ஶ்ரீ:
21.01.2023
புதுவை ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா குழுவின் துவக்க விழா மிக இனிதாக மாலை ஆரம்பித்து இரவு 9:00 மணிக்கு முடிந்தது. வரலாற்று முக்கியத்துவ நிகழ்வாக நான் கருதிய ஒன்று எப்போதும் போல அன்றாடத்தில் இணைந்து அதுவும் ஒன்றென நடந்து முடிந்தது. நினைக்கும் உச்ச நிகழ்வு ஒன்று எந்த கிரீடமும் அணியாது கடந்த காலத்தில் கலந்தாலும் சில மட்டும் மீளவும் தனது நோக்கத்திற்கான அடையாளத்தை எதிர்காலத்தில் வெளிப்படுத்தி விடுகிறது. பல வித எண்ண அலைகளோடு இருந்த எனக்கு மாலை நிகழ்வு எந்த இடரும் இன்றி துவங்கி உஷ்ணம் அடங்கி மெல்ல அமைதி திரும்பி இனி அடுத்தது என்ன என்பது சிந்தனையாக இருந்தது. காரணம் நான் அந்த கூட்டத்தில் முதலில் பேச வேண்டும் என தீர்மானித்திருந்தேன். மேடையில் பேசும் அந்த கணம்வரை அது எனக்கு எப்போதும் கடும் மனவழுத்ததை கொடுப்பது. பேசுவதே இயல்பில் நிகழாத போது மேடையில் பல்லாயிரம் பேர்களுக்கு முன்பாக அதை முயற்சிப்பது வீண் வேலை என்றாலும் சிலவற்றில் அதை செய்தே ஆக வேண்டிய நிர்பந்தம் இருக்கும். அது நிகழும் கணம் என்னை முழுவதுமாக திரட்டிக் கொள்வேன். பிறிதொருவரிடம் கொடுக்க முடியாத ஒன்றாக அதை எப்போதும் நோக்கியிருந்தேன். மேடை ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு அங்கு நிகழ்வது நாம் நினைக்கும் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. தொகுத்தளிப்பவர்கள் அவரவர்களுக்கானதாக அது ஆகிவிடுவதால் மேடையில் நிகழ்வதை இறுதி வரை கணிக்க இயலாது என்பது அனுபவத்தில் அறிந்திருக்கிறேன். துவக்க விழாவிலிருந்து கிடைக்கும் உந்துதல் என்னை தொடர்ந்து செலுத்தும் என நினத்திருந்தேன் . அன்று திக்கல் இன்றி என் பேச்சு இருந்தது. பதிவு செய்து கேட்டால் நான் பல இடங்களில் நான் என்னிடம் வார்த்தைகளுக்கு மன்றாடுவது தெரியும்.
விருந்தினர்களை மேடைக்கு அழைப்பதில் இருந்து அவர்களுக்கு மரியாதை செய்யும் விழாக் குழு நிர்வாகிகளை அழைப்பது பின் குழுவின் நோக்கம் பற்றி சிறிய உரை என நிறைவுறும். இரண்டாவதாக எனக்கான அங்கீகராம் நான் அதை அந்த திரளில் இருந்து பெற்றுக் கொண்டிருக்கிறேன். பல வருடம் அங்கு தொடர்ந்து அவர் உபன்யாசம் செய்திருக்கிறார் ஆனால் அதிலிருந்து எனக்கு ஒரு சொல் நினைவில்லை காரணம் உபன்யாசம் துவங்கிய பின்னர் நான் அமர்ந்து அதை கேட்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளை தீர்மானித்து அதை உரியவர்களிடம் சொல்லுவதும் அது நிகழ்ந்திருக்கும் அளவை கொண்டு அடுத்து செய்ய வேண்டியது பற்றிய முடிவுமாக்க சென்றாலும். நான் எனக கான புரிதல்களை அந்த திரளில் இருந்து பெற்றிருக்கிறேன்.
அன்று மாலை நிகழ்விற்கு செல்லும் முன்னதாக என்னுடனான விவாதத்தின் போது வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி முன்வைத்தது “இதுபோன்ற செலவேறிய விழாக்களை எடுக்க என்ன காரணம் இருக்கப் போகிறது. பொருளியல் தேவையை நோக்கி என்றால் அது முன்னுரிமை பெற்றால் பிற அனைத்தும் அதற்கு பலி கொடுத்தே நிகழும் . பின் ஒரு இயக்கம் அதில் உயரிய கோட்பாடுகளை எப்படி வைக்க முடியும். இது போன்று திரளாக கூடும் கூட்டம் முன்பாக என்னால் அனைவருக்கும் உகந்த “சனாதனம்” குறித்த பொது விஷயங்களை மட்டுமே வைக்க முடியும்” என்றார். அதற்கு நான் “சானாதன தர்மம் என்கிற பொது விஷயத்தை பேசுவதற்கு உங்களை அழைக்க வேண்டியதில்லையே அதற்கு சம்பிரதாயத்தை சாராத பலர் இருக்கின்றனர். அதில் வைணவத்தின் இடமென்ன என பார்க்கும் பார்வை மிக முக்கியமானது என நினைக்கிறேன். அதை நோக்கிய சிறு பயணமே இந்த இயக்கம் துவங்கி வெற்றி பெற்றதாக நினைப்பேன்.
இதுவரை மாற்றுத் தரப்பு என முன்வைக்காது பிற ஒன்றை நோக்கிய விமர்சனப் பார்வையாக மட்டுமே வைணவ கல்வியை கொண்டு சென்றனர். பிற எதனுடனும் அதனால் உரையாட இயலாமலானது. அது நஷ்டமா என்றால் நிச்சயம் நஷ்டம்தான். அனைவரையும் வைணவர்களாக மாற்றுவதற்கான முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. அது எதார்த்தத்திற்கு எங்கோ வெளியில் நிற்கும் செயல். இன்று இருப்பவர்களை தக்க வைக்க கூட அந்த நூல்கள் பயன் படப்போவதில்லை என்பது கள யதார்த்தம். அதே சமயம் எனது புரிதல் “அறம்” என சொல்லப்படுகிற விஷயங்களுக்கு இந்த நவீன உலகில் என்ன இடம். அது எந்த அறமாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதிகாசங்களும் காப்பியங்கங்களும் அதை விரித்து சொல்லி சென்றாலும் அதை இன்று எங்கு எப்படி பொருத்திப் பார்பது என்கிற புரிதலை நோக்கி அழைத்துச் செல்ல முடியுமா என நினைக்கிறேன்.
நீங்கள் “வாட்டர் கூப்பர்” என சொல்லப்படுகிற இந்தியாவின் பெரிய தணிக்கை நிறுவனத்தில் உயர் ஊதியத்தில் இருந்தவர். எது உங்களை அதை உதறி இந்த இடத்திற்கு வர வைத்தது என்பது மைய மேசுபொருளாக இருந்தால் அதை வைணவ இலக்கியத்தில் எங்கு எப்படி வைத்து பேச இயலுமானால் இந்த இயக்கம் துங்கிய நோக்கம் நிறைவடைந்ததாக நினைப்பேன். எனக்கு உங்களிடம் உள்ள செய்தி அதுவாகத்தான் இருக்கும். “வைணவர்கள் ஏக கண்டர்கள்” சொன்னதை மட்டுமே சொல்லுவார்கள் அதில் புதிதாக நவீனமாக எதையும் செய்ய மாட்டார்கள் என்பது அன்றை பொருளில் இருந்து இன்றைக்கு மாற்றமடையவில்லை என்பதை சொல்ல போகிறோம் என்றால் ஆயிரம் வருடம் கழித்து இன்று நம்மிடம் எந்த மாறுதலும் இல்லை ஆகவே நமக்கு சொன்ன சட்டங்களே இன்னும் பல நூற்றாண்டிற்கு நீளும் என்றால் அதைவிட அபத்தம் பிறிதில்லை. இங்கு மாற்றம் என எதுவும் நிகழவில்லை என்பதை யார் ஏற்க போகிறார்கள். அது உண்மையில்லை என அனைவருக்கும் தெரியும்.
நான் சம்பிரதாயத்தில் புரட்சி கொண்டு வருவதை பற்றி பேச வரவில்லை . எனக்கு புரட்சி மீது தம்பிக்கை இல்லை. ஆனால் மரபும் நவீனமும் ஒரு புள்ளியில் இணைந்தாக வேண்டும். இந்த விழா குழுவின் நோக்கம் அதை நோக்கிய பயணத்தின் முதல் அடி என்றாலே போதுமானது” என்றேன். மேலும் அது விவாதத்திற்குறிய காலமில்லை அது நான் முற்றும் எதிர் நோக்காத நிகழ்வு என்பை திரட்டிக் கொண்டு அவரை சந்திக்க சற்று அவகாசம் தேவையாகிறது என்பதால்“இப்போது நேரம் மிக குறுகியதாக இருக்கிறது துவக்க விழாவிற்கு பிறகு இது பற்றி பேசலாம்” என கூறி அவரை சமாதனப்படுத்தினேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக