https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 8 மே, 2022

அடையாளமாதல் * பதவி சுமப்பவர்கள் *

 


ஶ்ரீ:



பதிவு : 620  / 810 / தேதி 08 மே  2022



* பதவி சுமப்பவர்கள் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 17.






அவர்கள் பலவேறு கருத்தால் மாறுபட்டிருந்தாலும் குறுங்குழு ஒன்று அவர்களை ஒட்டுமொத்தமாக இணைந்திருந்தது . அன்றாட நிகழ் அரசியலில் மிக எளிதில் தலைவர்களுடனான தொடர்புறுத்தலுக்கு ஏற்றவர்கள் யார்? என்பது குறித்த அத்தனை தகவல்களும் அனைவருக்கும் பொதுவில் இருக்கும் அந்தக் குறுங்குழு வழியாக அவர்களுக்குள் பரவியிருக்க வேண்டும். அதன்மூலம் என்னைப் பற்றிய தகவல்களையும் அவர்கள் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும் . அதை மிகத் தாமதமாக உணர்ந்து கொண்டேன் . அது எனக்கே என் இடம் எது என்கிற புரிதலை பின்னர் கொடுத்தது. அங்கிருந்து முன்னகரும் செயல்பாடுகளை அதன் பிறகே நான் உருவாக்கிக் கொண்டேன் . சிறுக சிறுக சிலர் வந்து என்னை வீட்டில் காலை வேளைகளில் சந்திப்பது ஒரு தற்செயல் என்றே ஆரம்பத்தில் புரிந்திருந்தேன். அவர்கள் அனைவரும் கிராமப்புறத்தில் இருந்து வருபவர்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பகுதி . அறிமுகமானவர்கள் மேலும் புதியவர்களை கொண்டுவந்தனர் . அனைவரையும் ஊசுடு பெருமாள் மிக மெல்லிய சரடு போல பிணைத்திருந்தான் . அது அவனது விருப்பமான அரசியல். அவர்களுக்குள் முன் பின் சந்தித்தவர்களுக்கு இடையே மேல் கீழ் அதிகார அடுக்கு உருவாகியிருக்க வேண்டும்


ஒருவர் பற்றிய நமது புரிதலில் இருந்து அவரது திறமைகளும் அதற்கான இடத்தையும் நாம் தெரிவு செய்து அளிக்கிறோம் என நினைத்தால், அது அப்படி நிகழ்வதில்லை . தொடர் செயல்பாடுகள் நமது ஆழ்மனத்தில் எங்கோ அவர்கள் அறிந்தோ அறியாமலோ விதைத்துச்சென்றவை . ஆம் அது உண்மைஊசுடுவில் கொடியேற்ற நிகழ்வு அன்றைய இரவு முடிவுறும் போது  எனது செயல்பாடுகள் வழியாக தலைவருக்கு நான் என்ன உணர்த்தினேன் என்பது பற்றிய தெளிவு எனக்கிருந்தது . அன்று காலை அங்கு வருவது வரை எது பற்றியும் எந்த திட்டமிலும் இல்லாமல் கூட்டத்தில் ஒருவனாக கலந்து கொள்ள அங்கு வந்தேன். ஆனால் அந்த நிகழ்வு முடிவுறும் போது அவர் என்னை எங்கு கொண்டு வைக்க வேண்டும் என நான் விழைந்து விதைத்தேனோ அங்கேதான் சண்முகம் என்னைக் கொண்டு வைத்தார் . ஆனால் அது அவரின் மௌனமான அங்கீகாரத்தின் வழியாக நிகழ்ந்தது . அரசியலின் அடிப்படை இயங்கு விதிகளில் ஒன்று . மௌன அங்கீகாரம் போல பிறர் விலக்க அஞ்சும் இடம் பிறிதில்லலை


அன்று கொடியேற்ற நிகழ்வு நடைபெறும் இடத்தில் சிக்கல் உருவாகுபவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் மாரிமுத்துவிற்கு அணுக்கமானவர்கள் . அணுக்கமானவர்களில் இருந்து எதிரி உருவாகிறார். இன்று அவர்களை மாரிமுத்துவிற்கு இணக்கமாக கொண்டு வர நாங்கள் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்ஊசுடு பெருமாளின் பொருட்டு இவர்களை எதிர்த்து நிற்க வேண்டிய சூழல் ஒருகாலத்தில் இருந்தது. இன்று அந்த கோடு அழிந்து போன நிலையில், இதற்கா? அன்று அவ்வளவு பெரிய சண்டை? என நினைத்துக் கொண்டேன். இன்று அவர்கள் அனைவரும் மாரிமுத்துவிற்கு எதிராக திரண்டிருந்தனர் . விந்தையின் உச்சம் பெருமாள் அவர்களிடையே மிகத் தீவிரமாக மாரிமுத்துவிற்குடனான ஒரு உடன்பாட்டிற்கு முயற்சி செய்து கொண்டிருப்பதை ஒருவித திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன் . அவன் என்னை திரும்பிப் பார்க்கும் சந்தர்ப்பத்தில் அவனுள் நிகழும் என நான் நினைத்த ஒன்று இறுதிவரை நடக்கவில்லை .உண்மையிலேயே சமரசம் செய்து வைக்கத்தான் முயல்கிறானா? மாரிமுத்துவிற்கு அணுக்கனாகி விட்டானா? . அது அவனது நீண்டநாள் கனவாக இருந்திருக்க வேண்டும். ஒரு பூச்சி போல அவர்களை சுற்றி சுற்றி வலையை பிண்ணிக் கொண்டே இருந்தான்.இங்கு எதிர்ப்புகள் நிலையானதல்ல. சமாதனத்திற்கும், மாரிமுத்து தங்களை திரும்பவும் ஏற்கும் ஒரு சந்தர்ப்பத்திற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். அந்த வாய்ப்பு உருவாகும் போது வெகுண்டு சீறி தங்களை எளிதில் சமாதானப்படுத்த முடியாது என்பது போல இல்லாத பாவனையை உருவாக்குகிறார்கள். அதை நம்பி அந்த முயற்சியை கைவிட்டால் தங்களை எளிதில் விலை பேச முடியதவர்களாக கற்பித்துக் கொள்கிறார்கள். கவனிக்கப்படாமலாகும் போது வருத்தமடைந்து பிறிதொரு சந்தர்பத்திற்கு காத்திருக்கிறார்கள் . அரசியல் எப்போதும் அப்படித்தான் நிகழ்கிறது


சிக்கலை உருவாக்குபவர்கள் எதிர்நோக்குவது இழந்து போன தங்களின் இடத்தை . அதை அவர்களுக்கு வழங்காமல் அவர்களை கடந்து செல்ல முடியாது . அதை கடந்த கால அனுபவத்தில் இருந்து கற்றிருக்கிறேன் . சிக்கலன் துவக்கம் என சந்தேகிக்கும் இடத்தில் எல்லாம் அவர்களை அடையாளம் கண்டு பெருமாள் என்னிடம் அழைத்து வந்தான். நான் அவர்களின் பிரச்சனை என்னவாக இருந்தாலும் அதுகுறித்து நாளை தலைவரை அவரது வீட்டில் சந்திக்க ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி கொடுத்தேன். பிறகு வேலைகள் சூடுபிடித்தன. அதில் வேடிக்கை அவர்களில் பல பேருக்கு நாளை வேறு வேலைகள் உண்டு . அல்லது அவர்கள் தலைவரை வந்து சந்திக்கப் போவதில்லை. அல்லது இந்த தொடர்பை அவர்களுக்கு வேண்டிய காலத்தில் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்  வழக்கமான தங்களின் அரசியலின் பொருட்டு புதுவைக்கு வரும் சிலர் மட்டுமே எல்லாவற்றின் பின்புலமாக இருப்பவர்கள் . அவர்களை கையாள்வது எளிதல்ல. அவர்கள் தங்கள் நிலத்தில் விதைத்தவற்றின் அறுவடைக்கு இங்கு வருபவர்கள். வழக்கமாக தலைவர்களை சந்திக்க புதுவைக்கு வரும் அவர்களுக்கு யாரை எங்கு சந்திக்க வேண்டும் எப்படி அல்லது என்ன பேச வேண்டும் என்பது பற்றிய முன்னனுபவம் இருக்கும் . புதிய தொடர்புகள் உருவானால் முந்தயதை விட புதியது எவ்வளவு வலிமையானது என புரிந்து கொள்ளவாவது அவசியம் வருவார்கள்.


காலை 9:00 மணிக்கு சேதராப்பட்டில் துவங்கிய கொடியேற்ற விழா கரசூர் வரை பொலிவிழந்திருந்தாலும் தொண்டமானத்தம் பிறகு உயிர் கொண்டது . அந்தந்த ஊர் கோயில் மரியாதை இணைந்து கொள்ள திருவிழா களைகட்டியது . மேளம் முரசு பறை என ஒவ்வொரு ஊரிலும் வித்தியாசமான வாத்தியங்கள் இணைந்ததும் ஊர் பொதுமக்கள் வேடிக்கப் பார்கக் கூடினர். துவக்கத்தில் சண்முகம் மட்டும் மக்களிடையே பேசுவது என்பது மாறி சிறு தலைவர்கள் முதல் முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் வரை பேச துவங்க ஓரொரு ஊரிலும் நிகழ்வு சிலமணிநேரம் எடுத்துக் கொண்டது . கொடியேற்ற நிகழ்வு முடிந்ததும் அவருடன் அந்தந்த ஊர் பெரியவர்கள் இணைந்து கொள்ள மெல்ல ஊர்வலம் போல அது உருவானதை யாரும் எதிர்பார்க்கவில்லை . இத்தனைக்கும் சமீபத்தில் நடந்த தேர்தல்லில் அதிக வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்திருந்தது . கூட்டம் கூடி கூடி வரும் போது எல்லோருடை முகத்திலும் ஏன் தோற்றோம்? என்கிற குழப்பம் தெரியத் துவங்கியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...