https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 16 ஜூலை, 2020

வெண்முரசு நிறைவு ..ஜெ கடிதம்

 https://www.jeyamohan.in/133795/


 



2013 டிசம்பர் 25 அன்று எழுதத் தொடங்கி 2014 ஜனவரி 1 ஆம் தேதிமுதல் வெளியான வெண்முரசு இன்று, 2020 ஜூலை 16 அன்று, முடிவடைகிறது. இதை ஜூன் 26 அன்று எழுதி முடித்தேன். அதன் பின் நீண்ட நிறைவின்மையும் கொந்தளிப்பும் எஞ்சியது. பின்னர் 13-7-2020 அன்று இறுதி பகுதியை, கண்ணனின் பிள்ளைத்தமிழை, எழுதியபின் நிறைவும் விடுதலையும் அடைந்தேன்.

இதை எழுதுவதாக அறிவித்தபோது இத்தனை பெரிதாக எண்ணவில்லை. ஆண்டுக்கு ஒருநாவல் என பத்து நாவல்கள், ஐந்தாயிரம் பக்கங்கள் என்று அறிவித்தேன். எழுத தொடங்கும்போது பத்தாயிரம் பக்கம் வரலாமென்று தோன்றியது.அன்று அதுவே மலைக்கவைக்கும் பணியாக இருந்தது. மகாபாரதம் அத்தனை இணைப்புகளுடனும்கூட எட்டாயிரம் பக்கம்தான். இந்தியாவில் எந்த நூலும் பத்தாயிரம் பக்கம் இல்லை.

எழுத முற்படும்போது ஒருநாவலை தொடர்ச்சியாக வெளியிட்டுவிட்டு நீண்ட இடைவெளிவிட்டு அடுத்த நாவல் வெளியிடலாம் என்பதே திட்டம். அப்போது இத்தனை வாசகர்கள் இருப்பார்கள் , இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக வாசிப்பார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் எழுதத் தொடங்கியபின் வாசகர்களின் பெருக்கம் ஒரு கட்டத்தில் பெரிய அழுத்தமாகியது. ஒருநாவலுக்கும் இன்னொன்றுக்கும் இடையே பதினைந்து நாட்கள் இடைவெளி விட்டால்கூட வாசகர்கள் பலர் அப்போது மிகப்பெரிய வெறுமையை உணர்வதாகச் சொன்னார்கள். ஒருமுறை இருபதுநாட்கள் இடைவெளி வந்தபோது தொலைபேசி அழைப்புகளும் மின்னஞ்சல்களும் வந்து குவிந்தன.

ஆகவே கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள், எழுபத்தொன்பது மாதங்கள், அனேகமாக தினமும் ஒரு பகுதி என வெளியாகியது வெண்முரசு. திட்டமிட்டதை விட இப்போது மும்மடங்கு பெரியது.உலகின் வெவ்வேறு நாடுகளில், இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் இந்நாவலை எழுதியிருக்கிறேன். மலையுச்சிகளில், பாலைவனங்களில், அறியாத சிற்றூர்களில்.விமானங்களிலும் ரயில்களிலும் படகுகளிலும் எழுதியிருக்கிறேன். ஏழாண்டுகள் இது என் வாழ்க்கையின் முதன்மையான பகுதியாகவே இருந்தது. ஒரே ஒருநாள்தான் வலையேற்றம் செய்யமுடியாமல் வெண்முரசு பிந்தி வெளியானது. நான் எழுதாமையால் ஒருநாள்கூட தவறியதில்லை. அது ஓர் அருள் என்றே நினைக்கிறேன்

இதன் வாசகர்களுக்கு நான் பெரிதும் கடன்பட்டிருக்கிறேன். எங்கள் பயணங்களில் கடுமையான அலைச்சலுக்குப் பின் விடுதிக்கு திரும்பி படுத்தால் என்னுடன் வந்த நண்பர்கள் பன்னிரண்டு மணிக்கு வெண்முரசு வெளியானதும் படித்துவிட்டு தூங்குவதற்காக காத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். விஷ்ணுபுரம் விழாவின்போது பெரிய கூடங்களில் நண்பர்கள் திரளாக தங்கியிருப்பார்கள். பன்னிரண்டு மணிக்கு அத்தனைபேரின் முகங்களும் செல்போன் வெளிச்சத்தில் மின்ன வெண்முரசு படித்துக்கொண்டிருப்பதை பலமுறை கண்டிருக்கிறேன்

உலகமெங்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். இத்தனை விலையுள்ள நூல் ஒவ்வொரு முறையும் தேவையான அளவுக்கு முன்விலைத்திட்டத்திலேயே விற்றுச் செல்கிறது. வழக்கமாக நவீன இலக்கியம் படிக்காதவர்கள் மிகப்பெரிய அளவில் இதை படிக்கிறார்கள். சில வீடுகளுக்குச் செல்லும்போது அந்நண்பரை விட அவர் அன்னையும் தந்தையும் வெண்முரசை தீவிரமாக படித்துக்கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன்

இது நிறைவின் தருணம். நன்றி சொல்லவேண்டிய பலர் உண்டு. இந்நாவல்தொடருக்கு ஓவியங்கள் வரைந்த ஷண்முகவேல் இதற்கு ஒரு அழகான தொடக்கத்தை அளித்தார். உதவிய .வி.மணிகண்டனும் நன்றிக்குரியவர். இந்நூல் அச்சில் வெளிவருகையில் பிழைநோக்கி உதவிய ஹரன் பிரசன்னாவுக்கும், ஜெயஸ்ரீ கோவிந்தராஜனுக்கும் நன்றிசொல்லவேண்டும். நடுவே சிலபகுதிகளை தட்டச்சு செய்து உதவிய மீனாம்பிகைக்கும், திருக்குறளரசிக்கும் நன்றி.

வெண்முரசு குறித்து இரு வாசிப்பரங்குகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறுகின்றன. சென்னையில் இதை ஒருங்கிணைக்கும் ஜா.ராஜகோபாலன், சௌந்தர்ராஜன் காளிப்பிரசாத் ஆகியோரும் பாண்டிச்சேரியில் ஒருங்கிணைக்கும் அரிகிருஷ்ணனும் என் நன்றிக்குரியவர்கள். கோவையில் வாசிப்பரங்கை சிலகாலம் நடத்திய விஜய்சூரியனுக்கும் அன்பு.இந்த ஆக்கத்திற்கு பலவகையிலும் உதவியடைனமிக்நடராஜன், சிங்கப்பூர் கணேஷ் இருவருக்கும் நன்றி.

இந்நாவலின் ஆக்கத்தில் ஏழாண்டுகள் ஒவ்வொரு நாளும் உடனிருந்தவர்கள் ஸ்ரீனிவாசனும், சுதா ஸ்ரீனிவாசனும். இதன் அத்தியாயங்களை சீரமைத்து, பிழைகள் திருத்தி, முரண்பாடுகள் இருந்தால் சுட்டிக்காட்டி இணை ஆசிரியர்களாகவே செயல்பட்டனர். சுதா ஸ்ரீனிவாசனுக்குத்தான் உண்மையில் இந்நாவல்களின் மொத்த வரிகளும் நினைவில் இருந்தன. நான் அவரிடம் ஐயங்கள் கேட்டிருக்கிறேன். நாவலில் ஓர் இடத்தில் வரும் ஒரு பெயரோ வரியோ பல ஆயிரம் பக்கங்களுக்கு அப்பால் மீண்டும் வந்தால்கூட சுட்டிக்காட்டியிருக்கிறார்.

நான் பலநாட்கள் இரவில் மிகப்பிந்தி பகுதிகளை வலையேற்றம் செய்திருக்கிறேன். அவர்கள் காத்திருப்பார்கள். நான் மறந்துவிட்டேனா என்று அழைத்து நினைவூட்டுவார்கள். ஒவ்வொரு நாளும் ஐயங்களைக் கேட்டுச் சீரமைத்தார்கள். இந்நாவல் என்னைப்போலவே அவர்கள் வாழ்க்கையிலும் ஒர் ஒளிமிக்க பகுதி. அவர்களுக்கு என் நன்றியை எளிமையாகச் சொல்லிவிடமுடியாது.

இந்நூலின் ஆக்கத்தில் திரைத்துறையின் பங்களிப்பு முதன்மையானது. என்னைப் பொறுத்தவரை கலைமகளை தொட்டுணரும் அருகமைவு இளையராஜா அவர்களுடையது. எனக்கு அவருடைய இசையேகூட இரண்டாவதாகத்தான், அவர் மெய்யறிவர். அவருடைய வாழ்த்து உடனிருந்தது. மணிரத்னம், கமல், வசந்தபாலன் என் பலர் இந்நாவல் தொடரின் ஆக்கத்தில் தொடர்ச்சியாக ஆர்வம் காட்டினர். அவர்களின் பின்பலமே என்னை பொருளியல் கவலைகளிலிருந்து விடுவித்து இதில் மூழ்க, விரும்பியவண்ணம் பயணம்செய்ய உதவியது. நான் கம்பன் எனில் சினிமாவே சடையப்பர்.

இந்நூல்வரிசை தொடங்க காரணமாக இருந்த, இதை வாசித்த சைதன்யாவுக்கு முத்தங்கள். இந்நாவலின் ஆக்கத்தின் போது உருவான கொந்தளிப்புகள், கசப்புகள் ஆகியவற்றை நான் அஜிதனுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். இதன் மையமான தத்துவச்சிக்கல்களை விவாதித்திருக்கிறேன். அவனுக்கும் என் அன்பு.

என்றுமுள்ளது அருண்மொழியின் அணுக்கம். என் நாவல்களை அவள் வாசித்து அடையும் உணர்வுகளை எப்போதும் கூர்ந்து பார்த்து வருபவன். அது காளிவிளாகத்துவீட்டு விசாலாட்சியம்மா என்ன சொல்வார்கள் என்பதற்கான சான்று. அவளுக்கு என் அணைப்பு. என்றும் இப்போதென அவள் இப்பித்தனைக் காத்தருள்க.

தொடங்கியநாள் முதல் ஒருநாள் கூட விடாமல் இதை வாசித்த பலநூறு வாசகர்களை எனக்குத்தெரியும். ஒவ்வொருவருக்கும் என் நன்றிகள்.

நித்யாவைஇந்நூலின் ஆக்கத்தில் தோன்றாத்துணையாக இருந்த ஆசிரியர்கள் அனைவரையும் பணிகிறேன்.

ஜெ

வியாசனின் பாதங்களில்

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...