https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 19 ஏப்ரல், 2023

அடையாளமாதல் * கருணையற்ற புதிர் *

 



ஶ்ரீ:



பதிவு : 674  / 863 / தேதி 19 ஏப்ரல்  2023



* கருணையற்ற புதிர் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 72.







அரசியலில் முற்றதிகாரம் ஒரு புள்ளிக்கு அப்பால் எதிர்மறை அடையாளத்தை தான் கொடுக்கிறது . காரணம் அதிகார செயல்பாடுகள் என்பது அது விரிக்கும் கோட்டிற்கு உள்ளும் புறமுமாக நின்று விளையாடுவது. விளையாட்டின் விசையால், தன் செல்வாக்கால் ஒருவர் அடித்து செல்லப்படும் போது அந்த கோடு இல்லாமலாகிறது. அல்லது கவனம் கொள்ள ஊழ் விடுவதில்லை. அதே சமயம் அந்த கோட்டிற்குள் நின்று அதை தாண்டி விளையாட விரும்பாதவர்களையும் வினோதமாக அதன் விதியை தவிற்காதவர்களையும் அது விட்டு வைப்பதில்லை . அவர்கள் மீது செயலின்மை என்கிற மாயத் திரையை விழ வைக்கிறது . முடிவெடுக்க முடியாதவர்களாக பிம்பப் படுத்துகிறது அங்கிருந்து பிறரின் எள்ளலுக்கு ஆளாக வைக்கிறது. தங்களை நோக்கி எழும் கோரிக்கை மற்றும் கேள்விகளுக்கு மிதவாத தலைவர்கள் பதில் சொல்ல திணறும் இடமாக இதை பார்த்திருக்கிறேன். காங்கிரஸ் போன்ற பண்முகத்தன்மை கொண்ட கட்சியில் யாரும் அறுதியாக ஒன்றை சொல்லிவிட முடியாது என்கிற உண்மையை அறிந்தவர்களுக்கு இது இன்னும் கூட சிக்கலானது. அதனால் தானோ தலைவர்களுக்கு பழி இட்டு தப்பிக்க ஒருஅண்ணன்தேவையாகிறார்


நரசிம்மராவின் அரசியல் சதுரங்கத்தில் அடிபடும் வரை சந்தித்திராத கொந்தளிப்பை மூப்பனார் அடைந்தார். நேரு குடும்பத்தை தவிற பிற யாரையும் பொருட்படுத்தாதவர். நரசிம்மராவ் கூட்டுத் தலைமைக்கு உகந்தவராக பிரதமர் பதவியை துவங்கினாலும் அந்த ஐந்து வருடம் அவர் தன்னை பெரும் வல்லமை கொண்டவராக வளர்த்தெடுத்திருந்தார். அதிகாரம் என்பது தளையாக மாறும் கணம் உணர்வது எளிதல்ல. நரசிம்மராவை பிரதமாராக கொண்டுவருவதன் பின்னணியில் இருந்த முக்கிய தலைவர்களில் மூப்பனாரும் ஒருவர். நரசிம்மராவை பற்றிய அவதானிப்பில் பிற எல்லோரையும் போல அவரது வயதை வைத்து குறைத்து மதிப்பிட்டிருந்தார்கள். ஆனால் சர்வதேச அரசிலை கையாண்ட அவருக்கு இந்திய அரசியல் மிக எளிதாக கைவந்திருக்க வேண்டும். ஆனால் தேர்தல் களத்தில் எங்கோ அந்த கோட்டை கவனிக்காது போனார்


மூப்பனாரும் அந்த கோட்டிற்கு அருகில் தன்னை பெரிதாக எடுத்து பார்க்க வேண்டிய சூழலுக்கு வந்து சேர்ந்தார். அதற்கு பின்னால் அவரது பல அரசியல் கணக்கும் இருந்திருக்க வேண்டும். சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்க நான் சென்றிருந்த போது ஏற்பட்ட உளப்பதிவை பலவாறு இங்கு பதிய முயல்கிறேன். உள்ளும் புறமுமாக ஊசலாட்டத்தால் ஒரு முடிவிற்கு வராத அந்த மனதை மிக அருகில் இருந்து பார்பது அரசியலை கற்க மிக அணுக்கமானதாக காட்டக் கூடியது. அன்று அவருக்கு இருந்திருக்கும் மன ஓட்டம் என இன்று நான் ஊகிக்கும் சிலவற்றை பதிய நினைக்கிறேன். சென்னை விமான நிலையத்தில் அவரை பார்த்த போது உள்ளே அடித்துக் கொண்டிருக்கும் புயலை உணர முடிந்தது. ஆனால் அதை கட்டுக்குள் வைத்திருந்தார். நிருபர்கள் வந்து சூழ்ந்து கொண்ட போது அவர்களில் பலர் திமுக தலைவருக்கு அங்கிருந்து ஒரு செய்தியை சொல்லும் அவசரத்தில் இருந்தனர். நிருபர்களில் தொழில்முறை சார்ந்தவர்கள் பத்து சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள் பிறர் அரசியல் இடைதரகர்கள் போல செயல்படுபவர்கள். கேள்வில் இருந்து அதை அவதானிக்க முடிவும். அவர்களிடம் மிக எச்சரிக்கை தேவை. நரசிம்ம ராவிற்கு எதிரான பாபர் கும்மட்டம் இடிக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு ஆதரவாக மூப்பனாரிடம் கேட்ட போது அதை மிக எளிதாக வன்மையாக மறுத்து விமானநிலையத்தை விட்டு வெளியேறினார். ஒரு சராசரி அரசியல்வாதி அதை பயன்படுத்த முயற்சிப்பதை போல மூப்பனார் பயன்படுத்தாதது பார்க்க திகைப்பை தருவதாக இருந்தது.



பெரும் தலைவர்கள் நிலையழிந்திருக்கும் போது சிக்கலில் இருக்கும் பிற தலவர்களுக்கு அவர்கள் சொல்லும் எந்த கட்டுமானத்தையும் தன் மீது போட்டு பார்த்துக் கொள்ள இயலாது. அது தனக்கானது அல்ல என்கிற எரி தீ கொதிப்பை அடங்க விடுவதிலை . சுயம் என்கிற ஒன்று எழுந்து நிற்பது பிற அத்தனை கணக்குகளையும் ஒன்றுமில்லாதாக்குகிறது.சோனியா காந்தியின் அரசியல் நுழைவு மிக சமீபம் என கணக்கிட்டதால் கட்சியை விட்டு வெளியேறுவது பிறிதொரு நல்ல துவக்கம் அமையலாம் என நினைத்திருக்கலாம்.


புதிதாக மாநில கட்சி துவங்கி அதன் செயல்பாடுகளில் உள்ள நிர்வாக சிடுக்குகள் மூப்பானாருக்கு பெரும் அயர்வை கொடுத்திருந்தது. வந்து முறையிடுவோருக்கு ஆறுதலும் முடிந்தால் காரியத்தை செய்து கொடுப்பதுமாக சென்ற அவரது அரசியல் முடிவெடுக்கும் முற்றதிகாரம் உள்ளவராக நிலை நின்றது அவரது அனுகுமுறைக்கு ஒவ்வாதது . மூப்பனார் கட்சி துவங்கி திமுக கூட்டணி அமைத்து தில்லியின் வாஜ்பாயி  ஆட்சியில் பங்கு கொண்டு பின் தொடர்ந்து நிகழ்ந்து அரசியல் விசையால் மூன்று நாடாளுமன்ற தேர்தலை அந்த ஐந்து வருடத்திற்குள் சந்திக்க வேண்டி இருந்தது. அது பெரிய கட்சிகளுக்கு சவாலானது. கள நிலவரங்கள் ஏறுக்கு மாறாக சிதைந்து போனது. அதீத மாற்றமடையும் அரசியல் சூழல் 

துவக்க நிலை கட்சிகளை நிலைகுலைய செய்துவிடும். பல முரண்களுக்கு இட்டு செல்லும். அத்தகைய முரண்களில் ஒன்று எந்த காரணத்திற்காக தமாக உருவெடுத்ததோ அதற்கு விரோதமாக செயலாற்ற வேண்டிய இடத்திற்கு வருவோம் என மூப்பனார் கணக்கிட்டிருக்க வாய்ப்பில்லை. தமாக தொண்டர்கள் திமுக வில் இருந்து விலகி அதிமுகா வுடன் கூட்டணி அமைக்க அவரை நிர்பந்தித்தனர். மூப்பானாருக்கு மீளவும் அரசியல் நெருக்கடியில் தன் பிம்பத்தை முன் வைக்கும் இடத்தற்கு வந்து சேர்ந்தார்


அரசியலில் கனவானாக அறியப்பட்ட மூப்பனார் எதன் பொருட்டும் தன் சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவராக வைத்துக் கொண்டதில்லை. அகில இந்திய அரசியலில் பெரும் செல்வாக்குள்ளவராக இருந்த போதும் அரசாங்க பதவிகளில் அமராததை ஒரு விரதம் போல வைத்துக் கொண்டார். அரசாங்க பதவிகள் சமரசங்களால் நிலை நிறுத்தப்படுபவை ஒருவரின் அடையாளத்தை அழிக்கக் கூடியது.தனது ஆதரவாளர்களுக்கு பெரிய பதவிகளை பெற்றுக் கொடுத்தவர் பின் அவர்களில் ஒருவராக சென்று அமர்வது தனது கௌரவத்திற்கு ஏற்றதல்ல என்கிற கருத்தை கொண்டிருந்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...