ஶ்ரீ:
அடையாளமாதல் - 508
பதிவு : 508 / 694 / தேதி 01 ஜனவரி 2020
*எதுவும் விளையாட்டல்ல *
“ ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 22
ஒருவரைப்பற்றிய பிறிதொருவரின் உருவகமும் , புரிதல் என்கிற நம்பிக்கையே கூட ஒருவகையில் அவர் மீதான வன்முறை என்றே நினைக்கிறேன் . சிலர் அவற்றைத் கருத்தில் ஏற்காமல் தங்களின் இயல்பில் வாழ்ந்து , நிறைந்து மறைக்கிறார்கள். சிலர் அதை தனது உருவகமாக வலிந்து தங்கள் மீது திணித்துக் கொண்டு ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலக நினைத்தும் முடியாமலாகி நிலையழிந்த வாழ்கையை சென்றடைகிறார்கள் . பலர் அதனை ஏற்றும் விலக்கியும் இரட்டை வாழ்கை வாழ்வதில் குற்றவுணர்வை அடைவதில்லை .நான் இங்கே பதிய நினைப்பது பிறர் தன்னை எவ்விதம் உருவாக்கிக் கொள்கிறார்கள் என்பது பற்றி கருத்தில் கொள்ளாது தங்களின் இயல்பால் வாழ்கையை நிலைகொண்டவர்களை குறித்தே .
இளம் சண்முகத்தை நான் அவரது புகைப்படத்தில் பார்த்துதான். கிராமத்து இளைஞனாக எவ்வித ஈர்ப்பும் இல்லாத ,லேசான முரட்டுத் தோற்றத்துடன் ஒருவகை கலகக்காரராக பார்கப்பட்டிருக்கவே அதிக வாய்ப்பு . காரைக்காலில் இருந்து அரசியல் காரணங்களுக்காக புதுவை வரும் பல நூறு நபர்களில் ஒருவராக புதுவை வந்தாலும் தனக்கான இடத்தை தானே உருவாக்கி கொண்டு , எந்த அரசியல் மற்றும் பொருளியல் பின்புலமில்லாது , தனது அரசியல் வியூகங்களினாலும் நிலைப்பாட்டினாலும் மட்டுமே பிறர் தன்னை சார்ந்திருக்கும் படி வைத்துக் கொண்டார் .
அரசியல் தராசில் அவரை நிகர் செய்யும் பிறிதொரு புள்ளி புதுவையின் பெரும் நிலக்கிழார்களில் ஒருவரான ரெட்டியார். அனைத்து வகையிலும் தனித்த ஆளுமையாக இருந்தவர், அவர் காரைக்காலில் இருந்து புதுவை வந்திருந்த சண்முகத்தை என்னவாக பார்த்திருக்க வாய்ப்பு என புரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொரு முறை அவர் தனது கருத்தை முன்வைக்கும் போதெல்லாம் ரெட்டியாருடைய குழு அரசியலாளர்களால் அவமானப்பட்டிருக்க வேண்டும்.
குபேருக்கு எதிரான தனது அரசியல் கருத்துக்களினால் மட்டுமே தன்னை தவிற்க இயலாத இடத்தில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். பின் எங்கோ ஒரு புள்ளியில் தனது இடத்தை விட்டு விலகிய ரெட்டியார் ஏற்படுத்திய வெற்றிடத்தில் மிக சரியாக தன்னை பொருத்திக் கொண்டதால் , அவரது தலைமுறை தாண்டி அடுத்த மூன்று தலைமுறைகளுக்கு தலைவராக அவர் நீடித்தார் என்பது வியப்பைத் தருவது .
இந்திராகாந்தியுடன் முரண்பட்டு காமராஜர் தமிழக அரசியலில் இருந்து ஒருகட்டத்தில் விலகும்படி நேர்ந்தது . பின்னர் இறுதி கணம்வரை தனது நிலைப்பாட்டிலிருந்து மாறாதிருந்து பின் மண்மறைந்தார்.இந்திராகாந்திடம் தனக்கிருந்த செல்வாக்கினால் காமராஜரின் மறைவிற்கு பின்னர் அவரது ஆதரவாளர்களை மீளவும் காங்கிரஸில் இணைப்பதில் சண்முகம் முக்கிய பங்கு வகித்தார் . அதுவே பின்னாளில் தமிழக அரசியலில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்வதில் வெற்றிபெற முடிந்தது .
புதுவை அரசியல் களத்திலிருந்து காமராஜர் விலகினாலும் அவருடனான சண்முககத்தின் தொடர்பு தொடரந்து நீடித்தது. அவரின் அரசியல் நிலைபாடுகள் புதுவை வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது .பிற அனைவரும் சண்முகத்தின் அரசியல் ஒட்டி தங்கள் நிலைகளை உருவாக்கிக் கொண்டனர் . அதை தொடர்ந்தே சண்முகம் புதுவையின் முக்கிய ஆளுமையாக உருவானார் .புதுவை அரசியலில் அவருக்கான இடம் உருவாக காரணமாக இருந்த நிகழ்வுகளும் , அதற்கு தமிழக முக்கிய தலைவர்களின் ஆதரவும் எப்படி புதுவை அரசியலில் அவரது முக்கியத்துவம் வளர்ந்திருக்கக் கூடும் என்கிற பின்புலத்தை இந்தப் பதிவு அவதானிக்க முயல்கிறது .
சண்முகம் , குபேர் முரணின் பின்னனியில் காமராஜரின் உறுதியான ஆதரவு மற்றும் சண்முகத்தின் அரசியல் சூழ்தலும் அதன் பின்னனியில் இருந்து கிளைத்த அவரது தலைமை, புதுவையில் அரை நூற்றாண்டு காலம் ஆளுமை செலுத்தியது .சண்முகம் தனக்கென உருவாக்கிக் கொண்ட ஆளுமையின் பின்புலம் அகில இந்திய மற்றும் தமிழக பெருந்தலைவர் காமராஜர் போன்றவர்களை கூட கடந்த நிலைகொண்டதற்கு , அவரது ஆழுள்ளமும் , புதுவை அரசியலின் தனிபோக்கை நோக்கி விழையும் அவரது மனப்பான்மையும் முக்கிய காரணிகளாக இருந்திருக்க வேண்டும் . காமராஜரின் காங்கிரஸ் அமைப்பில் உருவாக்கி வைத்திருந்த பல முக்கிய தலைவர்கள் அனைவரும் தமிழக அரசியலில் சண்முகத்திற்கு காமராஜரின் அடுத்த இடத்தை வழங்கினர் . அது அவரை நீண்ட காலம் தமிழகம் மற்றும் புதுவையில் முக்கிய ஆளுமையாக நிலைநிறுத்தியது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக