12.03.2023
* மீள் பிறவி *
2009 துவங்கி 2014 வரை என ஒரு காலத்தை வரையறை செய்து கொண்டால் அனைத்திலிருந்தும் பலமுணை தாக்குதல் போல உள்ளத்தை கொதிப்படையச் செய்யும் நிகழ்வுகளின் உச்சம் ஒன்றிரண்டாவது காலை முதல் மதியத்திற்குள் எதிர் கொண்டாக வேண்டும். அதிலிருந்து விடுபட முற்றிலுமாக செயலின்மைக்குள் சென்று அமர்ந்தேன். மனித முயற்சிகள் அனைத்தும் தோற்கும் இடமென ஒன்று உண்டு . அது தெய்வங்கள் விளையாடும் களம் . நிகழ்பவைகளை என்னால் எங்கிருந்தும் எதுவும் செய்ய முடியாது . அனைத்து நிகழ்வுகளும் என் ஆன்மா மீது ஏறி ஊர்ந்து அகலும் வரை அசையாமல் இருந்தாக வேண்டும். நல்லூழ் அவை என் அகத்தில் எந்த தடையத்தையும் விட்டுச் செல்லவில்லை . செயல்பாடுகளே எனது இயல்பு . அனைத்து மீட்பையும் செயல்பாடுகள் வழியாக அடைந்தவைகள் ஆனால் இந்த செயலின்மை சடங்குகள் செய்யப்படாத ஒரு வகை மரணம். சுழன்றடிக்கும் புயலுக்கு முன் தன்னை முழுதாக ஒப்புக் கொடுப்பது . செய்ய வேண்டியது மண்ணனை பற்றியிருக்கும் வாழ்கை விழைவுபோல நிகழ்ந்து கொண்டிருந்தது எனது பூஜை .அங்கு தெய்வத்தால் கைவிடப்பட்டதாக உணரும் தருணம். அல்லது அதுவும் செய்வதறியாது திகைத்து என்னை நேர் கொண்டு சந்திக்கும் கண்களற்று கீழ் தழைந்த பார்வையுடன் எதிரே நாணி அமர்ந்திருந்தது.என் பூஜை எந்த இறைஞ்சலும் இல்லாதது. வேண்டுதலற்ற அந்த பூஜை ஒரு வித ஆழ்மனக் குமுறல் கோபம் அல்லது அதில் இருந்து எழும் ஆணவம் .நான் ஆழ்மனதில் எங்கோ கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தேன் அது என்னை அகவயமாக மீட்டுக் கொண்டிருந்தது.
அந்த ஐந்து ஆண்டுகள் எனக்குள் என்ன நிகழ்ந்தது என அவதானிக்க முயல்கிறேன். ஒரு கட்டத்தில் அந்த செயலின்மையில் இருந்து மீண்ட போது என்னுள் ஒரு சொல்லும் மிச்சமில்லை . எல்லாம் ஓய்ந்து போயிருந்தது. அந்த ஐந்து வருடத்தில் நான் யாருடனும் சரியாக பேசியதாக நினைவி்ல்லை. முழு அமைதி.நான் என உணரப்படும் அனைத்தும் அதில் சிதறிகிடந்தன. அது என்னை முற்றாக மாற்றியமைக்கூடிய புதிய மாற்றங்களை கொண்டு மீளவும் தகவமைத்துக் கொள்ளும் வெற்றிடத்தை உருவாக்கியிருந்தது . அது என் ரசனை , நம்பிக்கை, விருப்பம் , ஆசாரம் ,சங்கடம், சடங்கு, சம்பிரதாயம், என எல்லாவற்றின் மீதும் அது தனது செல்வாக்கை நிறைத்திருந்தது . என்னில் உருவாகி இருந்த வெற்றிடத்தை அப்போது நான் உணரவில்லை. அனைத்தும் ஒருவகையில் ஓய்ந்த போது முதலில் என்னை உணரச் செய்தது என்னுள் நுழைந்தது நான் மிக விரும்பிய “இசை”.
அந்த ஐந்து வருடம் ஒரு முறை கூட எவ்வகை இசையையும் கேட்கவில்லை. அது கொண்டாட்ட மனநிலை என அனைத்தையும் வெறுத்து ஒதுக்கியிருந்தேன். அதன் பின்னர் மெல்ல என்னுடைய உலகில் நான் நுழைந்தது சட்டென இசை என் புணர்வாழ்வில் ஒலித்த முதல் கணம் வழியாக . ஜெயமோகன் அந்த சூழலில் அறிமுகமாயிருந்தார் . மிக நீண்ட சுமார் இருபது வருடத்திற்கு பிறகு வாசிக்கத் துவங்கியிருந்தேன். வாசிப்பு பயிற்சியின்மை காரணமாக வார்த்தைகள் அர்த்தமாகாமல் பறந்து கொண்டிருந்தது . வாழும் விசையை அகம் ஒருபோதும் இழப்பதில்லை மெல்ல பிடி கிடைத்ததும் அது மிக எளிதில் மீண்டு விடுகிறது . பார்ப்பது கேட்பது நுகர்வது என அனைத்தையும் பற்றி வாய்க்குள் கொண்டுபோக முயற்சிக்கும் ஒரு குழந்தையின் உள்ளம் போல அகம் முற்றாக துடைத்து போட்டது போல இருந்தது . இம்முறை அது என்னை மரபான ஒன்றில் இருந்து கட்டமைக்கவில்லை . நவீனம் என ஒன்றில் இருந்து அது துவங்கி இருந்தது .
ஐபேடில் வாசித்துக் கொண்டிருந்த போது என்னமோ தோன்றி ஆப்பிள் ஸ்டோருக்குள் எதையோ பதிவிறக்கம் செய்து கொண்டிருக்கும் போது “இசை செயலி” என ஒன்றை பார்த்து அது எப்படி வேலை செய்கிறது என்கிற ஆர்வத்தில் அதை பதிவிறக்கம் செய்து “தமிழ் சினிமா” என சொடுக்கிய போது மணிரத்தனத்தின் “கடல்” திரைபட பாடலில் ஒன்றான “மூங்கில் காற்று” சட்டென உயிர் கொண்டபோது நீண்ட இடைவெளிக்கும் பின் அந்த அதிர்வை உணர்ந்தேன். “இனிமை இனிமை” என மனதிற்குள் ஒங்கி அடித்துக் கொண்டது .அந்த ஐந்து ஆண்டுகளில் காபி தவிற வேறு எந்த இனிப்பையும் நான் எடுத்துக் கொள்ளவில்லை என்பது நினைவெழுந்தது .அது எனக்குள் நான் அறியாது செய்த முதல் மாற்றம் 2010 களுக்கு முன்பு நான் மிக விரும்பிய அனைத்து பாடல்களையும் ரத்து செய்திருந்தது . மெல்லிய அந்த பழைய பாடல்கள் ரசிக்காமலாயிற்று. நவீன இசை காது முழுவதும் வந்து நிறையும் பல்வேறு , பல வேறு உள் உள் அடுக்குகளைக் கொண்ட நவீன இசை. வெறியுடன் அதை தேடித் தேடி பதிவிறக்கம் செய்து கொண்டிருந்தேன்.
மணற்குள விநாயகர் கோவில் சிக்கலுக்காக அரசியலின் கதவை தட்டுவதில்லை என்பது ஒரு பெரும் முடிவு . அது என்னை என்னுடன் , என் ஆழ்மனத்துடன் நான் விரும்பா வகையில் என்னை பிணைக்கும் வலையின் முதல் கண்ணியை அறுத்தது. இனி என் மீது வந்து மோதுபவைகளுக்கு என்னை விட்டுக் கொடுப்பது. நிகழ்பவைகளை மௌனமாக ஏற்பது என்பதே எனக்கான விடுதலை என்ற போது சட்டென பல்வேறு திசைக்கு இழுப்பட்டு வில்லென இறுகி முறுகி நின்ற ஒன்று முற்றாக அறுந்து போனதை உணரமுடிந்தது . ஆனால் தர்க்கம் என ஒன்று எஞ்சி உயிர் விசையுடன் அதை குத்தி அதன் முணை வெளியில் இருந்தது . அங்கிருந்து மரபான மனம் மற்றும் பகுத்தறிவு என்னும் நவீன மனம் என இரண்டு அகம் உச்சத்தில் எழுந்து கொண்டது . மீள்வதற்கு உரிய வழியை கண்டடைந்திருந்த அந்த சூழலில் இதன் மீது அதை செலுத்தி பார்க்க முடிவெடுத்தேன். அனைத்தையும் விடுதல் என்பது ஒருவித கோழைத்தனம் ,இயலாதவன் கூற்று . இறுதிவரை முயற்சிப்பது மட்டுமே திறமை எனப்படுவது என்கிற பகுத்தறிவு அகம் . நீ இப்போது கற்றுணர்ந்ததை முதலில் இதன் மீது செலுத்து வெற்றி கொள்ள முடிந்தால் இதை “கீதா முகூர்த்தம்” என புரிந்து கொள் இப்போது இதில் செலுத்தி வென்றால் மட்டுமே இனி எஞ்சிய வாழ்நாள் முழுவதும் எதன் மீதும் அதை செலுத்திப் பார்க்கும் நம்பிக்கையை அது அளித்துவிடும் என்றது . நான் இங்கு மூன்றாக பிளவுபட்டு நான்காவதகா நின்று செயலாற்றுபவனாக இருந்தேன் . ஒரு கணம் இந்த பிளவுண்ட மனநிலை பெரும் அச்சத்தை கொடுத்த அதே சமயம் கம்பிமேல் நின்றிருக்கும் சமநிலையை வழங்கியிருந்ததால் வாழ்கையின் முதல்முறையாக அதை என்மீது ஒரு மூன்றாம் மனிதனைப் போல செலுத்திக் கொண்டேன்.விதி, விடுதலை, முயற்சி என, மூன்றாக அதை தொகுத்துக் கொண்ட பிறகு எஞ்சியதை நான் என வகுத்துக் கொண்டேன். “கீதா முகூர்த்தம்” என்கிற சொல்லாட்சி எனக்கு அப்போது அறிமுமாகியிருக்கவில்லை . அது 2014 வாக்கில் ஜெயமோகனை கோயம்பத்தூரில் சந்தித்த போது அறிமுகமானது . அன்று கிடைத்தது . அது இன்னொரு “கீதா முகூர்த்தம்”.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக