https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 29 ஏப்ரல், 2023

அவள் - ஜீவன் பென்னி

 அவள்



என்னைக் குறுக்காகக் கிழிப்பது

எனக்குப் பிடித்திருக்கிறது.

சிறிய நட்சத்திரத்தைக் கத்தரித்துக் கொண்டுவரும்

என் மகளை,

சிறு மலர்களை வெட்டிக்கொண்டு வரும்

இன்னொரு மகளை,

அப்படித்தான் என்னிலிருந்து தனியே எடுத்தார்கள்.


ஜீவன் பென்னி -

வியாழன், 27 ஏப்ரல், 2023

“கீதா முகூர்த்தம்” - 11. * காலமில்லா *

 


27.04.2023

கீதா முகூர்த்தம்” -  11.


* காலமில்லா  *




ஆழ்மனப் புரிதலில் இருந்து அடுத்த கட்டம் அதை நோக்கிய புறவயமான பயணம் அதன் மீது கொண்ட அழுத்தமான நம்பிக்கையில் விளைவது . தாத்தாவின் பக்தி மிக எளிய பூஜை என்பதே காலையில் நெற்றிக்கு இடும் திருமண்னுடன் துவங்கி அங்கேயே முடிந்து விடுகிறது . அன்று வீட்டில் பூஜை அறை என ஒன்று தனியாக இல்லை கூடத்தில் கிழக்கு நோக்கி சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் தெய்வங்களின் படங்கள் அதற்கு நடுவில் சிறிய விளக்குமாடம் அதில் காமாட்சியம்மன் விளக்கு. அது இரு பக்க யானைகளுடன் கூடிய மஹாலட்சுமி புடைப்பு சிற்பம் கவண்டது . அன்றுஅதை ஏன் காமாட்சியம்மன்”? என சொல்லுகிறார்கள் என யோசிப்பதுண்டு. அம்மா அல்லது அக்கா யராவது தீபம் ஏற்றுவார்கள். அதற்கு முன்பாக மீராபாய் அல்லது லக்ஷ்மிபாய் அக்கா தாத்தாவிற்கு திருமண் இட்டு விடுவார்கள். கண் அறுவைசிகிழ்ச்சைக்கு பிறகு அவர் தனது கண்பார்வை இழந்திருந்தார். திருமண் இட்டு முடித்தபின் அக்காவிடம் கண்ணாடியை காட்ட சொல்வார் அது ஒரு சடங்கு என நான் நினைத்துக் கொள்வேன். மீராபாயிடம் நான்கண் தெரியாதவர் எதற்கு தன்னை கண்ணாடியில் பார்க்க முயல்கிறார்என கேட்டதுண்டு . “அந்த கிழத்திற்கு நன்றாக கண் தெரியும் நம்மை சும்மா ஏமாற்றுகிறதுஎன்பாள். விசேஷ தினங்களில் சுடராட்டு செய்கிற போது சில படங்களுக்கு எதிரில் நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதும் கண்கள் பொங்கி மனம் விம்முவதை பார்த்திருக்கிறேன். பார்வையால் அல்லது மனத்தால் எதனருகிலோ மிக நெருக்கமாகி விடுவதாக தோன்றுவதுண்டு. ஒரு வேளை மீராபாய் சொல்லுவது போல நல்ல வெளிச்சத்தில் அவரால் அந்த காட்சிகளை பார்க்க முடிந்திருக்கலாம் .

 

புதுவை காந்தி வீதியின் வராதராஜப்பெருமாள் கோவிலில் தனது இஷ்ட தெய்வமான பாண்டுரங்கனுக்கு தனி சன்னதி எழுப்பியதுடன் அங்கு அவர் தனது ஆழமான புரிதலை எப்படிப்பட்டது என அனைவருக்குமாக அங்கு பதித்தார் என நினைக்கிறேன். மூலவருக்கு எதிரில் சிறு பலிபீடம் நிறுவி அங்கு தன்னை அதன் காலடியின் கீழ் விழுந்து வணங்குபராக ஓர் புடைப்பு சிற்பம் வடித்து பதித்து வைத்து அவர் காலம் கடந்து அங்கு இருந்து கொண்டிருப்பவராக தன்னை வைத்துக் கொண்டார்  . அந்த தனி சன்னதி திருவுரு முன்பாக காலமல்லாத ஒரு காலத்தில் இருந்து கொண்டிருக்கிறார்.


புதுவையில் அன்றிருந்து பெரும் செல்வந்தர்கள் மத்தியில் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்து செய்து வந்த கோவில் கைய்கர்யம் அவரது ஆழ்மனத்தை நோக்கிய பயணம் என்பதைத் தவிர வேறு காரணங்கள்  இருக்க முடியாது என நினைக்கிறேன். வரதராஜப் பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம், வேதபுரீஸ்வரர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம் . பாண்டுரங்கனுக்கு ஒவ்வொரு மாத ரோகிணி நட்சத்திரத்தன்று திருமஞ்சனம் என நித்திய, மாத வருடாந்திர பூஜை உற்சவத்தை ஏற்படுத்தி வைத்தபின் அவர் மிக உச்ச நிகழ்வாக செய்தது  மணற்குள விநாயகர் உற்சவ மூர்த்தி . பின் அதற்கு  மாசி மக கடற்தீர்த்தவாரி உற்சவத்தை ஏற்படுத்தினார் . மணற்குள விநாயகர் உற்சவ மூர்த்தி கடற்கரைக்கு சென்று வீதியுலாவாக கோவிலுக்குள் செல்லும் முன்பு தன் பக்தன் இருக்கும் வெள்ளாழர் வீதி உள்ள அவரது வீட்டிற்கு எழுந்தருள்வதுடன் அந்த உற்சவம் முடிவிற்கு வருகிறது


அன்று வெள்ளாழர் வீதியில் இருக்கும் அவரது அனைத்து மகன்களின் வீட்டிற்கும் அது செல்லும். ஒவ்வொரு வீட்டின் முன்பாக நின்று தாத்தா அந்த வீட்டிற்கு தரும்  மரியாதையை ஏற்றபின் அந்த குடும்பத்து மூத்த உறுப்பினர் கோவில் மரியாதையை எற்றுக் கொள்வார். மணற்குள விநாயகர் மனம் கனிந்து அந்த வீட்டிற்கு வரும் சடங்காக வில்வக்களை என்கிற பத்து சுடராட்டு நிகழ்த்தப்பட்டு அது அந்த வீட்டின் பூஜை அறைக்கு கொண்டு செல்லப்படுவதுடன் அவரது குடும்ப நிகழ்வு முடிவிற்கு வரும். இது அணைத்து  குடும்பத்திலும் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்து கொண்டிருந்தது.


வெள்ளாழர் வீதி , காந்தி வீதி சந்திப்பில் உள்ள கங்கை விநாயகருக்கு உற்சவமூர்த்தி செய்து வைத்தது போன்றவை புரிந்து கொள்ள முடிகிறது . ஆனால் திகைப்பூட்டுவது வடலூர் வள்ளலார் மடத்தில் நடக்கும் தைபூசத்திற்கு ஒரு மூட்டை அரிசி அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்தார். இன்னதென உறுதிப்பாடில்லாது அனைத்தையும் பிடித்து தனது மறுமை வாழ்கைக்கு தன்னை காக்கும் தெய்வத்தை பற்றிய மன ஊசலில் இருந்தாரா ? என்றால் இல்லை. ஆரம்பம் முதல் தனது இறுதி கணம்வரை தன்னை தீவிர வைணவராக இருத்திக் கொண்டார். அவரது புஷ்டிமார்க பயணம் பாண்டுரங்கனை இலக்காக கொண்டிருக்க வேண்டும் . ஆனால் அனைத்து சம்பிரதாயங்களை ஏற்கும் மனவிரிவு கொண்டவராக அவரை அறிந்து கொள்கிறேன். நான் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் தாத்தாவிற்கு அறிமுகமான அந்த கோவில் பட்டாசார்யார் என்னை பார்த்தவுடன் சொல்லுவது புயல் மழை என எதையும் பொருட்படுத்தாது கோவிலுக்கு வந்து ஒவ்வொரு சன்னதி விளக்கிலும் எண்ணை வார்ப்பதை விடாமல் செய்து வந்ததை நினைவு கூறுவார்


வாழ்வின் இறுதி கணத்தை மிக தெளிவாக தெரிவு செய்து வைத்ததுடன் அந்த நாளுக்காக கசப்பில்லாத  வாழ்கையை வைத்து அந்த இறுதியை நோக்கிய பயணத்தில் வைத்திருந்தார்  . தான் எரியூட்டப்படும் அந்த நிகழ்விற்கு இரண்டு பெருட்களை அவர் வாழ்நாட்கள முழுவதும் சேர்த்தார் . ஒன்று தனது சிதைக்கு வைக்கும் சந்தனக்கட்டை மற்றொன்றுபாகவத பாததூளிஎனப்படும் பக்தர்களின் காலடி மண். இதை அவர் தான் செல்லும் ஒவ்வொரு கோவிலின் நுழைவுவாயின் மூலையில் சேர்ந்திருக்கும் மண் மற்றும் புழுதியை சிறிது எடுத்து வந்து ஒரு வெள்ளி கூஜாவில் போட்டு வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் . அவர் எரியூட்டப்படும் முன்னர் அவர் மீது அவரது மகன்களால் தூவப்பட்டது  வாழ்நாளெல்லாம் அவர் காப்பாற்றிய விழுமியங்கள் அவரை காத்திருக்க வேண்டும்.


பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லும் சொத்துக்களை தான் இருந்த காலத்தில் தெளிவாக பகுத்து வைத்தார். ஆவணம் எழுதும் கணத்தில் பாட்டி ஆதிலக்ஷ்மி அம்மாள் தனக்கென ஒன்றுமிலையா? என கேட்டபோது அதிர்ந்த தாத்தா தோப்பு  மற்றும் அது சார்ந்த பாசனக்குளம் இரண்டையும் பாட்டிப் பேருக்கு மாற்றி எழுதி அவரது காலத்திற்கு பின்னர் தங்களது பிள்ளைவழி ஆண்வாரிசுக்களுக்கு என எழுதி வைத்தார் . பாட்டி தாத்தாவிற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாக மண்மறைந்தார் . அதில் வினோதம் அந்த  சொத்து காரணமாக  குடும்பத்தார் இரு பிறவாக பிளந்து  நிழ்ந்த சச்சரவு தாத்தாவின் குடும்ப விழுமியத்திற்கு எதிராக சென்றது . இந்தப் பதிவு அந்த சச்சரவு பற்றி சொல்லவந்ததல்ல. குடை கோவிந்தசாமி என்கிற மனிதரின் அக மற்றும் புறவய தேடல் பயணம் கோட்பாடுகளை தனது செயல்பாடுகள் வழியாக அவர் வாழ்வியலில் கண்டடைந்தது என்ன என்பது பற்றியது.அவர் மண் மறைந்தாலும் அவரது விழுமியங்கள் அவரை இன்றளவும் காக்கின்றன என்கிற புரிதல் எனக்கு திகைப்பைக் கொடுத்தது



திங்கள், 24 ஏப்ரல், 2023

படுகை. - ஆனந்த -

 படுகை






பறக்கும் பறவையில்

பறக்காமல் இருப்பது

எது


ஓடும் ரயிலில்

ஓடாது நிற்கிறது

ஜன்னல்


எங்கும் போகாமல்

எங்கும் போய்க் கொண்டிருக்கிறது

சாலை


எப்போதும் போய்க் கொண்டே

எங்கேயும் போகாமல் இருக்கும்

நதி


எங்கும் போகாமல் இருக்கும்

படுகையின்மேல்

எப்போதும் போய்க் கொண்டிருக்கிறது


- ஆனந்த் -

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

 அன்பிற்கினிய ஜெ,

வணக்கம், நலம், நலம்சூழ வேண்டுகிறேன் உங்களுக்கு எங்கள் குடும்பத்தார் அனைவரின் உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்நாளில் உங்கள் ஆசியை வேண்டுகிறேன்.

புதுவை வெண்முரசு கூடுகை கடந்த ஒரு ஆண்டு முழுவதும் ஜெ 60 சிறப்பு ஆண்டாக கொண்டாடியது. ஆண்டு முழுமையடையும் அந்த நாளில் என் தங்கை கலைவாணி@செல்வி அழகானந்தம் ஆகியோரின் மகளுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. (21.04.2023 – 23.04.2023) மூன்று நாள் நிகழ்வாக ஒருங்கி இருக்கிறது ஒரு நல்லூழ். அதில் 22.04.2023 அன்று மாலை 6:00 மணிக்கு ஒரு சிறு கலாச்சார விழவாக உங்கள் பிறந்த நாள் கொண்டாட்டம்  திட்டமிடப்பட்டுள்ளது. நண்பர் கடலூர் சீனு உங்களின் “ குமரித்துறைவி” நூலை அறிமுக படுத்தியும், நவீன இலக்கியம் குறித்தும் சிறு உரை நிகழ்த்த இருகிறார். அதைத் தொடர்ந்து “குமரித்துறைவி” நூல் அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவதுடன் அந்நிகழ்வு நிறைவடைகிறது.




இதில் மகிழ்வென நான் உணர்வது “குமரித்துறைவி” நாவல் துவக்கமான “சித்திரை வளர்பிறை நான்காம் நாள் இன்று” எனத் தொடங்குகிறது. புத்தகம் மூன்றாம் நாள் மற்றும் நான்காம் நாள் அனைவருக்கும் அன்பளிப்பாக அளிக்கப்பட இருக்கிறது.

குமரித்துறைவி படித்த வேகத்தில் ஓராண்டிற்கு முன்பு கோர்வை இல்லாத உணர்சிகரமான கடிதம் எழுதியிருந்ததை இப்போது நினைவுறுகிறேன். இரண்டு முறை வாசித்த பிறகும் அந்த உணர்ச்சிநிலை அப்படியே நீடிக்கிறது. அது ஏன் என கேட்டுக் கொண்டதுண்டு. இரு காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒன்று உதயன் செண்பகராமனுடன் என்னை மிக இணக்கமாக உருவகித்துக் கொண்டது. நான் அதுபோல முன்னெடுத்த அத்தனை இயக்கத்திலும் (அரசியல், ஆன்மீகம், இலக்கியம்) அது போல ஒன்றை தொடர்ந்து செய்து சிலரின் கடும் வெறுப்பினால் அலைக்கழிக்கப்பட்டாலும் அந்த செயல்பாடுகள் வழியாக இறுதியில் நான் கண்டடைந்தது என்னை. பாதுகாக்கப்பட்டதாக தனது அரண்மனையில் சென்றமர்வதுடன் அந்த நாவல் முடிவிடைகிறது. இத்தனை செயல்களின் முரணியகத்தின் பின்னும  அவனுக்கு அது தேவைப்படவில்லை என்பது எனது உணர்வெழுச்சியை உருவாக்கியது.

இரண்டு நான் அந்த மாபெரும் அமைப்புகளை உருவாக்கி அதன் வெற்றியை உணர்ந்து தருக்கி நின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அடைந்த “கர்வபங்கம்”. அது கண்ணீரல்லாமல் படிக்க என்னை முடியமலாக்கியது.

அந்த நாவல் படித்த பிறகு எதாவது செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன் இதைவிட சிறப்பான தருணம் மறுமுறை வாய்க்காது. நன்றி. என் ஆசிரியரென விழவிற்கு உங்கள் ஆசியை வேண்டுகிறேன். சரியான நேரத்தில் புத்தகங்களை அனுப்பி உதவிய மீணாம்பிகைக்கும் எனது நன்றிகள்.

நன்றி
ஆழ்ந்த நட்புடன்

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

சனி, 22 ஏப்ரல், 2023

குமரித்துறைவி நூல் வெளியீட்டு விழா

 


சிலசமயங்களில் கல்பற்றா நாராயணன்

 



சிலசமயங்களில்



சிலசமயங்களில்

நீர் மேல் நடக்க முடியாதவர் யார்?

சிலசமயங்களில்

ஐந்து அப்பத்தால்

ஐந்தாயிரம்பேருக்கு விருந்திட

 முடியாதவர் யார்?

சிலசமயங்களில்

செத்தவனை வாழ்க்கைக்குக்

கொண்டுவரமுடியாதவர்கள்

உண்டா என்ன?

சிலசமயங்களில்

வெறும் நீர் மதுவாகும்

தருணம் அமையாதவர் எவர்?


எந்த புனிதர்

சிலசமயங்களிலேனும்

வலிதாளாமல் கடவுளை

 அழைத்து

கதறாமலிருந்திருக்கிறார்?


- கல்பற்றா நாராயணன் -



வியாழன், 20 ஏப்ரல், 2023

முரண்டு. கல்பற்றா நாராயணன்

 

முரண்டு

இறந்தவர்கள்
பிடிவாதக்காரர்கள்.
கங்கைநீர் வாயில் விட்டாலும்
விழுங்க மாட்டார்கள்.
நாம்
சுவரில் தலைமுட்டி உடைத்துக் கொண்டாலும்
அவர்கள் பொருட்படுத்துவதில்லை.
அவர்களின் மடக்கிய விரல்களை
உடைக்காமல் பிரிக்க முடியாது நம்மால்.
மண்ணால் விழுங்கப்படுகையில்
தீ எரிந்து ஏறுகையில்
சற்று முகம் சுளிப்பதுகூட இல்லை.
அவர்கள் செய்யமாட்டோம் என்று முடிவெடுத்தால்
முடிவெடுத்ததுதான்.

- கல்பற்றா நாராயணன்-




திங்கள், 10 ஏப்ரல், 2023

“கீதா முகூர்த்தம்” - 10. * அகவாழ்வு *

 



10.04.2023

கீதா முகூர்த்தம்” -  10.


* அகவாழ்வு *





பொருளியலில் வெற்றிபெறும் கட்டாயம் ஒருவரை சிறந்த தொழில்முனைவோராக உருவாக்குகிறது ஆனால் அதே காலகட்டத்தில் தனதுமறுமைபற்றிய சிந்தனையை அந்த சமயத்தில் அந்த வயதில் இருந்து என்பது மிக ஆச்சர்யமானது என நினைக்கிறேன். இன்றளவும் இருத்தலியல் சிந்தனைக்கு நேர் எதிரானது மறுமை பற்றி எண்ணம் . இரண்டும் ஒரே சமயத்தில் எழுவதில்லை. நிகழ்ந்தாலும் அதன் காலகட்டங்கள் வெவ்வேறானவை. தனது செயல்பாடுகள் வழியாக அவர் மெல்ல மெல்ல ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு எடைமாற்றி வைத்து இடை நிற்காத பயணம் ஒன்றில் இருந்தார்அதன் வழியாக அடையும் புரிதலும், அந்தப்புரிதல் கெட்டிப்படும் சூழலில் அங்கிருந்து பிறதொரு செயல்பாடுகள் வழியாக அதையும் கடந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளும்போது அதுவே அவர் எனக்கு என் தந்தை வழியாக அளித்த மாபெரும் கொடையாக பார்க்கிறேன் . தாத்தாவின் பிற இரண்டு பிள்ளைகளும் அப்பாவிற்கு மூத்தவர்கள். அவர்களில் அப்பா மட்டுமே இலக்கிய வாசிப்பின் வழியாக வாழ்வியலில் அலைகழிக்கப்பட்டு மெல்ல தனக்கான இடத்தை அடைந்து நிறைவுற்றார். ஆனால் தாத்தா அவர் பக்தியில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறார் என மீது மிகுந்த அதிருப்தி கொண்டிருந்தார். அப்பாவின் இறுதி பதினைந்து ஆண்டுகள் அவரை மேலும் ரசனையுள்ளவராக மாற்றிக் கொண்டே இருந்தது. இறுதி கணம் வரை ஒரு பத்து வயது முதிரா சிறுவனின் கண்களால் இந்த உலகை கண்டு ரசித்தபடி மண்மறைந்தார்


ஆரம்ப காலத்தில் அப்பா எனக்கு மிக சிக்கலானவர் . பளபளக்கும் கெட்டி அட்டை போட்ட ரஷ்ய நாவல்களில் திளைத்தவராக வீட்டிற்கு அப்பால் எங்கோ இருந்தார் இது அவரை பற்றிய எனது முதல் புரிதல். இலக்கிய வாசிப்பு அவரை மிக நேர்த்தியாக வடிவமைத்திருந்தது. ஜெயகாந்தன், இந்திராபார்த்தசாரதி கி.ரா , தீபம் பார்த்தசாரதி, பிரபஞ்சன் என்கிற இலக்கிய ஆளுமைகளுடன் அவருக்கு இருந்த நெருக்கம். தகழி சிவசங்கரனின்கயிறுநாவல் பற்றி நண்பர்களுடன் பேசி கேட்டிருக்கிறேன். அப்பா வைத்திருந்த புத்தக அடுக்குகளில் நான் படித்த முதல் மிக சிறிய புத்தகம் முகமது பஷீரின்எங்கள் தாத்தாவிற்கு ஒரு யானை இருந்தது”. அந்த சிறுகதையை என்னுடைய எட்டு ஒன்பது வயதில் படித்தேன். மஞ்சளடைந்து அப்பளம் போன்ற பேப்பர் கொண்ட மெல்லிய கையடக்க புத்தகம் . அதை யாருக்கும் தெரியாமல் பள்ளிக்கூடத்திற்கு எடுத்து சென்று படிக்க முயற்சித்த நினைவு . அப்பாவின் பல புத்தகங்களை படிக்க முயற்று முடியாமலான பிறகும் நான் ஏறக்குறைய முடித்த ஒரே புத்தகம் அது





தாத்தா உருவாக்கி வைத்த மொத்த சாமராஜ்ஜியமும் நான்கின் அடைப்படை கொண்டது . வெற்றிகரமான வியாபாரம் , ஆன்மீகம்,தருமம், கோவில் கைய்ங்கர்யம் என மிகத் தெளிவாக அவை வரையறை செய்யப்பட்டிருந்தது . அவற்றை வெறும் கருத்தியலாக  எடுத்துக்கொள்ளாமல் ஒவ்வொன்றிலும் அதன் செயல்பாட்டிற்குள் சென்றார். அன்றாடங்களில் உழலும் சராசரிகளை தவிர்தது தனக்கான பாதையை கண்டடைந்தார். இன்றளவும் அவர் பல எளிய மக்களும் நினைகூறப்படுவது என்பது இங்கிருந்து துவங்கியிருக்கலாம்.


வியாபார நிமித்தமாக மும்பை செல்லும் வழியில் அவர் தற்செயலாக கண்டது ,அல்லது நீண்ட நாள் கனாவக இருந்த பண்டரிபுரம் சென்று பாண்டுரங்கங்கனை சேவித்தது . முழுமையான திறப்பு அவருக்கு அங்கே நிகழ்ந்திருக்க வேண்டும் . மூத்த பிள்ளைக்கு பாண்டுரங்கன் எனப் பெயர் போட்டிருந்தது அன்று நிலவிய வட மற்றும் தென்னாற்காடு மாவட்டங்களில்  பெருகி இருந்த புஷ்டி மார்க்க பக்தி வழிபாடு அவருக்கு ஆன்மீகம் பற்றிய புரிதலை ஆரம்பம் முதலே கொடுத்திருக்க வேண்டும். அவரது பக்தி ஆசாரத்தை மையப்படுத்தியதல்ல. அசைவத்தில் மீன் மிக இஷ்டமான உணவு. தனது இறுதி காலம் வரை நிறைந்து வாழ்ந்தார் மதிய உணவுடன் எந்த காயையாவது மயக்கி வெல்லம் இட்ட பச்சடி வேண்டும் . அம்மா தினம் என்னத்த செய்ய என அலுப்புடன் வேக வைத்த கருணைகிழங்கு கூட பச்சடியாக வைத்ததுண்டு அதை அமர்ந்து கண்களை மூடியபடி ரசித்து உண்பதை பார்த்திருக்கிறேன் அதற்கு பாட்டி ஆதிலக்ஷ்மி அம்மாளிடம்அதான் கண் தெரியலையே எதுக்கு கண்ணை முடி சாப்பிடனும்என கண்டனத்தை வாங்கியதுண்டு


காலை உணவு மூன்று இட்லி ஒரு கப் சர்க்கரை இட்ட கெட்டித் தயிர். இரண்டு இட்லிகளை அன்றைய தொடுகையுடன் பின்னர் ஒரு இட்லி அந்த தயிரில் ஊறவைத்து . நாங்கள் யாராவது அருகில் சென்றால் அதிலிருந்து ஒரு விண்டு எடுத்து கை நீட்டுவார் நாங்கள் குமட்டி அளறிக் கொண்டு விலகி ஓடுவோம். அது என்ன ரசனை என நான் நினைத்ததுண்டு . மிக சமீபத்தில் பண்டரிபுரம் சென்ற போது சர்க்கரை இட்ட தயிர் ஒரு ஹோட்டல் மெணு . தாத்தவிற்கு அந்த உணவு பழக்கம் இங்கிருந்து துவங்கியிருக்க வேண்டும். அவர் தனது மனத்தால் எப்போதும் பண்டரிபுரத்தில் இருந்தார் , அதிலிருந்து வெளிநே வரவில்லை. காக்கித் துணி வைத்து தைத்த கெட்டி அட்டையிட்ட முகப்பில் மஞ்சளும் குங்கும்மும் பூசப்பட்ட அழுக்கானபக்த விஜயம்புத்தகம் அவரு அருகில் எப்போதும் இருந்தது. அது பாண்டுரங்கனை எல்லாமாக கொண்ட பக்தர்களின் சரித்திரம். பல பெயர்களை நான் அங்கிருந்து அறிந்திருக்கிறேன். நாமதேவர், துக்காரம், மீராபாய், சந்திரபாஹ போன்று . மீராபாய் அக்கா அவருக்கு தினம் அந்த புத்தகத்தில் இருந்து மீள மீள அந்தக் கதைகள் அவருக்காக வாசிப்பதை பார்த்திருக்கிறேன். அந்த மொத்த புத்தகமும் பல நூறு முறை வாசிக்கப்பட்டது. அக்கா மீராபாய் மெல்லிய குரலில் அதை தினமும் படிக்க பிரம்பால் பிண்ணப்பட்ட மர ஈசிசேரில் படுத்து கொண்டு கைகளை தலைக்கு மேல் குவித்த கண்ணீர் மல்கி மணிக் கணக்கில் கேட்டுக் கொண்டிருக்கும் காட்சியை பார்க்காமல் யாரும் அந்த நடை வழியாகத் தெருவிற்கு செல்ல முடியாது. அன்றைய வாசிப்பு முடிந்ததும் தாத்தா அந்த புத்தகத்தை வாங்கி தலைசூடி கண்களில் ஒற்றி மார்பில் வைத்துக் கொண்டு , இடுப்பில் இருந்து நாலணா கொடுப்பார். நான் மீராயிடம் கேட்பதுண்டுஏன் படித்து முடித்தவுடன் உனக்கு காசு கொடுக்கிறார்என்றதற்கும்ம்…. அது படிக்கிற புண்ணியம் எனக்கு வரக்கூடாது எல்லாம் அவருக்கு மட்டும்என அங்கலாய்த்து பார்த்திருக்கிறேன். ஆனால் அது அப்படி இல்லை என இன்று புரிகிறது அவர் யாரிடமிருந்தும் இலவசமாக எதுவும் பெற்றுக் கொள்ளவதில்லை.


பண்டரிபுரப் பயணம் அவரது பகத்தியில் புதிய பரிமாணத்தை கூட்டியது. அங்கிருந்து அவர் பெற்றுக் கொண்ட பண்டரிபுரத்து பாணி பஜனை சம்பிரதாயம் அவரை ஒருவித பித்து நிலைக்கு கொண்டு சென்றிருந்தது. ஒவ்வொரு வருட ஆஷாட ஏகாதசி அன்று பண்டரிபுர பஜனை இரண்டு நாள் வீட்டில் நடிக்கப்படும். அது ஒரு வித நிகழ்த்துக் கலை. ஆனந்தம், கருணை, விரகம்,பித்து, வெறி, விளையாட்டு என அத்தனை ரசத்தையும் அவர்கள் அனுபவத்தார்கள்.


நான்….அது அந்தக் காலம்…………என கடந்த கால நிகழ்வை அசைபோடவில்லை . இதோ இன்று இந்த பதிவை எழுதுகையில் அந்த காலத்தில் இருந்து கொண்டிருக்கிறேன்.  


வீட்டிற்கு வெளியே ரோட்டில், கோவிலில் இருந்து வந்திருந்த இரண்டு வெண்கொற்றக் குடையின் கீழ் தாத்தா பாட்டி நாமதேவர் வேஷமிட்டு தம்புராவுடன் தாத்தா ஆட பக்கத்தில் வெட்கி கூசி நின்ற பாட்டி சுற்றி நூற்றுக் கணக்கானவர்கள் வானத்திற்கு பூமிக்குமாக குதிக்கும் அந்த காட்சி நினைவில் எழுகிறது. அது புகை படமாக அப்பா எடுத்து அதன் பின் எங்கோ அதை பார்த்திருக்கிறேன். அது தான் பாட்டி கலந்து கொண்ட கடைசி பஜன். அந்த வெற்றிடத்தை அதற்கு அடுத்த வருடம் உணர்ந்தது நினைவிருக்கிறது.


புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...