https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 14 மார்ச், 2017

அடையாளமாதல் - 4 (அலுவலகம் புகுதல்)

அரசியல் களம் - 4

அலுவலக புகுதல்.


இரவு தூங்கச்சென்றும் , விழித்தும் , முழுவதும் ஒரு வித பதற்றத்தோடே எழுந்தேன் . அப்போது நன்றாக விடிந்திருந்தது. முதல் நாள் இரவில் நாளை காலை பதினோரு மணிக்கு செல்லலாம், என்று முடிவெடுத்து சரியாக காலை பதினோரு மணிக்கு அங்குபோய் சேர்ந்தேன் . "மாநில இளைஞர் காங்கிரஸ் தலைமை அலுவலகம் " என்று அந்த இடத்தை சொன்ன பலகைக்கு எப்படியும் பத்து பதினைந்து வயதிருக்கும் .

துருவேறி ,சில இடங்களில் செரித்த தகுடும், மங்கிய எழுத்துக்களுமாக இருந்தாலும் ,அது ஆளுமையாக, வரலாறாக புதுவை மண்ணில் தன் அதிகார இருப்பை துல்லியமாக  சொல்லியபடயே இருந்தது . அரசியல் அதிகாரம் என்பது மிகக் கூர்மிக்கதொரு ஆயுதம் அதை வீரனென்று கையிலெடுப்பவன் அதுவாகவே ஆகி , எதிர்பட்டதை செதுக்கியும் வெட்டியும் கழித்தும் குத்தியும் நிமிர்த்தியும் அழித்தும் தருக்கி முன்செல்வதால் மட்டுமே அவன் பிறரை ஆள்கிறான். ஆளுமையில்லாதவன் ஆணிலி. அவனுக்கு முதுகு சொறியக்கூட அது பயன் பாடுவதில்லை.

வண்டிக்கு ஸ்டான்டு போட்டு இறங்கியதும் மனம் அனிச்சையாக அந்த இடத்தை அவதானிக்க தொடங்கியது . அலுவலகம் முதல் மாடியில். வழி ஷகீலா ஓட்டலுக்கும் (அது  பரோட்டா குருமாவிற்கு பிரசித்தம்) பெரிய மரவாடி ஒன்றுக்கும் மத்தியில் இருந்தது , நெட்டூக ஏற்றமும் ஒரு நேர் திருப்பமுமாக , சின்னதாக ஒருவர் மட்டுமே செல்லக் கூடியது .வெளிச்சமில்லாத குறுகலான சந்து. இயற்கையாகவே உயரத்தை கால்கள் தன்னிச்சையாக அளவிட்டு ஏற பழகிக் கொள்ளும். படிகளின் உயரம் பல அளவுகளில் இருந்திருக்க வேண்டும். ஆகையால் அது சிக்கலுற்று கால் தடுக்கி தடுமாற்றத்துடன் ஏறி மூச்சி தேம்ப ஆரம்பிப்பதற்குள் மாடி வந்துவிட்டது.

உள் நுழைந்தவுடன் ஒரு நடுத்தர ஹால் .இருபதுக்கு பதினைந்து அளவில் இருந்தது அதை ஒட்டி கிழக்கு பக்கமாக பலகணி . ஹாலுக்கு மேற்கு பக்கம் ஒரு சிறிய அறை அங்கு மேஜை நாற்காலிகள் போட்டு தலைவருக்கானது என சொல்லாமல் புரிந்தது பின் பக்கம் இருந்த இருட்டு நடைக்கு போக ஒரு சிறு வழி விட்டு ஒரு நீண்ட டீ கடை பென்ச் மாதிரி ஒன்று .

இருட்டு நடையை தாண்டி பின்னால் ஒரு சிறிய திறந்த பகுதி. இடப்பக்கமாக ஷகீலா ஓட்டலின் கறிய புகை கூண்டு ,குருமா மனத்தை மெல்லிய வெண்ணிற புகையாகக் கக்கி பசியை துண்டிக் கொண்டிருந்தது .அந்த சிறிய திறந்தவெளி பகுதியின் மேற்கே இரண்டு கழிவறைகள். முழு இடமும் சுண்ணாம்பு கண்டு ஒரு மாமாங்கத்திற்கு மேல் ஆகியிருக்கும் . கரும் பச்சையும் பதுப்பச்சையுமாக பூஞ்சை பாசி. பல இடங்களில் கருப்பு மைப்போல மாறி ஒரு வித வாசனையோடு எவரையும் சுவரில் சாயாதபடி படர்ந்திருந்தது .

நான் அங்கு போய்சேர்ந்த போது தலைவர் வந்திருக்கவில்லை . ஹாலில் ஐந்தாறு இளைஞர்கள் பேப்பர் படித்துக் கொண்டிருந்தனர் . என்னை பார்த்தவுடன் ஒருவன் எழுந்து யாரு என்றான். நான் கணகராஜ் சேகரைப் பார்க்கவேண்டும் என்று சொல்லி முடிப்பற்குள் பின்னால் இருந்து கணகராஜ் சேகர் வெளிப்பட்டு தோழைமையான சிரிப்பின் வழியாக என்னை வரவேற்றான்.

பிறகு இருவரும் பின்கட்டுக்குச் சென்றோம் ,அங்கு கமலக்கண்ணன் , தாமோதரனுடன் இன்னும் சிலர் இருந்தார்கள் . அனைவரின் அறிமுகத்துடன் , அன்று கட்சியில் அனைவராலும் ஏற்கப்பட்டு முழுவதுமாக உள்ளிழுக்கப்பட்டதாக உணர்ந்தேன் .அனைவருக்கும் டீ சிகரெட் சொல்லிவிடப்பட்டது ஒரே உற்சாகம் கேலியும் கிண்டலும் வெடிச்சிரிப்பாக இருந்தது அந்த இடம்.

கமலக்கண்ணனுக்கு ஆச்சர்யமான நல்ல நகைச்சுவை உணர்வு சொல்ல வேண்டிய எதையும் ஒரு வெடிச்சிரிப்புடன் முடிப்பது அவன் வழக்கம் . அந்த சிரிப்பு உடன் உள்ள எவரையும் தொற்றிக்கொள்ளக் கூடியது , ஆகவே கேலியும் கிண்டலுமாக எப்போதும் அங்கு   தளும்பிக்கொண்டே இருக்கும் . ஒரு சிலரைத் தவிர அந்த குழு முழுவதும் மிக எளிய மக்கள். ஆலைத்தொழிலாளிகள் அல்லது அரசியலையே முழுநேரமாக செய்பவர்களால் ஆனது .

எனக்கு புரிந்தவரை அவர்களின் அரசியல் என்பது  இளைஞர்  காங்கிரஸ் தலைவர்  பாலனை சட்டமன்ற உறுப்பினராக்குவது என்கிற  ஒற்றைத்தன்மையை குறிக்கோளாகக்  கொண்டது . பொறுப்புக்கு வரும் பாலன்  தங்களின் எதிர்காலத்திற்கான தேவைகளை நிறைவேற்றுவார் என்கிற அதீத நம்பிக்கையே அவர்கள் அனைவரையும் பினைக்கும் சங்கிலியாக இருந்தது.

சாமாண்யர்களால் நிரம்பி இருந்த அமைப்பு அது , இருப்பனும் உயிரோட்முள்ள பல அதிகார அடுக்குகள் கொண்டிருந்தது .அவை வெளிபடையாக தெரியாதவை .அனைத்துமே அதே ஒற்றை குறிக்கோளால் பினைந்திருந்தாலும், ஒன்றை ஒன்று தயக்கமில்லாது  விழுங்கக்கூடியது . அதில் உள்ள அதிகார போட்டிகள் எப்பவும்  மூர்க்கமானதாகவும் மனிதாபிமானதற்றதாகவும் எப்போதுமே இருந்தது வந்தது. அங்கு எழுதப்படாது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை சட்டம், "சுரண்டு அல்லது சுரண்டப்படு". யாரும் அதற்கு வதிவிலக்கல்ல .

மேலதிகமாக அதனுடைய விளையாட்டு விதிகள் வெளிப்படையானவை  .உள் ஊழல், காட்டிக்கொடுத்தல் , காய்களென வெட்டுபடல் , நடப்பவரை கால் இடறிவிடல் இன்னபிற.... அனைத்தும் அங்கீகரிக்கபட்ட அரசியல்  பாலபாட கல்வித்திட்டங்கள்.

இதனால் அந்த அடுக்குகளில் இருந்து வருந்தி , கசந்து , முரண்பட்டு, ஏமாற்றப்பட்டு ,வஞ்சிணத்தோடு யாரோ சிலர் தொடர்ந்து உதிர்ந்தபடியே இருப்பார்கள் . அந்த வெற்றிடத்தை யாராவது சென்று நிரப்பியபடியே இருப்பார்கள். இந்த வளர்சிதைமாற்றத்தை , நோக்கர்கள் அரசியல் வளர்ச்சி எனக்கூறுவர் .ஆனால் அதற்கு மண்ணென இருப்து துரோகம் என்கிற ஒன்றைத் தவிர பிறிதொன்றில்லை.

தலைவர் வந்துவிட்டார் என்று அலுவலக பையன் வெங்கடேசன் ஓடிவந்து சொன்னபோது  , அந்த செய்தி அங்கிருந்த எவரிடமும் எவ்வித அசைவையும் ஏற்படுத்தவில்லை என்பதை உணர்ந்தேன் . சிறிது நேர இடைவெளி விட்டு ஒவ்வொருவராக முன்னால் இருந்த தலைவருடைய  அறைக்கு சென்று குழுமத் தொடங்கினர் .

நான் சிறிய தயக்கத்துடன் உள்ள வந்த போது , என்னை எதிர்பார்காததால் ஏற்பட்ட  சிறு திகைப்பை வெளிக்காட்டாது          ' என்ன ஜோதியில் கலந்தாச்சா' என்றார் பாலன் , நான் மையமாக சிரித்தேன் .

முகம் தெரியாத யாரோ ஒருவர் எழுந்து எனக்கு இடம் கொடுத்தார் . பின் அது என் இடமானது . இதுதான் "வளர்ச்சி" எனப்படுவதோ? . அதுமுதல் என்னைப்பார்த்தும் யார் யாரெல்லாம் எழுந்து தங்கள் இடத்தை கொடுதார்களோ அது எல்லாம் என் இடமென ஆயிற்று.

ஒற்றைப்படை அரசியல் நிலைபாட்டினால் ,எதிர்கால எதார்த்த நகர்வுகளும் அதை ஒட்டிய பின்விளைவினால் எழுந்து வரும் ஒரு முகமும் மிக உக்கிரமானது என்பதை நான் உள்பட எவரும் அன்று அறிந்திருக்கவில்லை .கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக