இருப்பதை பார்த்திருக்கிறேன். அதில் பெரும் வெற்றி பெற்றவராக நான் வேளுக்குடி ஸ்வாமியை பார்க்கிறேன்.
வருடத்திற்கு ஒரு முறை புது வருடத்தை ஒட்டி அவரது வீட்டிற்கு அருகே அவர் நடத்தும் நிகழ்வில் அந்த வருடம் யாரும் எதிர் நோக்காத பிரம்மாண்டமான திரள் அவருக்கென முதல் முறையாக கூடி அவரை திகைக்க வைத்தது. அதுதான் துவக்கம் அது சொல்ல வந்த செய்தியை தெளிவாக உள்வாங்கி தன்னை அதற்கேற்ப வடிவமைத்துக் கொண்டார். மெல்ல ‘தான்’ மட்டும் தனித்து அது கோருவதை கொடுக்க முடியாது என உணர்ந்து தனக்கான நிர்வாக வளைவை உருவாக்கினார். ஆனால் அது அவரை நோக்கி வந்து கொண்டிருந்த திரளை எதிர் கொள்ள போதுமான கருவிகளை உருவாக்கிக் கொள்ளும் நேரத்தை அதற்கு தரவில்லை இயலவில்லை என நினைக்கிறேன். அவரை சூழந்திருந்த நிர்வாக குழுவின் போதாமையை அவர் அறிந்திருக்க வேண்டும். அவருக்கான தடைகள் அவர் சார்ந்த சமூகத்தின் வழியாக அவருக்கு அளிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. மூன்று வகையானவர்கள் அவரின் நிர்வாகத்தின் கீழ் வந்தவர்கள். ஒன்று வைதிகர்கள் ஆச்சாரத்தை சிறுவயது முதல் பேணுபவர்கள் என்பதால் எங்கும் தனியிடம் கோருபவர்கள். கோவில் நிர்வகத்திற்கு மிக அணுக்கமானவர்கள். அவர்களை உத்தேசித்து வேளுக்குடி நடத்தும் வேத பாடசாலை நிகழ்வுகள் போன்றவை அதன் இரு பக்க தேவைகளை தீர்க்க முயற்சித்தது .
இரண்டாம் வகையினர் நேற்றுவரை அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள். ஓய்விற்கு பிறகு செல்ல வேறு இடமின்றி ஆன்மீகத்திற்குள் வருபவர்கள். எந்த ஆச்சார அனுஷ்டானமும் இல்லாமல் இருந்தவர்கள் என்பதால் வைதிகர்களின் நிரையில் சென்று அமர முடியாது. அதற்குண்டான எந்த கருவியும் செயலும் இல்லாதவர்கள். ஆனால் அதற்கு இணையான இடத்தை பெற அதிகார அரசியலில் நிபுணர்களாக எப்போதும் இருக்கிறார்கள்.தங்கள் இடத்தை உறுதி செய்து கொள்ள அவர்களின் அரசியல் அதிகாரத்தை சாமானியனிடத்தில் கொண்டு வைத்து அவர்களுன் வெறுப்புக்குள்ளானவர்கள் . தங்களை மறுப்பவர்களுக்கு எதிராக அவர்கள் மேற்கொள்ளும் அரசியல் அதிகார விழைவு வேளுக்குடி நினைக்கும் நிர்வகத்திற்கு நிரந்தர தடை. எவ்வகையிலும் அவர்களை கட்டுப்படுத்துவது நிகழ வாய்ப்பில்லை.
மூன்றாவது தரப்பினர் வேளுக்குடியுடன் இணைந்து பயணிக்க விரும்புபவர்கள். தன்னார்வளர் போன்ற அடையாத்தை கொண்டவர்கள் நிர்வாகத்தில் பெறும் பங்கு கொண்டவர்கள் அங்கு நிகழும் அரசியலால் அலைக்கழிக்கப்படுபவர்கள். இவர்களே எண்ணிக்கையில் அதிகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக