https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 1 மார்ச், 2017

அப்பா பாதுகை குறித்து செல்விக்கு

ஶ்ரீ:
அன்புள்ள செல்விக்கு,

அனேக ஆசீரவாதங்கள்,

நீண்ட யோசனைக்கு பின் இது அவசியம்தான் என உணர்ந்ததால் எழுத நேர்ந்தது . இதற்கு உன் பதில் அவசிமன்று ஏனெனில் உன் புரிதலே எனக்கு இலக்கானபடியால் .

நேற்று அப்பாவின் திருவடிகளை நீ கேட்டு நான் மறுத்ததற்கான காரணத்தை , " நீ உன்னுள்ளேயே ஆழ்ந்து உசாவிக்கொள்" என விட்டுவிடுவதே என் வழக்கம் , ஆனால் புதிதென மாறிவரும் சூழியல் கருதி இதை எழுதும்படி ஆயிற்று.

நம் உறவுகளின்  எனக்கெதிரான " இளிவரல் செயல்பாடுகள் " அனைத்தும், நடந்து முடிந்த நிகழ்வுகளுக்கு அவர்கள் ஆற்றும் எதிர்வினை என்கிற அளவே செயலூக்கிகள் அமைந்தன . அவர்களும் அவற்றை அவ்விதம்தான் என புரிந்துகொண்டனர் , ஆனால் அது அவர்களின் ஆழ்மன ஆபாச விழைவின்பால் ஏற்பட்ட புரிதலின் பிறழுதலால் என்பதுதான் உண்மை .

இந்த புரிதல்பிழை என்பது என் ஊழ் , ஆகையினால்  என் தலை அறுத்து சான்றாக்கினும் , அது எவருக்கும் உண்மையை உணர்த்தாது மற்றும் தன்னிலையையும்  உணரவைக்காது . எனவேதான் என் வாழ்கையின் பிற்பகுதியை அவர்கள் இல்லாது வாழுதல் என நிலைக்கு கசப்பற்று ஏறினேன் , இனி அதனின்று விலகுதல் என்பது என் கணக்கில் இல்லை.

வாழ்வியல் நினைவுகளின் சரடில் , புரிதல்பிழைகள், பிசிறென நிற்பவை . நல்லூழின் வழக்காரில் ஒரு நாள் இவை சிடுக்கெடுக்கப்படலாம்  . உதாரணமாக இன்றைக்கு உள்ள "எனக்கு அம்மாவுடன்  சமீப உறவுமீட்சி " நிலையைப்போல . அதை நான் விழைந்தே இருந்தேன்  . எனக்குப் புரியாத , ஆனால் என் தொடர் இறைவேண்டலின் பலன்கள் அவை .

என் மறுநிலையாளர்களின் செயல்பாடுகளில் உள்ள எதிர்மறைகள் மற்றும் அதன் குவிமையத்தில் இருப்பது சூன்யம் என்கிற  உண்மையை , உன் ஆழ்மனம் உணர்ந்ததால் , நீ அங்கிருந்து விலக நேரிட்டது . அதனாலேயே நீ என்னிடம் மீண்டாய் .

ஆனால் அது மிகமிக ஆச்சர்யமானது . நிச்சயம் அது முழுமுதற்பொருளின் வெளிச்சம் , அதனால் ஏற்பட்ட செவ்வியல் இலக்கியப் வாசிப்புகள் , அதை வாழ்வியலில் பொருத்திப் புரிந்து கொள்ளுதல் . இதுவே உனக்கான தனித்த அடையாளமென நிற்கிறது.  என்றுமென நிற்க வாழ்த்துகிறேன் .

இன்று எனக்கு நீ மட்டுமே என மிச்சமாயிருக்கிறாய் . நம் வீட்டில் என் உடன்பிறந்த உனக்கு அனைத்தும் பொது . என்னிடம் கேட்டு பெற என்று எதுவுமில்லை . ஆனால் இந்த விஷயத்தில் நான் தர மறுத்ததற்கு மூன்று காரணம் .

என் குல கூடஸ்தரான தாத்தாவின் கொடியுறவுமுறை மற்றெவர்க்கும் போலன்றி எனக்கு மட்டும் , என்னுடனே அது முடிவிற்கு வருகிறது. தாத்தாவின் ஆகச்சிறந்த பிள்ளை முவரில் நிச்சயம் நம் தந்தையாக மட்டுமே இருக்கமுடியும் . அப்படி எனில் அவரை முதற்குரு எனக் கொண்டிருக்கும் என் வாழ்வியலில் , எனக்கு நிகழ்ந்தது  வரமேன்றி பிறிதொன்றென இருக்கவியலாது. அதற்கான என் தேடலின் ஒரு பகுதியே , என் பித்ரு பூஜாக்கிரமத்திற்கும், அதனைத் தொடர்ந்த  நித்தியபடி நீர்கடனுக்கு அவை இன்றியமையாதவைகள் . " சந்ரே திருஷ்டி சமானஹ" என ஶ்ரீராமர் சொன்னது பொலிவாக அப்பாவுடன் எனக்கான ஆகச்சிறந்த சம்பந்தம் இதுவன்றி வேறில்லை . இந்த பூஜா விதானத்தாலேயே இங்கு எல்லாமே மாறியது ,       நீ கிடைத்தது உட்பட . நீ மட்டுமே என்றாகி அது தடைபடுதல் , எனக்கு மட்டுமல்ல உனக்குமே நல்லதல்ல .

இந்த விஷயத்திலுள்ள நுன்மையை விளக்க நீ எனக்கு போதிய சந்தர்பம் தரவில்லை. நீ என்னிடம் மீண்டது ஒரு தற்செயல்  மட்டுமே , ஆழ்புரிதல்களால் அன்று , ஏனெனில் இது நிகழ வாய்பேயில்லை என்றே இருந்தேன் . ஆனால் பெருவிசும்பின் கரவுகளை யார் அறிய இயலும். எனவே இதுவரை கடந்து வந்ததை புரிதல்களால் வென்றெடுத்து நிற்கவைக்க வேண்டும் . இல்லையெனில் அது நிலைநிற்காது , அதை நீயும் அறிவாய். உனக்கும் எனக்குமான புரிதலின் இணைப்பு புள்ளி இது வரை தென்படவில்லை , ஆனால் அது மிக மிக அருகில் இருப்பதாக நீயும் நானும் உணர்கிறோம் . அது ஆழ்மன உரையாடல்கள் மூலமே சாத்தியமாகும் . அது இன்று வரையில் நிகழவில்லை .


உன்னை தொகுத்துக் கொள்ள உனக்கு நிறைய விளக்கங்கள் தேவை . அதை என்னிடம் எதிர்பார்க்காதே , ஏனெனில் அவை கடந்த காலத்தில் உள்ளவை . நான் இறந்தகாலத்தை நோக்கி பேசுவதில்லை . நான் முன்னமே சொன்னபடி உன்முதிரா இளமையின் அறிவு நச்சரிப்பதை உன் முதிர்ந்த செவ்வியல் இலக்கியங்களில் இருந்த பெற்ற தெளிவில் இருந்து புரிதல்கொள் . அவற்றுடன் உரையாடவே நானும் விரும்புகிறேன் . அந்த உரையாடல்கள் மூலமாக கிடைக்கும் விசையினாலேதான் எதிர்வரும் காலத்தை கடக்க இயலும் . அது நிகழாமல் போனால் பெற்றது அனைத்தும் வீண் என்றாகிப் போகும் .

நீண்டநாட்கள் நம்முடன் இருந்ததனால் பிறிதொருவர் சொத்து நம்முடையது என்றாகிவிடாது . எதனை விழைந்து அது வெளிவந்ததோ அது சித்திக்கும் வரை அது அவ்விதம் இருப்பதே அனைவருக்கும் நல்லது . இதை ஒருநாள் நீ உணர்வாய்

பல்வேறு நிகழ்சிநிரலின் மத்தியில் நீ இங்கு வருவது புரிதல் நிகழாமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். உனக்கு இது இன்றியமையாதது எனத் தோன்றின்

இதற்கென்று
ஒரு நாள் வா .
பேசிக்கலையாமல் ,
பேசிக்களைவோம்

ஆசீர்வாதங்கள்

என்றும் அன்புடன்

கிருபாநிதி அரிகிருஷ்ணன்
23-10-2016
புதுவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக