இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
சனி, 30 ஜூலை, 2022
வெள்ளி, 29 ஜூலை, 2022
அடையாளமாதல் * அணுக்கனின் தூரம் *
ஶ்ரீ:
பதிவு : 633 / 823 / தேதி 29 ஜூலை 2022
* அணுக்கனின் தூரம் *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 29 .
இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்களுக்குள் நாராயணசாமி கொண்டு வைத்த பொறி “பாண்டியன்”. அவன் அதை தெரிந்து செய்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். புரிந்த அந்த நொடி முதல் அவனுக்கு அனைத்தும் கைமீறி போய் கொண்டே இருக்கும் பதைப்பு உருவாகி இருக்கலாம் . தொடர்ந்து அதை சரி செய்ய முயன்று தோற்ற போதுதான் நாராயணசாமி மீது அவன் கசப்படைந்திருக்க வேண்டும் . இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை நியமிக்க அவர் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்கிற நிதர்சனம் அவன் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு தெரிந்திருக்கலாம் .இளைஞர் அமைப்பை செயலிழகச் செய்வதின் பின்னணி சண்முகத்தை வீழ்த்துவது மட்டுமே என்றால் சண்முகம் வீழ்ந்தும் நாரயணசாமியின் நிலைப்பாடு அதுவாகவே தொடர்ந்தது . உத்வேகத்துடன் செயல்படுவது மட்டுமே அரசியல் ரீதியில் தன்னை முன்னெடுக்கக் கூடிய ஒரே சாத்தியக் கூறு. அதற்கு தடையாக இருக்கும் நிலைக்கு பின்னால் அவன் வேறொன்றை பார்த்திருக்க வேண்டும் . அது அவனை நாராயணசாமியிடமிருந்து மன அளவில் வெளியேற்றியது. அதன் பின் தனது இறுதி காலம்வரை பல தலைவர்களை நோக்கிச் சென்று கொண்டே இருக்க வைத்தும் எங்கும் நிலைகொள்ள இயலாமல் செய்தது . நான் அவனை தொடர்ந்து எச்சரித்தது அது போல ஒன்றை . நாராயணசாமியின் அரசியல் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி கொண்டவானாக இருந்தாலும் அவனுக்கு தன்னை அரசியலில் முன் வைக்க வேறு வழிகள் இல்லாமலாகியிருக்கலாம். இளைஞர் அமைப்பில் அவன் உருவாக்கிக் கொண்டது எல்லா தலைவர்களும் காணும் அதே கனவு. அதை தன்னை மையப்படுத்தி அணைத்தையும் கட்டமைக்க முயல்வது . அரசியல் குறித்து தனக்கு பெரிய கனவிருந்ததை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னிடம் வெளிபட்டு இருக்கிறான்.
பாண்டியன் சிறந்த இரண்டாம் நிலை தலைவராக உருவெடுத்திருக்கும் வாய்ப்பு அதிகம். அவனது முதன்மை சிக்கல் அவன் யாரிடம் சென்றாலும் அவன் மிகச்சரியாக உணர்ந்தது அவனை அவர்கள் ஏற்கவில்லை என்பதுடன் அனைவருக்கும் அவன் மீதிருந்து அவநம்பிக்கை உணர்ந்திருக்க வேண்டும் . அது நாராயணசாமியால் உருவானது. அவர் நேர்நிலை அரசியல்வாதியல்ல என்பதால் பலர் அவனிடமும் அதைப் போன்ற ஒன்றை எப்போதும் எதிர் நோக்கியிருந்தனர். பழகிய அனைவரும் காட்டிய அதீத போலி மரியாதை ஒரு கட்டத்தில் அவனுக்கு சலிப்பைக் கொடுத்திருக்க வேண்டும். அவர்களின் நம்பிக்கையை அடைய அவன் ஒருபோதும் முயற்சிக்கவில்லை அல்லது அதற்கு தேவையில்லை என நினைத்திருக்கலாம். காரணம் அவர்கள் வழியாக அவனால் நாராயணசாமியை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது .
நாராயணசாமி மிக சிக்கலான அரசியல் ஆளுமை யாரும் அடைந்திராத வெற்றிகளை மிக சிறிய வயதில் எட்டிப்பிடித்திருந்தார். அவர் தனக்கு முன்னால் வைத்துக் கொண்ட அந்த ஆழ் மௌனம் பிறருக்கு கடக்க முடியாத பெரிய தடை. அது அவருடன் யாரும் உரையாட முடியாமற் செய்தது . ஒரு சிறிய மாநிலத்தில் அரசியல் விழுமியமும் அதற்கு ஒத்த தலைவரை நான் அடைந்தும் எனது வெற்றி ஏன் தடைபட்டது என்கிற கேளவியை உருவாக்கிக் கொண்டு மேலே நகரலாம் என நினைக்கிறேன். பாண்டியன் நாராயசாமியின் அந்த கடக்க முடியாத மௌனத்தால் சீண்டப்பட்டு தொடர்ந்து வெளியேறி அமைதியழிந்து இறுதியில் உயிரை மாய்த்துக் கொண்டான். சிலர் அனது சொந்த சிக்கலுக்கு பலியானான் என்றனர் . அரசியல்வாதி யாரும் எளிதில் தற்கொலை செய்து கொள்வதில்லை. காரணம் தனது சிக்கல்களில் இருந்து எழுந்து வெளிவரும் பாதையை அவர்கள் கண்டடைந்து விடுவார்கள். அந்த கூறுதான் அரசியலாளர்களை சராசரிகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இந்த அக விவாதத்தில் பாண்டியன் ஒரு மாற்றமுடியாத தரப்பு. இங்கு ஒரு உயிர் எடுக்கப்பட்டிருக்கிறது. தற்கொலை உச்சகட்ட தன்னிரக்க வெளிப்பாடு மட்டுமல்ல அது இந்த சமூகத்தை நோக்கிய உச்ச கட்ட வெறுப்பை வெளிப்படுத்தும் அவர்களின் கடைசி வன்முறை. அது மீளவே முடியாத ஒரு அழுத்தமான செய்தி.
இதுவரை சொன்னவற்றை மீளவும் இப்படி தொகுத்துக் கொள்கிறேன். அரசியலிலும் விழுமியம் தவிற்க முடியாத ஒன்று என நினைக்கும் எனக்கு அந்த எண்ணத்தை மேலதிகமாக கொண்டு சென்ற தலைவராக சண்முகத்தை அடையாளம் கண்டு அதிகாரத்தில் அவருக்கு அருகமரும் வாய்ப்பும் இருந்தும், ஏன் என்னுடைய முயறசிகள் வெற்றி பெறவில்லை?. ஒன்று அரசியல் சமூகத்தில் அதற்கான இடமில்லை என்பது அடிப்படை புரிதல். இரண்டு அரசியல் மற்றும் பொது சமூகம் அரசியலாளர்களுக்கு இணையான தங்களின் பிறிதொரு அரசியலை முன்வைக்கிறார்கள். அவர்கள் மாற்று அரசியலை விரும்புவதில்லை. அது ஒரு ஆற்றின் ஒழுக்கு போல அதில் இணைந்து பயணிக்க தெரியாத அல்லது அத்துடன் முரண்படும் போது ஏதாவதொரு கரையில் ஒதுக்கி விடுகிறது. சண்முகத்தின் மன ஒழுக்கு அந்த ஆற்றைப் போல அவர் தனக்கு எதிரானவர்களுடன் மட்டுமல்ல வேண்டியவர்களுடனும் எந்நேரமும் ஒரு போரில் இருந்திருக்கிறார் . அரசியல் அப்படிப்பட்டவர்களுக்கானது. இதில் சண்முகம் நாராயணசாமி இருவருக்கும் அதிக தூரமில்லை என நினைக்கிறேன்.
1998 களில் இளைஞர் காங்கிரஸ் முழு நிர்வாகக் குழு உருவாகி அதன் முதல் கூட்டம் ஹோட்டல் சற்குருவில் கூட்டிய இரண்டு வருடம் பிறகே அவனால் இளைஞர் காங்கிரஸை பிளக்க முடிந்தது. பாண்டியன் அதை துவக்கி இருந்தாலும் 2000 ல் அது நிகழ வேறு காரணிகள் இருந்தன . சண்முகம் முதல்வரானது முதல் எங்கோ எதுவோ சரியாக அமையவில்லை. அந்த முதற் கோணல் நிகழ்ந்த போது அருகிருந்து பார்த்து திகைத்திருந்தேன். அங்கிருந்து அடுத்தடுத்து நிகழவிருப்பதை ஊகிக்க முடிந்தது . சண்முகத்திற்கு அரசியல் அணுக்கராக இருந்து தாசில்தார் வைத்தியநாதன் செல்லப் பெயர் “வில்லங்கம்” காரணப் பெயரும் கூட. முதல்வரின் செயலாளராக வந்திருக்க வேண்டியவர். அவர் ஆகச் சிறந்த வாய்ப்பு என நான் சொல்ல வரவில்லை. அவர் அந்த பதவிக்கு வந்திருந்தால் சண்முகத்திற்கு என் போன்றவர்களுக்கும் வேறு பலவித திருகல்களை கொடுத்திருப்பார்.அரசியலில் நண்பர்களாக அடைவது அங்கிருக்கும் அரசியலாளர்களை. அவர்களில் கொஞ்சமேனும் நட்புக்கு உகப்பாக செய்யக்கூடிய சிறு கூறு இருக்கும் . அது போல ஒன்று முற்றாக இல்லாதவர்கள் அரசியலுக்கு ஏற்றவர்களாக இருப்பதில்லை . வைத்தியநாதனை அந்த பதவிக்கு கொண்டுவந்திருந்தால் சண்முகத்திற்கு குறைந்த பட்சம் அந்த அவமானகரமான வீழ்ச்சி நிகழ்ந்திருக்காது.
காலம் எப்போதும் ஒரு இலக்கை முடிவு செய்தே யாரையும் எங்கும் அமர வைக்கிரது அதில் சாஸ்வதமான ஏற்பாடு என ஒன்றில்லை. எல்லாம் முடிவுறும் தேதி இடப்பட்டே செயல்படுகின்றன. ஆனால் ஒரு காலகட்டத்தில் அதனுடன் பயணிப்பவர்கள் பிறர் பார்க்க இயலாத சிலவற்றை பார்க்கும் நல்லூழ் கொண்டவர்கள். சராசரிகளுக்கு சற்று மேலானவர்கள் அவர்களின் கோணத்தில் “சில தவறுகள் நிகழாமல் இருந்திருந்தால்” என்கிற ஒன்று எப்போதும் இருக்கும். இது அப்படிப்பட்ட ஒன்று . சண்முகம் முதல்வராக அமரும் முதல் நாள்வரைக்கும் நானும் வைத்தியநாதனும் கவர்னர் மாளிகைக்கு அருகில் அமைந்து கொண்டிருந்த மேடையை பார்த்துக் கொண்டிருந்தோம். இன்னும் இரண்டு நாட்களில் அதில்தான் அமைச்சரவை பதவி பிரமாணம் நடைபெற இருக்கிறது . அவரின் நடையின் துள்ளலை நான் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று சன்னதம் கொண்டவர் போல்தான் இருந்தார். நாளை அது இன்னும் புதிய உச்சம் கொள்ளும்.
ஒரு அரசு அதிகாரி அரசியலாளனாகும் போது நிகழும் விபரீதம் இன்னொரு அரசியலாளன் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடியது. சட்டமும் அதை மீறும் அதிகாரமும் இணைவது மிக ஆபத்தான சேர்க்கை. ஆனால் நான் அமைக்க இருக்கும் அமைப்பிற்கு வைத்தியநாதன் பெரிய அளவில் உதவியிருக்கக் கூடும். அதை எனக்காக செய்யப்போவதில்லை என்றாலும் சண்முகத்திற்காக அதை மறுத்திருக்க மாட்டார். வைத்தியநாதன் சண்முகத்தின் இயல்பான சிந்தனை முறையில் ஒரு நிறத்தம் கொண்டு வந்து அதை மீளவும் ஒருமுறை பின்னோக்கி ஓட்டிப்பார்க்கச் செய்யும் சாமர்த்தியமுள்ளவர். அதற்கான சொற்கோவையை மிக தெளிவாக வரையறை செய்து கொள்வதை பார்த்திருக்கிறேன். அதன் பின் சண்முகத்தின் சிந்தனையோட்டம் மெல்ல அவர் எடுத்து வைப்பது உள்வாங்கிக் கொள்கிறது. எனக்கு இது பல முறை நடந்திருக்கிறது. அவரிடம் அதை வெற்றிகரமாக செய்ய வேறு எவராலும் இயல்வதில்லை. ஆனால் அவர் உதவக்கூடிய எல்லைகளை நான் மிக கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். நான் நாளை அவர் செய்ய இருக்கும் அலம்பல்களை கற்பனையில் பார்த்துக் கொண்டிருந்தேன. அவர் அதை செய்து கொண்டிருந்து நேரத்தில் பண்ணீர் செல்வத்தை செயலாளராக அரசு அறிவித்த போது . வில்லங்கத்தை விரும்பியவரகள் எதிர்த்தவர்கள் அவரால் கசப்படைந்தவர்கள் என அனைவரும் அதிர்ந்திருந்தனர். அது ஒரு கலையெடுப்பு போல நிகழ்ந்தது என அனைவராலும் புரிந்து கொள்ளப்பட்டது. அது சரியானது என்கிற வாதத்தை அதன் பின் சண்முகமே எப்போதும் வைக்கவில்லை .
வெள்ளி, 22 ஜூலை, 2022
அடையாளமாதல் * ஆயிரம் கால் *
ஶ்ரீ:
பதிவு : 632 / 822 / தேதி 22 ஜூலை 2022
* ஆயிரம் கால் *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 28 .
அரசியல் ஒரு இடைநிற்காத தொடர் ஆட்டம். அதில் வென்றவர் தோற்று, தோற்பவர் வெல்வது எழுதப்படாத விதி. சில சமயம் இவற்றில் வெற்றியும் தோல்வியும் நிரந்தரமான ஒன்று போல எப்போதாவது சட்டென நிகழ்ந்தேறி நீண்ட நாளுக்கு வழி விடுகிறது. அந்த கணம் வரை அதை அந்த ஏற்ற இறக்க ஊசலின் ஒரு வகை நிலைத்தன்மை என்று நினைப்பவர்களை அது வாரியெடுத்துச் சென்றுவிடுகிறது. ஒரு முறை அதன் முணையை தொட்டவர்கள் பின் அது என்ன வசீகரத்தைக் காட்டினாலும் மீண்டும் அதனுள் திரும்ப வருவதில்லை, காமராஜரைப் போல. 2001 களில் முதல்வர் பதவியில் இருந்து விலகிய சண்முகம் அனைத்து வித அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டவர் போலானார் . அது ஒரு பாவனை என அறிந்திருந்தேன். அவர் பிறிதொரு சந்தர்பத்திற்கு காத்திருந்தார் . சண்முகம் முதல்வராக இருந்த போதுதான் நான் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை நாராயணசாமியின் அணுக்கன் பாண்டியனிடம் இழந்தேன். சண்முகத்தின் தீவிர ஆதரவாளனாக அவரால் ஒரு போதும் கைவிடபட இயலாதவனாக என்னை நினைத்திருந்தவர்கள் இடையே அது ஏற்படுத்திய பாதிப்பு ஆழமானது. அவர்களின் நிலையை அது கேள்விக் குறியாக்கியதுடன் சண்முகம் பற்றிய அவநம்பிக்கை மேலும் அழுத்தமானது.
நான் தில்லி மேலிட இளைஞர் காங்கிரஸ் தலைமையால் தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்டு அன்றைய தலைவர் சோனியா காந்தியிடம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தேன். அகில இந்திய தலைமையால் புதுவை இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் உட்கட்சி தேர்தலுக்கு வாக்காளர்களை இணைக்கும்,ஒருங்கும் தலைமை அதிகாரியாக தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் நியமிக்கப்பட்டிருந்தேன் . புதுவை வந்து கட்சி அலுவலகம் சென்று மாநில தலைவராக இருந்த நாராயணசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து போது என் மீது அவருக்கு இருக்கும் கசப்பை நேரடியாக வெளிப்படுத்தினார் , அதை ஒருவகையில் எதிர் நோக்கியிருந்ததால் நான் அதை பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை. அமைப்பு உறுப்பினர்களை சேர்க்கும் பூர்வாங்க வேலையை தொடங்கி இருந்த சூழலில். நாராயணசாமி நான் புதுவை இளைஞர் காங்கிரஸ் அமைப்பை ஒருங்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து தனக்கு தில்லியில் இருந்து எந்த செய்தியும் இல்லை என பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார். அதற்கு பின்னால் என்மீதான நாராயணசாமியின் குரோதம் மிகத் தெளிவாக வெளிப்பட்டிருந்தது . சண்முகம் தன் சொந்த சிடுக்குகளல் மூழ்கி இருந்தார்.
நாராயணசாமியன் மனநிலை குறித்த என்னுடைய ஊகம் அனைத்தும் அது செல்லும் திசை சொல்லியது. நான் காத்திருந்தேன். அதன் பின் ஒருசில நாட்களுக்குள் பாண்டியன் புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்ட செய்தி வெளியானது. அகில இந்திய அளவில் பதவிகளுக்கு நியமனங்கள் நிறுத்தப்பட்டு இனி அனைத்து வித தலைவர்களும் உட்கட்சி தேர்தல் வழியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தில்லியில் மூன்று நாட்கள் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டை வறள அவர்கள் பேசியிருந்தது நினைத்து சிரித்துக் கொண்டேன். ஒரு அமைப்பு இதைவிட மிக மோசமாக தன்னை பகடி செய்து கொள்ள முடியாது. அரசியலில் குப்புற கவிழ்ப்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு என்பதால் நான் பதற்றமே ஏமாற்றமோ அடையவில்லை. ஆனால் அமைப்பின் மீதிருந்த மரியாதையை நான் இழந்திருந்தேன். அதன் பின் ஒரு போதும் அந்த அமைப்பின் தலைவர்கள் யாரையும் நான் நம்பியதில்லை .
எனக்கும் நாராயணசாமிக்குமான சிக்கல் ஒருவகையில் ஹோட்டல் சற்குருவில் நடந்த கூட்டத்தில் துவங்கியிருந்தது. அவர் சண்முகத்தின் முன்னாள் அணுக்கர் அவரின் அத்தனை பலம் மற்றும் பலவீனங்களை அறிந்தவர். சண்முகம் பல்வேறு அடுக்குகளைக் கொண்ட கட்சி நிர்வாகத்தை மிக பலமாக வைத்திருந்தார் என்பது ஒரு மாயை. சண்முகத்திற்கு எதிரான ஒரு நகர்விற்கு நாராயணசாமி காத்திருந்தார். அதற்கு இடையே என்னை போன்ற ஒருவரை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அமைப்பு உருவாகி இருப்பதை அவரால் சட்டென புரிந்து கொள்ள முடிந்தது. அதன் பலம் பற்றிய அவரது கணக்குள் மிகச் சரியானவை. அமைப்பின் நிஜமான பலத்தை சண்முகம் பெறுவது தனக்கு நீண்ட கால சிக்கல் என நாராயணசாமி நினைத்திருக்க வேண்டும். அதை புதுப்பித்து உருவாக்க எடுக்க நான் முயற்சிப்பதை அவர் ரசிக்கவில்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியது. இருவருக்கும் இடையேயான சிக்கலில் சண்முகம் தான் பலம் பெற்றிருப்பதை நாராயணசாமிக்கு காட்ட விழைந்திருக்கலாம். ஆனால் அவர் அதை செய்தது அந்த அமைப்பு முற்றாக உருவாவாவதற்கு முன் அதனால் அது எதிர்பலனை எனக்கும் பின்னர் அவருக்கும் உருவாக்கியது.
அன்று ஹோட்டல் சற்குரு கூட்டத்தில் நான் பெற்ற அதே முக்கியத்தை பாண்டியனும் பெற்றான். அது நாராயணசாமியின் வருகையால் உருவானது . நான் அஞ்சியது அதைப் போல நிகழலாகாது என்று . தனக்கு பதிலாக நாராயணசாமியை அனுப்பியது சண்முகம் செய்த பிழை நகர்வு . அன்று சண்முகம் அந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்றிருந்தால் வந்திருந்து புது நிர்வாகிகளுக்கு ஒரு செய்தி தெளிவாக சொல்லப்பட்டிருக்கும். அன்று கிடைத்த அங்கீகாரத்தின் வழியாக அவன் புது நிர்வாகிகளுக்கிடையே பிளவை உருவாக்கத் முடிந்தது .
சண்முகம் இருந்த இடத்திற்கு இதெல்லாம் ஒரு விஷயமல்ல என்றாலும் அதில் முழுதாக ஈடுபட்டிருந்த எனக்கு மோசாமான ஆரம்பமாக அது அமைந்துவிட்டது . பின்னாளில் நான் உருவாக்கி அறிவித்த தலைவர்களில் பெரும்பான்மையோர் சண்முகம் முதல்வரான பிறகு நிலவிய கசப்பின் அடிப்படையில் பாண்டியனுக்கு பின்னால் சென்று நாராயணசாமியை ஆதரித்தனர். சண்முகத்திற்கு இது அரசியலில் ஒரு விளயாட்டு அது அப்படித்தான் என நினைத்திருந்தாலும் அந்த நிகழ்வை முற்றாக குழப்பியடித்தார் . அன்று நராயணசாமிக்கு பதிலாக அவரே வந்திருந்தால் இது நிகழ்வாய்ப்பில்லை
நாராயணசாமியை எவ்வகையிலும் ஏற்கமுடியாத அரசியல்வாதி என்றே மதிப்பிடுகிறேன். அது அவருடைய வரலாற்றுப் பார்வையாலும் அவருடைய அரசியல் நடைமுறையாலும் அவர்மேல் வைக்கத்தக்க மதிப்பீடு.அவர் தன்னளம் குறித்து மட்டும் சிந்திப்பவர் அது ஜனநாயகத்திற்கு நேர் எதிரானது. அது பிறரின் நல்வாழ்வுக்கு எதிரானது, அறுதியில் அழிவை மட்டுமே கொண்டுவருவது. அரசியலில் தான் பிழைத்திருக்க தன்னை மறுப்பவர்களை அல்லது ஏற்காதவர்களை எதிரிகளாகக் கட்டமைத்துக் கொள்வதும் . அந்த எதிரிகளை அழிக்க முற்படும். எப்போதுமே அது எதிரிகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும். எதிரிகளுக்கு எதிரான செயல்பாடாகவே தன் அனைத்துப் பணிகளையும் வகுத்து வைத்திருந்தார் . அவருக்கு நேர்நிலைச் செயல்பாடே இருந்ததில்லை . 2016 களில் பதவியேற்று மிக அவமானகரமாக பதவியை பரிகொடுத்து முதல் காங்கிரஸ் முதல்வர். அதுவரை காங்கிரஸ் ஆட்சி கவிழ்கப்பட்டதில்லை. காலம் அவரவர் வழிமுறைக்கு அவர்கள் பாணியில் பதில் சொல்கிறது.
புதிய பதிவுகள்
-
ஶ்ரீ : அடையாளமாதல் - 486 பதிவு : 486 / 672 / தேதி 12 நவம்பர் 2019 * தற்புரிதல் * “ ஆழுள்ளம் ” - 03 உளப்புரிதல...
-
ஶ்ரீ : பதிவு : 651 / 841 / தேதி 05 டிசம்பர் 2022 * விபரீத மாற்று சிந்தனை * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 46 . அரசியலி...
-
ஶ்ரீ: அடையாளமாதல் - 60 விழுமியங்களில் நின்றது திரு . ப . சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 33 அரசியல் களம் - 18 ...
-
ஶ்ரீ : பதிவு : 673 / 862 / தேதி 15 ஏப்ரல் 2023 * நேரத்திற்கு மாறும் கணக்கு * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 71. காலை...
-
வாழ்வெனும் அழகியல்தொகுக்கும் சிந்தையையும் சூழலும் கொடுத்தவனை வணங்குகிறேன். ஆம் அவ்வாறே ஆகுக. அவ்விதமே ஆகுக என் வாழ்கை || ஓம் ஹரி:|| ...
-
ஶ்ரீ : பதிவு : 670 / 859 / தேதி 30 மார்ச் 2023 * வலியுறுத்தல் * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 68. அரசியலில் எப்போது...
-
ஶ்ரீ : பதிவு : 655 / 845 / தேதி 30 டிசம்பர் 2022 * விரும்பாத நுழைவு * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 50 . பின்னால் அமர...
-
ஶ்ரீ : பதிவு : 607 / 797 / தேதி 16 பிப்ரவரி 2022 * மாயவெளி * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 05. ஓவியரான வல்சராஜ் அழ...
-
https://www.jeyamohan.in/185015/ தூரன் விருது, இளங்கோவன் பொது தூரன் விருது, இளங்கோவன். கடலூர் சீனு June 28, 2023 தமிழ்விக்கி – தூரன் விர...