வணக்கம் , விஷ்ணுபுர விருது விழா, அதன் துல்லிய ஒழுங்கு, நிகழ்ச்சி ஒருகிணைப்பில் ஆர்வமுள்ள என்னை போன்றவர்களுக்கு பெறும் நிறைவை தருவதாக இருந்தது . ஏற்பாட்டாளர்களுக்கு இது பெரும் வெற்றி . அவர்களுக்கு எனது மனம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் .
நான் முதல் முறையாக விஷ்ணுபுர விருது விழாவில் கலந்து கொள்கிறேன் என்றாலும் , பல வருடங்களாக நடந்து வந்தவைகளின் தொகுப்பை உங்கள் தளத்தில் பார்த்தவை மற்றும் வாசித்தவை என்பதால், நிகழ்ச்சி வழக்கமான ஒன்றாக தோன்றினாலும் , குழு ஒத்திசைவின் உச்சம் , பிரமிப்பை அளிப்பதாக இருந்தது . மிக அமைதியாக அவற்றை பார்த்துக்கொண்டிருப்பதே எனக்கு போதுமானதாக இருந்தது. அதற்காகவே வந்தேன். அந்த அனுபவம் இனிதானதாக இருந்தது.
கடந்த பல வருடங்களாக ,ஒரு கூட்டுப் புழுவைப் போல அனைத்திலிருந்தும் உள்ளிழுத்துக் கொண்டுவிட்ட எனக்கு , சில வருடங்களுக்கு முன்பாக ஏற்பட்ட உங்களின் தொடர்பு என்னை மீட்டுக் கொள்ளும் விசையாக எப்போதும் இருந்திருக்கிறது . இப்போது அது கொண்டாட்ட மனநிலைக்கு வரவே ,கோயம்புத்தூர் வந்திருந்தேன்.
நிஜமான கொண்டாட்டமான நிகழ்வு. மேடை , உரையாடல் , பேச்சு இவற்றிற்கு அப்பால் அங்கு சுழன்று அடித்து கொந்தளித்துக் கொண்டிருந்த ஒன்றை உணர்வது தனி அனுபவமாக இருந்தது.
நான் உங்களுக்கு எழுதிய பல கடிதத்தில் , உங்களை கண்டடைந்து மிக தற்செயலானது என பலமுறை குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவியிருக்கும் . எனது கருதுகோள் குறித்த தெளிவிற்கும் அதை நோக்கிய தேடலின் பொருட்டும், பல முனைகளில் அலைக்கழிக்கப்பட்டு உங்களை வந்தடைந்தேன் .
புடவியின் பெரு விதியாக இயங்கும் நிர்குண பிரம்மத்தின், விதி விலக்காக சகுண பிரம்மத்தை நான் புரிந்து கொள்ள முயலுகிறேன். நீங்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் ராமாநுஜர் குறித்து சொன்ன “அழகியல்” இதுவாகவும் இருக்கலாம் . அர்ச்சா விக்ரஹத்தை அண்டத்தின் குவி மையம் என்கிற புரிதலையும் அடைகிறேன் . அத்துடனான தொடர்பை அதன் லாலன , பாலனங்களினால் கூட அடையப்படலாம் என்கிற உங்களின் பதில்களில் பெற்றேன். நீங்கள் சொன்ன உங்களின் அத்வைத நிஷ்ட்டையிலிருந்து எனக்கானதைப் பெற்றுக்கொள்ள இயலும் என்கிற எண்ணமே ,என்னை உங்களை நோக்கிய நகர்வை நிகழ்த்தியது என்பது எனக்கு ஆச்சர்யமானது .
எதை எதிர் நோக்கி உங்களுடன் எனது உரையாடலைத் துவங்கினேனோ . எதில் உங்களுடன் இந்த நீண்ட பயணத்தில் இருக்கிறேனோ, அதிலேயே இதுவரை தொடர்ந்து பயணிப்பது மகிழ்வான ஒன்றாக இருக்கிறது . எங்கோ மனதின் ஆழ்மூலையில் ஏமாற்றமுறுவேன் என ஒன்று ஓயாது சொல்லிக் கொண்டிருந்தது , பின் என்ன காரணத்தினாலோ அது அமைதியடைதிருக்கிறது .உங்கள் எழுத்துக்களிலிருந்து நான் அடையும் மெய்மையின் விளைவாக அதுவே நிகழ்ந்திருக்கலாம் என நினைக்கிறேன்.
ஆன்மீகம் பற்றி எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட முன்முடிவுகளை நான் இறுக்கமில்லாததாக வைத்துக் கொண்டேன் . அதனாலேயே அது நெகிழ்வனானதாக இருந்திருக்க வேண்டும். எனக்குள் இது முரண் எனக்கிற கவலையே ஓங்கியிருந்தது. ஆனால் புதியவற்றை பெற்றுக் கொள்வதிலும் முன்பே அறிந்திருந்தவைகளை கட்டுடைத்து புதியவற்றை கொண்டு அவற்றை மறு உருவாக்கம் செய்து கொள்வதும் எனக்குள் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது . அந்த நெகிழ்வுத்தன்மை காரணமென இப்போது உணர்கிறேன் .
எனது பயணத்தின் பாதையில் இடையில் வரும் சில மையில் கற்களில் அமர்ந்து , பயணித்த பாதையில் அதுவரை நிகழ்ந்ததை தொகுத்தும் சரி பார்த்துக் கொள்வது என்னுள் எப்போதும் நிகழ்வது . அது நிகழும் போதெல்லாம் உங்களுக்கு கடிதம் எழுதி என்னை பகுத்துக் கொள்வதுடன் , அடுத்த பயண இலக்கை தேர்ந்தெடுக்க காத்திருக்கிறேன் .விஷ்ணுபுர விருது விழா விருந்தினர் நரேன் பற்றி குறிப்பில் மீபொருண்மை பற்றிய செய்தி சிறு மின்சார தீண்டலாக உணர்ந்தேன். திரு. ராஜ்கௌதமன் பற்றிய கட்டுரை ஆழம்மிகுந்த பண்பாட்டு வெளியை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறது . மிக கறாரான விமர்சனம் .
விஷ்ணுபுரம் வாசிப்பில் தொடங்கி , இப்போது விஷ்ணுபுரம் விருது விழா வரை கடந்த நான்கு வருடமாக பயணித்து வந்துள்ள எனது பாதையை இப்படித்தான் தொகுத்துக் கொள்கிறேன் . நான் நானாக இருப்பதாகவே இப்போதும் உணர்கிறேன் . ஆனால் அதன் மத்தியில் அடைந்த மாற்றங்கள்,புரிதல்கள், கணக்கில் அடங்காதவை . ஆகவே புரிதலும் அதிலிருந்ழு கற்றதும் எனது இடைவெளிகளை நிரப்பியுள்ளது என்றே நினைக்கிறேன்.
அடுத்த இலக்கிற்கான உரையாடலை எனக்குள் நிகழ்த்துகையில் எனது போதாமை ஒரு முக்கிய காரணமாக எப்போதும் என்முன்னே எழுகிறது .
அதன் பொருட்டே நான் உங்களின் எழுத்துக்களை வாசித்தும் உங்களுடன் உங்களின் எழுத்துக்களின் வழியாக உரையாடிக்கொண்டும் இருக்கிறேன் ,
நான் உங்களிடமிருந்து பெற்றுக்கொண்டவற்றில் முதன்மையானது “இன்றில் வாழ்வது “ என்கிற பெரும் கருதுகோள் அது என்னை புதிய சிந்தனைக்கு எடுத்துச்செல்கிறது. என்னை மீட்டுக் கொண்ட புள்ளி அது என நினைக்கிறேன் .
நன்றி
ஆழ்ந்த நட்புடன்
கிருபாநிதி அரிகிருஷ்ணன்