https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 4 ஏப்ரல், 2026

மணிவிழா - 74. * அறப் பிழையும் மனப் பிறழ்வும்-4 *

 ஶ்ரீ:





மணிவிழா - 74


04.04.2026


* அறப் பிழையும் மனப் பிறழ்வும்-4 *




நிலையழதலின் உச்சம் என்பது வெளியேற இயலாத சுழலைப் போல எண்ண அலைகள் நம்மை மீள மீள அதன் ஆழத்திற்கு தொடர்ந்து செலுத்திக் கொண்டே இருக்கும் . இனிய விஷம் போல அதனுள் ஆழந்து கிடக்க செய்யும் செயலற்ற தன்மை சிந்தனையில் துருவேற செய்கிறது. பின் மீட்சி என்பது இல்லை. வாழ்நாள் முழுவதும் அதில் உழன்று அதுபற்றி எப்போது பேசினாலும் சட்டென கண்ணீர் பெருக்கோடு அத்தனையும் நேற்று நடந்ததென சொல்லி அரற்றுபவர்களை பார்த்திருக்கிறேன். நோயின் தாக்கம் அது. அனைவரையும் ஒன்று போல பீடிக்கும் அதன் பிடியில் இருந்து நான் எப்படி மீண்டேன் என்கிற பிரமிப்பு ஒரு புறம் என்றாலும் மீண்ட தருணத்தைகீதா முகூர்த்தம்என்கிறேன்


கீதா முகூர்த்தம்என்றதன் பின்னணி மிக விரிவானது. அது இன்னதென அறியாமல் மெல்லிய காற்றாக உள்நுழைந்து அதுவரை அடுக்கி வைத்திருந்தவைகளின் எடையை இல்லாமலாக்குகிறது. முற்றாக கலைத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது .நிகழும் போது அதன் இருப்பை ஒருபோதும் அறிய இயலாது. அதை அறியும் போது அது அருளிய நல்லூழ் வாழ்நாள் நினைவாக வேறூன்றி விடுகிறது அதன் பிறகு அது கொடுத்த மொத்தத்தில் இருந்து இழைகளாக பிரித்து பார்த்து அதை இன்னும் அணுக்கமாக உணர அதே கீதா முகூர்த்தம் அருள வேண்டும்.  


அது எனக்குள் நிகழ்த்தியவை அனைத்தும் நான் அதுவரை அறியாதவைகளில் இருந்த எழுந்து வந்த நுண்ணிய மாற்றம். முதலில் என்னை சூழ்ந்து எழுந்த அத்தனை பற்றியும்தேவை, தேவையில்லைஎன்கிற இரண்டு வகைமையில் பிறித்து கொள்ள வைத்தது. அதை செய்ய முயற்சிக்கும் அந்த கணம் வரை அதை அறிய முடிவதில்லை. மனதின் ஆயிரம் கரவுகளில் ஆரோக்கியமான கூறு ஒன்று அவற்றை ஏற்கவும் நிராகரிக்கவும் மிக மிக தெளிவான தர்க்கத்தை ஒரு குழுந்தையின் மனதை போல உருவாக்கிக் கொள்ள வைக்கிறது. தேவை தேவையில்லை என்பதை கடந்து அதில் மூன்றாம் கருத்து இல்லை என்பதையே மிகத் தாமதமாக அவதானிக்க முடிந்தது . நிலையழிதலில் இருந்து வெளிவருவது இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்துவிட்டது போலன்றி இருளில் கரிய தகடுகளாக தெரியும் இலை தழைப்புகள் விடியலின் மாற்றத்தை அறிவதற்குள்ளாக ஈரப்பசையுடன், பச்சையின் பல வண்ணங்களை காட்டி பொலிந்து நிற்கும் தருணம் அனைத்தையும் பிரிக்கும் காலத்தின் கோடு நம்மை கடந்து சென்றுவிட்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது


அது நிகழ்ந்த போது அதுவரை மனதை பிழிந்து எடுத்த அத்தனையும் காணாமலாகி மனம் வானத்தைப் போல தெளிவடைந்திருந்தது. நிகழ்ந்தவைகளில் மனம் கசப்பு கொள்ளாது அழகியலில் இருந்த இனிப்பை போல ஒன்றை அது நிகழ்த்தி இருந்த மாயம் வெளிப்படும் ஒரு தருணத்திற்கு காத்திருந்தது . மனம் நிலையழிதலில் இருந்து முழுமையாக வெளியேறிவிட்டிருந்ததை முதலில் நான் அறிந்திருக்கவில்லை என சொன்னால் அது பிறருக்கு புரியுமா என தெரியவில்லை. அதுவரை நான் தவிர்த்திருந்த இசை கேட்கும் பழக்கம் மாற்றமடைந்து சட்டென ஒரு செயலி கண்ணில் பட அதில் இருந்து பாடல் ஒன்றை பதிவிறக்கம் செய்து கேட்ட அந்த நிமிடத்தில் தாழ் திறந்திருந்ததென அதன் கதவுகள் சொன்னது. அதுகடல்திரைப்படத்தில் வரும்மூங்கில் காடுஎன்கிற பாடல் வரிகள். அதன் அத்தனை இசை வர்ணங்களுடன் சட்டென முழுமையாக ஒலித்து ஆட்கொண்ட போது அது அதன் வல்லமையை அறிந்து கொண்டேன். அதன் பிறகு பல நூறு முறை அந்த பாடலை கேட்டாலும் அன்றிருந்த மாயத்தை அதில் உணரமுடியவில்லை


முதல் முறை கேட்ட போது அது ஒருவித கொண்டாட்ட மனநிலையை உருவாக்கி இருந்தது. மனம் குதூகலித்து கண்கள் பொங்கின இசை அதை ஏன் செய்ய வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகள் மிக மிக கவனமாக அதை தவிர்த்திருந்தேன் அதற்கு சரியான காரணம் இல்லை. துவக்கத்தில் ஒருவித வன்முறை போல வன்மம் போல் மிகுந்து அனைத்திலிருந்தும் என்னை வெட்டி விலக்கிவிட்டேன். அதன் பிறகு எந்த சிறு கொண்டாட்டங்களையும் மனம் ஏற்கவில்லை. முதன் முதலில் எனக்குள் நிகழ்ந்த நுண்ணிய மாற்றத்தை , நான் வழக்கமாக கேட்கும் பிற இசைகளை, பழைய பாடல்களை கேட்டும் போது உருவான மனவிலகலில் இருந்து அறிந்து கொண்டேன்


பழைய திரைப்பட பாடல்கள் மனதிற்கு எப்போதும் மிக நெருக்கமானவைகளாக இருந்தவைகள் ஆனால் அவற்றை இப்போது கேட்ட முயன்று தோற்ற போது மனம் முற்றாக அதிலிருந்து விலகிவிட்டிருந்ததை அறிந்து கொண்டேன் . பழைய பாணி இசை அத்தனை உகப்பாய் இல்லை காது கொள்ளாத புதிய நவீன இசை தொகுப்பை மனம் நாடத் துவங்கியது. அந்த துள்ளோசையை தேடி தேடி சென்று கொண்டிருந்தேன். அது மிக மிக மெல்லியதாக ஒன்றை அழுத்தமாக சொல்ல வந்தது. மறுபிறப்பை போல. நான் அறிந்தநான்இப்போது இல்லை. என்னிடம் இருந்த எது இப்போது காணாமலாகி இருந்தது என்பதை அப்போது நான் அவதானிக்க முயலவில்லை.


ஈடுபாடுகளற்றவைகளை , விருப்பமில்லதவைகளை ஒதுக்க துவங்கினேன். கோவில் அந்த இடத்திற்கு வந்த போது அதிர்ந்து போனேன். உண்மையில் எனக்குள் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை குறித்த என் ஆழ்மன நிலைப்பாடு அடுத்த இடத்திற்கு வந்த போதுதான் எனக்குள் என்ன நிகழ்கிறது என புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். நான் எனது இறை நம்பிக்கையை இழக்கவில்லை. பூஜை அறை இதுவரை என்னை கைவிடவில்லை. ஆனால் கோவிலில் இருந்து முற்றாக மனம் விலகிவிட்டிருந்தது. கோவில் அளிக்கும் தனிமைக்காக சீர்காழியை பக்கமுள்ள அனைத்து கோவிலுக்கும் மீள மீள சென்று கொண்டருந்தது இப்போது ஏன் நின்றது. பெரிய திகைப்பை கொடுத்தது திருப்பதி கோவில். அந்த நிரையில் அது வந்து உட்கார்ந்தது ஏன்?. இதற்கெல்லாம் என்னிடம் இப்போதும் பதிலில்லை. இந்த பதிவு எழுதி முடிக்கும் போது அதை கண்டடையளாம் ஒருவேளை அது நிகழாமலே போகலாம்


நிலையழிதலின் உச்சத்தில் மனதை அதன் இயல்பில் செயல்பட விடுவதை போல ஆபத்து பிறிதில்லை. அது எண்ணியிராத விபரீத பலன்களை உருவக்க கூடியது.பின் அதிலிருந்து மைய மனதை விடுவிப்பது சாத்தியமில்லை. அதனுடன் போராட வேண்டி இருக்கும். அந்த போராட்டத்தில் ஒரு கணம் நம் சொல்லுக்குள் நிற்பது போன்ற பாவணையை உருவாக்கி அது வேறு ரூபம் எடுத்து மீளவும் அங்கேயே திரும்பி வந்து முன்னிலும் உக்கிரமாக நம்மை புலம்ப வைத்து விடுகிறது . மனம் ஆயிரம் கரவு பாதைகளால் மீள மீள நொதிப்பதை போல துவங்கிய இடத்தில் வந்து நின்று ஒவ்வாத ஒன்றை செய்து கொண்டே இருக்கிறது . மனம் முழுவதுமாக பாழுதுற்று நிற்பதை போன்ற தோற்றமளித்தாலும்காரணத்திற்குள்ளே காரியம்போல அதன் உள்ளீடுகளில் உள்ள பிறிதொன்று தன்னில் இருந்து தன்னை விடுவிப்பதையே நான் இங்கு கீதா முகூர்த்தம் என்கிறேன்


அது முற்றும் நம் வசத்தில் இல்லை. பேரிருப்பை உணரும் கணம் அது. அது மட்டுமே மனதின் காட்டாற்று பிராவாகத்தில் சிறிய பரிசிலை போல அதன் அலைபாய்கிற ஒழுக்கில் பயணப்பட்டாலும் அதில் கரையாது தனது இலக்கை தேர்ந்து செல்கிறது. என் ஆழமனம் தேர்ந்தெடுத்த விஷயத்தை விட அது உருவாக காரணமாக இருந்து சூழல் இன்னும் விரிவானது. ஒருவேளை தனக்கான சூழலையும் அதுவே உருவாக்குகிறது என்று சொன்னால் நான்  வியப்படைய மாட்டேன்


மனம் ஓயாது புலம்பும் போது அதிலிருந்து வெளியேறும் வழியாக அதன் தொடர் செயல்பாட்டை நிறுத்த ஒரே வழி வேறு விஷயங்களில் ஈடுபடுவது. சொல்வதற்கு எளிதான அதை செயல்படுத்தும் போது அது சாத்தியமில்லாதது என்பது புரிந்து விடும். சிந்தனையின் அந்த சரடை இசை துண்டிக்க கூடும். ஆனால் நான் இசை கேட்பதில் இருந்து வெகு தூரம் விலகிவிட்டிருந்தேன். சற்று கவனம் கொடுத்தால் காது மட்டுமே மனதிற்கும் சிந்தனைக்கும் மிக அணுக்கமானது. காதில் இடையறாது கேட்கும் வேறு விஷயங்களை தேர்ந்தெடுக்க துவங்கினேன். இப்போது உணர்கிறேன் அவற்றில் உள்ள அழகியல் மட்டுமே மனதின் பழுதுராத உள்ளீட்டை விசையுடன் செயல்பட வைத்தது என்று .


கிருஷ்ணபிரேமியின் உபன்யாசம் வைணவ பாணியில் இருந்து மிக வேறுபட்டது. வைணவ உபன்யாசகர்கள் சம்ஸ்கிரத பிரயோகத்தை ஒருவித தன்திறமை வெளிப்பாடாக முன்வைக்கிற போது , முன்பே அதனுடன் எந்த அறிமுகமும் இல்லாத எளிய மனம் கேட்பவைகளில் இருந்து அந்த சொற்களை நிராகரித்து பிற சொற்களை தொகுக்க முயல்வதால் கேட்பவை அர்த்தமிழந்து போவதுடன் அதன் மீது எந்த பிடிமானமும் உருவாவதில்லை. உழைத்து நினைவில் நிறுத்திக் கொள்ள விரும்புபவர்கள் கூட அது பற்றிய குறிப்புகளை எடுப்பவர்களாக மீளவும் தாங்கள் எழுதிய குறிப்புகளை வாசிக்கும் போது கேட்டு விளங்கியதாக தோன்றிவைகளின் பொருள் விளங்காது வெளிறி திணறுவதை பார்த்திருக்கிறேன்


கிருஷ்ணபிரேமியின் உபன்யாசம் அதிலிருந்து மிக நுட்பமாக வேறுபட்டிருந்தது . மரபான நிகழ்த்து கலையான கதாகாலட்சேப முறையை சேர்ந்தது. அதில் பாடல்கள் முக்கிய இடத்தை எடுக்கிறது. அதன் முதன்மை வித்தியாசம் அவரது குழைவான குரல் வளம் மற்றும் அவரது அபாரமான சங்கீத ஞானம். அது கடினமான மனல் போல எதனுடனும் சேராது அபத்தமாக நின்று தனியாக ஒலிக்கும் சமஸ்கிரத உதிரி எழுத்துக்களை மொழியாக்கி அதன் கூர்மைகளை தட்டி இசையாக்கும் போது நிகழும் மாயம் அனைத்திற்கும் அடிப்படை. அது இசையாக ஒலிக்கும் போது மொழியை அர்த்தப்படுத்தும் அவசியம் எழாமல் அதன் ஒழுக்கிற்குள் மிக எளிதாக நுழைந்து விட முடிவதால் அது மனதிற்கு மிக அணுக்கமானதாக இருக்கிறது. அதன் நுண்ணிய ஸ்வர பேதங்கள் இசையாகி நின்று மனதை குதூகலிக்க வைப்பவை கண்களை பொங்க வைப்பவை பின் மெல்ல அவை மனதை தன்னுள் ஆழ்த்திக் கொள்கிறது. தாயின் கர்ப்பம் போல மெல்லிய உஷணம் மனதை சாந்தப்படுத்துகிறது


அந்த அழகியலின் ஈர்ப்பு தன்னிலை மறக்கச் செய்து ஆழ்ந்த உறக்கம் கொடுக்கும் மன சாந்தியை உருவாக்கி அளிக்கிறது. தகவல் பறிமாற்றங்களை செய்யும் சிடுக்கடைந்து போன பழைய நரம்பு மண்டலங்களின் அடிப்படைகளை கலைத்து புதிய மின்னல் வரிசைகளை உருவாக்கிவிடுகிறது. அதில் புதிதென பாயும் ரத்தம் மருந்தை போல ரசாயன மாற்றத்தை நிகழ்த்தி விடுகிறது. இவையெல்லாம் ஒருவகை தர்க்கத்திற்கு உட்பட்ட புறவய காரணங்களாக தெரிந்தாலும் அகவயத்தில் அவை இன்னும் நுட்பமானதாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். மனம் அதுவரை வைத்திருந்த கட்டுமான அடுக்குகளுக்குள் நாம் நம்மை இன்னதென தெரியாத அதன் அலைகளில் நம்மை சுற்றி நிகழும் அனைத்தையும் அடுக்கி அவற்றை நமது புரிதல் என உருவாக்கி கொள்கிறோம் . ஆச்சர்யமாக அது அந்த அடிப்படையில் நிகழ்வது இல்லை என நினைக்கிறேன். நமக்கு நிகழ்பவைகளில் இருந்து அவற்றை எவ்வகையான தகவல்களாக, புரிதலாக, நிலைபாடுகளாக உருமாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை அந்த கட்டுமானமே தீர்மானிக்கிறது.


அதற்கான அடிப்படைகளை அது முதலில் உருவாக்கிவிடுகிறது அல்லது உருவாக்கி வைத்திருக்கிறது. அங்கு அது நமக்கு அளிக்கும் இடத்தில் அது வகுக்கும் களத்தில் நமக்கான புரிதலாக அவை இருக்க வேண்டும் என அது தீர்மானிக்கிறது என்பது நம்புவதற்கு திகைப்பை தருவது.


இப்படி நிகழ வேண்டுமானால் நமது புரிதல், கற்பனை போன்றவை கூட அந்த கட்டுமானம் காட்டும் வழியில் கட்டமைக்கப்படுகிது என்றால் நான் என என்னை எப்படி வரையறை செய்து கொள்ள வேண்டும் என்கிற கேள்வியை எழுப்பிக் கொள்ள வேண்டி இருக்கிறது. அவற்றை இப்போது எனக்குள் நிகழ்ந்திருக்கும் மாற்றம் அதுவரை இருந்த அடிப்படையை மாற்றி புதிய செயல்பாட்டு களங்களை உருவாக்கி இருக்க வேண்டும். காரணம் இப்போது நான் எனக்கான புறவய தகவல்களை நான் இதுவரை அடுக்கி வைத்த முறை அதில் இப்போது அடுக்க இயலவில்லை என்பதும். மீறி நான் அதனுள் செலுத்த நினைக்கும் விஷயங்களை அது தொடர்ந்து நிராகரிப்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. இப்போது எனக்கான தகவல்களில் இருந்து எனது புரிதலை அதன் நிலைப்பாடுகளை அது மறு கட்டுமானம் செய்திருக்கும் அடுக்கு முறைக்கு ஏற்ப மறு அவதானிப்புடன் வைத்தால் மட்டுமே அவற்றை ஏற்கும் என்பது அவையே நான் அறிந்து கொள்ள வேண்டியது என அது தீர்மானிப்பதை உணரமுடிகிறது. அப்படியானால் இதுவரை நான்நான்என அறிந்திருந்த அது இப்போது எங்கே?. புதிதாக திறந்து நிற்கும் நான்தான் நானா? இது இனி எவ்வளவு காலத்திற்கு


மகிழ்வு, சுவை உணர்வு ,மேலும் தவிர்க்க இயலாத பழக்கம் போன்றவை உடலில் உள்ள நுண்ணுயிரின் விழைவு மட்டுமே. தனக்கானதை இந்த உடலில் இருந்து அது பெற்றுக் கொள்கிறது என ஓரு கோட்பாடு உண்டு. இப்போது மனம் என்பது கூட அதனுடைய மற்றொரு கண்ணியா?.இது என்னவென்று அறிய முடியாத அடுத்த புதிர். இப்போது தன்னுள் அடிக்கிக் கொள்ள அவை எனக்கு இடமளித்தால் மட்டுமே அவற்றை எனக்கானவையாக புரிந்து கொள்கிறேன். அதுவரை இருந்த நான் இல்லை அதிலிருந்து வெளியேறிய போது. மறுபிறப்பு போல அனைத்தையும் புது கண் கொண்டு பார்க்க வைக்கிறது, புரியவைக்கிறது. அதன் பிறகு என் நிலைபாடுகளை நான் ஒருபோதும் உருவாக்கிக் கொள்ளவில்லை. அது முன்பே எனக்காக காத்து அங்கு இருந்தது. பின்னர் நிகழும் மாயம் என்பது நான் என்னை மீள மீள கண்டடைவது


அதன் விசை மிக மெல்லியது. மனதின் ஆக்ரோஷ இயல்பிற்கு மாறுபட்டது. காற்றை போல ஊடுறுவக் கூடியது. சிந்தனையை செயலிழக்க செய்யும் மனதின் அடிப்படை கூற்றினால் பாதிப்புற்ற செல்களை அது புதுப்பிக்க துவங்குகிறது. பலருக்கு பலவித வடிவங்களில் அது கைக்கு கிடைத்திருக்கலாம்.எனக்கு இசைக்கு பிறகு மிகவும் சிந்தனையை தொடும் உபன்யாசங்களை கேட்பது. வேளுக்குடி கிருஷ்ணன் போன்றவர்களின் உபன்யாசத்தில் உள்ள தர்க்க அடுக்குமுறைகளை மிக கவனமாக கேட்பதுண்டு. ஆனால் இப்போது நான் இருக்கும் மனநிலையில் அவை எனக்கு உகப்பாக இல்லை. கேட்பதனூடாக நமது உழைப்பை புரிதலாக அதற்கு முற்றாக கொடுக்க வேண்டும். மனம் கொந்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில் அது வதை. நான் வேளுக்குடி கிருஷ்ணன் போன்றவர்களின் உபன்யாசங்களை கேட்பதை முற்றாக தவிர்த்திருந்திருந்தேன்


அந்த சூழலில் கிருஷ்ணபிரேமி உபன்யாசம் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது நான் ஒரு உச்ச நிலையழிதலில் இருந்த போது. நான் எனக்கு வேண்டியவர்களாக இருக்க வேண்டிய பலரை ஏன்?இவர்கள்? இப்படி? என்கிற விடை தெரியாத கேள்விகள் மீள மீள எழுந்து  தொந்தரவை கொடுத்த சூழலில் அதிலிருந்து விடுபட அதன் புறவயங்களில் பயணபட முடிவெடுத்த போது நண்பர் ஒருவருடன் காரில் பயணக்கும் வாய்ப்பு கிடைத்தது. வழக்கமாக எனது காரில் பயணிக்கும் பழக்கமுள்ள எனக்கு அன்று அவரது காரில் பயணப்படும் சூழல் உருவானது. அவரது காரில் தான் நான் முதல்முறையாக கிருஷ்ணபிரேமியின் உபன்யாசம் கேட்டேன். நிச்சயம் அது ஒரு கீதா முகூர்த்தம். ஒரு முழு நாள் பயணம் என்பதால் பொழுது போக்கிற்காக அதை முழுமையாக கேட்க முடிவெடுத்து அன்று இரவு வீடுவந்தடைந்த போது எனக்குள் நிகழ்ந்த சிறிய மாற்றத்தை உணரமுடிந்தது. அந்த பயணம் முழுவதும் என்னை வதைத்த கேள்விகள் எதுவும் என் நினைவில் எழவில்லை.


துவக்கத்தில் கிருஷ்ணபிரேமி எனது ஆச்சாரியனின் குரு என்பதால் ஒரு வகையில் எனக்கும் குரு போன்றவர்

பலர் அவரை பற்றி சொல்லி அவரது உபன்யாசத்தை கேட்க சொன்ன போதெல்லாம் அவற்றை மறுத்திருக்கிறன். அவரது பாணிபிரவசனம்என்கிற சொல்முறையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் அதன் மீது ஏன் என சொல்ல இயலாத ஒவ்வாமை இருந்தது. ஸ்மார்த்த சம்பிரதாயம் என்கிற மெல்லிய காரணம் அதற்கு பின்னால் இருந்திருக்கலாம். அவர்கள் முழுவதும் அத்வைத கோட்பாட்டை முன்வைப்பவர்கள் என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். இவை அனைத்தும் எனது புரிதல் மட்டுமே. ஆனால் முதல் முறை அதிக கவனமில்லாமல் கேட்ட போதே நான் அதுவரை கேட்ட அனைத்து உபன்யாசங்களில் இருந்து அது முற்றாக மாறுபட்டு இருந்ததை உணர முடிந்தது . அவரை ஸ்மார்த்த சம்பிரதாயத்துடன் பொருத்தி இருந்தது பிழை என புரிந்து கொண்டேன்


அவர் துவைத சம்பிரதாயத்திற்கு மிக அணுக்கமாக இருந்தார் என்பது எனது அடுத்த மனநிலை. அதுவே கூட சரியா என தெரியாது. அவர் பலவகையில் பிற சைவ முறைகளில் இருந்து மாறுபட்டிருந்தார். காஞ்சி சங்கர மடத்துடன் தொடர்பில் இருந்தாலும் அவர் தனக்கென பிரத்யேகமாககண்ணனைமுழு முதல் தெய்வமாக கொண்டிருந்தார் என நினைக்கிறேன். வைணவ உரையாளர்களுக்கும் இவருக்குமான மைய வேறுபாடு சம்ஸ்கிருத சொல் பிரயோகம். அது வைணவர்களின் உச்சரிப்பில் இருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது


வைணவ சம்பிரதாயத்தில் வேத பாடசாலையில் பயிலும் அனைவரும் அவரவர் கோத்திரம் சார்ந்த வேத சாகைக்கு அப்பால் வேதத்தில் பரிச்சையமற்றவர்கள். சம்ஸ்கிருத மொழியுடனான அவர்களின் தொடர்பு ஒரு எல்லைக்கு உட்பட்டது. சம்ஸ்கிருத பாடம் முடிவடைந்த உடன் அருளிச்செயல் என்கிற ஆழ்வார்களின் திவ்விய பிரபந்த நூலை கற்க துவங்குவார்கள். அது ஒருவகையில் சந்தை ஒலிகளினாலான முற்றோதுதல் முறையை சார்ந்திருக்கும்


ஸ்மார்த்தர்களுக்கு நான்கு வேதமும் பாடம் என்பதால் சமஸ்கிருத மொழியில் அவர்களின் பிரயோகம் மிக மிக இயல்பானது. கிருஷ்ணபிரேமி பிற சைவ மரபில் இருந்து வேறுபட்டு தனக்கென ஒரு சம்பிரதாயத்தை உருவகித்திருக்க வேண்டும். ஒருவகையில் ருத்திரனை முதல் குருவாக கொண்டு நாராயணன் வரை நீளும் குரு மரபானருத்ர வைஷ்ணவத்திற்குஅணுக்கமானதாக சொல்லலாம். அவர்கள் அனைவருக்கும்ராமன் மற்றும் கிருஷணன்பரம்பொருள். ராமாயணம் அனைத்திற்குமானது என்கிற நிலைபாடுகளை கொண்டவர்கள். தமிழகத்திற்கு தெற்கே அவர்களின் களம் மிக விரிவானது. கம்ப ராமாணனத்தில் மனம் தோய்ந்தவர்கள் பலரை பற்றி ஜெயமோகன் சொல்ல கேட்டிருக்கிறேன். நாஞ்சில் நாட்டை ஒட்டிய வேளாளர் மரபினருக்கும்ராமன்கண்கண்ட தெய்வம். கம்ப ராமாயணம் நித்திய பாடம் போல


வைணவ சம்பிரதாயத்தில்ராமன் கண்ணன்என இருவரை பற்றிய ஆழ்வார் பாடல்களை தவிர கம்ப ராமாயணத்தை வைணவர்கள் ஏனோ கருத்தில் கொள்வதில்லை. அவர்களுக்கு அதில் ஒவ்வாமை இருப்பதை அறிந்திருக்கிறேன். கம்பர் ராமனை ஒரு சராசரி மனிதனாக காட்டுவது தங்களுக்கு ஏற்புடைதல்ல என பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். அவர்களின் உபன்யாசத்தல் கம்ப ராமாயணத்தில் இருந்து மேற்கோள்களை மிக மிக அறிதாகவே  கேட்டிருக்கிறேன். இது எனக்குள் மிக ஆழமான செல்வாக்கை செலுத்தியிருக்க வேண்டும். அல்லது புலவர் கீரன் கிருபானந்தவாரியார் போன்றோர் எனது அந்த எதிர்மறை தன்மைக்கு காரணமாக இருக்கலாம்.


எல்லாவற்றிற்கும் அப்பால் தமிழ் பற்றாளர்கள் என சொல்லிக கொள்ளும்முற்போக்காளர்கள்மீது மிக கடுமையான ஒவ்வாமை இன்றளவும் உண்டு. அந்த விசைதான் தன்னை முற்போக்காளர்களிடம் இருந்து மாறுபட்டிருந்த ஜெயமோகன் நோக்கி என் ஆழ்மனதால் நான் செலுத்தப்பட்டருக்க வேண்டும். கம்ப ராமாயணம் பற்றிய குற்றச்சாட்டு அந்தளவிற்கு பொருட்படுத்த தக்கதல்ல என இன்று உணர்கிறேன். அதற்கான அடித்தளம் அமைத்து கொடுத்ததுஇம்பர்வாரிஎன்கிற ஆன்லைன் வாசிப்பு குழுமம்


கம்பராமாயணத்தை நவீன இலக்கிய வாசிப்பின் தரத்திற்கு நகர்த்தியவர்கள் அந்த குழுவினர். இதுவரை சுமார் 9000 பாடல்களை கேட்கும் வாய்ப்பு அதில் கம்ப ராமாயணத்தை பற்றி சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத்தும் மேலெழுந்தபடி சொன்னவை என இன்று அவதானிக்கிறேன்.  


கிருஷ்ணபிரேமி வால்மீகி ராமயணத்தை சொல்ல துவங்கினாலும் மிக விரைவில் அவர் கம்ப ராமாயணத்தை வந்தடைவதை பார்த்திருக்கிறேன். கம்ப ராமாயண பாடல் வரிகள் பல ஆழ்வார்கள் பயன்படுத்திய சொற்களை அப்படியே பயன்படுத்துவதை பார்த்திருக்கிறேன். அவர் சொல்லுமுறை ஆயிரக்கணக்கான முறை ஒடிய அதே பாதை என்பது போன்ற துல்லிய உணர்வு நிலைகளை கொடுக்கக் கூடியது. கலங்கிய கண்களும் சொற்களுமாக அவர் தன்னை முன் வைக்கும்போது அது பக்தி மற்றும் பாடத்திற்கு அப்பால் அனுபவத்திற்கு மிக அணுக்கமாக நிற்கிறது.அவரின் அலாதியான சொலொழுக்கு மனதை அதன் பிராவகத்தை நோக்கி முழுமையாக இழுத்துக் கொண்டது . அதன் பின் எத்தனை நூறு முறை ராமாயணமும் மகாபாரதமும் கேட்டிருப்பேன் என தெரியாது. பின்னர் கிருஷ்ணபிரேமியின் உபன்யாசங்களை தேடித்தேடி பதிவிறக்கம் செய்து கேட்க துவங்கினேன். இறுதியாக கேட்டது அவரின் எண்பதாவது அகவை கொண்டாட்டங்களுக்காக அவர் நிகழ்த்திய மிக மிக விரிவான எண்பது நாள் மகாபாரத உபன்யாசம். அதன் பொருட்டு அவரின் எண்பது அகவை கொண்டாட்டத்தில் பங்கு கொள்ள சென்னை மைலாப்பூர் அயோத்தியா மண்டபம் சென்றுவந்தது மனதிற்கு மிக நெருக்கமானது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

மணிவிழா - 74. * அறப் பிழையும் மனப் பிறழ்வும்-4 *

  ஶ்ரீ : மணிவிழா - 74 04.04.2026 * அறப் பிழையும் மனப் பிறழ்வும் -4 * நிலையழதலின் உச்சம் என்பது வெளியேற இயலாத சுழலைப் போ...