ஶ்ரீ:
பதிவு : 489 / தேதி :- 27 ஏப்ரல் 2018
வெண்முரசு புதுவை கூடுகை 14
தேதி 26-02-2018
வெண்முரசு நூல் 2- மழைப்பாடல்
பகுதிகள் :- 6 மற்றும் 7
தலைப்பு:- தூரத்து சூரியன் , நீள்நதி.
நண்பர்களே,
நல்ல சொற்கள் பரவசப்படுத்துபவை , சில நமது ஆழ்மனதை சென்று தொடுபவை , சில புதிய திறப்புக்களை கொடுப்பவை , இவை அனைத்துமாக மானுடத்தை நோக்கி ஏதோ ஒரு புதிய பார்வையை பாதையை காண்பிப்பவை . அந்த சொற்கள் புறவயமாகவும் சிலவற்றை திறக்க வல்லவைகளாக நமது மூதாதைகளால் நம்பப்பட்டு தலைமுறை தலைமுறைகளாக நமக்கு கையளிக்கப்பட்டு வந்திருக்கின்றன , அதிமனுஷமாக நம்பப்படும் இவை இன்றைய நவீன உலகில் எப்படி புரிந்துகொள்ளப்படும் என்பது குறித்து ஒரு சிறுவனுக்குள்ள ஆவல் எனக்கு எப்போதும் உண்டு , அதிமானுஷம் என்கிற சொல் இப்போது பலருக்கு ஒவ்வாமை கொடுத்தாலும் , அது இந்த உலகில் எங்கோ இருந்து கொண்டிருக்கிறது என என்னை எப்போதும் நம்பவைத்து . அதற்கு வலுவான ஒரு தேடல் ஆஸ்மனத்தில் எப்போதும் இருப்பது . அதற்கு கவித்துவமான ஒரு புரிதலை சொல்லுகிறது தூரத்து சூரியன்
“முனிவர் வியந்து “அதை நீ எப்படிச் செய்தாய்? எப்படி அவளை குரலில்லாமல் அழைத்தாய்?” என்று கேட்டார். நான் “தவசீலரே, அது மிக எளிய ஒரு வித்தை. பெரும்பாலான ஆயர்கள் அறிவார்கள். நாங்கள் தனித்து விலகி காட்டுக்குள் நிற்கும் பசுவை அருகே அழைப்பதற்கு அதன் உடலைக் கூர்ந்து நோக்கி ‘பார், பார், பார்’ என அகத்துக்குள் சொல்லிக்கொள்வோம். நம் அகவல்லமையை முழுக்க அந்தச் சொல்லில் குவித்தால் நாம் பார்வையைக் குவித்திருக்கும் பசுவின் உடற்பகுதியின் தோல் சிலிர்த்து அசையும். பசு திரும்பி நம்மை நோக்கும். நாம் அதன் கண்களைப்பார்த்து அருகே வா என்றால் அருகே வரும்’ என்றேன். ‘சிறுவயதிலேயே இவ்வித்தையை நானும் என் தமையனும் கற்றோம். அதை நான் மானுடரிலும் விரிவாக்கிக் கொண்டேன்’ என்றேன்.”
-“முனிவர் வியப்புடன் “பெண்ணே, நான் இப்போது இச்சுவடியில் கற்றறிந்துகொண்டிருந்ததும் அதே வித்தையைத்தான். சூக்ஷ்மகதனம் என்று இதை முனிவர்கள் சொல்கிறார்கள். ஒரு மனம் இன்னொரு மனத்துடன் குரலில்லாமலேயே உரையாடமுடியும். அணுக்கள் பூச்சிகள் புழுக்கள் போன்ற சிற்றுயிர்கள் அவ்வாறு ஒன்றோடொன்று உரையாடிக்கொண்டிருக்கின்றன. உயிர்களின் அறிவும் மொழியும் விரிவடையும்தோறும் அத்திறன் இல்லாமலாகிறது. சித்தம் ஒருங்கமைந்த மனிதர்களிடம் அத்திறன் முற்றிலும் இல்லை” என்றார்.
“ஆனால் நம்மனைவருக்கும் உள்ளே நம் அறிவின் அலைகளுக்கு அடியில் அந்த முதற்பேராற்றல் உறைந்திருக்கிறது. குழந்தை அழுவதற்கு ஒருகணம் முன்னரே அன்னை அது அழப்போவதை உணர்ந்துகொள்கிறாள். காதல்கொண்ட மனங்கள் ஒன்றாகின்றன. தியானத்திலமரும் முனிவர்களின் உள்ளங்கள் ஒற்றைப்பெரும்படலமாக ஆகின்றன. சித்த அலைகளை அடக்கி அந்த ஆற்றலை உள்ளிருந்து துயிலெழுப்புவதையே சூக்ஷமகதனம் என்று சொல்கிறோம்” என்றார் முனிவர்.
நான் வியப்புடன் அதைப்பற்றி கேட்டேன். “அதன்மூலம் மனிதர்களின் உள்ளங்கள் ஒன்றாக முடியும். வேதங்கள் உங்கள் உள்ளங்கள் சுருதியால் ஒன்றாகட்டும் என அறைகூவுவது இதைப்பற்றித்தான். ஆயிரமாண்டுகாலமாக மானுடஞானம் மண்ணுக்கு அடியில் விரிந்திருக்கும் அந்தக் கடலைக் கண்டடைவதற்காகவே முயன்றுகொண்டிருக்கிறது. நான் தவம்செய்யப்போவதும் அந்த ஆலயவாயில் முன்புதான்” என்றார் துர்வாசர்”
“குருவே, உங்கள் ஆய்வை முடித்துவிட்டீர்களா?” என்று கேட்டேன். புன்னகையுடன் “ஆம், நான் மூன்று பெரும் சுவர்களை உடைத்திருக்கிறேன். மனிதர்களுக்கு நடுவே இருக்கும் சுவரை முதலில் உடைத்தேன். அடுத்ததாக மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே இருக்கும் சுவரைத் தகர்த்தேன். மனிதர்களுக்கும் விண்ணகப் பேராற்றல்களுக்கும் நடுவே இருக்கும் சுவரை இறுதியாக விலக்கினேன்” என்றார்.”
“நான் துர்வாசர் கற்றுத்தந்த அந்த மந்திரத்தைச் சொன்னேன். அது பொருளற்ற ஓர் ஒலியாகவே இருந்தது. அதை மும்முறை சொன்னதுமே அதில் காலையின் முதல்கரிச்சானின் இசை இருப்பதை அறிந்துகொண்டேன். காலைப்பறவைகளின் குரல், முதல்கதிரொளியில் பறக்கும் சிறுபூச்சிகளின் மீட்டல், மலர்கள் மொக்கவிழும் வெடிப்பு, ஒளிர்ந்து சொட்டும் பனியின் தட்டல் என அனைத்தையும் தொகுத்து சுருக்கி ஒரு துளியாக்கியதாக இருந்தது அந்த மந்திரம்.”
“பிருதை சொன்னாள் "ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்க்கையை மாற்றும் தருணம் ஒன்று இளமையில் நிகழும். அவ்வண்ணம் இளமையில் நிகழாதவர்களுக்கு வாழ்க்கையே இல்லை என்பார்கள். நிகழ்பவர்களோ பெருமழையை ஏற்கும் சிறுசெடிபோல அதன் அடியில் துடிக்கிறார்கள். வேர்கள் பறிந்து செல்லாமலிருக்க தவிக்கிறார்கள். என் வாழ்க்கையின் முதன்மைப்பெருநிகழ்வு அது என இப்போது ஐயமில்லாமல் உணர்கிறேன்.”
“விதி அதை ஒருபோதும் எவர் மடியிலும் கொண்டுசென்று போடுவதில்லை தாவினால் கையெட்டும் தொலைவிலேயே நிற்கச்செய்கிறது. தானிருக்கும் இடத்தில் இருந்து எழுந்து தாவாதவர்கள் அதை அடைவதேயில்லை" என்று ரிஷபர் பொதுவாகச் போலச் சொன்னார்.”
“சிலதருணங்களில் வரலாறு என்பது வெறும் வாய்ப்புகளின் விளையாட்டு. வெறும் வாய்ப்புகள். அதை அளிப்பவை மனிதர்களை பகடைகளாக ஆடவைக்கும் விண்கோள்கள்.”
“வசுதேவன் தன் கால்கள் தளர்வதை உணர்ந்தான். அவனுக்கு அந்த உள்ளுணர்வை அளித்தது எது என அப்போதுதான் புரிந்தது. அரண்மனை முகப்பில் சேற்றுப்பரப்பில் பெரிய வண்டி ஒன்று வந்து சென்ற சக்கரத்தடம் தெரிந்தது. அந்தத் தடம் மதுராபுரியில் இருந்தே பாதையில் இருந்துகொண்டிருந்தது.”
“அவள் அவ்வுணர்வுகளை தன் சிந்தையால் அளைந்தாள். அது அனைத்து அன்னையருக்கும் எழும் சாதாரணமான அச்சவுணர்வுதானா? அனைத்து அரசுசூழ் கல்வியையும் அரசபதவியையும் உதறி அவளுக்குள் இருந்து அன்னை என்னும் தூயமிருகம் வெளிவந்து நாசியையும் செவிகளையும் கண்களையும் மட்டும் தீட்டிக்கொள்கிறதா?”
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக