ஶ்ரீ:
பதிவு : 672 / 861 / தேதி 09 ஏப்ரல் 2023
* விபரீதம் அறியாத விளையாட்டு *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 70.
இரவு ஒரு மணிக்கும் மேலாகி இருந்தது. கடற்கரை ஆளரவம் இல்லாமல் அமைதியை உணர்ந்த நொடி பெரும் சப்சத்துடன் அலை மடிந்து விழும் ஒசை திடுக்கிடச் செய்தது. அலை அதன் தொடர்ச்சியாக விழுந்து சென்று கொண்டே இருக்கும் ஓசை. கரையோரத்திற்கு அருகே எங்கோ புது மீன் “படுகிறது” போல. உப்பு வீச்சத்துடன் மீனின் நாற்றம் தாங்க முடியாததாக இருந்தது. கடற்கரை மாலை நடை செல்பவர்களுக்கு வசதியாக போடப்படும் வாகன தடுப்பு கட்டைகளை நீக்கி இருந்தார்கள். மாலை ஆறு மணிக்கு போடப்படுவதை பார்த்திருக்கிறேன் தடுப்புகள் இல்லாததால் பாதை அகலமாக தெரிந்தன.
கடலை பார்த்த படி இருந்த தலைவர் வீடு வழக்கம் போல எந்த தோரணையும் இல்லை. போர்டிக்கோவில் மிக மங்கலான குண்டு பல்ப் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. தலைவரின் வரவேற்பரையின் விளக்கு எரிவதால் உயரமான பல வண்ண “கொலாஷ்” கண்ணாடிகளை கொண்ட உயரமான ஜன்னல்களில் அதன் உறுத்தாத ஒளி ஊடுருவி பரந்திருந்தது. தலைவர் அமர்ந்திருப்பதை ஊகிக்க முடிந்தது என்றாலும் உடன் யாரோ இருப்பதாக தெரிந்தது. வீட்டின் கதவு தாழிப்படாமல் சிறிது திறந்திருந்தது. மெல்ல அதை முழுமையாக திறந்து கொண்டு வீட்டின் நடையை ஒட்டி இடப்புறம் உள்ள அவரின் வரவேற்பரைக்குள் நுழைந்தேன்.
தலைவரின் பீச் வீடு. அது வீட்டிற்கான எந்த லட்சனமும் இல்லாதது. அலுவலக சாயல் கொண்ட மிக விசித்திரமான பிரென்ச் பாணி கட்டமைப்பு. மிக உயரமான மேற் கூரையும் “தெராய் கிராதியும்” உள்ள மிகப் பெரிய அறைகளை கொண்டது. வீட்டின் பின் பகுதி முற்றாக கைவிடப்பட்ட முறையில் ஒழுங்கின்றி் இருந்தது மாடிக்கு செல்ல எந்த இடைத் திருப்பமும் இல்லதா நெட்டாக ஏறும் படிக்கு சிமின்ட் சிலாபிலான கைபிடியும் மேற் கூறை இல்லாமல் இருந்தது . அதை வீட்டின் முன்னாள் உரிமையாளராக இருந்த புதுவை மிகப் பெரிய செல்வந்தரான செல்வராஜ் செட்டியாரின் வேலையாள் பயன்படுத்தி இருக்க வேண்டும். வீட்டிற்கு உள்ளேயே கூட மாடிக்கு செல்ல முறையான படிகள் இருக்கலாம். நான் பார்த்ததில்லை. அந்த வீட்டின் பெரும்பாலான பகுதிகள் உபயோகத்தில் இல்லாதவை என்பதால் அமானுஷ்ய உணர்வை எழுப்புபவை. அந்த கட்டத்திற்கு நிழலான பல கதைகள் பேசப்படுகின்றன. சில உண்மையாக இருக்கும் வாய்ப்புள்ளது.
தலைவரின் வரவேற்பரை முப்பதுக்கு இருபது அடிகள் என மிகப் பெரியவை. அதில் தெற்கு பகுதி சிறிய மடக்கு மரத்தடுப்பிட்டு பின்னால் ஒருவர் உறங்குமளவிற்கான சிறிய கட்டில். மேற்கு மூலையில் ஒரு சிறிய அறை அதை ஒட்டிய நவீன பாணி குளியலறை. நிச்சயம் ஐம்பது வருட பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டும். உபயோபடுத்தப்பட்ட கட்டுமான அலங்காரப் பொருள்கள் வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்டது.
தலைவர் தனது வழமையாக இடத்தில் அமர்ந்திருந்தார். அருகில் சூரியநாராயணன். நான் ஊக்கத்தது சரி. ஏதோ திட்டம் முடிவாகி இருக்க வேண்டும். பரஸ்பர மரியாதைகளுக்கு பின்னர். தலைவர் கேட்கும் முன்னர் நான் திரும்பவும் தொலைபேசியில் சொன்ன தகவல்களை முழுமையாக சொன்னேன். நமச்சிவாயம் வந்தது ஆலோசனையில் பேசப்பட்ட விஷயங்கள் பின்னர் நமச்சிவாயம் மேலதிகமாக சொல்ல நினைத்தது பற்றிய எனது ஊகம் ஆகியவற்றை சொல்லி முடித்தேன். இடையில் ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாக கேட்டு இறுதியில். என்னிடம் அவரின் கட்சி அலுவலக கவர் ஒன்றை கொடுத்தார். நான் புரியாது என்ன என்று சூரியநாராயணனை பார்க்க, அவர் அந்த கவரை திறந்து பார்க்க சொன்னார். அதில் தாமாக வின் தலைவர் கண்ணனுக்கு அன்றைய தேதி இடப்பட்ட கடிதம் இருந்தது . இன்னும் ஒரு வாரத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிகழ இருக்கும் ஆலோசனை கூட்டத்திற்கான அதிகாரப்பூர்வமான அழைப்பு இருந்தது. இது நான் எதிர்பார்க்காத நகர்வு. மெல்ல புன்னகை மனம் முடிவு செய்த போது அதை தவிர்த்தேன்.
நமச்சிவாயம் மூலமாக கண்ணன் அனுப்பிய சமிஞையை தலைவர் மிக விரைவில் எடுத்துக் கொண்டார். வாழ்வில் முதல் முறையாக அரசியல் நிகழும் மையகளத்தில் நானும் வந்து நின்று கொண்டிருக்கிறேன். மேலதிகமாக இது என் களமாக நான் மாற்றினேன். ஆனால் தலைவர் கொடுத்த அழைப்பிதழ் மூலம் களத்தை தன்னை நோக்கி இழுப்பது சிறிது வருத்தமாக இருந்தாலும். முறைபடி அழைப்பிதழ் கொடுக்க வேண்டிய பல மூத்த தலைவர்கள் கட்சி நிர்வாகத்தில் இருக்க அதை இந்த பின்னிரவு என்னை அழைத்து கொடுக்கச் சொல்வது அதை இன்னும் எனது களத்திலேயே விட்டு வைக்க முடிவு செய்திருக்கிறார். ஒரு கோணத்தில் எனக்கு சாதகமானது. இதை நான் என் உச்ச அரசியல் அங்கீகாரத்திற்கு மற்றும் கட்சியில் எனது இடமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவர் அப்படி நினைகிறாரா என எனக்குத் தெரியாது. ஆனால் அதை நான் எனது நகர்வாக செய்ய வேண்டும் என கணக்கிட்டுக் கொண்டேன். தலைவர் மேலும் பேச காத்திருந்தேன்.
தலவர் பேசும் போது “இது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ அழைப்பு மிக சரியாக இதை செய்ய வேண்டும் நமக்கென இருக்கும் கௌரவம் குறைவு படக் கூடாது” எப்படி செய்ய வேண்டும் என வகுப்பெடுக்கும் முன்பாக நான் அவரிடம். “தலைவரே நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றேன். அதிலிருந்த எண்ணம் அவரை மேலதிகமாக பேசுவதை தடுத்திருக்க வேண்டும். அங்கே நின்று கொண்டிருக்காமல் கிளம்பினேன். வழி முழுவதும் இதை எப்படி செய்வது என யோசித்துக் கொண்டே இருந்தேன். முன்னிரவே அவருக்கு உறுதியான தகவல் கிடைத்திருக்க வேண்டும். அழைப்பு அப்போது தோன்றிய ஒன்றாக இருக்கலாம். மூப்பனாரிடம் பேசாமல் தலைவர் இதை முடிவு செய்திருக்க முடியாது. சட்டென அப்படி இல்லை என தோன்றியது. இது பல காலம் ஒடிக் கொண்டிருந்த பேச்சு வார்தையாக இருக்கலாம் எங்கு எப்படி என்பதை காலத்தின் போக்கில் விடுவது அவரது பாணி. நான் இதில் உள்நுழைந்தது அவரது கணக்கில் இல்லை. இந்த கடிதம் கொண்டு கொடுப்பது நானாக இருக்க வேண்டும் என்பது இந்த இரவு முடிவு செய்யப்பட்டதாக இருக்கலாம். இது சூரியநாராயணனின் ஆலோசனையாக இருக்கும்.
இரவு இரண்டு மணிக்கு மேலாகியும் மூளையும் மனமும் முழு வேகத்தில் இருந்தது. உச்சத்தை அடையும் போது பின்னங்கழுத்து தசை இறுகினால் இரவு முழுவதும் தூங்க வாய்ப்பில்லை. தூக்கம் என்பது ஒரு அலைப் போல வந்து அதுவாகவே தழுவிக் கொள்வது அதற்கு ஒப்புக் கொடுத்தல் போதுமானது. பின் எப்போது தூங்கினேன் என நினைவில்லை காலை எட்டு மணிக்கு எழுந்த போது மனம் சலனமற்று இருந்தது. குறைந்த நேர தூக்கம் ஆனால் முழுமையானதாக இருந்திருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக