ஶ்ரீ:
பதிவு : 545 / 738 / தேதி 08 நவம்பர் 2020
* தற்சிறை *
“ ஆழுள்ளம் ” - 03
மெய்மை- 23.
புதுவை காங்கிரஸ் கட்சியின் கடந்த கால அரசியல் வரலாறு குறித்த புரிதலுக்காக கட்சியை சேர்ந்த மூத்த சுதந்திர போராட்டகார்களிடம் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்தேன். காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தரப்பின் கருத்தும் பிற போராட்ட அமைப்புகளின் கொள்கையும் அதில் நிகழ்ந்த பிறழ்வுகள் அதற்கு காரணமான தனிநபர் விரோதம் , கடத்தல் வியாபாரக்கார்களின் செல்வாக்கு, அவற்றால் விளைந்த நெருக்கடி போன்றவை விடுதலை போராட்டத்தையும் அதன் முன்னோடிகளையும் எப்படி சீர்குலைத்தது என்பது பற்றி மிக விரிவான தகவல்கள் , பிரெஞ்ச் அரசாங்கத்தின் அரசியல் சூழ்ச்சிகள்,மற்றும் இந்திய விடுதலை போராட்டத்திலருந்து புதுவை விடுதலைப்போர் எப்படி பெரிதும் மாறுபட்டிருந்தது போன்றவை,அவற்றின் பின்னனியில் புதுவை அரசியலில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக தலைவர் சண்முகம் தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொண்டது மற்றும் அந்தக் காலகட்டத்திலும் அதன் பின்னரும் தன்னுடைய ஆளுமையை கட்டமைத்தது போன்ற அவர்கள் சொல்லிய தகவல்களால் மூழ்கடிக்கப்பட்டிருந்தேன். அவை அனைத்தும் ஒன்றில் ஒன்று இணையாத தனியன்களாக இருந்தன ,இழை பிரிக்க முயற்சிக்கும் போதெல்லாம் முடியாமலாகி சிக்கலாகும் வாய்ப்பே அதிகமும் இருந்தது . ஒரு புள்ளியில் அவை மூளையை சூடாக்கி சோர்வளிக்க வைத்தது . அதிலிருந்து விடுபடும் நோக்கிலும் அவற்றைப் பற்றிய மேலதிக தகவல்களுக்காக அவர்களையும் காரைக்கால் முன்னனி விடுதலை போராட்ட காரர்களையும் தொடர்ந்து சந்தித்து உரையாடுவதை வழக்கமாக்கி இருந்தேன் . அது ஒரு சூது விளையாட்டைப்போல போல பெரும் மயக்கத்தை கொடுத்து அதிலிருந்து எளிதில் வெளிவர இயலாத ஆர்வத்தையும் உருவாக்கியிருந்தது . எனக்கு நான் சென்றடைந்த தகவல்களும் அவற்றைப்பற்றிய நுண்ணிய புரிதல்களும் அவற்றை தொடர்புறுத்தும் பிற செய்திகளும் தேவையாய் இருந்தது . அரசியல் பற்றிய கற்றலும் புரிதலுக்குமாக அவற்றை என்னுள் நீண்ட காலமாக தொகுக்க முயற்சித் கொண்டிருந்தேன் . அவற்றை இப்போது பதிவிடுகையில் ஆழ்மனம் திறந்து கொள்வதை போல உணர முடிகிறது .
அரசியலை விட்டு வெகுதூரம் விலகிச் வந்துவிட்ட பிறகும் இது ஏன் எனக்கு அவசியானது என கேட்டுக் கொண்டதுண்டு . காரணம் அவை எளிய தன்னலமில்லாத மனிதர்களின் கதை . சுதந்திரம் என்கிற ஒற்றைச் சொல் அவர்களை உள்ளிழுத்து வாழ்நாளெல்லாம் கொந்தளிக்கச் செய்தது . அவர்களை புரிந்து கொள்ள முயல்கையில் என்னை அவை விசித்திரமான உளநிலைக்கு இட்டுச் சென்றன . சுதந்திர போராட்டம் பற்றிய அதீத கற்பனை சாகசமும் அதன் நிகழ் சோகமும் நெஞ்சையடைக்க வைப்பவை . ஓரிருவரே அதில் நினைத்ததை செய்து காட்டி வெற்றியை அடைந்தவர்கள். அதுவும் பிறர் பார்வைக்கு , சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு அதில் வெற்றியை போல ஒன்று அடைந்த அவர்களின் பேச்சிலும் ஒலிக்கும் கசப்ப்பும் விரக்தியும் சுதந்திர போராட்ட காலத்தைப்பற்றி பெரும் அச்சத்தை கொடுப்தாக இருந்தது. ஒரு சிறு மாநில சுதந்திர போராட்டம் அதன் தலைவர்களுக்கு கொடுத்த அலைக்கழிப்பை புரிந்து கொண்டால் காந்தி ஏன் மகாத்மா என அழைகப்பட்டார் என புரிந்து கொள்ள இயலும் என நினைக்கிறேன் , மேரலும காந்தியர்களை இன்றும் இயக்கும் அந்த உளவிசையை அறிந்து கொள்கிறேன்.
அவர்களில் ஒருவராக சண்முகத்தை புரிந்து கொள்கிறேன் . கறாரான அரசியல் வழிமுறையையும் அதில் நிதான போக்குமாக பயணித்தவர் . கணக்கிலடங்காத பலர் ஈசலை போல எங்கும் பறந்து காணாமலாயினர் . அவர்களில் மிச்சப்பட்டு அதனது இலக்கை அடைந்தவர்கள் ஒரிருவரில் சண்முகம் ஒருவர் . பெரும் ஆளுமையாக அவர் வாழும் காலத்தில் கருத்தப்பட்டவர் , அவரின் அருகமர்ந்து அரசியல் பழக்கம் வாய்ப்பு அமைந்தது என் நல்லூழ் . அவர் சொல்லி புரியும் அரசியலுக்கு முன்பாக அவரை மேலும் அனுகி புரிந்து கொள்ள முயன்றது அவரது ஆரம்பகால அரசியலைக் குறித்து . அவர் கடந்து வந்த காலத்தை தூரத்தில் நின்று அவரின் அரசியலால் நிகழ்வதைப் பார்தவர்கள் சொல்லிய பிம்பங்கள் ஒருபுறம் இருந்தாலும், அவற்றால் அடித்து செல்லப்படாமல் . நிதானமாக அவரை அருகிருந்து அனுமானிக்க முயன்றிருக்கிறேன் .அவரைப் பற்றிய நுண்தகவல்களுடன் அவர் விரித்து சொன்ன நிகழ்வுகளைக் கொண்டு அக்கால சூழலில் நுழைந்து பார்க்கும் வாய்பை அது கொடுத்தது . அந்த உரையாடல்கள் இரண்டு வகையில் எனக்கு ஆழமான புரிதலைக் கொடுத்திருந்தது. அப்போது ஏன் அவற்றை தேடி தேடி சென்றேன் என இப்போது உணர்ந்து கொள்கிறேன் . ஜெயமோகனின் பின் தொடரும் நிழல் நாவலை வரும் சம்பவங்களையும் கதை மாந்தர்களையும் எனக்கு நினைவுபடுத்தியது . அவற்றை இதில் பொருத்திப்பார்பது பிரமிப்பைத் தருவது அதே சமயம் அரசு மற்றும் அரசியலின் பொருட்டு மானுட அறம் எப்படியெல்லாம் அன்று சிதைக்கப்பட்டிருக்கலாம் என உணரும் போது அவை ஆறாத காயமாகி விடுகிறது . அந்த கதைமாந்தர்கள் போன்றவர்களை நேரில் சந்திருந்திருக்கிறேன் . அவர்களுடன் நேரம் செல்வது தெரியாது உரையாடியிருக்கிறேன் என்பது என்னை சரித்திரத்தில் இருத்திக் கொள்ளும் உவகையை கொடுக்கிறது .புதுவை பிரெஞ்ச் அரசாங்கம் தனக்கெதிரான சுந்திர போராட்டத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள , ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள அதற்கு மிக நுட்பான அரசியல் திட்டமும் , நகர்வும் இருந்திருக்க வேண்டும் . அவரவர் இயல்பினால் அன்று போராட்டக்காரர்கள் ஒன்றிணைய முடியாத தடையை அவர்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டார்கள் . போராட்ட செயல்பாடு அவர்கள் தங்களை நகர்புறம் , புறநாகர் என இரண்டாக பிரித்து வளர்த்தெடுத்துக் கொள்ள வைத்திருந்தது . காந்திய வழிமுறையில் நம்பிக்கையுள்ள காங்கிரஸ் ஆதரவாளர்கள் புறநகரிலும் . புரட்சி ஒன்றே தீர்வு என நம்பும் அதை சார்ந்த வன்முறையில் நம்பிக்கையுள்ளவர்கள் நகர்புறங்களையும் தங்களது போராட்ட களமாக எடுத்துக் கொண்டனர் . இந்த இரண்டு குழுக்களும் ஒன்றை ஒன்று எதிர்த்து இயங்கும்படி பிரெஞ்ச் அரசாங்கத்தால் பார்த்துக் கொள்ளப்பட்டது . அவரவர் தங்கள் களத்தைவிட்டு வெளியே வந்து இணைந்து கொள்ளவோ , போராடவோ முடியாத சூழல் இயல்பிலேயே உருவாகி வந்திருக்க வேண்டும் . பிரெஞ்ச் அதிகாரம் அந்த பிளவை தனது அரசியலின் பொருட்டு அதை நிரந்தராமாக்கி இருந்தது. ஒரு சிறிய யுக்தியின் மூலமாக .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக