https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 30 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 322 * பாராமுகம் *

ஶ்ரீ:



பதிவு : 322 / 492 / தேதி :- 30 ஏப்ரல்  2018

* பாராமுகம் *


நெருக்கத்தின் விழைவு ” - 17
விபரீதக் கூட்டு -04





சமூக அங்கீகரமுள்ளவர்களும்  ,தங்கெளுக்கென தனித்த அடையாளம் உள்ளவர்களும் தங்களின்  துறைகளில் தங்களை   மேம்படுத்திக் கொண்டாலும் அதில் நிறைவுறுவதில்லை . இது எல்லா துறையிலும் பெரும் புகழை ஈட்டிய அனைவரின் பொதுவான கோட்பாடு . உதாரணத்திற்கு திரைப்பட துறையை சார்ந்தவர்களைச் சொல்லலாம். அனைவரும் கண்டு ஏங்கும் மக்கள் அறிமுகம், செல்வாக்கு ,பொருளியல் வெற்றி போன்றவைகளை அடைந்த பின்னரும் திரைபடத் துறையிலிருக்கும் ஒவ்வொருவரையும் , அரசியல் நோக்கி நகரும் விழைவு இத்தகைய நிறையுறாமையில் இருந்து எழுவதே

பிரபலமான ஒருவர் கட்சியின் பல மூத்த தலைவர்களை பின்னகர்த்தி தங்களது  விழைவை அடைவதை யாரும் குற்றமாக சொல்வதில்லை . முதல்நிலையான தேர்தல் களத்தில் எளிதான வெற்றியை தங்களின் பிரபல இருப்பாலும், பொருளியல் பலத்தாலும் வென்றெடுக்க முடியும் என்கிற நம்பிக்கையுள்ளவர்கள் , சட்டமன்ற உறுப்பினர் பதவியை கடந்து அமைச்சர் என்கிற உச்சகட்டமான இலக்கை நோக்கி நகர்கிறார்கள். அதற்கு ஒரு கட்சியின் அங்கீகாரம் தேவைப்படுறது. அதை நாடியே ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியமைக்கும் வாய்ப்புள்ள கட்சிகளை தேடி வருகிறார்கள். இவர்களை தாண்டிய செல்வாக்கு தங்களுக்கு இருப்பதாக நினைப்பவர்கள் , “தனிக் கட்சிஎன்கிற ஒன்றை தொடங்கி விளக்கின் சுடரில் விட்டிலென சென்று விழுகிறார்கள்.

தமிழகம் போலில்லாமல் புதுவையில் காங்கிரஸ் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கங்களுடன் கூட்டணி எனப் பொருந்தியும் , அல்லது பொருதியும் மாறி மாறி ஆட்சியமைக்கிறது . அதனால் இயல்பில் அதற்கு  வெற்றி பெறும் கட்சி என்கிற தோற்றம் எப்போதும் இருக்கிறது . பிரபலமானவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என்கிற அவதனிப்பிற்கு வரும்போது , அவர்களில் பெரும்பாலானவர்கள்  சண்முகத்தை விலக்கி மறைக்கயரையே தங்களது தலைமையாக தேர்ந்தெடுப்பது வழமை. அவர் சட்டமன்ற கட்சியின் தலைவராக இருப்பது முதன்மைக் காரணம் என்றாலும் , தங்களின் கௌரவத்திற்கு ஏற்ற தலைவராக அவரையே நினைப்பார்கள்

சண்முகம் தலைமையேற்றிருக்கும் கட்சியை வளர்த்து அதிலிருந்து கிளைத்து வருவதை விரும்பாதவர்கள் அல்லது அதற்கான பொறுமையற்றவர்கள். அது தலையை சுற்றி மூக்கை தொடும் வேண்டாதவேலை என்கிற எண்ணமுள்ளவர்கள் . ஆட்சி அதிகாரத்திற்கு எப்போதும் அருகில் இருக்கும் மரைக்காயரே அவர்கள் அனைவருக்கும் அனுக்கமாக உணரப்பட்டார் . கட்சித் தலைமை என்பது தன்னை நிறுவிக்கொள்ளும் பொருட்டு சாமான்ய தொண்டனுக்கு அனுக்கமாக இருப்பதை தவிர்த்து அது செய்யக்கூடியது பிறிதொன்றிமில்லை என்பதால் தலைமை பதவி பஞ்சப் பராரிகளுக்கு தலைமை ஏற்பது என்கிற ஒவ்வாமை தோன்றிவிடுவது பிறிதொரு காரணம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்