https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 22 ஜூலை, 2022

அடையாளமாதல் * ஆயிரம் கால் *

  


ஶ்ரீ:



பதிவு : 632  / 822 / தேதி 22 ஜூலை  2022



* ஆயிரம் கால் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 28 .







அரசியல் ஒரு இடைநிற்காத தொடர் ஆட்டம். அதில் வென்றவர் தோற்று, தோற்பவர் வெல்வது எழுதப்படாத விதி. சில சமயம் இவற்றில் வெற்றியும் தோல்வியும் நிரந்தரமான ஒன்று போல எப்போதாவது சட்டென நிகழ்ந்தேறி நீண்ட நாளுக்கு வழி விடுகிறது. அந்த கணம் வரை அதை அந்த ஏற்ற இறக்க ஊசலின் ஒரு வகை நிலைத்தன்மை என்று நினைப்பவர்களை அது வாரியெடுத்துச் சென்றுவிடுகிறது. ஒரு முறை அதன் முணையை தொட்டவர்கள் பின் அது என்ன வசீகரத்தைக் காட்டினாலும் மீண்டும் அதனுள் திரும்ப வருவதில்லை, காமராஜரைப் போல. 2001 களில் முதல்வர் பதவியில் இருந்து விலகிய சண்முகம் அனைத்து வித அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டவர் போலானார் . அது ஒரு பாவனை என அறிந்திருந்தேன். அவர் பிறிதொரு சந்தர்பத்திற்கு காத்திருந்தார் . சண்முகம் முதல்வராக இருந்த போதுதான் நான் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை நாராயணசாமியின் அணுக்கன் பாண்டியனிடம் இழந்தேன். சண்முகத்தின் தீவிர ஆதரவாளனாக அவரால் ஒரு போதும் கைவிடபட இயலாதவனாக என்னை நினைத்திருந்தவர்கள் இடையே அது ஏற்படுத்திய பாதிப்பு ஆழமானது. அவர்களின் நிலையை அது கேள்விக் குறியாக்கியதுடன் சண்முகம் பற்றிய அவநம்பிக்கை மேலும் அழுத்தமானது


நான் தில்லி மேலிட இளைஞர் காங்கிரஸ் தலைமையால் தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்டு அன்றைய தலைவர் சோனியா காந்தியிடம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தேன். அகில இந்திய தலைமையால் புதுவை இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் உட்கட்சி தேர்தலுக்கு வாக்காளர்களை இணைக்கும்,ஒருங்கும் தலைமை அதிகாரியாக தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் நியமிக்கப்பட்டிருந்தேன் . புதுவை வந்து கட்சி அலுவலகம் சென்று மாநில தலைவராக இருந்த நாராயணசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து போது என் மீது அவருக்கு இருக்கும் கசப்பை நேரடியாக வெளிப்படுத்தினார் , அதை ஒருவகையில் எதிர் நோக்கியிருந்ததால் நான் அதை பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை. அமைப்பு உறுப்பினர்களை சேர்க்கும் பூர்வாங்க வேலையை தொடங்கி இருந்த சூழலில். நாராயணசாமி நான் புதுவை இளைஞர் காங்கிரஸ் அமைப்பை ஒருங்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து தனக்கு தில்லியில் இருந்து எந்த செய்தியும் இல்லை என பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார். அதற்கு பின்னால் என்மீதான நாராயணசாமியின் குரோதம்  மிகத் தெளிவாக வெளிப்பட்டிருந்தது . சண்முகம் தன் சொந்த சிடுக்குகளல் மூழ்கி இருந்தார்


நாராயணசாமியன் மனநிலை குறித்த என்னுடைய ஊகம் அனைத்தும் அது செல்லும் திசை சொல்லியது. நான் காத்திருந்தேன். அதன் பின் ஒருசில நாட்களுக்குள் பாண்டியன் புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்ட செய்தி வெளியானது. அகில இந்திய அளவில் பதவிகளுக்கு நியமனங்கள் நிறுத்தப்பட்டு இனி அனைத்து வித தலைவர்களும் உட்கட்சி தேர்தல் வழியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தில்லியில் மூன்று நாட்கள் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டை வறள அவர்கள் பேசியிருந்தது நினைத்து சிரித்துக் கொண்டேன். ஒரு அமைப்பு இதைவிட மிக மோசமாக தன்னை பகடி செய்து கொள்ள முடியாது. அரசியலில் குப்புற கவிழ்ப்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு என்பதால் நான் பதற்றமே ஏமாற்றமோ அடையவில்லை. ஆனால் அமைப்பின் மீதிருந்த மரியாதையை நான் இழந்திருந்தேன். அதன் பின் ஒரு போதும் அந்த அமைப்பின் தலைவர்கள் யாரையும் நான் நம்பியதில்லை .


எனக்கும் நாராயணசாமிக்குமான சிக்கல் ஒருவகையில் ஹோட்டல் சற்குருவில் நடந்த கூட்டத்தில் துவங்கியிருந்தது. அவர் சண்முகத்தின் முன்னாள் அணுக்கர் அவரின் அத்தனை பலம் மற்றும் பலவீனங்களை அறிந்தவர். சண்முகம் பல்வேறு அடுக்குகளைக் கொண்ட கட்சி நிர்வாகத்தை மிக பலமாக வைத்திருந்தார் என்பது ஒரு மாயை. சண்முகத்திற்கு எதிரான ஒரு நகர்விற்கு நாராயணசாமி காத்திருந்தார். அதற்கு இடையே என்னை போன்ற ஒருவரை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அமைப்பு  உருவாகி இருப்பதை அவரால் சட்டென புரிந்து கொள்ள முடிந்தது. அதன் பலம் பற்றிய அவரது கணக்குள் மிகச் சரியானவை. அமைப்பின் நிஜமான பலத்தை சண்முகம் பெறுவது தனக்கு நீண்ட கால சிக்கல் என நாராயணசாமி நினைத்திருக்க வேண்டும். அதை புதுப்பித்து உருவாக்க எடுக்க நான் முயற்சிப்பதை அவர் ரசிக்கவில்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியது. இருவருக்கும் இடையேயான சிக்கலில் சண்முகம் தான் பலம் பெற்றிருப்பதை நாராயணசாமிக்கு காட்ட விழைந்திருக்கலாம். ஆனால் அவர் அதை செய்தது அந்த அமைப்பு முற்றாக உருவாவாவதற்கு முன் அதனால் அது எதிர்பலனை எனக்கும் பின்னர் அவருக்கும் உருவாக்கியது


அன்று ஹோட்டல் சற்குரு கூட்டத்தில் நான் பெற்ற அதே முக்கியத்தை பாண்டியனும் பெற்றான். அது நாராயணசாமியின் வருகையால் உருவானது . நான் அஞ்சியது அதைப் போல நிகழலாகாது என்று  . தனக்கு பதிலாக நாராயணசாமியை அனுப்பியது சண்முகம் செய்த பிழை நகர்வு . அன்று சண்முகம் அந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்றிருந்தால் வந்திருந்து புது நிர்வாகிகளுக்கு ஒரு செய்தி தெளிவாக சொல்லப்பட்டிருக்கும். அன்று கிடைத்த அங்கீகாரத்தின் வழியாக அவன் புது நிர்வாகிகளுக்கிடையே பிளவை உருவாக்கத் முடிந்தது .

சண்முகம் இருந்த இடத்திற்கு இதெல்லாம் ஒரு விஷயமல்ல என்றாலும் அதில் முழுதாக ஈடுபட்டிருந்த எனக்கு மோசாமான ஆரம்பமாக அது அமைந்துவிட்டது . பின்னாளில் நான் உருவாக்கி அறிவித்த தலைவர்களில் பெரும்பான்மையோர் சண்முகம் முதல்வரான பிறகு நிலவிய கசப்பின் அடிப்படையில் பாண்டியனுக்கு பின்னால் சென்று நாராயணசாமியை ஆதரித்தனர். சண்முகத்திற்கு இது அரசியலில் ஒரு விளயாட்டு அது அப்படித்தான் என நினைத்திருந்தாலும் அந்த நிகழ்வை முற்றாக குழப்பியடித்தார் . அன்று நராயணசாமிக்கு பதிலாக அவரே வந்திருந்தால் இது நிகழ்வாய்ப்பில்லை


நாராயணசாமியை எவ்வகையிலும் ஏற்கமுடியாத அரசியல்வாதி என்றே மதிப்பிடுகிறேன். அது அவருடைய வரலாற்றுப் பார்வையாலும் அவருடைய அரசியல் நடைமுறையாலும் அவர்மேல் வைக்கத்தக்க மதிப்பீடு.அவர் தன்னளம் குறித்து மட்டும் சிந்திப்பவர் அது ஜனநாயகத்திற்கு நேர் எதிரானது. அது பிறரின் நல்வாழ்வுக்கு எதிரானது, அறுதியில் அழிவை மட்டுமே கொண்டுவருவது. அரசியலில் தான் பிழைத்திருக்க தன்னை மறுப்பவர்களை அல்லது ஏற்காதவர்களை எதிரிகளாகக் கட்டமைத்துக் கொள்வதும் . அந்த எதிரிகளை அழிக்க முற்படும். எப்போதுமே அது எதிரிகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும். எதிரிகளுக்கு எதிரான செயல்பாடாகவே தன் அனைத்துப் பணிகளையும் வகுத்து வைத்திருந்தார் . அவருக்கு நேர்நிலைச் செயல்பாடே இருந்ததில்லை . 2016 களில் பதவியேற்று மிக அவமானகரமாக பதவியை பரிகொடுத்து முதல்  காங்கிரஸ் முதல்வர். அதுவரை காங்கிரஸ் ஆட்சி கவிழ்கப்பட்டதில்லை. காலம் அவரவர் வழிமுறைக்கு அவர்கள் பாணியில் பதில் சொல்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக