https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 21 பிப்ரவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 35 . குறியீடு

ஶ்ரீ:







குறியீடு 





பதிவு :  423 / தேதி :- 21 பிப்ரவரி   2018











நாங்கள் தங்கியிருந்த விடுதி அங்கிருந்து சிறிது தூரம் என்பதால் இரவு உணவிற்கு காத்திருப்பது நேர விரையம் என நினைத்த ஜீயர் ஸ்வாமிகள் எங்களை கிளம்ப சொல்லிவிட்டார். நாளை காலை திரிவேணி சங்கமத்தில் சந்திக்கலாம் என்றவுடன், எனக்கு அது  சரியெனப்பட்டது . நாங்கள் எங்கள் விடுதி நோக்கி புறப்பட்டோம். காரில் சென்று கொண்டிருந்தபோது , நடந்தவற்றை பலவாறு  தொகுத்தபடி இருந்தேன் . யாத்திரைக்குழு நாங்கள் மந்தாகினியை நோக்கி செல்லும்போதே கிளம்பிக்கொண்டிருந்தார்கள் . மந்தாகினி அலகாபாத் பாதைக்குஎதிர் திசையில் இருப்பது , எப்படியும் நாங்களும் அவர்களும் 5 மணி நேர பயண வித்தியாசத்தில் இருந்தோம்

இடையில் எங்களுக்கு நேர்ந்த  அந்த விபத்து. அதை கணக்கில் எடுத்து  பார்த்தாலும் அவர்கள் அலகாபாத்தை தாண்டியிருக்க வேண்டும் . ஆனால் நாங்கள் 10 நிமிடத்தில் சென்று தொடும் தூரத்தில்  அவர்கள் நின்று கொண்டிருந்தது மிக ஆச்சர்யமான நிகழ்வாக இருந்தது . அம்மா சொன்னதுபோல இது ராமனின் கருணை போலும் .  அன்று இரவு விடுதிக்கு சென்றுஉண்டு பிறகு உறங்க செல்லும்போது இரவு 12:00 மணியை கடந்திருந்தது . அதிகாலை அவர்கள் திருவேணி சங்கமத்திற்கு செல்வதாக சொன்னதால் காலை 5:00 மணிக்கெல்லாம் எழுந்தால்தான் திரிவேணி சங்கமத்திற்கு செல்ல முடியும் . மறுநாள் எல்லோரும் எழுந்து கிளம்ப காலை 6:00 மணியாகிவிட்டது. யாத்திரை குழு தங்கியிருந்த ஆஸ்ரமம் சென்றபோது அவர்கள் அப்போது தான் கிளம்பி சென்றிருந்தார்கள்.

நாங்கள் திரிவேணி சங்கமம் நோக்கி புறப்பட்டோம் . திரிவேணி சங்கமம் மூன்று நதிகள் இணையுமிடம் கங்கை , யமுனை . சரஸ்வதி.  பண்ணிரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் மஹாகும்பமேளா   எங்கும் பிரசித்தம்  . வடஇந்திய  யாத்திரை தளங்கள்  நமது ஆன்மிகம் கலாச்சாரம் நம்பிக்கை , பண்பாடு   போன்றவற்றின் மனப்பாதிப்பீடுகளை மறுக்கட்டுமானம் செய்வது . அதுவரை கொண்டியிருந்த நம்பிக்கை , புரிதல்கள் போன்றவைகளை அவை உடைத்துவிடக்கூடியவை . யாத்திரை பயணத்தின் போதே மெல்ல இந்திய வரைபடம் ஒன்று பிரம்மாண்டமாய் உருவாகிவரும் . அதுவரை காட்சி ஊடகம் , வாசிப்பு,  பிறர்சொல்லி கேட்டு உருவகித்த ஒன்றுக்கு மாற்றாக பேருரு கொண்டு அது எழுந்துவரும் போது துவங்கும் திகைப்பு , நமது ஆழ்மனப்படிமத்தில்  அதன்  வேர் இருக்குமானால், அவை சட்டென துளிர்த்து விடுகின்றன. அது ஒரு நெடுங்காலம் முளைக்க காத்திருக்கும் ஆலம்  விதைபோல , புறக்காட்சிகள் ஏற்படுத்தும்  தாக்குதல் எனப்படும் சிறு மழைத்துளி நீர் போதும் அகவயத்தில் அது துளிர்க்க , கண்களால் பார்க்கும் எல்லைக்கு அப்பால் ஒன்று , என்கிற சிந்தனை நமக்கு பழக்கமில்லாதது  சென்று நேரில் பார்க்கும் கணம் வரையில்  புரியாதது  அனைத்து விதத்திலும் நம்மை பிரமிக்க செய்வது . கண்களுக்கு முன்பாக   நின்றிருக்கும் நிலகாட்சிகளின் அளவு , இடம் ,சமவெளி, நதிகள் என்று அனைத்தும் நாம் கணக்கில் கொள்ளாத விரிவை கொண்டவை . ஜனக்கூட்டம் என எடுத்துக்கொண்டால் லக்ஷம் கோடியில் தான் கணக்கு சொல்வார்கள்

நம்மூரில் புண்ணிய தளங்களில்  கோவில் ஒரு குறியீடு  .வட இந்தியாவில் புராண நிகழ்வு நடந்தாக சொல்லப்படுகிற  இடமே  ஒரு குறியீட்டைப்போல நின்றிருக்கும் . கோவிலிலிருந்து நம்மால் மிக எளிதாக எடுத்துக்கொள்ளப்படுகிற புரிதல்களை, இங்கிருந்து  எடுத்துக்கொள்ள முடியாது . அது செவிவழியாக பரம்பரையாக சொல்லப்பட்டு வந்த நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகி வந்திருக்க வேண்டும் .அதை நினைவில் கொண்டே அனைத்தையும் கிரகித்துக்கொள்வாதாக இருக்கும். அதனால் எல்லோராலும் அந்த இடத்தில் அணுக்கம் கொள்ள முடிவதில்லை . இங்கு ஆன்மீகம் அகவயமாகவும். நம்மூரில் புறவயமாகவும் அடையபடுகிறது. ஒரு வடநாட்டு யாத்திரை நமக்கு நிச்சயம் புதிய திறப்புக்களை கொடுக்க வல்லது. ஆனால் பலருக்கு எந்தவித முன் புரிதலும் இல்லாமல் வெறுமே சுற்றுலா என்கிற கண்ணோட்டத்தில் வந்து , ஒரு தருணத்தில் உள்ளே ஏதோ ஓன்று உடைந்து மனம் விம்மி கண்ணீர் பெருகிவிடுவதும் உண்டு . எனக்கு நேர்ந்ததை நான் இப்படித்தான் முதல்முறை ஹரிதுவார் கங்கை ஆராத்தியின்போதும் , ரிஷிகேஷில் குளித்து ஒரு மரத்தடியில்ப டுத்து கொண்டு இருந்த   போதும் அடைந்தேன் . இன்னதென்று வார்த்தைகளில் சொல்ல முடியாத உடைவு . என் வாழ்க்கை பாதையின் திசையை மாற்றிய கணம் இங்கு நிகழ்ந்ததாக வெகுகாலம் பிறகே உணர்ந்து கொண்டேன் 

புஷ்கரத்தில்  விஷ்ணுவை நீர் நிரம்பிய  தடாகமாகவும் . நைமிசாரன்யத்தில் ஆரண்யமாகவும் உங்களால் பார்க்க முடிந்தால் அதில் ஒன்றிடமுடிந்தால் நமது பாரம்பர்யம் கலாச்சாரத்தைப்பற்றிய எழுச்சியை அடையமுடியும் . அது இல்லாதவர்களுக்கு அது ஒரு சுற்றுலாவைப்போல மனநிலையை மட்டும் கொடுக்கும் .நம் வேர்களை அறிந்து கொள்வதற்கு ஏற்பட்டது யாத்திரைகள் . இந்து சனாதன தர்மம் இயற்கையோடு இயந்து வாழ கற்றுக் கொடுக்கிறது . அக்கால ரிஷிகள் பிரபஞ்சத்தோடு தங்களுக்குள்ள உறவை கொண்டாடுகிறார்கள் . ராமாயண காலத்தில் விஸ்வாமித்திர ரிஷி கௌசிகி நதியை தனது அக்கை என்று உறவை கொள்கிறார் .

ஜீயர் ஸ்வாமி எங்களை நேரடியாக திரிவேணி சங்கமத்திற்க்கே வரசொல்லிவிட்டதால் நானும் அசால்ட்டாக வருகிறேன் என சொல்லிவிட்டேன் . அதன் அருகில் செல்லச்செல்லத் தான் நான் செய்த தவறு புரியத்துவங்கியது , நம்மூர் போல ஒரு ஆற்றங்கரை , அங்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என நினைத்துக் கொண்டதைப் போல ஒரு மடமை பிறிதொன்றில்லை , நாங்கள் இறங்கி நின்ற அந்த  ஆற்றங்கரையில் கடல் போல இருந்தது மக்கள் கூட்டம். இதில் எங்கு அவர்களை அடையாளம் காண்பது என திகைத்து நின்றேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்