https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 23 ஜனவரி, 2020

அடையாளமாதல் - 515 * உடைவிற்கு அப்பால் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 515

பதிவு : 515  / 703 / தேதி 23 ஜனவரி  2020

உடைவிற்கு அப்பால் 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 29




சட்டமன்றம் - ஒரு மாபெரும் சூதாட்டக்களம் அதில் புகுந்து வென்றவர் மிக சிலர் , தோற்றவர்களே அதிகம் . தோல்வியுற்றவர்கள் சடலத்தை ஒத்த நிலையை அடைந்தனர் .ஆனால்ஆச்சரியம்  வென்றவர்களும் சில காலம் கழித்து தாங்களும்  தோற்றவர்களே என சலம்பினர்  .பின் யார்தான் வென்றது ? அந்த கேள்விக்கு பதில் சொல்வார் இல்லை .காலம் எப்போதும் வெற்றிகளுக்கு வேறொரு பெயரை கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

சண்முகத்திற்கும் மரைகாயருக்குமான கட்சியின் அரசியல் செயல்பாடுகள் மற்றும்  நிலைப்பாடுகள்  அவரவர்க்கு வாய்த்த  பதவியை ஒட்டி உருவானது என சொல்ல இயலாது என நினைக்கிறேன் . இயல்பிலேயே அந்த நிலைபாடுகள் அவர்களுக்குள் உருவாகி வந்திருக்க வேண்டும் . கட்சி தலைவரான சண்முகத்திற்கு அமைப்பை உருவாக்கி அதை நிர்வகிக்கும் விழைவு அவர் கட்சித் தலைவராக பொறுப்பேற்ற வைத்தது . பிறகு அதில் தனக்கென ஒரு நிரையை உருவாக்கி கொண்டார் . தன்னிருப்பை கையகப்படுத்தி கொண்டார் .

காங்கிரஸின் ஆட்சி முகமாக பார்க்கப்பட்ட மரைகாருக்கு தனது இடத்தை தக்கவைத்துக் கொள்வது  அத்தனை எளிதாக இருக்கவில்லை. இத்தனைக்கும்  பலர் முயன்று தோற்ற முதல்வர் பதவியை இறுதிவரை மிக திறமையாக நிர்வகித்தார் என்பது பொது புரிதல் . தன்னை பின்தொடர்பவர் , தொண்டர் என யாரையும் உருவாக்கி கொள்ள விழையவில்லை . அதுவே அவரது வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கலாம் அவர் பலருடன் செய்து கொண்ட சமரசங்கள் அவரை அரசியல் வெற்றியாளர் ஆக்கி இருக்க வேண்டும் .அவரது காலம் மிக சிறந்ததாக பலரால் சொல்லப்படுகிறது . தனக்கான இடத்தை அவர் ஒவ்வொரு முறையும் போராடியே அடைந்தார் .

கட்சிஅரசியல் ஒரு வித விளையாட்டென்றால் , தேர்தல் சீட்டு அரசியல்  வேறு விதமான விளையாட்டு . அதற்கென நிரந்தர விதிகள் ஏதுமில்லை , காரணம்  அது வெற்றி பெற வாய்ப்புள்ள உறுப்பினர்களை மட்டுமே கணக்கில் கொள்வது. அவர்களை அவரவர் பக்கம் அடுக்கிக் கொள்ள அது ஓயாது உருமாறிக் கொண்டே இருப்பதுஅதற்கு ஏற்றார் போல் புது புது கொள்கைகள் உருவாகி வரும் . நேற்று ஒப்புக் கொள்ளப்பட்டது இன்று செல்லாது .

புதுவையில் ஆட்சி அமைக்க பதினைந்து உறுப்பினர்கள் ஆதரவு  தேவை . கூட்டணியில் கிடைக்கும் இருபது சீட்டில் மீதமுள்ள ஐந்து சீட்டு யார் முதல்வர் என்கிற கணக்கை உறுதி செய்வது . அவை பெரும்பாலும் தனித்தொகுதியாக இருந்து விடுகிறது . அதில் நிற்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் நிலையாக ஒரு தொகுதியில் போட்டியிட்டது இல்லை .ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். நெடுங்காடு தவிர பிற தொகுகளில் ஒரு முறைக்கு மேல் எவரையும் நிற்க விடுவதில்லை . அதில் ஊசுடு விதிவிலக்கு. அதில் சிலர் தொடர்ச்சியாக நின்றிருக்கிறார்கள் .

கட்சி ரீதியான பார்வையாக தனது கருத்தை முன்வைப்பதில் சமர்த்தரான சண்முகம் அதை ஒரு கலையாகவே வளர்த்தெடுத்திருந்தார். மூளையை சொடுக்கும் விளையாட்டு யாருக்கும் அவ்வளவு எளிதில் கைவருவதில்லை. மரைகார்  அதற்கு ஈடுகொடுத்தே தனது இடத்தை ஒவ்வொரு முறையும் வென்றைடுத்தார் . சில முறை தோற்றிருக்கிறார். சண்முகம் மற்றும் மரைக்கார் இருவருக்குமான சமரச புள்ளிகள் மிக இயல்பாக அமைந்திருக்க வேண்டும் . அதை 1991 சண்முகம் குலைத்த போது அவருக்கு எல்லாம் மாறிப்போனது .அதுவரை அவருக்கு புரிந்த எதிர்தரப்பாக மரைகாருக்கு பதிலாக வேறு சிலர் வந்து அமர்ந்தபோது , புதிதான ஆட்ட விதிகளை உருவாக்க இயலவில்லை .அதனால் இருதரப்பும் ஏற்கும் சமரசப்புள்ளி உருவாகவில்லை .

சட்டமன்ற ஆட்சி அதிகாரம் பற்றிய நிஜமான கருத்தை என்னால் இன்றளவும் கூட எட்ட இயலவில்லை என்றே நினைக்கிறேன்.சட்டமன்றம் அரசு நிர்வாகம் குறித்த முடிவெடுக்கும் இடம் .சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டிய அரசு அதிகாரிகளுக்கு மக்களின் தேவை , அவசியம் , அவசரம் கருதி விதிகளை தளர்த்தி கொடுக்க , மறுஉருவாக்கம் செய்ய உருவாக்கப்பட்டதே சட்டமன்ற வதுமுறைகள் .அங்கு கட்சி உறுப்பினர்களுக்கு வேலை இருப்பதில்லை

புதுவைக்கு தனிப்பட்ட நிதி ஆதாரம் இல்லை  என்பதால் அது உள்துறையின் நேரடி கட்டுப்பாட்டில்  இருப்பது . பட்ஜெட் பற்றாக்குறையை அது சரி செய்கிறது . கொடுக்கப்பட்ட நிதிக்கு கணக்கு எழுதி தில்லிக்கு சமர்பிக்க வேண்டியது முதல்வரின் பணி .ஏறக்குறைய கணக்குபிள்ளை உத்யோகம் . தனிப்பட்ட முடிவெடுக்கும் அதிகாரமின்மை , சட்மன்ற ஏகமனதான தீர்மானங்களை கூட மத்திய உள்துறை செயலரே நிராகரிக்க முடியும் .

புதுவை முதலவருக்கு தமிழகம் போன்ற அதிகாரங்கள் இல்லாத வெறும் அலங்கார பதவி மட்டுமே . தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களில் அரசு” என்பது முதலவரை குறிக்கும் சொல் .யூனியன் பிரதேசங்களில் அது” துணைநிலை ஆளுனரை குறிக்கும் சொல் . மாநில அந்தஸ்த்து தேவை என கூப்பாடு போடுவது அதனால்தான் .ஆனால் அதை தொடர்ந்து வலியுறுத்தி அடைய முற்படமாட்டார்கள் . நிதி ஆதாரத்தை பெருக்க இயலாமையே காரணம் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்