https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 36. நதியின் வெளி .

ஶ்ரீ:



நதியின் வெளி





பதிவு :  426 / தேதி :- 24 பிப்ரவரி   2018





அலகபாத்தில் தங்கியிருந்த விடுதியை காலி செய்துவிட்டு நாங்கள் திருவேணி சங்கமத்தை அடைந்து இறங்கினோம் , எதிர் நோக்காதபடி கடல் போல இருந்தது மக்கள் கூட்டம்  , இதில் எப்படி  அவர்களை அடையாளம் காண்பது என திகைத்து நின்றேன். ஜீயர் ஸ்வாமி எங்களை நேரடியாக திரிவேணி சங்கமத்திற்க்கே வரசொல்லிவிட்டதால் நானும் சரி  வருகிறேன் என்று சொன்னது தவறு என புரியத்துவங்கியது . நம்மூர் போல ஒரு ஆற்றங்கரை , இவ்வளவு தான் நீளம் அகலம் அதை சென்று பார்த்துக்கொள்ளலாம் என நினைத்துக் கொண்டதைப் போல ஒரு மடமை பிறிதொன்றில்லை .எங்கு யாரை கேட்பது என புரியாத மலைப்பு . சரி வண்டி நிறுத்துமிடம் சென்று பார்த்தால் ,ஒரு வேளை வண்டி அடையாளம் கண்டு அவர்களை தேடிச்செல்லலாம் என்றால்அங்கு தாறுமாறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வாகனங்களில் மத்தியில் புகுந்து புறப்படுவதில் ,நான் தேடுவதை கண்டு கொள்வது நடவாது

நல்லவேளையாக எங்கள் யாத்திரை குழுவில்  வந்த நண்பர்கள் சிலர் அவர்கள் வண்டியிலிருந்து ஏதோ எடுக்க வந்தார்கள் , அவர்களை பின் தொடர்ந்து  நாங்களும் யாத்திரைகுழுவிடன் சென்று இணைந்து கொண்டோம். அந்த யாத்திரையில் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளமானவை. இனி ஒருபோதும் தனித்து வராதே . முடிந்தவரை அனைவருடனும் இணைந்து தங்கு போன்றவை. பல மறக்க இயலாத அனுபவங்களை கொடுத்திருந்தது.

அந்த ஆற்றங்கரை முழுவதுமாக குப்பையும் சந்தனமும் கருமை நிறமும் கலந்த சேறுமாக ஒரு மாதிரி நொதித்து நாறிக்கொண்டிருந்தது . யாத்தரிகளின் பெருக்கத்தில் அங்கு அவர்களுக்கு இவை சகஜமானதாக இருக்கலாம் . மக்கள் யாரும் அவற்றை பொருட்படுத்தாமல் ஒருவருக்கொருவர் உற்சாகமாக பேசியபடி அதை கடந்து சென்று கொண்டே இருந்தனர். என்னால் அதை அவ்வாறு கடக்க இயலவில்லை . நான் அந்த பிரமாண்டமான காட்சியை ஏதாவதொன்றில் வகைமுறை படுத்தி வைக்க முயன்றபடி இருந்தேன்

அந்த விஸ்தாரமான நிலப்பகுதியும் , கண்ணுக்கெட்டிய தூரம் நதியின் நீர்பெருக்காக, ஜனத்திரளின் செறிவும்   நம்மை மிக சிறியதாக உணரச்செய்பவை . நதியின் நடுவில் ஏற்படும் அலை காரணமாக அதன் நீட்சி கரையை தாகம் தீராத விலங்கை போலகிளக்எனும் சிறிய சப்தத்துடன் சதா  நக்கியபடியே இருந்தது. அதன் அலை எனக்கு வித்தியாசமாக இருந்தது . புதுவை கடல் அலையின் ஆற்பாட்டத்தையே பார்த்து பழகிய எனக்கு, அந்த நதியின் நளினமானம் ஒரு பெண்ணின் அடக்கத்தை நினைவு படுத்தியது . நிதியை பெண்ணாக உருவகப்படுத்துதலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எங்கெங்கோ தூக்கி எறியப்பட்டவைகள் அனைத்தும் அடித்து வரப்பட்டு சுத்தப்படுத்துகிற பாவனையில் ஓரம்கட்டப்பட்ட பலவிதமான குப்பைகள் ஊறி அழுகிக் கிடந்தன . பார்க்கும் திசையெல்லாம் மக்கிய பூக்கள்  காலி தண்ணீர் பாட்டில்கள் . அதை கடந்து ஒரு வித மீன் நெடி தடவிய காற்று சதா கடந்து சென்றபடியே இருந்தது. இவ்வளவையும் பொருட்படுத்தாத ஆவல் , புராணங்களில் சொல்லப்பட்ட இடத்தில் நின்றுகொண்டிருக்கறோம் என்கிற எண்ணமே என்னுள் உற்சாகத்தை கரைபுரண்ட ஓட வைத்தது.

நாங்கள் படகுத்துறை போல இருந்த மூங்கில் மேடையை நோக்கி நடந்து கொண்டிருந்தோம் . அருகில் சென்ற பிறகுதான் தெரிந்தது அது ஒரு ஆள் உயரமிருப்பது . குறுக்காக ஏறும் வசதிகள் இல்லை . அதன் நுழைவு கரையின் சற்று மேடான ஒரு பகுதியில் இருந்து இணைந்து தொடங்குவதையும் , அதில் எனக்கு தெரிந்த பல முகங்கள் உற்சாகமாக பேசியபடி நிறுத்தி வைக்கப்பட்ட படகுகளை நோக்கி சென்று கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது . அவர்கள் பேசுவது பல துண்டு துண்டாக காற்ற  புரியாதபடி கொண்டுவந்து சேர்த்துக்கொண்டிருந்தது.


நதி ஓரம் முழுவதும் சேறு மிகுந்திருப்பதால் அங்கு குளிக்க முடியாது . குளிப்பறகான படித்துறைகள் ஏதும் அங்கிருப்பதாக தெரியவில்லை. அல்லது வேறு எங்காவது இருக்கலாம் . படகில் ஏறி ஆற்றிடைகறையில் குளிக்கலாம்என அனைவரும் படகுக்கறையில் காத்திருப்பதாக சொன்ன நண்பர் , எங்களை அங்கு கூட்டிச் சென்றார் . சுமார் அரை மைல் தூரம் நடந்து மக்கள் செறிந்த பகுதிகளத்தாண்டி , படகுத்துறைக்கு வந்து சேர்ந்தோம் . நூற்றுக்கணக்கான படகுகள் நின்றிருக்க அதில்  சில படகுகளுக்காக பலவிதமான ஆட்கள் நின்று கொண்டு ஆற்றிடைக்கறை சென்று இறக்கிவிட்டு வர தலைக்கு இவ்வளவு என , பேரம் மும்முரமாக உரத்த குரலில் ஹந்தியில் நடந்து கொண்டிருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 73 அழைப்பிதழ்