https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 5 ஜூலை, 2017

அடையாளமாதல் - 112 / 2 *தன்னை தானென பிளவுறுதல் * .

ஶ்ரீ:





*தன்னை தானென பிளவுறுதல் *
இயக்க பின்புலம் - 39
அரசியல் களம் - 33




அன்றிருந்த வயதும் அனுபவமின்மையும் ஏமாற்றங்களையும் துரோகங்களையும் ஜீரணமாக்க இயலாது திணறியபடி இருந்தது, நீண்டநாள் தலைக்குள்ளேஏன், ஏன்என்கிற கேள்வி ஒரு வண்டின் ரீங்காரம் போல கையசைத்து எவ்வளவு விரட்டியும் , சிந்தனையை சுற்றி சுற்றி பறந்தபடியே இருந்தது . பாலன் அவர்களை நோக்கி கேட்ட கேள்விகள் என்னை சீண்டியபடி இருந்தது . அதற்குப்பின்னால் என்ன அரசியல் வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும் . அவர்களை திட்டி தீர்ப்பதற்கான சந்தர்ப்பமாக கூட இதை அவர் நினைத்திருக்கட்டும் ஆனால் , அது கேட்கப்படவேண்டிய கேள்வி , ஆழ்மனதில் அதற்கு பதில் இருந்தே ஆகவேண்டும்.

ஒரு சிறு வாய்ப்பு அதை கொடுத்ததற்கு நான் பாலனுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் , அவர்களை நோக்கிய கேள்விபெரும் விளைவுகளை உருவாக்க கூடிய ஆபத்தான முடிவுகளை ஒரு அசிங்கமான போஸ்டரில்தான் உங்களால் செய்யமுடியும் , இன்னும் அரைமணி நேரத்திற்கு பிறகு இந்த போஸ்டரால்  யாதொரு பயனுமற்று, இது காணாமலேயே  போகப்போகிறது , இதில் வெளிப்படுவது உங்களின் சிறுமை , ஆனால் அதை அவன் காசில் அவனுக்கு செய்வது கீழ்மை மட்டுமல்ல கயமை " என்றார்  . பாலன் உபயோகப்படுத்திய வார்த்தைகள்  வேறு தளத்தை சேர்த்தவைகள் நான் அவற்றிற்கு கௌரவமான சொல்லாட்சிகளகளாக   பயண்படுத்துகிறேன் . ஆனால் , இப்போது நினைத்துப்பார்க்கையில் அதை சாதாரணமாக கடந்து சென்றிருக்கலாம் . அவர்கள் தங்கள் மடமையினால் என்னை எங்கு வைத்திருந்தார்களோ அதை எழுத்தில் கொண்டுவந்தது  அவர்களின் அரசியல் போதாமையே . ஆனால் அன்று அது மனதை உருக்கி எடுத்தது

அந்த நிகழ்விற்கு பின் நான் அவர்களை தேடிச்சென்று  சந்திப்பதை தவிர்த்தேன், ஓரிருமுறை இரண்டு சேகர்கள் என்னிடம் சாமாதான தூதாக வந்தபோதும், நான் எதுவும் பேசும் மனநிலையில் இல்லை . மிகவும் குழப்பத்திலிருந்த நேரமது , இயக்கத்தில் என் இடம் எது என அவர்கள் விரும்பியதை வெளிப்படுத்திவிட்டார்கள் , அது எனக்கான இடமல்ல என எனக்குமட்டுமல்லாது  அவர்களுக்கும் தெரிந்ததே . அதை வெளிப்படுத்துவதன் மூலம் அதுநாள்வரை அவர்கள் அடைத்த காயங்களுக்கு மருந்திட்டுக்கொண்டார்கள் . எளிய மனிதர்கள்  , அது அவர்களின் போதாமை . ஆனால் அதை செய்து பாலன் கீழ் உள்ள அமைப்பில் விரிசல் இருந்ததை வெளிக்காட்டி விட்டார்கள் , நானும் இதை அறிந்தே இருந்தேன் , இருப்பினும் அது வெளிப்பட்ட தருணம் , என்னையும் நிதானமிழக்க செய்துவிட்டது . என்னுடைய போதாமைதான் அதற்கு காரணம் . இந்த நிகழ்வு அனைத்துமட்டத்திலும் பேருரு கொண்டு விவாதிக்கப்பட்டதோ , பலமட்டத்தில் அது வரை வெளிப்படாதிருந்த என் மீதான ஆதரவு பெருகி எழுந்ததையோ , அது மெள்ள இயக்கத்திற்குள் சரி செய்ய முடியாதபடி சிக்கலை   கிளப்பிவிட்டிருந்ததை பற்றியோ  நான் அப்போது  அறிந்திருக்கவில்லை.

நான் வேறு நிலைகளை நோக்கி பயணப்பட்டிருந்தேன்  . நான் யார் இதில், என் வேலை என்ன , இது யாருக்கு யாருடனா போட்டி , எதை மையப்படுத்தி . இதில் நீ எங்கு வருகிறாய் , ஏன் வருகிறாய் என என்னை நானே கேட்டுக்கொண்டதன் விளைவாக நான் ஒரு தெளிவை நோக்கி சென்று ஒருவித மனநிறைவை, சமாதனத்தை அடைந்துவிட்டிருந்தேன் . பாலனை பற்றிக்கூட நிறைய யோசித்திருந்தேன் . எனக்கான நியாயம் இருப்பதை போல அவருக்கும் உண்டு . அவரின்  தேர்தல் தோல்வி  நிதானமிழக்க செய்துவிட்டது .  தேவைகளை அடைய அவர் தன் இறுதி முயற்சியில் இருக்கிறார் . காங்கிரஸ் எப்பவும் நிலையான ஐந்து வருட ஆட்சியை கொடுக்கவல்லது . அடுத்த தேர்தல் என்பது அதன் பிறகு . மறுபடியும் சீட்டு என்பது எட்டாக்கனி . அதைவிட வெற்றி வெறும் கனவு மட்டுமே . இருக்கும் ஆட்சியில் தன் தரத்தை உயர்த்தவும் அரசியலில் நீடிக்கவும் எவ்வியபினரையும்   அண்டி இருப்பதை தவிர வேறு வழி இல்லை .

கிருஷ்ணமூர்த்தியை மரைக்காயர் அடையாளம் காட்டினார் . அவரை சார்ந்து நிற்பதை தவிர வேறு வழி இல்லை , பாலன் என்கிற தனிமனிதனின் மேல் உள்ள அன்பினால் கிருஷ்ணமூர்த்தி பரிவுடன் இல்லை .அவருக்கு அரசாங்கத்தை மிரட்ட இளைஞர் காங்கிரஸ் இயக்கம் வேண்டும் .பாலன் அதை கொடுக்கும் இடத்தில உள்ளார் அது தான் அவரால் கொடுக்க இயலும் செலவாணி  . இதில்  இலவு காத்த கிளி போலாகிவிட்டது தன் நிலை என்கிற கமலக்கண்ணனின் மனோபாவம் சிக்கலை வேறு தளத்திற்கு மடைமாற்றி விட்டது   . உண்மையில் இது கமலக்கண்ணனுக்கும் கிருஷ்ணமூர்த்திக்குமான யுத்தம் . நான் தேவையற்று இதில் நுழைந்திருக்கிறேன் . பாலன் என் பொருட்டு கோபப்பட்டதே எனக்கு போதுமானது . எனக்கு சாந்தமளிப்பது . எல்லோருக்குமான பொதுவில் வந்து நான்  நின்றதால் இந்த வம்பு . போதும் தள்ளி நில் . வேறு விஷயங்களில் கவனம் செலுத்து . என் "ஆப்த வாக்கியம் "போல . இதைச்சொல்லி சொல்லி என்னை மீட்டுக்கொண்டேன்.

ஒருவாறு என்னை அமைதிப்படுத்துவதுனூடாக . அந்த சர்ச்சைக்குரிய விழா முடிந்து மூன்று நான்கு மாதம் ஓடிவிட்டது . சட்டசபைக்கும் , கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கும் பாலன் அடிக்கடி வந்துபோகத் துவங்கினார் . இரண்டிற்கும் மத்தியிலிருந்த என் வீட்டை தாண்டி செல்லும்போது என்னுடன் அமர்ந்து சிறிது நேரம் பேசுவதை வழக்கமாக கொண்டதால் . நான் அவர் வீட்டிற்கோ அலுவலகத்திற்கோ செல்லும்படி நேரவில்லை . பிறருடன் இயற்கையாக ஒரு இடைவெளி விழுந்துவிட்டது . வெளியே அமைப்பிற்குள் எழுந்தாடிய சொற்பெருக்குகளை நான் அறியவே இல்லை என்பதை விட ஆர்வமில்லை . எப்போதாவது வரும் திருபுவனை விஜயன் மற்றும் அடிக்கடி சந்திக்கும் ஊசுடு பெருமாளும் இயக்கத்தின்  உள்ளே நடப்பதை எனக்கு தெரிவித்தப்படி இருப்பார்கள் . அது யூகம் என்கிற அளவில்தான் இருந்ததாக நான் எடுத்துக்கொண்டேன்


அரசியலின் மத்தியில் செயல்படுவதில் உள்ள பரவசத்திற்கு ஆசை கொண்டு , அதில் நுழைந்து பட்டது போதும் என்றாகியிருந்தது எனக்கு . இலக்கில்லாவர்களுக்கு அரசியலை போல ஆபத்து பிறிதொன்றில்லை. அதைவிட அவர்களை மையப்படுத்தி புழங்கும் அரசியலால் பிறிதொருவருக்கு விளையும் ஆபத்தை போல பிறிதொன்றில்லை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசுகூடுகை 76 அழைப்பிதழ்