https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 22 மார்ச், 2017

அடையாளமாதல் - 14 (அரசியல் களம் - 13 இயக்கமுறைமையும் முரண்பாடுகளும்-2)

ஶ்ரீ:


அடையாளமாதல் - 14
அரசியல் களம் - 13
இயக்கமுறைமையும் முரண்பாடுகளும்-2


அரசியல் இயங்குமுறையில் புதுவை தனித்தன்மை மிக்கது . அது பிரன்ச் ஆளுகையின் கீழ் இருந்தது ஒரு காரணியாக இருக்கலாம் . பிரிட்டீஷ் ஆளும் முறையிலிருந்து பிரன்ச் மாறுபட்டது . குறைந்த பட்சம் குடியுரிமை அளிப்பதில் . இந்திய சுதந்திரப் போராட்டத்திலிருந்து புதுவை சுதந்திரப் போராட்டம் பல அலகுகளில் வேறுபட்டது . இது பற்றி மறைந்த முன்னாள் முதல்வரும் நெடுங்காலம் காங்கிரஸ் கட்சி தலைவரான திரு.ப.சண்முகம் அவர்களின் பார்வை பற்றி பிரிதொரு பதிவில் பார்க்கலாம் .

தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சியில் அமர்ந்ததற்கு தாழ்த்தப்பட்டோர் ஆதரவு மிக முக்கியமான காரணி . இங்கு  புதுவையில் தாழ்த்ப்பட்டோரின் ஆதரவு அல்லது எதிர்ப்பு என காங்கிரஸின் ஆட்சி அரசியல் சூழ்நிலை சார்ந்து  முடிவாகிறது. இருப்பினும் புதுவை ஆட்சி கட்டிலில் அது மாறி மாறி நீண்ட காலம் அமர்வதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன .


தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை இழந்து அரை நூற்றாண்டுகாலம் ஆனநிலையிலும் , அது புதுவையில் பெருபாலான காலங்களில் அதிகாரத்தில் இருந்திருக்கிறது , இருந்து கொண்டிருக்கிறது. இங்கு திராவிட கட்சிகள் எப்பொழுதும் கூட்டணி  பலத்துடன் தான் அமர நேர்கிறது , காங்கிரஸும் இன்று அந்நிலைக்கு வந்துவிட்டது . தமிழ்நாட்டில் அதிமுக பெரும் அரசியல் சக்தியாக இருந்த காலத்திலும் கூட புதுவையில் பெரும் தோல்விகளைச் சந்தித்துள்ளது .

புதுவையில் அரசியல் இயங்கு முறை சிக்கலும் , நுடப்பமும் உள்ள வித்தியாசமான பல விசைகளைக்க கொண்டது . சிறிய மாநிலம் ஆகவே தொகுதிகளும் சிறியவை .அதிகபட்சமாக  ஒரு தொகுதிக்கு முப்பதாயிரம் குறைந்தபட்சம் பத்தொன்பதாயிரம் வாக்குகள் . பலமுறை ஒற்றைபடை வாக்கு வித்தியாசத்தில் சட்டமன்றம் பார்த்தவர்கள் ஏராளம். ஒரு பத்து குடும்பத்தினர் எதிர்பாக திரும்பினாலே வெற்றி எட்டாக் கனி . ஒரே ஒரு உறுப்பினரை அடைந்து சட்டமன்ற பெரும்பான்மை கொண்டு ஆட்சி ஆண்ட கதைகளும் உண்டு .

இங்கு ஆரம்ப அரசியலில் நுழைய விரும்புவோர் கட்சியில் சேர்வதில்லை. கட்சியில் சேர்ந்து அதன் அடிப்படையிலிருந்து மேலெழும்மி வரும் விழைவோ, அது வரை காத்திருக்கும் பொறுமையோ இவர்களுக்கு இருப்பதில்லை . மக்களிடம் நேரே "இலவச"பணிசெய்து நன்மதிப்புகள் வழியே , தங்களின் வெற்றியை உறுதி செய்யும் துடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் . தங்கள் பொருளியல் சக்தியினால் அதை சாதிக்க முடியும் என  நம்புகிறார்கள் .

குறைந்தது முப்பது சதவீத வாக்காளர்கள் மேல் வேட்பாளருக்கு நல்ல அறிமுகம் இருக்கும் . வெற்றியை உறுதிசெய்ய மிக அவசியமானது .

இவர்கள் சுயேட்சையாக நிற்க விரும்புவதில்லை . அது ஆகிறகாரியமில்லை என தெரிந்திருக்கிறது . கட்சிக்கென உள்ள ஆதரவு என்னும் ஆற்றில் தன்னாதரவு எனும் விசையின் உந்துதலால் வெற்றியின் அருகில் வந்து அமைகிறார்கள்.

கட்சிகளும் தேர்தல் காலங்களில் இவர்களை பயனபடுத்திக் கொள்ள தயங்கிவதில்லை . காலம் நேரம் , எதிர் நிற்கும் வேட்பாளர் என பல காரணிகள் துணைக்க வெற்றிகொள்கிறார்கள் , அல்லது தோற்று அனுதாபத்தை அடைகிறார்கள் . மக்களின் அனுதாபம், நல்லொதொரு வைப்புநிதி . அது அடுத்து வரும் தேர்தலுக்கானது , பெறும்பாலும் வெற்றியை கொடுப்பது . ஒரே சிக்கல் வழக்கமான "இலவச பணிகளூடே"காத்திருத்தல் .


சில சமயங்களில் சுயேட்சையாக களம் கண்டு வென்ற பின்னும் களம்பட்ட புராணம் ஆகப் பெரியது . சட்டமன்ற உறுப்பினர் பதவி ஒரு அலங்காரம் மட்டுமே . அதிகாரம் உள்ளதல்ல . அதை அதிகாரமுள்ளதாக மாற்ற அமைச்சர் பதவி நோக்கி பாய்வதில் பல எளிய சமரசங்களின் ஊடே அதை அடைபவர்கள் , அடைந்தபின் அடைவது ஏதுமில்லை என்கிற "தத்துவ தரிசணத்தை " அடைகிறார்கள் . தமிழகத்தில் மாவட்ட செயலாளருக்கு உள்ள செல்வாக்கு இவர்களுக்கு இருப்பதில்லை .சிலர் தன் தனித்தன்மையால் மட்டுமே நிலைத்து நிற்கிறார்கள் .

முன்பே சொன்னபடி கட்சிசாரா தனியர்களின் அரசியல் விழைவு கட்சி அரசியலாக மடைமாற்படுகிறது . இது இங்கு அரசியல் முறைமையே . தர்மாதர்ம விவஸ்தைகள் மிக நுண்ணிவை , இடத்திற்கு பொருந்தப் பொருள் கொள்ளப்படுவது .

புதுவையின்  அரசியலை புரிந்து கொள்ள அதன் விடுதலைக்கு முன் பின் என இரண்டு காலங்களில் தோய்வது அதை மேலும்  புரிதலுக்கு எடுக்கும் . புதுவை விடுதலை கோரும் அமைப்புகள் , அதன் மையப்பகுதியில் செயல்படுவதை தவிர்த்து தமிழக எல்லை ஓரங்களில் தங்கள் முகாம்களை அமைத்திருந்தன . அதில் நடுநாயகமாக இருந்தது மடுகரை நெட்டப்பாக்கம் மற்றும் காரைக்கால் இரண்டுமே தமிழக பகுதிகளால் சூழப்பட்டவை.

அன்று பிரன்ச் அரசாங்கத்தை எதிர்த்தவர்களை அடக்க புதுவையை சேர்ந்தவர்களையே அது பயன் படுத்தியது . விடுதலைப் போராட்டத்தை பிரன்ச் ஆதரவு குழு அதை எதிர்கொள்ளும் .கலவரம் இந்த இரண்டு பிரிவுகளுக்குள்ளேயே வெடிக்கும் . பிரன்ச் அரசு வெறுமனே வேடிக்கை பார்க்கும் . அன்று பிரன்ச் ஆதரவு அமைப்புகளில் பெரும் செல்வந்தர்களால் நிறம்பியது . அவர்களுக்கு பிரன்ச் அரசு ஆதரவாக இருப்பதினால் சுதந்திரப் போராட்டமும் தொடர்ந்து நசுக்கப்பட்டு வந்தது.

புதுவை மையப்பகுதியில் அவை கடைசிவரையில் வீர்யமாக செயல்படவே இயலாது போனது . இந்திய விடுதலைக்கு பிறகும் புதுவையில் எந்த முன்னேற்றமும் இல்லை . புதுவை இந்திய ஒன்றியத்துடன் இனைய வேண்டும் என்கிற தீர்மானம் ஓட்டெடுப்பிற்கு விடப்பட்டு வெற்றியும் பெற்றது . அனால் அது புதுவையிலிருந்து சுமார் இருபத்தி ஐந்து கிலோ மீட்டர் தள்ளிய தமிழகம் சூழ்ந்த  கீழூர் என்கிற சிறு கிராமக் கூட்டத்தில் . எது அதை அங்கு கொண்டு சென்றது ?

இன்றும் கீழூரில் அதன் நினைவுச்சின்னம் ஸ்தூபியாக நின்று அன்றைய புதுவை விடுதலை போரின் முரண்களை மௌனமாக வெளியிட்டபடியே இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்