25.03.2023
“கீதா முகூர்த்தம்” - 8 .
* திகைக்கும் தெய்வங்கள் *
“ஆஸ்திகன் திரும்பி ஜனமேஜயரிடம் “மாமன்னரே, சத்வ, ரஜோ, தமோ குணங்களுடன் இப்புடவி பிறந்து வந்தது. அவை சமநிலையில் இருப்பதன் பெயரே முழுமை. ஒன்று அழிந்தால்கூட அனைத்தும் சிதறி மறையும். நீங்கள் சத்வகுணத்தைத் தவிர பிறவற்றை அழிக்க நினைத்தீர்கள். அதன் வழியாக இவ்வுலகையே அழிக்கவிருந்தீர்கள். அதைத் தடுத்து நிறுத்துவதற்காகவே நான் தட்சனின் உயிரை கோரிப்பெற்றேன்” என்றான்.
ஜனமேஜயன் சினத்துடன், “நீங்கள் சொல்லும் தரிசனத்தை நானறியமாட்டேன். நான் கற்ற வேதாந்தம் அதைச் சொல்லவில்லை…ஆஸ்திகரே, நீங்கள் தப்பவிட்டது இருட்டை….தீமையை” என்றார். ஆஸ்திகன் உறுதியான குரலில், “இச்சை தீமையல்ல மாமன்னரே! அதன் மறுபக்கத்தால் சமன்செய்யப்படாத நிலையிலேயே அது அழிவுச்சக்தியாகிறது. இச்சை எஞ்சியிராத உலகத்தில் படைப்பு நிகழ்வதில்லை. அது மட்கிக்கொண்டிருக்கும் பொருள்” என்றான்”
“வெண்முரசு . முதற்கணல்”
-ஜெயமோகன்-
மத நம்பிக்கையும் அதனுடன் ஆச்சாரம் சடங்கு நிகழ்வுகள் குறித்து மிக ஆவேசமாக பேசப்படுவதை ஒருவித மனவிலக்கத்துடன் பார்ப்பதுண்டு. ஆன்மீகம் பேசத் துவங்கி அது ஆசாரத்தில் வந்து நிலைகொள்வதை பற்றிய தீவிரமான எதிர்மனநிலை கொண்டிருந்தாலும் அதை செயல்படுத்தும் கருவியாக வலுவான கருத்தியல் அதைசார்ந்த நவீன மொழியின் பார்வை ஆகியவை இல்லாமையால் அவை கட்டற்று பறந்து கொண்டிருப்பதாக தோன்றும் . தொந்தரவு செய்யும் கேள்வி கேட்பவனாக எதன் முன் முற்றளிக்க முடியாமல் அது உறுத்திக் கொண்டிருக்கும்.ஒரு கட்டத்தில் நான் என்னை முற்றளித்திருந்த அந்த “தனிமை மற்றும் மௌனத்தில்” இருந்து நான் வெளியேற்றப்பட்டேன். வெண்முரசு முற்கணலில் அந்த ஒரு வரி அனைத்தையும் இணைத்த போது என் ஆன்மீகம் குறித்த நிலைபாடு உறுதிகொள்ளத் துவங்கியிருந்தது . அதன் பின்னர் எனது பழைய முறையை நிராகரித்து வெளியேறினேன் . அது ஒரு நாளில் நிகழ்ந்ததல்ல பல ஆண்டுகளாக மனதில் ஊடுருவிய கேள்விகளின் தேடலில் அது உருவானது .
பிறரிடம் இருந்து அவர் மாறுபட்டவராக நான் நினைத்தது அவர் ஒவ்வொரு புராண கதாபாத்திரத்தை ஒரு சமகாலத் தன்மையை ஒரு விமர்சனம் போல முன்வைப்பவர் . பக்தியின் உச்சம் தொடும் சந்தர்பங்களில் கூட அந்த சுய ஏளனம் அல்லது பகடி ஒரு அந்தரங்க தொடுகை போல சூழ்ந்தது எனக்கு அவரை பிற பௌராணிகர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டியது . அதுவரை நிகழ்த்திய தனது அத்தனை வருட உபன்யாசத்தில் இருந்து திரட்டி அவர் அடைந்ததாக இருக்க வேண்டும். உபன்யாச கருத்துக்கள் யாரையும் அது சொல்லப்படும் காரணத்தை சென்று அடைவதில்லை. மணலில் வாறி இறைக்கப்படும் தண்ணீர் பார்க்கும் இடமெல்லாம் புரண்டு ஓடுவதாக தெரிந்தாலும் சற்று நேரத்தில் வடிந்து விடுகிறது . மரபான உபன்யாசம் என்பது கேட்கும் அந்தளவில் புண்ணியம் அவ்வளவே அதற்கு வாழ்கை முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என அனைவரும் தெரிந்திருந்தாலும் கேட்டவைகளில் இருந்து ஒரு சிறு துளியைக்கூட எடுத்து அவர்கள் தங்கள் வாழ்கையின் மீது போட்டுப் பார்க்கப் போவதில்லை. அது அங்கு அமர்ந்திருக்கும் அனைவருக்கும் மட்டுமின்றி அதை சொல்பவருக்கும் தெரிந்தே .
அந்த கசப்பின் தீற்றல் அவரது இவ்வகை நிகழ்த்துகலையின் இப்போதைய வடிவத்தை அடைந்திருக்க வேண்டும். ஆனால் அந்த நாடகீயத் தருணத்தை மீள மீள வெற்றிகரமான சொல்பவர் , கேட்பவர் அதை ஒருங்குபவர் என அனைவராலும் நடிக்கப்படுகிறது . நான் கிருஷ்ணப்பிரேமியின் உபன்யாசங்களை கேட்க வரும் போது அவர் தனது எண்பது அகவையை நெருங்கிக் கொண்டிருந்தார் . இளம் வயதில் மிக கறாராக தர்மம்,ஆசாரம் என அனைத்தையும் வலியுறுத்தி சொல்ல வந்தவர் பின்னர் அதை தன்னளவில் உள்ளே ஓடும் எதார்த்த சிந்தனைகளை மாறிக் கடந்து அதில் இருந்து வெளிவரும் மரபான நம்பிக்கையை வெளியெடுத்திருக்க வேண்டும். அவைதான் அவரது சமீபகால பேசு மொழியாக இருந்தது . மிக நீண்டகால அனுபவத்திலிருந்து அவர் அதை உணர்ந்திருந்தார் என
அதை நான் எனக்கு மிக நெருக்கமாக அறிந்திருக்க வேண்டும்.
அவர் மரபான பௌராணிக நிகழ்த்துக்கலையின் கூறுமுறையில் இருந்து சற்று வேறுபட்டவர் என புரிந்திருந்தேன் ராமாயண, பாகவதங்களை அதுவரை சம்ஸ்கிரத மூல பாடல் வடிவத்தில் முழுமையாக நான் கேட்டதில்லை . நல்ல ஸ்வர ஞானத்துடன் பிரமாதமான குரல் வளத்துடன் அவர் பாடியதைக் கேட்டது எனக்கு அந்த மன எழுச்சியை , உருக்கத்தை, சில சமயங்களில் அந்த கண்ணீரைக் கொடுத்திருக்க வேண்டும் . தொடர்ந்து நான்கு வருடங்கள் பிற எதையும் கேட்காதவனானேன். அதைப்போல மனதை ஆற்றுப்படுத்துவது பிறிதில்லை. நான்கு வருட மௌனமும் தனிமையாலும் மனதில் சொற்கள் முழுமையாக அடங்கியிருந்ததால் சிந்தனை ஒழுக்கு நிதானப்பட்டிருந்தது.
வீட்டில் தனித்து இருந்தேன். மனைவியும் அம்மாவும் உடன் இருந்தார்கள். உலகியல் பரபரப்பின் கதவுகள் வாசலில் திறந்து கிடந்தன . ஆனால் தனிமை என்பது யாருமற்ற வனாந்திரத்தில் மட்டுமல்ல அனைத்துடன் மனதளவில் துண்டித்துக் கொள்ளும் போது அது சாத்தியம். வானப்பரஸ்தம் என்பது இன்றைய நவீன உலகில் சாத்தியமாவதில்லை.அரசாங்கமும் அதை அனுமதிக்காது . தன்னுள் தான் தொலைந்து போகும் போது அந்த கதவுகளும் அடைபட்டுவிடுகின்றன.
புராண உச்ச கதாபாத்திரம் ராம கிருஷ்ணர்கள் இன்றைய சமகால மனிதர்களின் பார்வைக்கு மத்தியில் கொண்டு வந்து வைக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டு பகடியாக்கப்பட்டது போன்றவை பிற பௌராணிகர்கள் செய்யத் துணியாதது .ஒரு புன்னகையுடன் அனைத்து கதாபாத்திரங்களும் சமகாலத் தன்மையோடு , நாம் சந்திக்கும் உளவியலுக்குள் இன்றைய யதார்தங்களின் மத்தியில் வந்து திகைத்திருப்பதை பார்க்க முடிந்தது . ஒரு வகையில் ஜெயமோகனின் வெண்முரசு கதாப்பாத்திரங்கள் கூட கிருஷ்ணப்பிரேமி அளவிற்கு கூண்டில் ஏற்றப்படவில்லை என நினைக்கிறேன். அந்த அனுபவம் எனக்கு வெண்முரசு வாசிப்பின் போது பிற மரபான நம்பிக்கை கொண்டவர்கள் அடையும் திகைப்பை துணுக்குறலை அடைந்து தேங்கிவிடாமல் என்னால் அவற்றைக் கடந்து சென்றுவிட முடிந்தது.
கடவுளர்கள் அவர்கள் மீது ஏற்றி வைக்கப்பட்டவைகளில் இருந்து வெளியே வரும் போது மனிதர்களுக்கு மிக அருகில் கொண்டு வைக்கப்படுகிறார்கள். அவர்களது அதிமாநுடம் அவர்களை தொந்தரவு செய்வதில்லை. ஜோசப் , வேளுக்குடி, கிருஷ்ணப்பிரேமி போன்றவர்கள் காட்டிய கிருஷ்ணனை விட வெண்முரசு தொட்ட “இளைய யாதவன்” எனக்கு மிக மிக அணுக்கமானவன் . அவனுடன் நீண்ட பயணம் செய்திருக்கிறேன் .அவனுடன் சென்று அவனது உலகத்தை பார்த்திருகிறேன். அவன் என்னுடன் நான் வாழும் உலகத்திற்குள் வந்து நிற்கிறான். அவன் அருகாமை, ஆசி, வழிகாட்டல் மட்டுமின்றி அவனால் கைவிடப்படுதலையும் புரிந்து கொள்ள முயல்கிறேன். அவன் இத்துடனே எனது பூஜை அறையில் நான் கொடுப்பதை ஏற்கிறான், மறுக்கிறான் அவன் கொடுப்பதை நான் வாங்கிக் கொள்கிறேன்.அதற்கு என்னை பழக்கப்படுத்திவர் கிருஷ்ணப்பிரேமி என்பது ஒரு ஆச்சர்யம். நான் என்னளவில் விரிந்து விரிந்து பெற்று அடைந்தது வெண்முரசில் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக