https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 10 ஏப்ரல், 2026

மணிவிழா- 75. * அறப் பிழையும் மனப் பிறழ்வும்-5 *

 ஶ்ரீ:



மணிவிழா - 75


10.04.2026





* அறப் பிழையும் மனப் பிறழ்வும்-5 *




நிலையழிதல் உருவாக்கும் மன தழும்புகள் ஆழமானவை, ஆறாது பல ஆண்டுகள் நீடிப்பவை. அவை கொண்டு வரும் கனவு பிம்பங்களில் இருந்து வெளயேற நீண்ட அனுபவங்கள் தேவையாகிறது. அதற்கு எதிரெடையான ஒன்றிற்கு தங்களில் இடமளிக்கும் எவரும் அதனுடன் ஒட்டி வாழவோ அது உருவாக்கும் யதார்த்தமில்லாத நிலைபாடுகளை விட்டு விலகி நிற்கவோ தெரியாதவர்களாக இருப்பார்கள் என்றால் அவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள். அங்கு கடமைகளும் தேவைகளும் மட்டுமே முன்னிறுத்தப்பட்டு தங்கள் மேல் சுமையென ஏற்றப்படுவாதாக ஊகிக்கிறார்கள். அது மேலும் மேலும் அவர்களுக்கு தீவிர எதிர்மறை எண்ணங்களையே உருவாக்குகிறது. தந்தையிடம் இருந்து நான் பெற்றது அதற்கு வெளியே நிற்கும் மனநிலையை .பல தலைமுறைகளாக அவர்கள் அனுபவபூர்வமாக வாழ்ந்து உணர்ந்து அடுத்த தலைமுறைக்கு கைமாற்றப்பட்டு வருவது. நான் என்னை சார்ந்தவர்கள் அனைவருக்கும் கொடுக்க நினைத்ததும் அதையே . யார் அதை ஏற்றாலும் ஏற்காமல் போனாலும் அது ஒன்றே வாழ்வின் மீட்சியை நிறைவை தரவல்லது. இன்றளவும் அது மேலும் மேலும் உறுதிப்பட்டு வருவதை இந்த பதிவுகள் வழியாக அதில் உள்ள சவால்களையும் கணக்கில் எடுத்தே இதை சொல்ல வருகிறேன்


இன்றைய நவீன உலகம் கற்றுணர்ந்த மரபு மற்றும் அதை சார்ந்த விழுமியங்களுக்கு எந்த மதிப்பையும் அளிப்பதில்லை என்பதால் அது இல்லாமலாவதில்லை . சம்பிரதாயத்தில் நம்பிக்கையுள்ள குடும்பம் கற்றுத் தருபவைகள் கூட ஒருவரை எத்தனை காலம் அதில் தாக்குப்பிடிக்க வைக்கிறது என்பது அடுத்த கேள்வி .தன்னை வந்து சூழும் உலகியலை எதிர்த்து நிற்கும் ஆற்றலை அது தருவதில்லை அதை ஒவ்வொருவரும் தங்கள் அகத்தே அதை கண்டடைய வேண்டி இருக்கிறது . காரணம் ஒவ்வொரு முறையும் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டிய இடத்தில் அதன் மீது நம்பிக்கை கொண்டவனை எப்போதும் அது வைத்திருக்கிறது. ஒருவரின் நல்லூழ் அதை அவரது அனுபவத்தில் இருந்து அதை எடுத்துக் கொள்ளும் முறைகளை மரபு அளிக்கிறது. பிறருக்கு விழுமியங்கள் மீது நம்பிக்கை உருவாவது சாத்தியமில்லை. மதம் பக்தி போன்றவற்றை மறுப்பவர்கள் கூட அந்த இடத்தில் தங்கள் விழுமியத்தை வைக்கிறார்கள் என்றால் அந்த வாழ்கை பயனுள்ளதாகிறது


விழுமியங்களுக்கு ஏதாவது பொருள் உள்ளதா? என்கிற கேள்வியை முன்வைத்தால் அதற்குறிய பதிலை சொல்லுபவர் அந்த விழுமியம் பற்றிய பற்றுக் கோடு கொண்டவராக இருந்தாலும் அவற்றை சொற்களில் நிறுவுவது முற்றாக இயல்வதல்ல. அது அளிக்கும் இடம் பற்றிய புரிதலை ஒருவர் வாழ்ந்து அடைய வேண்டி இருக்கிறது. வாழ்கை பெரும் சிக்கலுக்குள் அதை ஏன் வைத்திருக்கிறது என்பதை என் ஆழ்மன வழிகாட்டலில் தேடும் பொருட்டே இந்த பதிவுகள்


இது கேள்வி மட்டுமல்ல. ஒரு காலம் என்னை அலைக்கழியச் செய்தது பற்றி எரியச் செய்தது. பிராத்தனை போன்றவைகள் ஒரு புள்ளியில் மனதின் குரலாக ஒலிக்கும் போது வெளிகளில் அதை கேட்பவர் என யாரும் இல்லை என்கிற உணர்வை உருவாக்க கூடியது . ஆழ்மனம் உள்ளே கொந்தளித்து கொண்டிருந்தது . எனது தத்துவகளும் அதை சார்ந்து நான் வளர்த்தெடுத்த கருவிகளும் அதற்கு உறையிட்டுவிட்டன என நம்பியிருந்தேன். அதன் பொருட்டு எனது தினசரி வாழ்வில் அமைதியை நாடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். ஆனால் ஆழ்மனதை ஆளும் வல்லமை யாருக்கும் இல்லை. அதை புரிந்து கொள்ள ஒரு தருணம் தேவையாகிறது


என் ஆழ்மனம் எனது சமாதனங்களை ஏற்கவில்லை என்பதை ஒரு நாள் என் தோல் வழியாக அதை எனக்கு உணர்த்தியது. முதலில் உடலின் தோல் பரப்பில் சிறு கொப்புள புள்ளியாக தோன்றி மெல்ல உடல் முழுவதுமாக படர ஆரம்பித்த போதுதான் அதன் தீவிரத்தை உணர்ந்தேன் . அது என்ன என புரிந்து கொள்வதற்கு முன் காலம் கடந்து விட்டிருந்தது. முதலில் முதுகில் உருவாகி பின்னர் உடல் முழுவதுமாக நிரப்பியது அந்த கையகல இளஞ்சிகப்பு தேம்பல் உச்சமாக முகத்தில் தோன்ற ஆரம்பித் பிறகுதான் மருத்துவரை சந்தித்தேன். அவர் இதுசொரியாஸிஸ்என்றார். அவர் சொன்ன கோட்பாடுகள் அதற்கு பொருந்தவில்லை. காரணம் கேட்ட போது அவர் தோல் சம்பந்தபட்ட நோய்கள் இரு நூற்று ஐம்பதிற்கு மேல் அதில்சொரியாஸிஸ்ராஜா என்றார். நான் முதல்கட்ட நிலையில் அவர் சொன்னதை ஏற்பதை தவிர எனக்கு வேறு வழிகள் இல்லை. நவீன மருத்துவம் சார்ந்த சிகழ்ச்சைகளை துவங்கிய போது அவர்கள் பரிந்துறைத்தஸ்டெராய்டுமருந்துகள் ஒரு புள்ளியில் தோலின் தடிமனை குறைக்க ஆரம்பித்து. தக்காளித் தோலை போல மிக சன்னமாக உடலை மாற்றியது. உடல் எங்கும் பரவி தோல் எப்போது வேண்டுமானால் கிழிபடும் சூழலில் கொண்டு விட்ட பிறகு மாற்று மருத்துவம் நோக்கி நகர்ந்தேன்


அவர் தோல் வியாதிகளில் இருநூற்று ஐம்பது வகை என சொன்னது மேலும் குழப்பத் தான் உதவியாக இருந்தது என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய் யாராலும் இன்னதென அறிதியிட முடியாது என்கிற புரிதலை அடைந்தேன். மெல்லவே அதை குணப்படுத்த முடியும் என்றார் ஹோமியோபதி மருத்துவர் அவர் பரிந்துறைத்த களிம்பு வேலைக்காவில்லை. ஆனால் உள்ளுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்து பலன் தருவதாக உணர்ந்தேன். அவை தோலில் காணப்பட்ட இளஞ்சிவம்பு நிறத்தை கரிந்து போகச் செய்தது என்றபின் உள்ளுக்கான மருந்தை நிறுத்தவில்லை. வெளி பூச்சிற்கு ஆயுர்வேத மருத்துவம் சென்று சேர்ந்தது ஒரு ஆன்மீக அனுபவத்திற்கு பிறகு


ஆயுர்வேத முறை தோலுக்கானது. அவர்கள் பரிந்துரைத்த முலிகை கலந்த மோர் அதற்கான நல்ல நிவாரணத்தை கொடுத்து. ஒரு வருடம் தொடர்ந்த அந்த முறை அதைப்பற்றி விரிவாக சொல்லப் போவதில்லை. ஒரு ஆன்மீக புரிதலுக்கு பின் ஆயுர்வேதம் சென்றடைந்தது பற்றி சொல்லி இருந்தேன். அது தோலில் துவங்குவது. நோய் என நான் புரிந்து கொண்டது. மனம் உருவாக்கும் வெப்பம் மிக கடுமையானது. அது உடலை முழுவதும் ஆக்ரமிக்கிறது. உடல் உள்ளே வயிற்று பகுதியில் அதீத வெப்பத்தை உணர்ந்ததும் அதை வெளியேற்ற தோல் முயற்சிக்கிறது. மயிர் கால்கள் உடலின் கண்களை போல செயல்பட்டு உடலின் வெப்பத்தை வெளியேற்ற முயற்சிக்கிறது. உடல் சூடு என்கிற வகைமைக்கு இது வருவதல்ல. உடலை வெப்பமாக வைத்திருக்கும் காரணிகள் வேறு வகையானவை. இந்த உஷ்ணம் மனதின் வெளிப்பாடு என்பதால் அதற்கு மாற்று சிந்தனையில் இருக்கிறது. இது ஆத்மாவை கொதிக்கச் செய்கிறது. ஆத்மா எதாலும் தீண்டப்படாதது என்பது தத்துவம் சொல்ல வருவது. ஆத்மாவையே உடலென்றும் நான் என்னும் மயங்கி அன்றாடங்களில் உழலும் மனிதர்களுக்கு அது பொருந்தாது


தோல் சுவாசிக்கும் உண்ணும் என்கிற இந்திய ஆயுர்வேத கோட்பாடுகளை மேலை மருத்துவம் ஏற்பதில்லை. சிறு குழந்தைகள் அல்லது உடல் வலுவிழந்த பெரியவர்களுக்கு நீண்ட நாள் நோய் கண்டு செரிமான உருப்புகளை சுருங்கச் செய்து விடுவதால் நோய் சற்று குணமான பிறகு சோற்றை அரைத்து உடலில் பூசுவதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.அந்த உணவுகள் தோலால் மெல்ல உண்ணப்பட்டு உடலுக்கு உள்ளே நுழைந்து பலம் சேர்த்து உணவை ஜீரணிக்கும் சக்தியை பெற்ற பிறகு வாய்வழியாக உண்பதை பற்றி சொல்கிறது.அதீதமான மன வரட்சியால் உருவாகும் வெப்பத்தை ஒரு புள்ளியில் வெளியேற்றும் வழிகள் தூர்ந்து போனதையும் வியர்வை வெளியேற்றமும் நின்று போனதை ஆயுர்வேத மருத்துவர்கள் சொன்ன பிறகுதான் என்னால் அறிய முடிந்தது. அவர்கள் அளித்த மூலிகை மோர் சிகிழ்ச்சை தோலுக்கு உட்டமளித்து வியர்வை சுரபிகளின் கண்களை திறந்து விடும் என்றனர். மெல்ல அதனில் இருந்து விடுபட்டாலும் என்ன நிகழ்ந்தது அந்த நோயின் பெயர் என்ன என அறியாது இறுதியில் ஒரு சிறிய நினைவு சிண்ணம் போல ஒரு கருப்பு பகுதி முழுங்காலில் இன்றளவும் தங்கிவிட்டது


நான் என்னை அழுத்தி ஆள நினைத்த அந்த இருளில் இருந்து விடுபட்டு எழுந்ததை இன்றளவும் என்னால் நம்ப இயலாமல் திகைக்கிறேன் . இன்னதென அறிந்து கொள்ள முடியாத ஒரு ஒழுக்கு அகமும் புறமுமாக சுழன்று செயல்பட்டு என்னை மீட்மிருக்கிறது என்பது மட்டும் சந்தேகத்திற்கு அப்பால் புரிந்து கொள்ள முடிகிறது. அவற்றின் செயல்பாடுகள் என்னவாக இருந்திருக்க கூடும் என்பதை இன்றைய என்னை சுற்றி நிகழும் அனைத்தின் மீதும் உருவாகியுள்ள ஏற்பையும் நிராகரிப்பையும் வைத்து வார்த்தைகளால் அவற்றிற்கு உரு கொடுக்க முயல்வது இயல்வதல்ல என்றாலும் என்னை நான் இன்னும்ஆழந்து பார்க்க அது உதவக்கூடும் என்பதால் அதை முயற்சிக்க நினைக்கிறேன்.


பல நூறு காரணிகளை கொண்டு உருவான ஒன்றின் வெளிப்பாடாக அது நிகழ்ந்திருக்க வேண்டும் என இன்று ஊகிக்கிறேன். நான் தற்செயல் வாதத்தில் நம்பிக்கை இல்லாதவன். அனைத்தையும் இணைக்கும் ஒன்று உண்டு அது முன் பின் என வறையறையற்று ஒன்றுடன் ஒன்றை இணைத்து ஒற்றப் பரப்பாக ஆக்குகிறது. அதற்கு வரையறை அளிப்பது தேவையற்றது என தோன்றி இருக்கலாம் ஆனால் அதன் ஒட்டு மொத்த தன்மைக்கு மிக அணுக்கமாக நிகழ்ந்து முடிந்தவைகளை கொண்டு அதை அறுதியிட முடியுமா?. நான் முதலில் என்னை என் இயல்பில் வைத்திருக்க முடிவு செய்திருந்தேன். என் இயல்பென நான் உணர்ந்தது கூட காலம் எனக்கு அளித்தவைகளே. என்னால் நீண்ட காலத்திற்கு ஒரு கசப்பை காழ்ப்பை வைத்திருக்க இயலுவதில்லை. அதை தக்க வைக்க தொடர்நது அதை பேன வேண்டிய அதீத மனச் செயல்பாடுகள் தேவையாகின்றன. அவை நமது சக்தியை உரிஞ்சிவிடக் கூடியவை. கொதி நிலையை இன்னும் உச்சத்திற்கு கொண்டு செல்பவை. மனிதர்கள் மீதான நம்பிக்கையை முழுதாக இழக்க வைக்கிறது. அவர்களை அவமானப்படுத்த அல்லது இன்னும் தீவிரமாக எதையாவது செய்தால் மட்டுமே இளைபாற இயலும் என்கிற மாயையை உருவாக்குகிறது. அது முடிவே இல்லாத தொடர்ச்சி.


தொடர்ந்து மூளையின் சிந்தனை செயல்பாட்டை அது ஒரு புள்ளியில் ரத்து செய்திருக்க வேண்டும். நீண்ட அமைதியின் வழியாக அது தன்னை புதுப்பித்துக் கொண்டது. இந்த பரிமாற்றத்தில் நான் நிறைய கடந்த கால நினைவுகளை இழந்துவிட்டிருந்தேன். என் மனைவி மிக இனிதாக நினைவு கொள்ளும் நிகழ்வுகள் கூட எனக்கு நினைவில்லை. பழைய நினைவுகளில் எந்த குழப்பமும் இல்லை ஆனால் இடையில் சில பகுதிகள் மட்டும் காணாமலாகி இருந்தது. அவை எனது சிக்கலான காலகட்டங்கள் பற்றிய கசப்புகளை கலைத்ததனூடாக அவற்றையும் அழித்திருக்க வேண்டும். பின்னர் அதிலிருந்து உருவானது எனது இன்றைய ஏற்பும் நிராகரிப்பும்


ஒவ்வொன்றை குறித்தும் எனது அணுகுமுறைகள் அனைத்தும் என் இயல்பில் இருந்து நான் உருவாக்கிக் கொண்டது. புற உலகில் அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை நான் அறிந்திருந்தேன் . ஆனால் அவை எனக்கு ஒரு பொருட்டல்ல. இந்த இடத்திற்கு வந்து சேர ஒரு வாழ்நாள் தேவையாகிறது. இதில் சிக்கிக் கொண்டவர்கள் பற்றிய இப்படி நினைத்துக் கொள்கிறேன். பரபரப்பான இன்றைய நவீன உலகம் விழுமியங்களை அவர்களுக்கு வழங்குவதில்லை மாறாக மனசஞ்சலம் வழியாக தன்னை தானே இழிவு படுத்திக் கொள்ளும் போக்கை உருவாக்கி அளிக்கிறது. முடிவில் நோய் ஒன்றை அளித்து செல்கிறது. தன்னில் இருந்து தான் பலவாறு பிரிந்து சிதைந்து போவதை மட்டுமே அது அளிக்கிறது. என்பது எவ்வளவு கொடுமை என்பதை பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது


மணிவாழா குறித்து மீள மீள என்னிடம் விஜி பேசிக் கொண்டே இருந்தால். அது காதில் விழாது நான் வேறு முணையில் இருந்தேன். கிடைத்த வாழ்வியல் சந்தர்ப்பங்களில் மிக சரியாக நிறைந்து வாழ முயற்சித்துக் கொண்டிருப்பதற்கு இடையில் அதை மீறிய பிறிதொரு கொண்டாட்டம் எனக்கு ஏற்புடையதல்ல என்பது எனது நிலைப்பாடாக இருந்தது . மேலும் செலவேறிய ஒன்று. என்னிடம் அதற்கான சேமிப்புகள் இல்லை .இருப்பவை நிறைவான வாழ்கையை வாழ்ந்து முடிப்பதற்கு போதுமானவை. மருத்துவ செலவீனங்களை கூட பொருட்படுத்தாதவை. என்னை எதனிடம் இருந்தும் காப்பற்றிக் கொள்ளும் மனநிலையில் நான் இல்லை. பொருளியலை போதும் என நினைக்கும் ஒரு கணம் வாழ்வில் நிகழவில்லை என்றால் எவ்வளவு பெற்றிருந்தாலும் அது போதாமையே. போதாமை ஒரு நோய் பிறப்படம் அனைத்து மன நோய்களும் அதிலிருந்து உருவாகின்றன


நான் என் பிள்ளைகளுக்கு தனியான ஒரு செலவை உருவாக்க மறுத்தேன். ஆனால் என் மனைவி தனது கோணமாக பிறிதொன்றை என்முன் வைத்த போது என்னால் அதை மறுக்க இயலவில்லை.எங்கள் திருமணம் நிகழ்ந்து முடிந்து முப்பதாண்டுகாலம் ஆகிறதுமுப்பதாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த திருமணத்தின் நகலாக இந்த மணிவிழாவை அவள் உருவகித்துக் கொண்டாள். 1995 களின் சூழலில் மனமொன்றாது பிரம்பிப்பில் தவறவிட்ட கணங்களை இப்போது மீள நிகழ்த்தி பார்க்க விரும்பினாள். அதில் தனது திருமணத்தை நிதானமான காட்சிகளாக நிகழ் கண் முன் நிறுத்தி பார்க்க விழைந்தாள். இதை என்னிடம் முன் வைத்தபோது என்னால் மறுக்க இயலவில்லை. மிகச் சரியாக வைக்கப்படும் வாதங்களை என்னால் கடந்து செல்ல இயலாது. எனக்கு அது பெரும் துன்பம் தரப் போகிறது என்றாலும் அதை எதிர் கொள்ளும் மனநிலையை வளர்த்து கொள்வேன் எக்காலமும் அதை கடந்து செல்வலதில்லை என்பது ஒரு கோட்பாடு


அதே சமயம் அதை சிக்கலாக்கி தவிர்க்க முயல்வேன். அதில் இரண்டு வகையான விளை பொருள் கொண்டது. ஒன்று அம்முயற்சி கைவிடப்படும் அல்லது நான் கோரியவற்றை இணைத்து திட்டமிடுவார்கள். இரண்டில் எது நடந்தாலும் அதை ஏற்க வேண்டிய இடத்தில் என்னை வைத்துக் கொள்வேன். நான் என்னால் இதில் பொருள்வயமாக பங்கெடுக்க இயலாது என்பதை தீர்க்கமாக சொல்லியிருந்தேன். அவளும் அதை எதிர் பார்க்கவில்லை என்ற போது ஆகம முறைகளில் மற்றும் தந்தை செய்த அதே முறைகளும் முறைமைகளும் பேணப்பட வேண்டும் அதில் எந்த சமரசமும் இல்லை என்றேன். ஆனால் அவள் நான் விடுத்த எல்லைக்கு அப்பால் மேலும் விரிந்த பிறிதொரு நிகழ்வை பற்றிய முழு கற்பனையில் இருந்தாள் என்பதை அது நிகழும் போது உணர்ந்து கொண்டேன்


நான் மறுத்தவை நிலைகொள்ளவில்லை. பின் நிகழ்வுகளை அதன் போக்கில் விட்டு அனைத்தாலும் விலகி நின்றேன். என் ஆழுள்ளம் மீள மீள எடுத்த வைத்த ஒன்றை பதிவிடும் பொருட்டே இதை எழுத முயற்சிக்கிறேன். நவீன தலை முறையாக தன்னை பாவிக்கும் ஒன்று மிக வேகமாக எழுந்து கொண்டிருக்கிறது. அதற்கு விழுமியங்கள் அறம் மீதான எந்த மரியாதையும் இல்லை. மரபான குடும்பங்கள் கற்றுக் கொடுப்பவைகள் கூட காலத்தில் காணாமலாகி விடுகிறது. வாழ்வு ஒருவருக்கு நிறைவை உருவாக்கும் ஏற்புடையவைகளைக் கொண்டது. அதை நோக்கிய பயணம்தான் ஒருவரை நிறைவடையச் செய்கிறது. நிரந்தரமானவை என சில எப்போதும் உள்ளவை அதை அறியாமல் இங்கு எங்கும் நிலை கொள்ள இயலாது. நிரந்தரமானவைகளைகிளாசிக்என வகை படுத்தப்படுகிறது. அது காலாவதியாவதில்லை  அது நம்மை சுற்றி இருந்து கொண்டிருக்கிறது. என்கிற சிறிய உண்மையை மனம் ஏற்க மறுக்கும் ஒரு கணம் உருவானால் அது மொத்த வாழ்க்கையை சிதடித்துவிடுகிறது. அங்கிருந்து அது எனக்கு என்ன சொல்ல வருகிறது என்பதை இன்றுவரை தொகுத்துக் கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 93 அழைப்பிதழ்