ஶ்ரீ:
பதிவு : 633 / 823 / தேதி 29 ஜூலை 2022
* அணுக்கனின் தூரம் *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 29 .
இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்களுக்குள் நாராயணசாமி கொண்டு வைத்த பொறி “பாண்டியன்”. அவன் அதை தெரிந்து செய்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். புரிந்த அந்த நொடி முதல் அவனுக்கு அனைத்தும் கைமீறி போய் கொண்டே இருக்கும் பதைப்பு உருவாகி இருக்கலாம் . தொடர்ந்து அதை சரி செய்ய முயன்று தோற்ற போதுதான் நாராயணசாமி மீது அவன் கசப்படைந்திருக்க வேண்டும் . இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை நியமிக்க அவர் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்கிற நிதர்சனம் அவன் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு தெரிந்திருக்கலாம் .இளைஞர் அமைப்பை செயலிழகச் செய்வதின் பின்னணி சண்முகத்தை வீழ்த்துவது மட்டுமே என்றால் சண்முகம் வீழ்ந்தும் நாரயணசாமியின் நிலைப்பாடு அதுவாகவே தொடர்ந்தது . உத்வேகத்துடன் செயல்படுவது மட்டுமே அரசியல் ரீதியில் தன்னை முன்னெடுக்கக் கூடிய ஒரே சாத்தியக் கூறு. அதற்கு தடையாக இருக்கும் நிலைக்கு பின்னால் அவன் வேறொன்றை பார்த்திருக்க வேண்டும் . அது அவனை நாராயணசாமியிடமிருந்து மன அளவில் வெளியேற்றியது. அதன் பின் தனது இறுதி காலம்வரை பல தலைவர்களை நோக்கிச் சென்று கொண்டே இருக்க வைத்தும் எங்கும் நிலைகொள்ள இயலாமல் செய்தது . நான் அவனை தொடர்ந்து எச்சரித்தது அது போல ஒன்றை . நாராயணசாமியின் அரசியல் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி கொண்டவானாக இருந்தாலும் அவனுக்கு தன்னை அரசியலில் முன் வைக்க வேறு வழிகள் இல்லாமலாகியிருக்கலாம். இளைஞர் அமைப்பில் அவன் உருவாக்கிக் கொண்டது எல்லா தலைவர்களும் காணும் அதே கனவு. அதை தன்னை மையப்படுத்தி அணைத்தையும் கட்டமைக்க முயல்வது . அரசியல் குறித்து தனக்கு பெரிய கனவிருந்ததை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னிடம் வெளிபட்டு இருக்கிறான்.
பாண்டியன் சிறந்த இரண்டாம் நிலை தலைவராக உருவெடுத்திருக்கும் வாய்ப்பு அதிகம். அவனது முதன்மை சிக்கல் அவன் யாரிடம் சென்றாலும் அவன் மிகச்சரியாக உணர்ந்தது அவனை அவர்கள் ஏற்கவில்லை என்பதுடன் அனைவருக்கும் அவன் மீதிருந்து அவநம்பிக்கை உணர்ந்திருக்க வேண்டும் . அது நாராயணசாமியால் உருவானது. அவர் நேர்நிலை அரசியல்வாதியல்ல என்பதால் பலர் அவனிடமும் அதைப் போன்ற ஒன்றை எப்போதும் எதிர் நோக்கியிருந்தனர். பழகிய அனைவரும் காட்டிய அதீத போலி மரியாதை ஒரு கட்டத்தில் அவனுக்கு சலிப்பைக் கொடுத்திருக்க வேண்டும். அவர்களின் நம்பிக்கையை அடைய அவன் ஒருபோதும் முயற்சிக்கவில்லை அல்லது அதற்கு தேவையில்லை என நினைத்திருக்கலாம். காரணம் அவர்கள் வழியாக அவனால் நாராயணசாமியை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது .
நாராயணசாமி மிக சிக்கலான அரசியல் ஆளுமை யாரும் அடைந்திராத வெற்றிகளை மிக சிறிய வயதில் எட்டிப்பிடித்திருந்தார். அவர் தனக்கு முன்னால் வைத்துக் கொண்ட அந்த ஆழ் மௌனம் பிறருக்கு கடக்க முடியாத பெரிய தடை. அது அவருடன் யாரும் உரையாட முடியாமற் செய்தது . ஒரு சிறிய மாநிலத்தில் அரசியல் விழுமியமும் அதற்கு ஒத்த தலைவரை நான் அடைந்தும் எனது வெற்றி ஏன் தடைபட்டது என்கிற கேளவியை உருவாக்கிக் கொண்டு மேலே நகரலாம் என நினைக்கிறேன். பாண்டியன் நாராயசாமியின் அந்த கடக்க முடியாத மௌனத்தால் சீண்டப்பட்டு தொடர்ந்து வெளியேறி அமைதியழிந்து இறுதியில் உயிரை மாய்த்துக் கொண்டான். சிலர் அனது சொந்த சிக்கலுக்கு பலியானான் என்றனர் . அரசியல்வாதி யாரும் எளிதில் தற்கொலை செய்து கொள்வதில்லை. காரணம் தனது சிக்கல்களில் இருந்து எழுந்து வெளிவரும் பாதையை அவர்கள் கண்டடைந்து விடுவார்கள். அந்த கூறுதான் அரசியலாளர்களை சராசரிகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இந்த அக விவாதத்தில் பாண்டியன் ஒரு மாற்றமுடியாத தரப்பு. இங்கு ஒரு உயிர் எடுக்கப்பட்டிருக்கிறது. தற்கொலை உச்சகட்ட தன்னிரக்க வெளிப்பாடு மட்டுமல்ல அது இந்த சமூகத்தை நோக்கிய உச்ச கட்ட வெறுப்பை வெளிப்படுத்தும் அவர்களின் கடைசி வன்முறை. அது மீளவே முடியாத ஒரு அழுத்தமான செய்தி.
இதுவரை சொன்னவற்றை மீளவும் இப்படி தொகுத்துக் கொள்கிறேன். அரசியலிலும் விழுமியம் தவிற்க முடியாத ஒன்று என நினைக்கும் எனக்கு அந்த எண்ணத்தை மேலதிகமாக கொண்டு சென்ற தலைவராக சண்முகத்தை அடையாளம் கண்டு அதிகாரத்தில் அவருக்கு அருகமரும் வாய்ப்பும் இருந்தும், ஏன் என்னுடைய முயறசிகள் வெற்றி பெறவில்லை?. ஒன்று அரசியல் சமூகத்தில் அதற்கான இடமில்லை என்பது அடிப்படை புரிதல். இரண்டு அரசியல் மற்றும் பொது சமூகம் அரசியலாளர்களுக்கு இணையான தங்களின் பிறிதொரு அரசியலை முன்வைக்கிறார்கள். அவர்கள் மாற்று அரசியலை விரும்புவதில்லை. அது ஒரு ஆற்றின் ஒழுக்கு போல அதில் இணைந்து பயணிக்க தெரியாத அல்லது அத்துடன் முரண்படும் போது ஏதாவதொரு கரையில் ஒதுக்கி விடுகிறது. சண்முகத்தின் மன ஒழுக்கு அந்த ஆற்றைப் போல அவர் தனக்கு எதிரானவர்களுடன் மட்டுமல்ல வேண்டியவர்களுடனும் எந்நேரமும் ஒரு போரில் இருந்திருக்கிறார் . அரசியல் அப்படிப்பட்டவர்களுக்கானது. இதில் சண்முகம் நாராயணசாமி இருவருக்கும் அதிக தூரமில்லை என நினைக்கிறேன்.
1998 களில் இளைஞர் காங்கிரஸ் முழு நிர்வாகக் குழு உருவாகி அதன் முதல் கூட்டம் ஹோட்டல் சற்குருவில் கூட்டிய இரண்டு வருடம் பிறகே அவனால் இளைஞர் காங்கிரஸை பிளக்க முடிந்தது. பாண்டியன் அதை துவக்கி இருந்தாலும் 2000 ல் அது நிகழ வேறு காரணிகள் இருந்தன . சண்முகம் முதல்வரானது முதல் எங்கோ எதுவோ சரியாக அமையவில்லை. அந்த முதற் கோணல் நிகழ்ந்த போது அருகிருந்து பார்த்து திகைத்திருந்தேன். அங்கிருந்து அடுத்தடுத்து நிகழவிருப்பதை ஊகிக்க முடிந்தது . சண்முகத்திற்கு அரசியல் அணுக்கராக இருந்து தாசில்தார் வைத்தியநாதன் செல்லப் பெயர் “வில்லங்கம்” காரணப் பெயரும் கூட. முதல்வரின் செயலாளராக வந்திருக்க வேண்டியவர். அவர் ஆகச் சிறந்த வாய்ப்பு என நான் சொல்ல வரவில்லை. அவர் அந்த பதவிக்கு வந்திருந்தால் சண்முகத்திற்கு என் போன்றவர்களுக்கும் வேறு பலவித திருகல்களை கொடுத்திருப்பார்.அரசியலில் நண்பர்களாக அடைவது அங்கிருக்கும் அரசியலாளர்களை. அவர்களில் கொஞ்சமேனும் நட்புக்கு உகப்பாக செய்யக்கூடிய சிறு கூறு இருக்கும் . அது போல ஒன்று முற்றாக இல்லாதவர்கள் அரசியலுக்கு ஏற்றவர்களாக இருப்பதில்லை . வைத்தியநாதனை அந்த பதவிக்கு கொண்டுவந்திருந்தால் சண்முகத்திற்கு குறைந்த பட்சம் அந்த அவமானகரமான வீழ்ச்சி நிகழ்ந்திருக்காது.
காலம் எப்போதும் ஒரு இலக்கை முடிவு செய்தே யாரையும் எங்கும் அமர வைக்கிரது அதில் சாஸ்வதமான ஏற்பாடு என ஒன்றில்லை. எல்லாம் முடிவுறும் தேதி இடப்பட்டே செயல்படுகின்றன. ஆனால் ஒரு காலகட்டத்தில் அதனுடன் பயணிப்பவர்கள் பிறர் பார்க்க இயலாத சிலவற்றை பார்க்கும் நல்லூழ் கொண்டவர்கள். சராசரிகளுக்கு சற்று மேலானவர்கள் அவர்களின் கோணத்தில் “சில தவறுகள் நிகழாமல் இருந்திருந்தால்” என்கிற ஒன்று எப்போதும் இருக்கும். இது அப்படிப்பட்ட ஒன்று . சண்முகம் முதல்வராக அமரும் முதல் நாள்வரைக்கும் நானும் வைத்தியநாதனும் கவர்னர் மாளிகைக்கு அருகில் அமைந்து கொண்டிருந்த மேடையை பார்த்துக் கொண்டிருந்தோம். இன்னும் இரண்டு நாட்களில் அதில்தான் அமைச்சரவை பதவி பிரமாணம் நடைபெற இருக்கிறது . அவரின் நடையின் துள்ளலை நான் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று சன்னதம் கொண்டவர் போல்தான் இருந்தார். நாளை அது இன்னும் புதிய உச்சம் கொள்ளும்.
ஒரு அரசு அதிகாரி அரசியலாளனாகும் போது நிகழும் விபரீதம் இன்னொரு அரசியலாளன் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடியது. சட்டமும் அதை மீறும் அதிகாரமும் இணைவது மிக ஆபத்தான சேர்க்கை. ஆனால் நான் அமைக்க இருக்கும் அமைப்பிற்கு வைத்தியநாதன் பெரிய அளவில் உதவியிருக்கக் கூடும். அதை எனக்காக செய்யப்போவதில்லை என்றாலும் சண்முகத்திற்காக அதை மறுத்திருக்க மாட்டார். வைத்தியநாதன் சண்முகத்தின் இயல்பான சிந்தனை முறையில் ஒரு நிறத்தம் கொண்டு வந்து அதை மீளவும் ஒருமுறை பின்னோக்கி ஓட்டிப்பார்க்கச் செய்யும் சாமர்த்தியமுள்ளவர். அதற்கான சொற்கோவையை மிக தெளிவாக வரையறை செய்து கொள்வதை பார்த்திருக்கிறேன். அதன் பின் சண்முகத்தின் சிந்தனையோட்டம் மெல்ல அவர் எடுத்து வைப்பது உள்வாங்கிக் கொள்கிறது. எனக்கு இது பல முறை நடந்திருக்கிறது. அவரிடம் அதை வெற்றிகரமாக செய்ய வேறு எவராலும் இயல்வதில்லை. ஆனால் அவர் உதவக்கூடிய எல்லைகளை நான் மிக கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். நான் நாளை அவர் செய்ய இருக்கும் அலம்பல்களை கற்பனையில் பார்த்துக் கொண்டிருந்தேன. அவர் அதை செய்து கொண்டிருந்து நேரத்தில் பண்ணீர் செல்வத்தை செயலாளராக அரசு அறிவித்த போது . வில்லங்கத்தை விரும்பியவரகள் எதிர்த்தவர்கள் அவரால் கசப்படைந்தவர்கள் என அனைவரும் அதிர்ந்திருந்தனர். அது ஒரு கலையெடுப்பு போல நிகழ்ந்தது என அனைவராலும் புரிந்து கொள்ளப்பட்டது. அது சரியானது என்கிற வாதத்தை அதன் பின் சண்முகமே எப்போதும் வைக்கவில்லை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக