https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 16 நவம்பர், 2020

களிற்றியானை நிரை …புத்தக சமர்பணம் ……ஜெயமோகன்

 

மீண்டெழுவன

November 16, 2020

ஆறாம் வகுப்பு படிக்கையிலேயே அன்றெல்லாம் இலக்கணம் அறிமுகமாகிவிடும். நானோ அன்று பழைய முறைப்படி ஆசிரியர் இல்லம்சென்று தமிழ்படித்தேன். அன்று அறிமுகமான சொல் களிற்றியானைநிரை. அதை பித்தன் என சொல்லி அலைந்தது உண்டு.

பின்னர் பத்மநாபபுரம் அரண்மனையை ஒட்டியிருந்த என் சிற்றப்பா வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது. மிக அருகே ஒரு கோட்டையை அப்போதுதான் முழுவுணர்வுடன் பார்த்தேன். அதற்குமுன் ஐந்து வயதாக இருக்கையில் ஓராண்டு பத்மநாபபுரத்தில் நாங்கள் தங்கியிருந்தோம். அன்று பார்த்த கோட்டையின் நினைவும் உடன் இணைந்துகொண்டது

கன்னங்கரிய கோட்டை. மழைநீர் வழிந்து கருகிய கருங்கற்களுக்குமேல் கருகிய மென்மையான புல்பரவிய வெட்டுகற்கள் அடுக்கப்பட்டது. அருகே நின்றால் அதன் உடலை என் அகத்துள் எதுவோ உணர்ந்தது. அன்று அது கனவில் வந்தது. அதற்கு யானைவிழிகள் இருந்தன. மின்னும் கரிய நீர்க்குமிழிகள் போன்றவை.

களிற்றியானைநிரை என்பது கோட்டை என்ற எண்ணம் என்னுள் எப்போதுமிருந்தது. பின்னர் பத்மநாபபுரத்தில் குடியிருந்தபோது கோட்டையை யானைநிரையாகவே எண்ணிக்கொண்டிருந்தேன். பிற்பாடு சோழர்களும் ஹொய்ச்சாளர்களும் கட்டிய கோயில்களில் களிற்றியானைநிரையை ஆலயங்களில் செதுக்கி வைத்திருப்பதை கண்டேன்

இந்நாவல் அஸ்தினபுரி மீண்டெழுவதைப் பற்றிய நாவல். ஹஸ்தியின் நகர். யானைகளின் நகர். யானைகளால் கட்டப்பட்டது, யானைகளையே கோட்டை எனக்கொண்டது.நாழிகைமணி போல நேர்த்தலைகீழாகக் கவிழ்ந்து தன்னை முற்றாகக் கொட்டிக்கொண்டு ஒழிந்து மீண்டும் நிரப்பிக்கொள்கிறது அம்மாநகர். புதியமக்கள், புதிய மொழி, புதிய எண்ணங்கள்.

எரியுண்ட காடு ஒரு மழைக்குப்பின் புதிதென மீண்டெழுவதுபோல அஸ்தினபுரி மீள்கிறது.அது அப்போரில் இருந்து அடைந்தது எதை? எல்லா போருக்குப்பின்னரும் நாடுகள் புதுவீச்சுடன் எழுகின்றன. ஜப்பானோ ஜெர்மனியோ. அவை கற்றவை என்ன? காட்டுத்தீ காட்டிலுள்ள மட்கிய, உலர்ந்த அனைத்தையும் அழித்து காட்டை இளமையாக ஆக்கிவிடுகிறது. தன்னால் தன்மேல் எடையென அமைந்திருந்தவற்றை அஸ்தினபுரி அப்போர்வழியாக உதிர்த்துவிட்டதா?

எந்த அழிவுக்குப்பின்னரும் மீளமீள தன்னைக் கட்டிக்கொள்ளும் ஆற்றலை மானுடம் எங்கிருந்து பெற்றுக்கொள்கிறது? அந்த அடிப்படையான உயிர்விசைதான் அனைத்து அறங்களையும் எடைபோட்டு மதிப்பிட்டுக்கொள்கிறதா? போருக்கு பிந்தைய அனைத்தையும் ஒரே வீச்சுடன் தொகுத்துக்கொள்ளும் இந்நாவல் அந்த உசாவல்களை முன்வைக்கிறது

இந்நாவலை வெண்முரசுக்கான வாசகர்கூட்டங்களை நடத்தும் நண்பர்கள் சென்னை ராஜகோபாலன், சௌந்தர்ராஜன், காளிப்பிரசாத், பாண்டிச்சேரி அரிகிருஷ்ணன், கடலூர் சீனு, மணிமாறன் ஆகியோருக்கும் வெண்முரசை கொண்டு சென்று சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளும் ஆஸ்டின் சௌந்தர்ராஜன், ராஜன் சோமசுந்தரம் ஆகியோருக்கும் சமர்ப்பிக்கிறேன். எந்த ஆக்கமும் அதற்கென்றே தங்களை அளித்துக்கொள்ளும் ஒரு சிறுவாசகர் வட்டத்தால்தான் காலத்தை கடக்கிறது. வெண்முரசின் வாசகர்கள் அனைவருக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன்.

ஜெ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக