ஶ்ரீ:
பதிவு : 320 / 490 / தேதி :- 28 ஏப்ரல் 2018
* கனவின் புறவெளி *
“ நெருக்கத்தின் விழைவு ” - 15
விபரீதக் கூட்டு -04
சென்னையிலிருந்து புதுவைக்கு திரும்பியவுடன் , அதிகாலை முன்னாள் அமைச்சர் ஆனந்த பாஸ்கரை தொடர்பு கொண்டு அவரது உதவியை கேட்டேன். நான் புதுவையில் இருப்பதை அறிந்ததும் திகைப்படைந்தார் . என்ன நிகழ்ந்தது என கேட்டவரிடம் ,முழுவதையும் சொன்னேன் .தன்னை வில்லியனூரில் சந்திக்க சொன்னார் . வில்லியனூர் சென்றடையும்போது காலை 6:30 மணியாகி இருந்தது . ஆனந்த பாஸ்கரன் அதிகாலை கருக்கிருட்டில் எழுந்திருக்கும் பழக்கமுள்ளவர் . நான் சென்றடைவதற்குள்ளாக காலை உணவை முடித்துக் கொண்டு , தனது வழமையான வரவேற்பறையில் காத்திருந்தார். என்னை நேரில் சென்று சந்தித்தபோது தனது பாணி வெடி சிரிப்புடன் என்னை வரவேற்றார் . “வில்லங்கத்தை நம்பி எவன் உருப்பட முடியும் , என்றார். காலை உணவு எனக்கு அங்கு ஒருங்கி இருந்தது.
ஆனந்த பாஸ்கரன் ஒரு சிக்கலான ஆளுமை . தனது வெளிப்படையான பேச்சால் பல எதிரிகளை உருவாக்கி வைத்திருந்தார் . அவருடனான எனது நட்பை பலரும் விசித்திரமாக பாரத்ததுண்டு . எங்களுக்குள் வயது ஒரு பெரிய இடைவெளியாக பிறிதொருவரால் பார்க்கப்பட்ட போது , நாங்கள் அதை கடந்த எல்லையில் இருந்தோம். எனது அரசியல் எதிர்காலம் குறித்த மிகுந்த நம்பிக்கையுள்ளவராக அவர் வெளிப்பட்டது , ஒரு உஷ்ணமான சண்டைக்குப்பின் பிறகு . அதன் பின் ஆர்வமுடன் என்னுடன் உரையாடுபவராக மாறினார். அங்கிருந்து நாங்கள் அடைந்த அரசியல் எல்லைகள் மிக விவானவை . ஆனால் அது இயல்பாக நிகழ்ந்துவிடவில்லை .
பெரிய பின்புலத்திலிருந்து வந்ததினாலும் , நிலவுடைமை சமூகத்தின் அதிகார பாதிப்புமாக , ஒரு மேட்டிமை தன்மையுடன் அவரது எல்லா செயல்பாடுகளும் இருந்தன . பலர் அவருக்கு எதிர் சொல்லெடுக்க தயங்கி தெறித்ததற்கு இதுவும் ஒரு காரணம் . அனைவரிடமும் இயல்பாக பழகும் குணம் , எந்தப்புள்ளியிலிருந்து தனது தொன்மையான மரபை அடைந்து அந்த பேருரு எழும், என யாரும் கணிக்க இயலாது ,அதனால் மிக சிறிய நட்பு வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார் .அதில் அவரிடமிருந்து பொருளியல் உதவிகளை பெறுவர்களே பெரும்பான்மையானவர்கள். அதில் அரசியல் சாரந்தவர் வைத்தியநாதன் மட்டுமே .
அவருடைய இயல்பு தெரிந்ததனால் , விவாதத்தில் கொண்டு விடும் விஷயங்களை நான் தவிர்த்து விடுவேன் . துவக்கத்தில் ஒவ்வொரு அரசியல் விஷயங்களை குறித்த முரண்பட்ட கருத்துக்களுக்காக நாங்கள் பலமுறை விவாதித்திருக்கிறோம் . ஆரம்பத்தில் நான் எதை கொண்டு பேசினாலும் , அதற்கு அவரிடம் ஒரு சிறுவனுக்கு கற்றுக்கொடுப்பவரின் தோரணையை பார்த்தேன் . அது எதிர்சொல்லை சந்திக்காதவர்களிடம் இயல்பாக எழுவது . அது பலரின் விலகல் போக்கினால் உருவாகி வருவது .
அவரது கருத்துக்களுடன் நான் முரண்படும்போதெல்லாம் , அவரை நான் சீண்டுவதாக கோபப்படுவதுண்டு .வயதும் ஸ்தானமும் அனைத்தையும் அறிந்துகொள்ளும் ஒரு காரணி என்கிற மனப்பாங்கை அவரிடம் எப்போதும் பார்த்திருக்கிறேன் . என் தரப்பாக எதை வைத்தாலும் அதை தனக்கு எதிர் தரப்பாக , அல்லது அவற்றை தன்னிடம் சொல்லக்கூடிய வயதோ அனுபவமோ எனக்கில்லை என்பது அவரது எண்ணமாக எப்போதும் இருந்தது .
சில கருத்துக்களை விவாதம் என்கிற எல்லைக்கு கொண்டுசெல்லாமல் ,அதை ஒரு உரையாடல் என்கிற தளத்திறகு நான் நகர்த்த முயன்றபோது , அவர் தன்னுடனான சிக்கலில் இருந்து வெளிவந்தார் . ஆனால் அது எளிதில் நிகழ்ந்துவிடவில்லை . அது ஒரு உடைவு போல தோன்றி பிறகு மெல்ல விட்டுக் கொடுக்கும் மனோபாவத்தினால் மாறி வந்தது . என்னை “கனவு காண்பவன்” என்கிற அடைமொழிக்குரியனாக பிறிதெப்போதும் சொல்ல துவங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக