https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 10 ஜூலை, 2022

அடையாளமாதல் * பொதுவிடம் *

  


ஶ்ரீ:



பதிவு : 630  / 820 / தேதி 10 ஜூலை  2022



* பொதுவிடம் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 26 .





பாபுலால் போன்ற சிலர் தீவிர மார்க்கியர்களின் செல்வாக்கு உள்ளவர்கள். எங்கிருந்து அவற்றை பெற்றுக் கொள்கிறார்கள் என நான் கேட்டதில்லை. அவர்கள் முன்வைக்கும் எல்லா கருத்தியலும் அதை நோக்கிய மனச்சாய்வு கொண்டதாக இருக்கும். ஆனால் அவர்களது நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தது என்பதால் அவை ஆழமான பாதிப்பை அடைந்ததாக அவற்றை வாழ்வியலில் பயன்படுத்துவதாக தெரிவதில்லை. அது பற்றி சூடு பறக்க பேசுவது அவர்களுக்கு ஒருவித உளமயக்கை அல்லது கிளர்ச்சியை கொடுத்திருக்கலாம். அவர்கள் முன்வைத்த பல கருத்துக்கள் காலாவதியானவை. நான் ஒரு போதும் அவற்றை மறுத்து பேசியதில்லை, ஆனால் மாற்று சிந்தனைகளை முன்வைப்பேன். காங்கிரஸ் கட்சி அரசியல் புரட்சிகரமான பயணம் கொண்டதில்லை. இங்கு அனைத்து செயல்பாடுகளும் தலைவர்களை நோக்கி பேசுவதாக இருந்தது. அவர்களின் அங்கீகாரமும் தரும் பதவியும் அரசியலின் அடிப்படை செயல்பாடுகளை ஒட்டி இருக்க வேண்டும் என்கிற அவசிமில்லை . பதவியை எதிர்பார்த்த சமரசங்களை நான் சண்முகத்திடமே வைத்ததில்லை . திட்டமிட்ட செயல்பாடுகள் நம்மை தவிற்க இயலாதவர்களாக காட்டும் என எனக்கு அவற்றை பற்றி வேறுவிதமான பார்வைகள் உண்டு . அவை நடைமுறையை அடிப்படையாக கொண்டது . பல வருட கள நிலவரத்தில் இருந்த நான் உருவாக்கிக் கொண்டது. அதை மட்டும் எப்போதும் அழுத்தமாக முன்வைத்திருக்கிறேன் . அரசியல் செயல்பாடுகள் வெளிநோக்கி பேசப்பட வேண்டும் என்பது எனது கருத்தியலாக இருந்தது . தேவையான அனைத்து அங்கீகாரமும் இடத்தையும் பதவியும் அது பெற்றுத் தரும் என உறுதியாக இருந்தேன் , அவர்களுக்கு புரிந்து கொள்ள முடியாததாக  இருந்தது. உலகம் முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்களை பற்றி நிலைப்பாடுகளைப் பற்றி நீண்ட உரையாடல்கள் நிகழ்ந்திருக்கின்றன. பாபுலால் போன்றவர்கள் என்னிடம் அதிக ஈடுபாடும் என் அரசியல் வழிமுறைகளில் ஊக்கம் கொண்டவனாக என்னை தொடர்ந்தவன். அந்த உரையாடல்களில் அரசியல் குறித்த புதிய புரிதல்களை நான் அந்த உரையாடல்களுக்கு பின் அடைந்திருக்கிறேன் அவற்றை தொகுத்துக் கொள்கிறேன்எனது செயல்பாடுகளை உரையாடலை கொண்டு கூர்மை படுத்திக் கொள்வேன்


2001 சண்முகம் வீழ்சிக்கு சில வருடங்களுக்கு முன் எனது அரசியல் ஈடுபாடுகள் வேறொரு தளத்தை அடைந்தது . கட்சிக்குள் பகிரங்கமாக நாராயணசாமி எதிர்பாளனாக உருவெடுத்திருந்தேன். அனைவரும் அவரை அஞ்சியது எனக்குள் ஏதோ ஒன்றை தூண்டியிருக்க வேண்டும்

என்னுடன் முரண்பட்டு விலகிச் சென்றவனை நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாபுலாலை இப்போதுதான் பார்க்கிறேன். கண்களில் விரோதம் தெரிந்தது. அடிபட்டவன் போல இருந்தான். சட்டென பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து என்னை குற்றம் சொல்லும் பாவனை தெரிந்ததும் உடன் வந்த பால்ய நண்பன் பத்ரி சூடானான் நான் அவனை அமைதிப்படுத்தி பாபுலாலை பேச விட்டேன். இறுதியில் அவன் சென்றடைந்த இடம் நான் அவனை கைவிட்டுவிட்டேன் என்பதாக இருந்தது. நான் அதற்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதற்கு இப்போது எந்த பயனும் இல்லை. அது மிக நீண்டது அகவயமானது . அரசியலை ஒரு வித அகவயமான புரிதல் மட்டமே அதனால்தான் யாராலும் தங்கள் கருத்தை பிறிதொருவருக்கு விளக்க முடிவதில்லை. சில சமயம் அப்படி சொல்ல முயன்றாலும் அது மேலும் மேலும் விவாதத்திற்கு சென்றுவிடுகிறது. முடிவு மௌனமாகத்தான் இருக்க முடியும் . பேசாமல் இருந்திருக்கலாம் என தோன்றிவிடும்


அரசியல் போல ஒன்றில் திகழ்ந்து கொண்டிருப்பவர்கள், அங்கிருந்தே வாழ்வில் அனைத்தையும் பெற்றவர்கள் பலருக்கு அது போல கிடைத்தே இல்லாத அனைத்தும் அடைந்தவர்கள்அவர்களல் சிலர் அதன் எதிர்காலம் பற்றிய எண்ணமில்லாமல் அவற்றை உறிஞ்சி அதன் கடைசி உயிர் ஆதாரத்தை அழிப்பது பதறச் செய்வது நிலையழிவைத் தருவது . தொழில் முறை தேனெடுப்பவன் கூட முழு கூட்டையும் அழிப்பதில்லை அவனது செயலில் நாளை பற்றிய எண்ணமிருக்கிறது . பிறருக்கென இல்லாவிட்டாலும் தனக்காகவாவது சிலவற்றை தொடாமல் விட்டுச் செல்கிறான் . அரசியலும் ஒருவகைமையில் அப்படிபட்டதே . ஆயிரக்கணக்கானவர்கள் முகமிலிகலாக்கி சிலரை மட்டுமே வெற்றிகளின் சின்னங்களாக நிறுத்துகிறது. அவர்கள் குறைந்தபட்சம் அந்த முகமிலிகளை பற்றி சிறிது நினைத்தாவது பார்ப்பவர்களை நான் நினைவுறுகிறேன் . நாளைய பற்றிய ஈரமில்லாமல் அதை அனுகும் அரசியலாளன் எதிர்கப்பட வேண்டியவன் என்பது எனது நிலப்பாடாக ஏக்கமாக இருந்திருக்கிறது . அதன் அடிப்படையில் மட்டுமே நான் தலைவர் சண்முகத்தை ஏற்கிறேன். அரசியலின் அத்தனை அரசுசூழ்தலையும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொண்டவர்  ஆனால் அவரது அரசியலில் நாளைய பற்றிய துளி கவனமும் கவலையும் இருந்தது. அதில் பல தலைவர்கள் உருவாகி வருகிற களம் இருந்தது . அதை அழிக்க அவர் முயன்றதில்லை . அதற்கு பின்னால் அவரது சுயநலம் என குறைகூறபவர்களுக்கும் அதில் இடமுண்டு என்றாலும் பிற தலைவர்களுக்கு மத்தியில் அவரை தனித்து காட்டியதை யாரும் மறுக்க முடியாது .


2001 ல் நிகழ்ந்த அதிகாரப் போராட்டம் அரசியலின் அடிப்படைகளை எதிர்த்து. 1999 களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதே அது தொடங்கி வைக்கப்பட்டுவிட்டது. வல்சராஜ் அதன் துவக்கமாக இருந்தார் பின்னாளில் நாராயணசாமியின் கைக்கு அது மாறியது என்றாலும் அதற்கான இடம் உருவாக்கிக் கொடுத்தவர் சண்முகம். அவர் எங்கோ தனது சமநிலையை இழந்திருந்தார். அது மொத்த புதுவை அரசியலையும் தலைகீழாக மாற்றி அமைத்தது. அதிகாரத்தில் இருப்பவர்கள் பல வித மன சமாதனங்களை முன்வைத்து தங்களை தங்களுக்குள் நிலைக்க செய்து கொள்கிறார்கள். உயரம் எப்போதும் பிறரின் தாக்குதலுக்கு உள்ளாவது. தன்மதிப்பும் அகங்காரமும் ஒரு ஆளுமையை உருவாக்கி காட்டுகிறது. ஒரு வயதிற்கு பிறகு அந்த பிம்பம் கட்டுக்குலைந்து விடுகிறது போலும். சிலருக்கு அந்த வயதை அதன் முக்கிய கூறாக வைக்க முடியாது என நினைக்கிறேன் . கரிசல் எழுத்தாளர் கி.ரா வை அவரது 96 வது அகவையில் சந்தித்த போது அவர் தன்னை எங்கும் இழந்ததாக நான் உணரவில்லை. ஜெயமோகனுடன் சென்றிருந்த எங்களை மூன்று மணி நேரம் கடந்தத்தை அறியாது செய்தார்


அரசியல் உலகம் வேறு வகையானது போலும் எந்த உயர் பதவியில் இருந்த போதும் அவர்கள் தாங்கள் செயாற்றுவதற்கு யாரோ எதுவோ ஒன்றை தடையாக உணரப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் . ஆளுமை என்பது ஒருவித நரம்பியலை அடிப்படையாக கொண்டது என நினைக்கிறேன். சண்முகம் தனது நிதானத்திற்கும் செயல்பாட்டிற்குமாக அறியப்பட்டவர் நாராயணசாமி போன்ற ஒருவரை சர்வ சாதாரனமாக கடந்து செல்ல முடியும். ஆனால் தேங்கி நின்றார். அவரை தனது மாணவனாக  நினைத்தது முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும் . நாராயணசாமியின் ஒவ்வொரு நிமிட சிந்தனையை, திட்டத்தை அவரால் மிக அணுக்கமாக உணரப்பட்டிருக்க  வேண்டும் . அப்படி உணரும் ஒவ்வொரு தருணமும் சினம் கொண்டார். அந்த சினமே தன்னுடைய அரசியல் எதிரிகளை தாண்ட முடியாது செய்து விட்டதாக உணர்கிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...