ஶ்ரீ:
ஊழ்
“படகோட்டியான விகூணிகன் "மழைக்காலம் நெருங்குகிறது வீரரே" என்றான். "காற்றில் நீர்த்துளியே இல்லையே" என்றார் பீஷ்மர். "இப்போது நீர்த்துளிகள் இருக்காது. இன்னும் சற்றுநாட்கள் தாண்டவேண்டும். இப்போது கடலின் உள்ளே கருவுக்குள் மழை பிறந்திருக்கிறது. நாம் அறிவது கடலின் பெருமூச்சைத்தான். மூச்சு ஏறிக்கொண்டே செல்லும். குழந்தை பிறக்கத் தொடங்கும்போது பெருமூச்சு சிந்துவின் நீரையே திரும்பவும் இமயத்துக்குத் தள்ளிவிடுமென்று தோன்றும். கூர்ஜரத்தின் மணல்மலைகள் இடம்பெயரும். நதியிலோ கடலிலோ படகுகளை இறக்கமுடியாது. பறவைகள் வடக்குநோக்கிச் சென்றுவிடும்."
பீஷ்மர் புன்னகையுடன் "பேற்றுநோவு இல்லையா?" என்றார். "ஆம் வீரரே, அதுவேதான். கடல் இருகைகளையும் அறைவதையும் புரண்டு நெளிந்து ஓலமிடுவதையும் காணமுடியும்..." அவன் சிரித்துக்கொண்டு "ஆனால் அதற்கு இன்னும் நாட்களிருக்கின்றன. இது சிராவணமாதத்தின் முதல்வாரம். நான்காம்வாரத்தில்தான் மழைதொடங்கும்.”என்கிறது ஜெயமோகனின் வெண்முரசு-2:மழைப்பாடல்- பகுதி 2.
மனிதனின் ஊழை அவனிடம் வழங்குவதற்கு கருவாக அவன் வாழும் சூழலிலேயே அது சூல் கொள்கிறது போலும் . பேற்றுநோவு காலத்தில் அவனை சூழ்ந்துள்ளவர்களை அவன்மீது பலவிதங்களில் முனிய வைக்கிறது . எங்கோ அமர்ந்திருக்கும் விண்ணகத்து தெய்வங்களின் வலைப்பின்னலின் சரடுகளில், பிறப்பிலிருந்தே புனைந்து வைத்தவர்களை இங்கிருந்தே அது இயக்குகிறது . அவன்மீது பலரின் அலருக்கு அதுவே வழியென்றாகிறது.
ச்ஹ்தா என்கிற சிற்றூரை அடுத்த கிராம புறக்காவல் நிலையத்திற்கு வெளியே விதியை நொந்தபடி இருந்த எங்களுக்கு, யாத்திரை குழுவுடன் இணைந்து பயணப்பட்டுக்கொண்டிருந்த என் மற்றைய உறவினர்கள் ஏன் கடந்த ஐந்து மணி நேரம் எந்த தொடர்பும் கொள்ளவில்லை என்கிற நினைவு ஆச்சர்யத்துடன் எழுந்தது . மனித ஆழ்மனம் பல வினோதங்களையும் விபரீதங்களை விளையாட்டாக நிகழ்த்தி விடக்கூடியது . அன்பும் ,குரோதமும் சூழ்நிலையையும் அதை ஒட்டியது. அது ஏற்படக்கூடிய புரிதல்களினால் ஆனது . அதை காலம்தான் ஒருவருக்கு எடுத்துக் கொடுக்கிறது . எவ்வளவு தத்துவார்த்தமாக இவற்றை புரிந்து கொண்டாலும் , நிகழ்க்கையில் எவரையும் அது சமநிலை இழக்க செய்திவிடுகின்றன . குடும்பத்திற்குள் மனவேறுபாடுகள் தோன்றிவிட்டதை பறைசாற்றியது , சிலரின் கண்களில் தெரிந்த மாறுபாடுகளை நான் சித்ரகூடத்தில் உணர்ந்த போது . அதை சரிசெய்ய முடியும் என்பது நிரைசையானது மட்டுமல்ல . அதற்கு வாய்ப்பில்லாத இடத்தில் அது மையம்கொண்டிருப்பதை அப்போது நான் உணரவில்லை.
இதன் பல பரிமாணங்களை நான் அரசியலில் கண்டதுதான், ஆனால் தனிப்பட்ட வாழ்வில் அதன் தொடக்கமும் முடிவும் யூகிக்க முடியாதது . அது அத்துனை நுண்மையாக பயணிப்பது . யாத்திரை ஏற்பாட்டாளர்களுக்கு பல சிக்கல்கள். அவர்கள் எங்களை நினைவில் கொள்ள வாய்பில்லை . ஆனால் எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் நான்கு பேர் அதில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏன் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என தோன்றவில்லை ,என்கிற சிந்தனை எழுந்தது, உடன் கோபமும் எழுந்தது .
கடந்த இரண்டு நாளாக கவைக்குதவாத பல வெட்டிக் கதைகளை அரைமணிக்கொருதரம் அழைத்து பேசிக்கொண்டே இருந்தவர்களுக்கு , ஐந்து மணிநேரம் மேலாகியும் தொடர்புகொள்ளவில்லை என கேட்கும் கோபத்தில் அவர்களை நாங்கள் தொடர்புகொண்டபோது அலைபேசியில் கிடைத்த தகவல் எங்களை சமநிலைக்கு கொண்டுவந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக