ஶ்ரீ:
பதிவு : 621 / 811 / தேதி 14 மே 2022
* அலைக்கழிக்கும் நினைவுகள் *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 18.
மக்களின் மனநிலை எப்போதும் கொந்தளிப்பது ஒரு முறை வெளிப்பட்டுவிட்டால் அமைதியடைந்து விடுகிறது. பின்னர் பிறிதொரு சந்தர்ப்பத்தற்கு காத்திருப்பது ஆகவே காற்று வீசும் திசைக்கு ஏற்ப எப்போதும் மாறிக் கொண்டிருப்பது . எல்லா புறநகர்த் தொகுதிகளைப்போல இங்கும் மக்களை முடிவெடுக்க வைக்கும் சிலர் உண்டு அவர்கள் பேசிபேசி தாங்கள் நினைத்த இடத்திற்கு மற்றவர்களை நகர்த்தி போகிறார்கள் . அவற்றில் டீக்கடை முதன்மை, மோட்டார் சைக்கில் ரிப்பேர் கடை ,தையற்கடை என இப்படி ஒவ்வொரு வீட்டில் ஒண்டிக்கொண்டு சில்லறை வியாபாரத்தை வைத்திருப்பவர்கள் அந்த தொகுதியின் வெற்றித் தோல்வியை முடிவு செய்பவர்கள் என்பது ஆச்சர்யமானது . இத்தனைக்கும் அவர்களில் பலருக்கு அந்த தொகுதியில் வாக்குரிமை இல்லதிருப்பதை பார்த்திருக்கிறேன். உதிரி உதிரியாக அவர்கள் தங்கள் செல்வாக்கை அந்த பகுதி மக்கள் மீது தொடர்ந்து செலுத்துகிறார்கள் . அது அவர்களின் தனிப்பட்ட விருப்பாக, வெறுப்பாக இருக்கும் . சில சமயங்களில் உச்ச நிலைக்கு சென்று அடுத்த வேட்பாளர் என சிலரை அழைத்துக் கொண்டு காங்கிரஸின் தலைவர் அனைவரின் வீடுகளுக்கும் அவர்கள் ஏறியிறங்கும் வேடிக்கையை பார்த்திருக்கிறேன், புதுவையில் உள்ள அனைத்து தனித் தொகுதிகளின் அரசியல் இயங்கு விசை அப்படிப்பட்டதே. அங்கு இவர்களை போல வாக்காளர்களில் யாருக்கும் தங்களுடைய இடம் பற்றிய பிரக்ஞை இருப்பதில்லை.
ஊசுடுவை சேர்ந்த பங்கூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்ல சென்ற முன்னாள் முதல்வர் வைத்திலிங்கத்தின் குழுவில் நான் கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்டேன். தலைவர் சண்முகம் அன்று அதிகாலை தொலைபேசியில் அழைத்து அதை என்னிடம் சொன்னபோது மிகுந்த ஈடுபாடோடு அவர்களுடன் சென்று கலந்து கொண்டேன். அங்கு பார்க்க இருப்பதைப் பற்றிய எண்ணமில்லாமல் முன் தயாரிப்பில்லாமல் கிளம்பியது பைத்தியக்காரத்தனம் . அங்கு பார்த்த அந்த கொடூர நிலக்காட்சிகளும் பாதிப்புகளின் வலியும் நீண்ட நாட்களுக்கு என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்தது . ஒவ்வொரு முறையும் அதை தள்ளிக்கொண்டு வெளிவருவது எளிதாக இல்லை. அன்றெல்லாம் ஊசுடு பெருமாள் மட்டுமே என்னுடன் இருந்தான். அவனும் நானுமாக இரண்டே பேர். தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் கலவர செய்திகளை அன்றாடம் பார்க்கும் போது மனம் அதை வெறும் தகவல்காளாக்கி அடுக்கிக் கொள்வதால் மிக எளிதில் அதை கடந்து செல்ல வைக்கிறது . ஆனால் நேர் காட்சி மனதில் ஆழமான வடுவாக நிரந்தரமாக தங்கிவிடுவதால் அதன் சீண்டல்கள் வேறுவிதமானவை ஓயாத அலைக்கழிப்பைத் தருபவை . எண்ணத்தை நிறுத்தி மனத்தை உறையவைப்பது . மனிதர்கள் மீது பெரும் அவநம்பிக்கையையும் தீராத அச்சத்தை ஏற்படுத்துகிறது . கலவரத்தில் ஈடுபடுபவர்களிடம் அந்த ஆபாசம் ஒரு களிம்புபோல மனம் புத்தி ஆன்மா மீது படிந்திருக்க வேண்டும் . எண்ணங்கள் துருப்பிடித்து அந்த களிம்பை அதில் ஏற்றிவிடுகிறது. காலை 9:00 மணிக்கு நாங்கள் அங்கு சென்றபோது அது மிக இயல்பான ஒன்று போல அங்கு நிகழ்ந்து முடிந்திருந்தது . அது ஒரு வெறியாட்டம். இருள் தெய்வம் அனைவரின் மீதி எறி கழிந்து சென்றிருக்கிறது. அதில் கொடூர திருப்தியை அடையும் மனிதன் ஒரு மிருகம் மட்டுமே . அவர்கள் வேறெங்கிருந்தோ கிளம்பி வந்து இதை நிகழ்த்தவில்லை. பக்கத்துவீட்டுகாரர் எதிர்வீட்டுகரருக்கு இதை செய்திருக்கிறார் என்பது இன்னும் அதிரவைப்பது . அவர்கள் அன்றாடம் சந்தித்துக் கொள்பவர்கள் . இதன் பிறகும் சந்தித்துக்கொள்ள இருப்பவர்கள். எப்படி அவர்களால் பிறருக்கு இதை செய்துவிட்டு எளிதில் தாண்டிச்செல்ல முடிகிறது என தெரியவில்லை. அது ஒரு தனிநபர் கணநேர பைத்தியகாரத்தனமாகவோ அந்த நிமிட வெறித்தனத்தால் நிகழ்ந்ததில்லை . முந்தின இரவு நீண்ட திட்டமிடலுக்கு பிறகு அதிகாலை அந்த தாக்குதலை ஒரு போர் வெற்றி போல நடத்தி முடித்திருந்தனர்.
பங்கூர் கலரவரத்தைப் பார்வையிட சென்றபோது , ஆறுதலளிக்க என்பது போல் ஒன்றிற்கு நான் பழகியிருக்கவில்லை .கொந்தளித்த கடல் உள்வாங்கி விட்டுச் சென்ற மிச்சல்கள் போல எங்கும் சேறும் கற்களும் நாற்றமும் குவிந்து கிடந்தன . தீயை அனைத்து வழிந்தோடிய தண்ணீர் கருமையாகி தேங்கிக்கிடந்தது. பல வீடுகள் எரிந்து போனதால் சாலைகளின் எல்லை அழிந்து முழு இடமே வெட்டவெளி போல இருந்தது . கரிந்து போன பலவகை பொருள்கள் வீட்டிற்கு முன்னே குவித்து வைக்கப்படிருந்தன. அங்கு சென்ற முதல் தருணமே முகத்தில் ஓங்கி அறைந்தது போல ஒரு தாக்குதலால் திகிலடைந்து பதறும் நெஞ்சுடன் ஆறுதல் சொல்லச் சென்ற குழுவுடன் கலக்காமல் நான் பெருமாளுடன் தனியாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தேன் . சகல புலன்களுக்கும் அங்கு விஷயமிருந்தது எரிந்து தீய்ந்த நாற்றத்துடன் கரிகட்டையாய் நின்ற வீடுகள் , அமைதியாய் அழுது கொண்டிருந்தவர்கள் எங்களை பார்த்ததும் கதறி சூழ்ந்து கொண்டனர். பார்க்கும் காட்சிகளை பற்றி யாரிடமும் ஒரு சொல்லும் பேச இயலாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அவை புகைப்படம் போல அனைத்தும் ஒரு சட்டகத்திற்குள் வந்து தனித்தனியாக நினைவில் படிந்து கொண்டிருந்தது பின் அந்த காட்சிகளை நினைவுகளில் இருந்து விலக்க பலநாள் முயன்றிருக்கிறேன். விலக்க நினைக்கும் ஒவ்வொரு முறையும் அது பெருகி எனக்குள் எழுந்து கொண்டே இருந்தது.
சில மாதங்கள் கழித்து ஒரு சிறு கூடுகைக்கு அரியூருக்கு சென்ற போது அருகில் இருந்தவர்களிடம் பங்கூர் பற்றி விசாரித்தேன் .அவர்கள் அந்த கலவரத்தை ஏதோ போன ஜென்மத்து கதை போல நினைவில் இருந்து மெல்ல திரட்டிக் கூறினார்கள். பங்கூர் சென்று பார்பதனூடாக எனது வாதையில் இருந்து வெளிவர நினைத்தேன். அங்கு சென்று பார்த்த போது என் முன் நின்ற ஊர் கலவரத்தின் போது நான் பார்த்த எதனுடனும் பெருந்தி போகாமல் புதிதாக இருந்தது. எறிபற்றிய காடு மீள்வது போல அந்த கிராமங்கள் இரண்டு மாதத்தில் மீண்டெழுந்து இயல்பு திரும்பியபோது பார்க்க திகைப்பாய் இருந்தது .
அந்த குழுவுடன் சென்றதால் அதன் மேலதிக செயல்பாடுகள் வந்து சேர்ந்தன. முன்னாள் அமைச்சர் காந்திராஜ் பிரபல வழக்கறிஞர் என்பதால் கலவரம் குறித்து காவல் நிலையத்தில் முறையாட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க என நீண்ட செயல்பாடுகளை நான் ஒருங்கிணத்தேன். அதையொட்டி அந்த பகுதி மக்களை தொடர்ந்து சந்தித்திக் கொண்டிருந்தேன். இளைஞர் காங்கிரஸ் பொச்செயலாளர் என்பதால் பத்திரிக்கை அறிக்கை மற்றும் சந்திப்புகள் நடத்தியது என அரசியலின் அடுத்த கட்டம் தொடங்கியது. அது என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தது . செய்து முடித்ததை தலைவரிடம் சொன்னால் போதும் என்கிற வழக்கம் தொடங்கியது. அதிகாரப் பூர்வமான கூட்டங்களை ஒருங்குவது தேவை ஏற்பட்டால் போராட்டங்களை முன்னெடுப்பது என முழுநேரப் பணிசூழ்ந்து கொண்டது . காந்திராஜை அனைத்து கூட்டங்களிலும் சிறப்பு அழைப்பாளராக அழைத்துச் சென்றேன். அவர் உற்சாகமாக அனைத்திலும் கலந்து கொண்டார். அதுவே பின்னர் பல தொகுதிகளில் நடந்த சிறு கூடுகைக்கு அழைத்து செல்ல ஆரம்பித்தேன். அது எனது அரசியலுக்கு வலுவான அடித்தளமாக அமைந்தது . பின் அனைத்தும் அங்கிருந்து துவங்கியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக