ஶ்ரீ:
மணிவிழா - 57
25.01.2023
* மனமும் தூக்கமும் *
அன்று இரவு எளிதில் உறக்கம் வருவதாக இல்லை . மனம் எதையெதையோ தொட்டெடுத்து துழாவிக் கொண்டிருந்தது. வேளுக்குடி பாண்டியில் இருக்கும் மூன்று நாட்களில் தேசிகர் சபையினர் அவருக்கென ஏதாவது நிகழ்வு ஒருங்கி அதற்கு அவர் சென்று வந்தால் இங்கு ஏற்பாடாகி இருக்கும் மொத்த நிகழ்வும் அதன் பின்னணியும் நீர்த்துப் போகும். மேலும் அது ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழுவை பிளவுபடுத்திவிடும் என்பதை அவர் அறிவாரா?. நான் அவரை எப்படி தடுக்க முடியும். தடுக்க முயலும் தோறும் அது விளக்கம் கேட்டுக் கொண்டே இருக்கும். மெல்லிய பதட்டம் எழ மனம் சிந்தனையில் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தது. இனி தூக்கம் வராது என்கிற இடத்திற்கு வந்து சேர்ந்ததும் வழக்கமாக என்னை ஆற்றுப்படுத்திக் கொள்ளும் சொல்லை சென்றடைந்தேன். “எது ஆவதோ அது அப்படியே நிகழட்டும்” என ஆழ் மனம் ஒரு ஊழ்கச் சொல் போல ஒன்றை தேர்ந்தெடுத்து அதை சொல்லியபடி இருக்க எப்போது தூங்கிப் போனேன் என தெரியாது.
நான் தூக்கத்தை வேறொரு முறையில் வரையறை செய்திருந்தேன். ஆழ்மனம் பல்லாயிரமாண்டு மானுட கலாச்சார பண்பாடு வரலாற்று படிமத்தின் தொகை. அவற்றை அது முழுவதுமாக தன்னடக்க தகவல்களாக மட்டுமின்றி மைய விசையில் ஒரு அலகு போல செயல்பட்டு நம்மை அதனுடன் இணைக்கிறது. கனவை கொடுக்கும் தூக்கம் அங்கிருந்தே நம்மை தொடர்புறுத்துகிறது போலும். தூக்கத்திற்கான முயற்சிகள் உடலில் நிகழ்ந்தாலும் அது உடலை சார்ந்தது மட்டும் இல்லை. ஆழ்ந்த தூக்கம் மரணம் போல பிறிதொரு இடத்தில் இருந்து கிளம்பி வந்தது போல நம்மை வாரியெடுத்து செல்வது. யாக குண்டத்தில் அக்னி எழுந்து அடங்கிய பிறகு நீடிக்கும் ஒருவித “தணப்பு” பின் சாம்பலாக எஞ்சுகிறது. அதுபோல தூக்கம் மனதின் பரபரப்புகளை அக்னியின் தணலாக மாறி எரிக்கிறது அதில் நேற்றைய நினைவுகள் சாம்பலாக எஞ்சும் அந்த தருணத்தில் வந்து தூக்கம் நம்மை தொட்டு அழைத்து செல்கிறது .
தூங்குவதற்காக மனதை தயாரித்த யாரும் தூங்கியதில்லை. அங்கு நினைவுகள் மீள மீள பற்றி எரிந்து கொண்டே இருப்பதால் அது எரிந்து அடங்கும் வரை தூக்கமென்பது இல்லை. அதில் நேற்றைய சோர்வுகள் சாம்பலாகாமல் எஞ்சினால் அதன் மச்சம் மனதை தொடர்ந்து வாட்டி வதைக்கிறது . மனதை தணலுக்கு அருகில் கொண்டு செல்வது மட்டுமே நாம் செய்யக்கூடியது. பின் தூக்கம் என்பது புறவயத்தில் இருந்து வந்து உடலுடன் ஒட்டி தானாக திகழ்வது.
நம்மால் புரிந்து கொள்ள முடியாத அபத்தக் கனவுகளாக தோன்றுபவை ஆழ்மனப் படிமங்களின் மிக எளிய தொடர்புறுத்தல்கள் . சில மனிதர்கள் அதன் உந்துதலால் புதிய பார்வையை கருத்தியலை கண்டடைகிறார்கள். புகழ்மிக்க எழுத்தாளர்கள் தங்கள் மையக் கருத்தை அங்கிருந்து பெற்ற பிறகு அதன் உதவியை கொண்டு எழுதி எழுதி அந்த கருத்திற்கு வலு சேர்க்கும் பிற கருத்தியல்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.அதில் எழுத்தாளர்கள் தங்கள் கனவை அதில் வேறொரு புள்ளியில் துவங்குகிறார்கள். ஜெயமோகன் போன்றவர்கள் நாட்களை வீண்டிக்காத தங்கள் வாழ்கை முறையால் ஆழ்மனத்துடன் மிகத் தீவிரமாக இணைத்துக் கொண்டு அங்கிருந்து தங்கள் தேடலை எழுத்தின் மூலமாக கண்டடைந்து கொண்டே இருக்கிறார்கள். அவருக்கு எழுத்து ஒரு யோகம் , தியானம்.
மறுநாள் காலை எழுந்த போது மனம் தெளிவுடன் அமைதியாக இருந்தது. நான் எனக்குள் மீள மீள சொல்லிக் கொண்ட ஒன்று “நான் இங்கு யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை”. எதனுடைய வெற்றியும் எனக்கான கல்வியாக கற்றலாக மட்டுமே அமையும் என்கிற இடத்தில் என்னை நிறுத்திக் கொண்டேன் . அது இப்படி மிக பிரமாண்டமான நிகழ்வின் வழியாக திகழ வேண்டும் என்பது எனது அவதானிப்பு யதார்த்தத்தில் அதற்கு அவசியமில்லாமல் இந்த பெரும் முயற்சி எதாவதொரு காரணத்தால் நிகழாதும் போகலாம் ஆனால் எனக்கு கிடைக்க வேண்டிய ஒன்று எனது வாழ்கை பயணத்தில் எங்கோ வைக்கப்பட்டிருக்கிறது. எனது தேடல் அசலானது என்றால் அது என்னை கைவிடாது. அப்படியும் கைவிடுமானால் அதுவும் ஊழ் என ஏற்க வேண்டியது தான் . அதுவரையில் பெற்றதில் இருந்து எனக்கானதை உருவாக்கிக் கொள்வேன். அதுவே இந்த பிறவிக்கானது. போதுமானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக