ஶ்ரீ:
மணிவிழா - 47
11.01.2023
விழா துவங்குவதற்கான அறிவிப்பை செய்ய நானும் மேடையேறாமல் அதன் பக்கவாட்டு படிகளில் நின்றபடி விழா குழு துவங்கும் அறிவிப்பை வெளியிட்டேன். மின் விளக்குகள் அமர்ந்திருந்தவர்கள் நோக்கி திருப்பி வைக்கப்பட்டிருந்ததால் மேடையில் இருந்து அங்கு முழுவதுமாக திரண்டவர்களை பார்க்க முடிந்தது. போடப்பட்டிருந்த நான்காயிரம் நாற்காலிகள் எண்ணிக்கைபடி காலியாக இருந்த சிலவற்றை தவிற்து பார்த்தால் நிறைந்திருந்த கணக்குதான். மேடைக்கு அருகில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் அமர்ந்திருந்தவர்கள் சில நூறு மற்றும் பின்னால் அமர இடமின்றி நின்றிருந்தவர்களை சேர்ந்தால் கூட்டம் ஐயாயிரத்தை தாண்டியிருந்தது. மேடைக்கு அருகில் நின்று அந்த முழு திரளையும் பார்த்தது மிகுந்த உளவெழுச்சியை தந்தது. வென்றிருக்கிறேன் என எனக்கு சொன்னது . இதை கொண்டு முன்னகர பெரும் பலமும் கணக்கும் தேவை.
மேடையில் அமர்ந்திருந்தவர்களுக்கு சால்வை மற்றும் மாலை மரியாதை செய்யும் நிகழ்வு துவங்கியது. 1200 சதுரடி மேடை இருவர் மட்டுமே அமரும் படி ஒருங்கி இருந்தது. திருக்கோவிலூர் ஜீயர் அமர நடு நாயகமாக உயரத்துடன் கூடிய மணையும் அதற்கு அருகே வேளுக்குடி அமர சற்று உயரம் குறைந்த பிறிதொரு மணையும் போடப்பட்டிருந்தது. அது வைணவ ஆச்சாரியர்களுக்கு அளிக்கும் முறைமை. வழக்கமாக துண்டை உடலுக்கு குறுக்காக போட்டு அமர்ந்து உபன்யசிக்கும் வேளுக்குடி ஆச்சாரியரின் அருகாமையின் பொருட்டு முறைமையை பேணுபவராக துண்டை இடுப்பில் கட்டியிருந்தார். மேடையில் உள்ள ஆளுயர குத்துவிளக்கை ஜீயர் ஸ்வாமியின் மனைவி அம்மங்கார் ஏற்ற ராமாநுஜர் உருவப்படத்திற்கு மாலை மற்றும் ஆரத்தி செய்யப்பட்டது.
முதலில் மேடைக்கு நான் அழைத்த போது மறுத்தவர் எனது தொடர் வற்புறுத்தலால் மேடை ஏறி குத்துவிளக்கை ஏற்றினார். எனக்கு அம்மங்கார் இன்று துவங்கும் இந்த இயக்கத்திற்கு மிக முக்கியமானவர். ஒரு வகையில் இந்த நிகழ்வின் ஆரம்ப காரணம். அயோத்தி யாத்திரையின் போது இந்த திட்டம் உருவாக அவருடைய பங்கு முக்கியமானது பங்கு . அயோத்தி யாத்திரை முடித்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தோம். பயணத்தில் கலந்து கொள்ள விமானத்தில் சென்றிருந்த எனக்கு ஜீயருடன் பேசும் வாய்ப்பிற்காக அவர் பிரயானம் செய்த ரயிலில் டிக்கெட் எடுத்திருந்தேன்.பாட்னாவில் இருந்து சென்னைக்கு இரண்டு நாள் பயணம் முதல் நாள் குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் மிக இனிமையாக சென்றது. இரண்டாம் நாள் காலை உணவிற்கு பின் நல்ல தூக்கம். எப்போதும் ரயில் பயணங்களில் அப்படி ஒரு தூக்கம் ஏன் வருகிறது என கேட்டுக் கொண்டதுண்டு. யாரோ எழுப்ப மேல் பெர்த்தில் இருந்து இறங்கி வந்தேன் கிழே அனைவரும் அமராமல் நின்று கொண்டிருக்க ஜீயரும் அம்மங்காரும் எனக்கு எதிர் கீழ் பெர்த்தில் அமர்ந்திருந்தார்கள். என்னுடன் பேச வேண்டும் என ஜீயரை அவர்தான் எங்கள் கூபே விற்கு அழைத்து வந்திருந்தார். ஜீயர் என்னுடன் பேச வேண்டும் என விரும்பினார். நீண்ட நேரம் பேசிய போது உருவானது தான் ஆயிரமாவது ஆண்டு விழா குழு துவக்கம். அதன் நன்றியின் பொருட்டு அம்மஙழகார் குத்துவிளக்கை ஏற்றி வைத்து விழா துவங்கியது.
எனது சிறிய துவக்க உரைக்கு பின்னர் கோசகன் பட்டாசாரியார் இறை வணக்கமாக நம்மாழ்வாரின் பாசுரத்தில் இருந்து தனது ஊர் தேரழுந்தூர் பெருமாள் குறித்த சில பாடல்களை பாடினார். ஜீயர் மற்றும் வேளுக்குடி இருவருக்கும் மரியாதை செய்ய விழா குழுவின் அத்தனை நிர்வாகிகளையும் ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்தேன். சால்வை அணிவித்தல் அதிலும் சிறிய மதிசூழ்தல் இருந்தது. விழா குழு துவக்கம் பற்றியும் அதில நிர்வாக பொறுப்பில் இருக்கும்படி கேட்க சில ஆளுமைகளை அணுகினேன். அவர்களில் பிரதானமான சிலர் வேளுக்குடியை ஏற்றாலும் திருக்கோவிலூர் ஜீயரை கொண்டு துவங்க எதிர்பை வைத்தனர். முக்கிய நிர்வாகிகளில் அவரை மறுத்தவர்களை ஜீயருக்கு சால்வை மற்றும் மாலை மரியாதை செய்யும் அகிவிப்பை செய்வித்தேன். ஒரு நிமிடம் திகைப்புற்ற என்னை நோக்கிய போது மென்மையான புன்னகையை அவர்களுக்கு அளித்தேன். அவர்கள் தங்கள் நெறிப்படி தங்களை இன்னார் என ஜீயருக்கு அறிவித்து அவரை விழுந்து வணங்கி மரியாதை செய்தனர். ஜீயர் அதற்கான அர்த்தம் அறிந்து என்னை நோக்கி புன்னகைக்க நான் பதிலுக்கு அவரை வணங்கினேன். அங்கு கூடி இருந்த திரள் எனக்கு அதை செய்யும் வல்லமையை வழங்கி இருந்தது. அதை அங்கு செயல்படுத்தினேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக